Sep 11, 2011

சண்டே ஸ்பெஷல் - பாக்கெட் டாக்டர்

(இந்த வார இணைய வாசிப்பில் பிடித்தது)
சிறப்புப் பதிவர்: நட்பாஸ்



ஒரு காலத்தில் அப்ளிகேஷன் என்றால் வேலை வாய்ப்புப் படிவம் என்று இருந்தது- அப்ளிகேஷனைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தாடி வளரும் வேகத்தில் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிற பட்டதாரிகளாக இருப்பார்கள். இப்போது ஸ்மார்ட் ஃபோன்கள் வந்து விட்ட நிலையில், எதற்கெடுத்தாலும் "இதுக்கு ஒரு அப்ளிகேஷன் இருக்கே!" என்று சொல்கிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு அப்ளிகேஷன் என்பது வேலை கிடைக்குமா என்ற ஏக்க நினைவுகளைக் கிளரும் அசந்தர்ப்ப நினைவூட்டலாக இல்லை- அப்ளிகேஷன்கள் காரியத்தை முடித்துத் தருகிற கருவிகளாகி விட்டன. இணையமும் கைபெசியும் இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று.இருக்கிறது இன்றைய நிலைமை. இது மருத்துவத் துறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கி வருகிறது என்று அண்மையில் படித்தேன், ஒரே கணத்தில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து எதிர்காலத்துக்குள் அடியெடுத்து வைத்த உணர்வு வந்து விட்டது.

இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கான அப்ளிகேஷன்கள் பலவற்றில் ஸ்டெதாஸ்கோப் எக்ஸ்பர்ட் என்பது ஒன்று. இது ஒரு ஸ்டெதாஸ்கோப்பாகப் பயன்படக்கூடியது. இதயம் மற்றும் வயிற்றில் ஏற்படக்கூடிய ஒலிகளை, ஒரு விலையுயர்ந்த, நுட்பமான ஸ்டெதாஸ்கோப்புக்கு உரிய துல்லியத்துடன் இது பதிவு செய்து கொள்கிறது. அது தவிர, இதன் நூலகத்தில் வெவ்வேறு இதய நோய்களில் காணப்படும் அறுபது வகை இதயத்துடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல் டப் டப் என்று துடிக்கவேண்டிய இதயம் ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இதைவிட இருமடங்கு வேகமாக, நாலு கால் பாய்ச்சலில் ஓடுமாம். மருத்துவ மாணவர்கள் தங்கள் பயிற்சியில் நோயாளிகளின் இதயத்தில் நேரடியாக இந்த ஒலியைக் கேட்கும் வாய்ப்பு ஓரிரு முறைகள் கிடைத்தால் அதிகம். ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் இத்தகைய பிரத்யேக அப்ளிகேஷன்களின் துணையால் வெவ்வேறு நோய்க்குறிகளை இந்த மாணவர்கள் இனங்கண்டு மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

இந்த போன்களின் பயனர்கள் தங்கள் இதயத் துடிப்புகளை இத்தகைய அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திப் பதிவு செய்து வைத்துக் கொள்வது அடுத்த கட்டம், இல்லையா? அடுத்து, தங்கள் இதயம் ஏறுக்கு மாறாக எக்கு தப்பி அடித்துக் கொள்கிறது என்ற சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகத்தை இந்த ஒலிக் கோப்புடன் இணைத்து தங்கள் மருத்துவருக்கு அனுப்பலாம்- அவருக்கும் விஷயம் குன்சாக இருந்தால் தன் சந்தேகத்தைத் தெளிவித்துக் கொள்ள, பயனரின் இதயத் துடிப்பு அடங்கிய அந்த ஒலிக் கோப்பை ஒரு இதயநல மருத்துவருக்கு ஒரே கிளிக்கில் பார்வர்ட் செய்யலாம். இவை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே நடக்கின்றன. இதய நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஸ்மார்ட் ஃபோன்கள் எப்படி பயன்படுகின்றன பார்த்தீர்களா?

ஆய்வுக் கூடங்களில், சில சாங்கியங்களைத் தகுந்த வகையில் கடைபிடித்து அறிவியல் உண்மைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள் என்ற ஒரு மாந்த்ரீகக் கலை போன்ற தோற்றம் நம் மனதில் இருக்கிறது. எப்போது அறிவியல் நம் பாக்கெட்டில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் அப்ப்ளிகேஷன்களாகக் குடியேறியதோ, அப்போதே அது தன் பிரமிப்பைக் களைந்து குழந்தை விளையாட்டாய்ப் போய் விடுகிறது. அமெரிக்காவில் UCLAவைச் சேர்ந்த Aydogan Ozgan என்ற பேராசிரியர் வடிவமைத்த விஷயத்தைப் பாருங்கள்.

அது லென்ஸ் இல்லாத ஒரு மைக்ரோஸ்கோப். அதன் எடை அறுபது கிராமுக்கும் குறைவு. அதை காமெரா ஃபோன்களோடு இணைத்துக் கொள்ளலாம். இந்த மைக்ரோஸ்கோப் பத்து டாலருக்கும் குறைவான விலையில் கொள்ளை மலிவு. இவை நிழல்களைக் கொண்டு டிஃப்ராக்ஷன் முறையில் ஒரு முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்குகின்றன.. நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் அதன் உள்ளிருக்கும் உபரிகள் ஒளியை அரைகுறையாகத் தம்முள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்கின்றன. எனவே, நம் ரத்தமோ எச்சிலோ, அதன் ஒரு துளியை இந்த ஸ்மார்ட் ஃபோனில் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப்பால் படமெடுத்தால் அது நிழல்களை வைத்து அந்த செல்லை முப்பரிமாண புகைப்படமாகப் பதிவு செய்து கொள்கிறது. இந்தப் புகைப்படத்தை ஒரு லேப்புக்கு அனுப்ப எத்தனை கிளிக் தேவைப்படும்? நம் ஊரைப் போலவே டாக்டர் இருக்கிறாரோ இல்லையோ, உயர்தர நோய் காணும் உபகரணங்கள் கொண்ட சோதனைக் கூடங்கள் இருக்கின்றனவோ இல்லையோ, உலகெங்கும், எவ்வளவு ஏழைப்பட்ட கிராமமாக இருந்தாலும் எல்லாரிடமும் கைபேசி இருக்கிறது. நாள்பட நாள்பட ஸ்மார்ட்ஃபோன்களின் விலை குறைந்து வருகிற நிலையில், இந்தியாவாகட்டும் ஆப்பிரிக்காவாகட்டும், மருத்துவத்துறையில் இந்த அப்ளிகேஷன்களின் பயன்கள் எண்ணற்றவை.

உதாரணத்துக்கு மலேரியாவை, அல்லது டைபாய்டை எடுத்துக் கொள்ளுங்களேன். நமக்கு காய்ச்சல் இருந்தாலும் மருத்துவரிடம் செல்வது கஷாயங்களும் தெருவோர பார்மசிக்களும் தோற்றுப் போன பின்னர்தான், அப்புறமும்கூட நாம் அனைவரும் ரத்தத்தை உடனே சோதனை செய்து பார்த்து விடுவதில்லை. இந்த மாதிரி ஒரு அப்ளிகேஷன் உங்கள் போனில் இருந்தால், தலை வலிக்கத் துவங்கி வாந்தியெடுத்த மறு கணமே உங்கள் ஒரு துளி ரத்தத்தை படம் எடுத்து ஒரு கிளிக்கில் அதன் வழியில் அனுப்புவீர்களா மாட்டீர்களா? நம் பாக்கெட்டுக்குள் வந்து விட்டன லேப்பில் மட்டும் இருக்கக்கூடிய விலையுயர்ந்த உபகரணங்கள் அனைத்தும். இந்த பேராசிரியரின் அப்ளிகேஷன் கிளிக் செய்து லேப்புக்கு செல்லும் தேவையைக்கூட பெருமளவில் குறைக்கிறது. புகைப்படமெடுத்த மறு கணமே சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளை அடையாளம் கண்டு எது எது எவ்வளவு இருக்கின்றன என்ற தகவலைத் தெரிவித்து விடுகின்றன. இந்த விபரத்தை உங்கள் மருத்துவருக்கு ஒரு குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர் தன் பிரிஸ்கிரிப்ஷனை இன்னொரு குறுஞ்செய்தியாக அனுப்புவார். படிக்க எளிதாக இருக்கும் இந்த மருந்துப் பட்டியலை ஒரு பார்மசிக்கு எஸ்எம்எஸ் செய்தால் வீட்டுக்கு வந்துவிடலாம் உங்கள் மருந்துகள்!

இது போல் இப்போதே ஃபூஜிட்சு நிறுவனம் உங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயத் துடிப்பு, எடை போன்ற விபரங்களைப் பதிவு செய்யும் இயந்திரங்களிடம் இருந்து தேவையான தகவல்களை ப்ளூடூத் வழியாக உங்கள் கைபேசிக்கே பெற்றுக் கொள்ளும் தொழில் நுட்பத்தை வடிவமைத்துள்ளது. மருத்துவ மற்றும் தொழில் நுட்ப வசதி அதிகம் இல்லாத டவரில்லா காடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், நாளை உங்கள் உடல்நிலை குறித்த தகவல்களை கைபேசியிலேயே அலசி ஆராய்ந்து நோய் நாடி குணம் நாடி செய்தி அனுப்பும் அப்ளிகேஷன்களுக்கு வழியமைத்துத் தரலாம், இல்லையா? அந்த நாள் தொலைவில் இல்லை.

இப்போதே ஆப்பிளின் அப்ளிகேஷன் ஸ்டோரில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த அப்ளிகேஷன்கள் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சர்க்கரை மற்றும் எடையைக் கண்காணிக்கத் துணை செய்பவை. இவற்றின் பயன் மருத்துவத்துறைக்கு பெரிய அளவில் துணை செய்யும் என்று நம்புவதற்கிடமிருகிறது- ஒவ்வொரு கணமும் நோய்க்குறிகளைக் கண்காணிக்கவல்ல கருவிகளாக நம் கைபேசிகள் நமக்கும் நம் மருத்துவருக்கும் உதவி செய்யும்.

பாட்டு கேட்கவும் வீடியோ பார்க்கவும் நம் மொட்டைத் தலையை பேஸ்புக்கில் அப்லோடி நண்பர்களை அலற வைக்கவும் அவகாசப்பட்ட நேரத்தில் டிவிட்டரில் வலைபாயவும் நாம் பயன்படுத்தும் கைபேசிகளுக்கு இத்தகைய சாத்தியங்கள் இருக்கின்றன என்று நாம் நினைத்துப் பார்த்திருப்போமா? ஆனால் இதெல்லாம் பட்டிதொட்டியெங்கும் நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் சொன்ன கட்டுரையைப் படிக்கும்போது நினைத்துக் கொண்டேன்.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...