Jul 2, 2015

பல்பு கதைகள் - 1

உலகத்தில் நமக்கு ரொம்பவும் பிடித்த விஷயங்களை ஒன்று, இரண்டு, மூன்றுக்குள் வகைப்படுத்தி விடலாம்.

1) பிறருக்கு அட்வைஸ் மழை பொழிதல் (நேராக)
2) பிறருக்கு அட்வைஸ் மழை பொழிதல் (மறைமுகமாக)
3) பிறருக்கு அட்வைஸ் மழை பொழிதல் (வேறெப்படியாவது)

இதற்கு எதிர்த்திசை ஒன்று உண்டு. யாரேனும் ஏதேனும் அறிவுரை சொன்னால்,அது எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்....”அடடே! எவ்ளோ பெரிய மகான் சொல்றாரு. அப்படியே கடைபுடிக்கணும்! யாவாரம் பண்ணனும்”, என ஒரு வெறித்தனமான உந்துதல் ஏற்படும்.

அலுவலகத்தில் ’ப்ரஸண்டேஷன் டைனமிக்ஸ்’ என்றொரு பயிற்சிப் பட்டறை. அங்கே வகுப்பு எடுக்க வந்த மகான் தான் வகுப்பு எடுத்த நேரம் போக மிச்ச மீதி நேரத்தில் நிறைய நிறைய எதிக்ஸ் அண்ட் கம்ப்ளையன்ஸ் சார்ந்த அறிவுரைகள் வழங்கத் துவங்கினார்.

“யூ நோ ஸம்திங்? ஒரு நாள்ல உலகத்துல இருக்கற ஏடிஎம் மெஷின்கள்ல இருந்து உருவப்படற ’ப்ரிண்டட் ரெஸிப்ட்’களைக் கொண்டு இந்த உலகத்தையே ஒரு ரிப்பன் போல சுத்திடலாம். அதுக்காக வெட்டப்படற மரங்களோட எண்ணிக்கை ஒரு வருஷத்துக்கு xxxxx ஆயிரங்கள். ஆகவே மக்களே! அடுத்த தடவை ஏடிஎம் போனீங்கன்னா காசு மட்டும் எடுங்க. உங்களுக்கு அவசியமா தேவைப்பட்டாலே ஒழிய “ப்ரிண்டட் ரெஸிப்ட்”  எடுக்காதீங்க.

என் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் சுழன்றது. அந்த வேதவாக்கு என் மூளைக்குள் இறங்கியது.

ட்ரெய்னிங் முடித்து பைக்கை உதைத்து நேராக அடுத்த நிறுத்தத்தில் இருந்த ஏடிஎம்’மில் இதற்காகவே நிறுத்தி க்யூவில் நின்ற நால்வரிடமும், “சார் நான் ப்ரிண்ட் ரெஸிப்ட் எடுக்காம காசு எடுக்கப் போறேன். நான் முன்னால போலாமா?”, எனக் கேட்டு தர்ம அடி தவிர மற்றவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு என் டர்ன் வரும்வரை லைனில் காத்திருந்து ஏடிஎம்’மில் கார்டைச் சொருகினேன்.

Sorry you have only 55 rubees balance, get lost! என்றது இயந்திரம்.

அப்போ நான் உலகின் உன்னத மனிதன் என நிரூபிக்க சம்பளம் வரும்வரை காக்க வேண்டும் என்றாகி விட்டது.

ஓகே. காத்திருந்து சம்பளம் வந்ததும் முதல் வேலையாக மீண்டும் பைக்கை உதைத்து....ப்ளா ப்ளா ப்ளா.....! “ப்ளீஸ் கிவ் மீ ஃபைவ் தவ்ஸண்ட் ருபீஸ்” என்றேன் இயந்திரத்திடம். ”ப்ரிண்ட் ரெஸிப்ட் வேணுமா?” என்றது இயந்திரம். ‘நோ நோ நோ’, என்று மூன்று முறை சொடுக்கியதில் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். அது உடனடியாக நம் மூளைக்கு உறைக்கவில்லை.

“கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர! கரகர கர!”

ஒன்றரை நிமிடம் விடாமல் மாவு மெஷினின் சத்தம் மட்டும் கேட்டது ஏடிஎம் மெஷினில். காசு வரவில்லை. “தேங்க்ஸ் ஃபார் யூஸிங் மன்னாரன் கம்பேனி பேங்க் ஏடிஎம்”, என்று பெண்மணியின் குரல் முடித்துக் கொண்டது. முதுகுக்குப் பின்னால் பெரிய க்யூ முறைத்துக் கொண்டு நின்று கொண்டு.....

மொபைல் ஒளிர்ந்தது! 5000 ரூபாய் அபேஸ் என்று சந்தோஷ டெக்ஸ்டை மொபைல் ஸ்க்ரீன் துப்பியது.
 
"அடேய்! காசே இன்னும் வரலைடா" என்று என்னை மறந்து அலறினேன்.
 
"சார்! என்ன பிரச்னை? இனி ஹெல்ப்?", முதுகுக்குப் பின்னால் குரல். அந்த மாதிரி இந்த மாதிரி சார் என்று அவருக்கு விளக்கினேன்.
 
"ஐயோ! பணம் வரலியா? சரி ரெசிப்டை குடுங்க, பேங்க்குக்கு போன் பண்ணலாம்"
 
"ரெசிப்ட் வேணான்னுட்டேன் ஸார்"
 
"கிழிஞ்சுது கிருஷ்ணகிரி"
 
"கரெக்ட் சார் அதான் நான் பொறந்த ஊரு. அதனாலதான் எனக்கு கிரின்னு பேர் வெச்சாங்க", என்று வெள்ளந்தியாய் அவரைப் பார்த்தேன். ஏடிஎம், பணமெடுத்தல், பேங்க்குக்கு போன் செய்தல், இழந்ததை ரெகவரி செய்தல் என்னும் சூட்சுமங்கள் அறியாத core industry'யில் இருந்து எம்மென்சி உலகிற்கு வந்து சேர்ந்த புதிது.
 
"கஷ்டம்தான் சார். பேங்க்காரன் ஒத்துக்கணுமே. உங்ககிட்ட சாட்சியே இல்லியே"
 
"ஹலோ ஹலோ ஹலோ ஹலோ", என்று வெளியிருந்து கூக்குரல்கள்.
 
"சரி, பேங்க்குக்கு போன் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்"
 
"எந்த பேங்குக்கு சார் போன் பண்ணனும்?"
 
"உங்க பேங்குக்குதான்"
 
"நம்பர் இல்லியே சார்"
 
"வீட்டுக்கு போயி பேங்க் காரன் ஒரு கிட் குடுத்துருப்பான். அதுல பாருங்க. இல்லைன்னா கூகிள் சர்ச் பண்ணுங்க கெடைக்கும். எதுக்கும் ஒன் அவர் வெய்ட் பண்ணுங்க பணம் க்ரெடிட் ஆகிடும். ஆகலைன்னா பேங்க் போன் பண்ணுங்க", என்று அனுப்பி வைத்தார்.
 
ஒன்றரை மணியாகியும் பணம் அக்கவுண்டில் க்ரெடிட் ஆகவில்லை. வீடு வந்து வங்கிக்காரன் எண்ணைத் தேடி எடுத்து.....
 
"எந்த ஏடிஎம் மிஸ்டர் ராமசுப்ரமணியன்?"
 
"என் பேரு கிரி. என் அப்பா பேரு ராமசுப்ரமணியன். யூ மே கால் மீ கிரி"
 
"ஓகே மிஸ்டர் சுப்பிரமணியன். எந்த ஏடிஎம்'ல உங்களுக்கு பணம் வரலை"
 
"ஹெச்டிஎப்சி"
 
"எந்த ஏரியா?"
 
"துரைபாக்கம்"
 
"ஏடிஎம் நம்பர் சொல்லுங்க. நான் கம்ப்ளைன்ட் எடுத்துக்கறேன். நிஜமாவே பணம் வரலைன்னு ஊர்ஜிதம் ஆச்சுன்னா நாலு பிஸினஸ் டேஸ்'ல உங்க பணம் உங்க அக்கவுன்ட்டுக்கு க்ரெடிட் ஆகும்"
 
"ஏடிஎம் நம்பர் தெரியாதே"
 
"பிரிண்ட் ரெசிப்ட் எடுத்து பாருங்க. அதுல இருக்கும்"
 
"இல்லையே! நான் பிரிண்ட் ரெசிப்ட் எடுக்கலை"
 
"என்னது பிரிண்ட் ரெசிப்ட் எடுக்கலையா?" அந்தப் பெண்மணி அலறின அலறலுக்கு அவரது  கால் சென்டர் மொத்தமும் அவரை திரும்பிப் பார்த்திருக்கும்.
 
அடுத்த மூன்று நாட்கள் அலுவலகம் விடுமுறை. நான்கு பிசினஸ் டேஸ் கழித்துதான் போன பணம் வரும் - நிஜமாகவே கிழிந்தது கிருஷ்ணகிரி.
 
பின்னர் ஒருவாறாக மாதவரத்தில் இருந்த நான் வேறொருவர் மூலமாக அந்த ஏடிஎம் எண்ணைக் கண்டுபிடித்து மீண்டும் வங்கியை அழைத்து தகவல் சொல்லி..... அவர்கள் எத்தையோ எப்படியோ கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஐந்தாவது பொன்னாளில் என் பணம் எனக்குக் கிடைத்தது.
 
ஆகவே மக்களே! நல்லவனா இருங்க! ஆனா ரொம்ப நல்லவனா இருக்கணும்னு முயற்சி பண்ணாதீங்க. It's too bad to be too good!
 
 
 
 
 
 
 

1 comment:

Unknown said...

Thoughtful msg... Will revisit it

Related Posts Plugin for WordPress, Blogger...