தமிழ் சினிமா உலகில் ஸ்டார் வேல்யூ ஏதும் இல்லாமல் சின்ன கல்லு; பெத்த லாபமு என்னும் வகையில் அவ்வப்போது சில பரீட்சார்த்த சினிமாக்கள் வருவதுண்டு. நான் பார்த்த உதாரணங்களாக இரண்டினைக் கூறினால் தமிழ்ப்படம், வ’க்வாட்டர் கட்டிங் இரண்டு படங்களையும் சொல்வேன். கிட்டத்தட்ட அந்த இரண்டு படங்களையும் கலந்து கட்டியடித்ததுதான் சுட்டகதை.
ஸ்பூஃப் வகைப்படம் என்ற வகையில் ‘தமிழ்ப்பட(ம்)’ வகையிலும், வித்தியாச கான்செப்டாக ‘வ’க்வாட்டர் கட்டிங்கையும்’ சுட்டகதை நமக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது.
மலையோர கிராம ஊர், போலீஸ் ஸ்டேஷன், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஹீரோக்கள் பாலாஜியும், வெங்கடேஷும்; தூங்குமூஞ்சி இன்ஸ்பெக்டர் நாசர், ஆதிவாசி இன ஹீரோயினி லக்ஷ்மிப்ரியா, அவளது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் துர்மரணமடைய அவரை யார் சுட்டார் என்கிற முடிச்சை அவிழ்க்கும் ‘சுட்ட’ கதைதான் ‘சுட்டகதை’.
படத்தின் பெரிய ப்ளஸ் படத்தின் பின்னணியிசையும் கான்செப்டின் தேவைக்கேற்ப ப்ரசெண்ட் செய்யப்பட்ட படத்தின் டோனிங்கும். படத்தின் பின்னணி இசையின் பெருமை சொல்ல படம் நெடூக வரும் அந்த பியானோவின் ‘’’ட்ட்ட்ட்ட்ட்டொய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்” ஒலியே போதும். வ’க்வாட்டர் கட்டிங்கின் ஃப்ரேம்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தவை. இடது மூலையிலிருந்து டேபிள் லேம்ப்பை வைத்து லைட்டிங் அடித்தாற்போல் “வ” படத்தின் லைட்டிங்கை அமைத்திருப்பார்கள். “சுட்டகதை” விஷயத்தில் object மீது மட்டும் பெரும்பாலும் லைட்டிங் படுகிறது; இன்னபிற விஷயங்கள் அவுட் ஆஃப் ஃபோகஸில். படத்தோடு ஒருவர் ஒன்றிவிட முயன்றால் பின்னணியிசையும், படத்தின் ஒளிப்பதிவும் நிச்சயம் அவருக்குத் துணை செய்யும். ஆனால் அப்படி ஒன்றிவிடச் செய்யத்தக்க ‘சுவாரசிய திரைக்கதை’ படத்தில் இருக்கிறதா என்பதுதான் பெரிய கேள்வி. (இந்த இசை, ஒளிப்பதிவு டெக்னிக்காலிட்டிகளுக்கெல்லாம் டெக்னிக்கல் பெயர்கள் நமக்குத் தெரியாது. ஏதோ கவனித்ததைச் சொல்கிறோம், ஹிஹ்ஹீ)
படத்தின் இயக்குனர் சுபு’வுக்கு செம்ம க்ரியேட்டிவ் மைண்ட் என்பது படம் முழுவதும் தெரிகிறது. டீக்கடைப் பெயர்ப்பலகையின் சின்ன நையாண்டியில் தொடங்கி, காமிக்ஸ் பிரியர்களை ஏதோ பெரிய இலக்கிய வாசக தோரணையில் காட்டுவது வரை படம் முழுவதும் இவரது காமெடி தோரணங்கள். அந்தத் தோரணங்களை இணைக்கும் திரைக்கதை நூலினை சுபு ஸ்திரமாகப் பண்ணியிருக்கலாம் என்பதுதான் நம் ஆதங்கம்.
பாலாஜி, வெங்கி இருவருமே கிடைத்த ரோலை நன்றாகவே செய்திருக்கிறார்கள். வெங்கடேஷுக்கு வாய்ப்புகள் அமைந்தால் அவர் நல்ல காமெடியனாக தமிழில் வலம் வரலாம். நல்ல பாடி லேங்குவேஜ் மனிதரிடம். லக்ஷ்மிப்ரியா இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவர் என்பது உபதகவல்.
படத்தின் அடுத்த பெரிய ப்ளஸ் படத்தின் நீளம். ஜஸ்ட் ஒன்றே முக்கால் மணிநேரத்தில் முடிந்துவிடுகிறது படம். அந்த ஒன்றே முக்கால் மணிநேரம் மக்களை தியேட்டரில் உட்கார வைக்கத் தக்க சுவாரசியத்தை இயக்குனர் படத்தில் வைத்திருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
தனித்தனியே சூப்பர் திறமை வாய்ந்தவர்களாக அமைந்த இந்தப் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவருக்கும் அடுத்தடுத்த படங்களில் நல்ல ‘ப்ரேக்’ அமைய வேண்டுமென்று ஜக்கம்மாவை வேண்டிக் கொள்வோம்.