Sep 15, 2017

வீழ்வேன் என்று நினைத்தாயோ?




இணையதளங்களில் உங்களுக்கு என்று ஒரு கணக்குத் துவங்கப் போகிறீர்கள் என்றால் உங்கள் பெயருக்கு அடுத்ததாக அங்கே உங்களைப் பற்றிய சுயகுறிப்பு (பயோடேட்டா) ஒன்றை வரையச் சொல்கிறார்கள் எல்லா தளத்தினரும். இந்த சுயகுறிப்புகளை எல்லாம் தேடிப்பிடித்து வாசிப்பது என்பது என் பொழுது போக்குகளுள் ஒன்று, குறிப்பாக டிவிட்டரில்.  குறிப்பாக நம் தமிழ் மக்கள்தம் குறிப்புகள் வாசித்தல் அலாதியிலும் அலாதி அனுபவம்.

"| இளையராஜா ரசிகன் | ரயில் பயணம் | ஜெயகாந்தன் | நா.முத்துக்குமார் | கலைஞர் | பரோட்டா சால்னா |" என்று சிலர் எளிமையாக முடித்துக் கொள்வர்.

பொதுவாக பத்து பேர்களில் ஒருவரேனும் "தன்மானத் தமிழன்" என்று இருப்பார். தெலுகு நமக்கு வாசிக்க வாராது என்பதால் "மானங்கெட்ட தெலுங்கன்" என்று எம் கொல்ட்டி மக்கள் யாரும் தெலுகு ட்வீட்டர்லு உலகில் எழுதிக் கொள்கிறார்களா எனத் தெரிவதில்லை.

"தாறுமாறான தல ரசிகன்", "கொலைவெறி பிடித்த தளபதி ரசிகன்" இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தம் பயோடேட்டாவாகக் கொண்டோர் நிறைய தென்படுவர்.

"விவசாயியின் மகன், VB script எழுதுகிறேன்", "காவிரிப்படுகையில் பிறந்தவன்; காசுக்கு தண்ணீர் விற்கும் உலகில் உழல்கிறேன்" என்ற பொருள் தரும் குறிப்புகள் அங்கங்கே இடரும்.

"வெளிய சிரிக்கிறேன்; உள்ள அழுகறேன்", என்போரை அடிக்கடிப் பார்க்கலாம். < எதுக்கு அழுகணும்? ஃபிரிட்ஜ்ல போயி உக்காரலாமே? >

"ரொம்ப கெட்டவன்", "ரொம்ப ரொம்ப கெட்டவன்", "மோசமானவன்"  "கேவலமானவன்",  என்று பயமுறுத்துவோரும் உண்டு.

இந்த மேற்படி இனத்தவருக்கு டஃப் கொடுக்கும் பெண்ணினம் உண்டு.  "ராட்சசி", "அடங்காதவள்", "திமிர் பிடித்தவள்", "கேடு கெட்டவள்" மற்றும் இன்னபிற.

அச்சுப் பிச்சுப் பெண்கள் என்றோர் இனம் உண்டு.  "அம்மா அப்பாவின் செல்லக்குட்டி", "அப்பாவின் தேவதை", "டெய்ரி மில்க் சாப்டுட்டே இருப்பேன்", "பிங்க் கலர்ன்னா ரொம்ப புடிக்கும்", என்றெல்லாம் போகும்.

இதையெல்லாம் தாண்டினால் தமிழ்ச் சூழலில் தடுக்கி விழுந்தால் நமக்குத் பார்க்கக் கிடைப்பது "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ", என்ற வசனம். இது பாரதியார் எழுதியது என்று நான் சொல்லித் தெரியும் அவசியம் இங்கே யாருக்கும் இல்லை என்று நம்புகிறேன்.

அதென்னவோ நம்மவர்கள் எல்லோருக்கும் அந்த வசனத்தை பாரதி தமக்காகவே எழுதியதாகக் காதில் ஒலிக்கிறது போலும். 

இந்த பாரதியின் வசனத்தை நான் முதன்முதலில் கேட்டது "மகாநதி" திரைப்படத்தில். படத்தின் இடையில் வரும் ஒரு பாடலுக்கு முன்னதாகவும், படம் முடியும் வேளையிலும் கமல்ஹாசன் இந்த வசனத்தை வாசிப்பார். அதற்கு முன் தமிழ் கூறும் நல்லுலகில் பொதுவெளியில் இந்த வசனத்தை நான் எழுத்திலோ ஒலியிலோ பார்த்து / கேட்டதில்லை.

கூகிள் ஆண்டவரிடம் இந்தப் பதத்தைத் தந்து கொஞ்சம் என்னான்னு பாரு நைனா என்றால் இப்படி இமேஜ் இமேஜாகக் கொட்டித் தீர்க்கிறார்.



"நீங்க கொஞ்சம் ஷட்டப் பண்ணுங்க"களுக்கு இடையே "வீழ்வேன் என்று நினைத்தாயோ"க்களுக்கும் டிசர்ட்டுகள் வருவது சந்தோசம் தருகிறதுதான் என்றாலும், நம் மக்களுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் நிஜமாகவே விளங்கித்தான் இதையெல்லாம் பயோவில் எழுதுவதையும், சட்டையில் பொறித்துக் கொள்வதையும் செய்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.



என் புரிதலில், "உன்னா மேரி யா.மொய்தீன் கடைல மட்டன் பிரியாணி துன்னுட்டு டயபடீஸ் வந்து, அந்து நொந்து வெந்து நட்டுனு போற டம்மி பீஸ் இல்லடா நான். எனக்கு சாவு இல்ல, இந்த ஒலகம் அழிய வரியும் என் கவிதை வாழும்டா என் சிப்ஸு", என்கிறார் பாரதி. இல்லையா?

ஆனால் நம்ம மக்கள் என்னவோ, "ஹாஃப் உள்ள உட்டாலும் ஸ்டெடியா ஸ்டெய்ட்டா நிப்பன் கேட்டியா?", என்ற ரேஞ்சுக்கு இதைப் புரிந்து வைத்திருப்பதாக எனக்குப்படுகிறது.

...இப்பாடலை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும்என்னுள் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதன்எழுகிறான்உடனே இவ்வுளகில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டக்க வேண்டும் என்றெண்ணம் பீறிட்டெழும்.....
இப்படியும் ஒருத்தர் இந்தப் பாடல் குறித்துச் சொல்கிறார். 

இது ஒரு பக்கம் இருக்க.... ...அலுவலகத்தில் ஹைதராபாத்தில் இருந்து தோழர் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார். நம்ம பண்ருட்டிக்காரர்தான். ஹைதையில் எட்டு வருடம் ஜாகையை நிறைவு செய்துவிட்டு வந்திருக்கிறார். அதிதீவிர அஜீத் ரசிகர். விவேகம் படம் வெளியான நாள்முதல் தினப்படி பட வசூல் குறித்த செய்தியை அவர் வாசிக்க அதை நாங்கள் கேட்க எனத்தான் எங்கள் காலைச் சிற்றுண்டி துவங்கும்.

நேற்று ட்வீட்டர், வாட்சாப் என்று என்னத்தையோ நான் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் இடறிய யாரோ ஒருத்தரின் பயோடேட்டா, "நான் வீழ்வேன் என்று நினைப்பாயோ" என்று சொல்ல நம்ம ஹைதை நண்பரிடம், "தம்பி இந்த வீழ்வேன் என்று நினைத்தாயோ" வசனத்தை யார் ஒரிஜினலாச் சொன்னதுன்னு தெரியுமா என்று கேட்டேன்.

"அஜீத் தான் ஜி. பில்லா-டூ  படத்துல சொல்லுவாரே", என்றார்.

7 comments:

Unknown said...

Bharathi ku ipdium.oru sothanaiya..?

Unknown said...

அடடே...பேஷ்!

maithriim said...

ha ha ha இதோ இப்போ போய் எல்லார் அகௌண்டையும் பார்க்கிறேன் :-}

amas32

Unknown said...

நம்ம பசங்க எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க..?

pvr said...

அதானே! உள்ளே ஆஃப் இன்னா, ஃபுல்லா எறக்கினாலும், கிண்ண்னு எய்ந்து நிப்பேன் கண்ணான்னு ... பாவம்யா, பாரதி!

Unknown said...

அந்த பண்ருட்டிகாரர் யாரு சார்..

Unknown said...

Hmm... Good one.

Related Posts Plugin for WordPress, Blogger...