மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண்கிறார்கள். எந்த வீரதீர சினிமாக்காரனும் எண்ணிப்பாராத விதத்தில் நேர்மையாக வருமானவரி கட்டுகிறார்கள்.
- எம் குலத்தோர் பற்றி நாஞ்சில் நாடன் (நன்றி: தீதும் நன்றும், ஆனந்த விகடன்)
_________________________
என்னதான் செய்கிறார்கள்?
"நீங்க பி.பீ.ஓ'வுல அப்படி என்ன வேலைதான்யா செய்றீங்க", என ஒருவர் கேட்டிருந்தார். அதற்கான பதிலாகவே இந்தப் பதிவு.
இரவு சுமார் பன்னிரண்டு மணி. அலுவலக வண்டியில் (cab) வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். வால்டாக்ஸ் ரோடில் போலீஸ்காரர் ஒருவர் வண்டியை மறிக்கிறார்.
"எங்கிருந்து வர்ற?"
"சோழிங்கநல்லூர் சார்", முன்னாலிருந்து டிரைவர் குரல்.
"என்ன கம்பெனி?"
முன்னால் உட்கார்ந்திருக்கும் நண்பன் எங்கள் கம்பெனி பெயர் சொல்கிறான்.
"என்னது?", அவருக்கு சரியாக கேட்கவில்லை அல்லது விளங்கவில்லை.
மீண்டும் சொல்லப்பட, மீண்டும் புரியாமல் போகப்பட....
"ஐ.டி. கார்டு காட்டுங்க?"
தோளில் தொங்கும் அட்டை தூக்கிக் காண்பிக்கப் படுகிறது.
":இதுல கம்பெனி பேரே இல்லையே?"
"சாரி, இது எங்க கம்பெனி டிஸ்ப்ளே கார்டு, ஒரு நிமிஷம் இருங்க", நண்பன் தன் மணிபர்சை எடுத்து அடையாள அட்டை எடுத்துக் காண்பிக்கிறான்.
இன்னமும் அந்தக் காவலருக்கு ஏதோ உடன்பாடில்லை. முன்னால் குனிந்து டிரைவரைப் பார்க்கிறார்.
"என்ன கம்பெனி?"
"கால் சென்டர் வண்டி சார்"
இப்போது காவலர் முகத்தில் ஒரு "ஓகே" சொல்லும் மனோபாவம் தெரிகிறது.
"கால் சென்டரா, இதை மொதல்லையே சொல்லவேண்டியது தான? போ போ"
இப்படித்தான் பி.பீ.ஓ'க்கள் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. பி.பி.ஓ. என்றால் கால் சென்டரா என்கிறார்கள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லோரும் தொலைபேசியில் யாரையேனும் அழைத்து எதையேனும் விற்க மல்லுக்கு நிற்பவர்கள் அல்லது யாரேனும் அழைத்தால் "வெல்கம் டு ஏர்டெல் மே ஐ ஹெல்ப் யு" என்பவர்கள் என்பதாகவே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கால் சென்டர்கள் எல்லாமுமே பி.பீ.ஓ'க்கள் தான். ஆனால் பி.பீ.ஓ'க்கள் எல்லாமுமே கால் சென்டர்கள் இல்லை. பி.பீ.ஓ. என்றால் நாங்கள் எல்லோரும் அலுவலகம் சென்றதும் தொலைபேசியுடன் எங்களைக் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பவர்கள் இல்லை என்கிறேன். தொலைபேசியைக் கையிலேட்டுத்துக் கொண்டு மக்களுடன் மல்லுக்கு நிற்கும் வேலையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இந்தத் துறையில் பார்க்கிறார்கள், எல்லோரும் அல்ல.
பி.பீ.ஓ. என்றால் "பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங்" என்பதன் சுருக்கம் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. அவுட்சோர்சிங் என்பதை நம் லோக்கல் பாஷையில் "ஜாப் வொர்க்" என்பார்களே அத்துடன் ஒப்பிடலாம்.
டி.வி.எஸ். போன்ற கம்பெனிகள் தங்கள் கம்பெனியில் உருவாக்கப்படும் வண்டிகளுக்கு உதிரி பாகங்கள் அனைத்தையும் உருவாக்கத் தாங்களே யூனிட்டுகளை அமைத்துக் கொள்வதில்லை. அவற்றை வெளியே இதர சிறு சிறு கம்பெனிகளிடம் தந்து தேவையானவற்றை வாங்கிக் கொள்கின்றன.
இதில் பலவிதங்களில் லாபம் உண்டு. ஒரு யூனிட் தனியே அமைக்கும் செலவு, பணியாளர் நியமனம், அவர்களுடன் மல்லுக்கு நிற்பது அப்படி இப்படியென கம்பெனிகள் தலைவலி என நினைக்கும் பல படிகள் தவிர்க்கப்படுகின்றன. "வேணும்னா வேணும்" "வேணாம்னா வேணாம்" என ஓரிடத்திலிருந்து ஆர்டரை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். தனியே சொந்த யூனிட் அமைத்தால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு.
இந்தவகை 'ஜாப் வொர்க்" முறை ஒருவகையில் உள்ளூர் அவுட்சோர்சிங் எனப் புரிந்து கொள்ளுங்கள்.
பி.பீ.ஓ'க்களை சர்வதேச "ஜாப் வொர்க்" முனையங்கள் எனச் சொல்லலாம். வெளிநாட்டில் இருக்கும் கம்பெனிகளுக்கு நாங்கள் இங்கே கணக்கு எழுதுகிறோம், காசு வசூல் செய்கிறோம், இங்கே உட்கார்ந்த படியே அவர்கள் இல்லத்து கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்கிறோம், ஆடிட் செய்கிறோம், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் நோயாளிகளுக்கு மருந்து சிபாரிசு செய்கிறோம், இங்கிருந்தபடியே அங்கே நடக்கும் வழக்குகளுக்கு அங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கு பழைய வழக்குகளிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் கொடுக்கிறோம், வெளிநாட்டு விமானக் கம்பெனிகளுக்கு இங்கிருந்தே "இப்படி செய், அப்படி செய்" என டிசைன் டிப்ஸ் தருகிறோம் . இன்னமும் நிறைய செய்கிறோம்.
பி.பீ.ஓ'க்களில் நாங்கள் கிட்டத்தட்ட உலகில் உள்ள அத்தனை துறைகளுக்கும் வேலை பார்க்கிறோம். சரியாகப் படியுங்கள், எல்லா துறைகளிலும் என்று நான் சொல்லவில்லை. எல்லா துறைகளுக்கும் எனச் சொல்லியுள்ளேன்.
எங்களிடையே அக்கவுண்டண்ட்கள் இருக்கிறார்கள், ஆடிட்டர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் எல்லோரும் அறிந்தது. இவர்கள் மட்டுமல்ல எங்களிடையே டாக்டர்கள், பயோ-மெடிசின் படித்தவர்கள், ஏரோ எஞ்சினியரிங் படித்தவர்கள், வழக்கறிஞர்கள், பிசியோதெரபிஸ்டுகள், விற்பனை வல்லுனர்கள் என எல்லாவித வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
பெரிய படிப்புகளுக்குத்தான் இங்கே வேலையென நினைக்காதீர்கள். +2 முடித்தவர்கள், டிப்ளமோ படித்து வேலை தேடுபவர்கள் என இருப்பவர்களுக்கும் எங்கள் துறையால் வேலை தரமுடியும்.
ஓரளவு ஆங்கில ஞானத்துடன் கொஞ்சம் பிழைக்கத் தெரிந்த பேர்வழியா நீங்கள்? உங்கள் படிப்பு என்னவாக இருந்தாலும் ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ ஒரு பி.பீ.ஓ'வில் உங்களுக்கு வேலை நிச்சயம் உண்டு.
"இங்கே எப்படி உள்ளே நுழைவது, எனக்கு உங்க துறைல வேலை கிடைக்குமா?", என்று உங்களில் யாருக்காவது கேள்வி இருக்கிறதா? இது போன்ற கேள்விகளுக்குப் பின்னால் ஒரு பதிவின் வழியே பதில் அளிக்கிறேன். மேலும் உங்கள் கேள்விகள் என்று ஏதேனும் இருந்தால் அவற்றை இங்கே பின்னூட்டமாகவோ அல்லது "தொடர்புக்கு..." என்ற இந்த சுட்டியின் வாயிலாகவோ கேளுங்கள். எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
அது சரி, நாங்கள் அலுவலகத்துக்கு உள்ளே என்ன செய்கிறோம் எனச் சொல்லி விட்டேன். வெளியே இந்த நாட்டிற்கும் இந்த சமுதாயத்திகும் இந்தத் துறை என்னவெல்லாம் செய்கிறது?
அதனையும் ஆற அமர பின்னொரு அத்தியாயத்தில் பார்ப்போமே.
.
.
.
.
.
.
image courtesy: saisystems.com / http://openaccessmarketing.com