Showing posts with label பி.பீ.ஓ. நாட்குறிப்புகள். Show all posts
Showing posts with label பி.பீ.ஓ. நாட்குறிப்புகள். Show all posts

Mar 14, 2011

புத்தக வெளியீடு அழைப்பு - கார்பரேட் கனவுகள்!



அன்பு நண்பர்களுக்கு, 


நான் எழுதி வெளிவந்துள்ள என் முதல் புத்தகம் "கார்பரேட் கனவுகள்" வெளியீட்டு விழா வரும் பத்தொன்பதாம் தேதி சென்னை ராயப்பேட்டை ஸ்வாகத் மினி ஹாலில் நடைபெற உள்ளதால் தாங்கள் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 


விழா விபரங்கள்:


நாள்: சனிக்கிழமை, 19/03/2011 மாலை 05:30 மணிக்கு. 
இடம்: ஹோட்டல் ஸ்வாகத் (மினி ஹால்), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை.
 
புத்தக வெளியீடு: அய்யா சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
முதல் பிரதியைப் பெறுபவர்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.
நூல் அறிமுகம்: எழுத்தாளர் திரு. என்.சொக்கன் அவர்கள்


வாழ்த்து:
மூத்த எழுத்தாளர் திரு.ஜ.ரா.சு அவர்கள் (பாக்யம் ராமசாமி)
மூத்த பதிப்பாளர் அருணோதயம் திரு. அருணன் அவர்கள்
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள்
டாக்டர் ஷ்யாமா அவர்கள்
"இலக்கியவீதி" இனியவன் அய்யா அவர்கள்.






"கார்பரேட் கனவுகள்" புத்தகம் குறித்து....


BPO -  இந்த மூன்றெழுத்துக்கள் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாக்கிய மாற்றத்தை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் ஒரு முயற்சியே இந்தப் புத்தகம்.


பி.குதங்கள் நண்பர்களிடம் இந்த அழைப்பைப் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


ஸ்வாகத் ஹோட்டலுக்கு மேப் : http://goo.gl/4352X  





.
.
.

Jul 27, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦5

பேய்க் கதைகள் - தொடர்ச்சி....




நாய்கள் அனைத்தும் மரத்தின் அடிப்பாகத்தில் எதையோ பார்த்து ஆக்ரோஷமும் ஆனால் சற்றே பயமும் கலந்து ஊளையுடன் சேர்த்துக் குரைக்கின்றன. இப்படி ஒரு விநோதப் பெருங்குரலை நான் அதுவரை கேட்டதில்லை.


சினிமாவில் நள்ளிரவையும், நடுக்காட்டையும் கலந்து காட்டும்போது கிலி ஏற்படுத்த தூரத்தில் நரி ஊளையிடும் சத்தம் ஒன்றைச் சேர்ப்பார்கள். அது போல அந்த நாய்களின் சத்தம் திடீரென ஓய்ந்து போக, தூரத்தில் எங்கோ ஒற்றை நாய் ஒன்றின் ஊளையிடும் சத்தம் கேட்டது. 

என் அடிவயிறு சில்லிடுவதைத் தெளிவாகத் தனியே உணர முடிந்தது. என் கவனம் எதையோ யோசித்து எங்கோ திரும்பிப் போக பட பட'வென என் முதுகைத் தட்டினான் உதயா. "என்ன" என நான் சத்தமில்லாமல் தலையசைத்துக் கேட்க, மரத்தைக் காட்டி "உங்களுக்கு சத்தம் கேக்கலையா", என்றான். 

"கேட்டதா என்ன? என்று நான் யோசிக்குமுன் மீண்டும் குரைத்தல் வேலையைத் தொடங்கின நாய்கள். இப்போது இன்னும் நான்கு பங்கு ஆக்ரோஷம் சேர்ந்த குரல்கள்.

திடுதிப்பென நாய்கள் அத்தனையும் சொல்லி வைத்தாற்போல் ஒரே கணத்தில் எங்கள் வண்டி நோக்கித் திரும்பின. இப்போது குரைப்பு எங்கள் வண்டியைப் பார்த்தவாறே நிகழ்கிறது. டிரைவர் இருக்கையிலிருந்து பாய்ந்து எட்டி மறுபுறம் இருந்த ஜன்னல் கண்ணாடியை அவசர அவசரமாக ஏற்றி விடுகிறான் உதயா.

குரைத்தலைத் தொடர்ந்தவாறே மெதுவாக தாம் நின்ற இடத்தை விட்டு இடம்பெயர்ந்து எங்கள் வண்டி நோக்கி வரத் தொடங்குகின்றன அத்தனையும். இதை எப்படிப் புரிந்து கொள்வது என எனக்குத் தெரியவில்லை. 

கதவை மூடிவிட வேண்டும் என மட்டும் புரிகிறது. படாரெனக் கதவைச் சாத்திவிட்டு பரபரவென ஜன்னல் கண்ணாடியை ஏற்றி விடுகிறேன். சந்தேகம் வேண்டாம் என சைட் லாக்கைப் பொருத்திவிட்டு என்ன நடக்கிறது எனப் பார்க்கிறேன்.

எதையோ தொடர்ந்து துரத்துவது போல அந்த ஒரு டஜன் நாய்களும் எங்கள் வண்டி வரை குரைத்தவாறே வருகின்றன. நான் கண்களை உருட்டி சுழற்றிப் பார்த்தாலும் எனக்கு ஒன்றும் தென்படவில்லை. என்ன இவை, மடத்தனமான நாய்களா என நினைத்துக் கொள்கிறேன். 





எங்கள் ஜன்னல் கண்ணாடி நோக்கிக் குரைத்தல் மேலும் தொடர்கிறது. எனக்குத்தான் ஒன்றும் தென்படவில்லையோ? இப்படி அப்படித் திரும்பவும் பயமாகத்தான் இருக்கிறது. எதையாவது பார்த்துவிடுவோமோ?

இப்போது எங்கள் வண்டியை இன்னும் நெருங்குகின்றன நாய்கள். சடாரென சொல்லிவைத்தார்போல அனைத்தும் இடது பக்கமாகத் திரும்பி எங்கள் வண்டிக்கு முன்னதாக ஓட ஆரம்பிக்கின்றன. குரைத்தல் இப்போதும் நிற்கவில்லை. 


"உனக்கு ஏதாவது தெரியுதா", என்ற கேள்விக்கு "உங்களுக்கு ஏதாவது தெரியுதா?", என மறு கேள்விதான் பதிலாய்க் கிடைக்கிறது உதயாவிடமிருந்து.

ஒரே சீரான வேகம், ஜாக்கிங் செல்வது போல ஓடி ஓடி எதையோ தொடர்ந்து செல்லும் பாவனையில் இருட்டில் சென்று மறைந்தே விட்டன அத்தனை நாய்களும். குரைத்தல் காற்றில் கரைகிறது. கரைந்தே விடுகிறது.

அட ராமா என்னக் கொடுமைடா இது என ஒன்றும் புரியாமல் பெருமூச்சு விட்டுக் கண்ணை மூடினால் "கிளிக்" அதிரடியாக யாரோ கார் கதவைத் திறக்கும் ஓசை. தடதடக்கும் இதயத்துடன் திரும்பினால் ........ 

.....மெகா தொடர் நியாயப்படி இங்கே இன்னொரு "தொடரும்" போட்டிருக்க வேண்டும். ஆனால் உங்களில் நிறைய பேர் இப்போதே ஒரு "தொடரும்" போட்ட பாவத்திற்கு என் மீது பேய் வெறியில் இருப்பதால்.....


.......டிரைவர் பக்கத்து இருக்கையில் ஏறி அமர்கிறான் வெங்கட்.

"என்னப்பா ஏதோ சத்தம் கேட்டுச்சி", என ஏதோ கொசுவின் ரீங்காரத்திற்குத் தரும் ரீயாக்ஷன் தந்து கேள்வி கேட்கிறான் வெங்கட்.

அவனிடம் பொறுமையாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தேன். அவன் ஒரு பதில் தந்தான் பாருங்கள், "அட, அது எதுனா காத்து கருப்பா இருக்கும்பா"

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்றாலும், "திடுக், விலுக்" என என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். அப்படி தூக்கி வாரிப்போட்டது எனக்கு. "அட, எங்க ஏரியாவுல இதெல்லாம் சகஜம்பா".

"எனக்கு உருவமா ஒண்ணும் தெரியலையே வெங்கட்"

"நீ சினிமா பார்த்து, கதை படிச்சிட்டுப் பேசறன்னு தெரியுது. அவங்களுக்கு எல்லாம் உருவம் இருக்காது. காத்தை என்னிக்காவது கண்ணுல பாத்துறிக்கியா?" 

"சரிதான், இங்கே ஒரு பிரளயமே நடந்திருக்கு. இப்படிப் பேசறியேய்யா!", என நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் நான்கு வாரங்களுக்கு எனக்கு என் வட்டத்தில் எல்லோரிடமும் இந்தப் பேய் பார்த்த (!) சம்பவத்தை சொல்லிச் சொல்லியே பொழுது போனது.

இந்த சம்பவத்திகுப் பின் வெங்கட்டிற்கும் எங்களுக்கும் இடையே ஒரு எழுதாத ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் வீட்டில் புறப்படுகையில் ஒரு மிஸ்டுகால் தந்தால் அவன் தயாராக இருக்க வேண்டும். பத்தாவது நிமிடம் அவன் வீட்டு வாசலில் வண்டி நிற்கும். காத்திருப்பு அல்லது காத்து-கருப்பு ஏதுமில்லாமல் வண்டி அந்த இடத்தை விட்டு உடனே நகர வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இதற்குப் பின்னர் நீண்ட நாட்களுக்கு எங்கள் ரூட்டில் உதயா வரவில்லை. "அட பயம் ஒண்ணும் இல்லை சார். நான் கொஞ்சம் வேற ரூட்ல செட் ஆயிட்டேன் அவ்வளவுதான்", என சமாளிப்பான்.

ஆனால் விதி யாரை விட்டது? நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள் மேலும் அதேபோல் ஒரு சம்பவத்தை தரிசிக்க, அதே உதயா அதேபோல் ஒரு அதிகாலை அழைப்பிற்கு வந்து சேர்ந்தான்.

வழியில் வருபவர்களெல்லாம் மாறிப் போயிருந்தார்கள். வெங்கட் வேலையை விட்டே சென்றுவிட்டிருந்தான். வழக்கம் போல நானே முதலில் ஏறினேன். நெடுங்காலமாக மறந்திருந்த பழைய பேய்க்கதையைப் பேசியவாறே போய்க் கொண்டிருந்தோம். தைரியமாகப் பேசுபவன்போல இருந்தாலும் உதயா முகத்தில் "அட இந்த ரூட்ல வந்து மாட்டிக்கிட்டோமே" என்னும் பதற்றம் தெரிந்தது.

வெங்கட் இருக்கும் அதே ஏரியாவில் அடுத்த பிக்கப். அந்தத் தெருவிற்குள் வேகமாகத் திரும்பும் வேளையில் எங்கள வண்டியில் மோதிவிடுவது போல ஒரு உருவம் எதிரில் தடாலென வந்து இடித்து நின்றது. முழுக்க முக்காடிட்டு இருந்த அந்த உருவம் ஆணா பெண்ணா எனக் கூட எங்களால் ஊகிக்க முடியவில்லை. 

உதயாவிற்கு லேசாக உதற ஆரம்பித்ததை ஸ்டியரிங் மீதிருந்த கை காட்டிக் கொடுத்தது. நல்ல வேளை என் உதறலை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒன்றும் நடவாதது போல அந்த உருவம் எங்கள் வண்டியைக் கடந்து பின்னால் சென்று மறைந்தது. எங்கே மறைந்தது எப்படிப் போனது என ஒன்றும் புரியவில்லை.

"என்னா சார், இதுக்குதான் சார் மாதவரம்னாலே நான் வர்றது இல்ல".

"அட நாங்க இங்கேயே வாழறோம் தலைவா, வண்டிய ஓட்டு நீ", என முதுகில் தட்டினேன்.

இங்கேயும் பழைய கதை போலவே மாடியில் விளக்கு, இரட்டை விரல் செய்கை, அதன்பின் காத்திருப்பு என்றானது. ஐந்து நிமிடக் காத்திருப்பிற்குள்ளாக நாங்களிருவரும் தலா நான்கு பேய் பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுவிட்டோம்.

பேசிமுடித்த களைப்பில் நான் சற்றே பின் சாய்ந்து அயர்கிறேன். "என்னா சார் லேட்டாவுது", என்றவாறே தன் இருக்கையை பின்சாய்த்து ஒரு குட்டித் தூக்கம் போடத் தயாராகிறான் உதயா. 


சந்தரமுகி படம் பார்த்திருக்கிறீர்களா சந்திரமுகி? அதில் வருவது போல் 'சல் சல்" எனச் சலங்கை ஒலி எங்கோ கேட்கிறது. எட்டுத் திசையிலும் திரும்பிப் பார்க்கிறேன், இருட்டைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை. சாய்ந்திருந்த உதயா தன்னிச்சையாக நிமிர்ந்து அமர்கிறான். என்னைப் பார்த்து தலை சாய்த்து உதடு பிரிக்காமல் ஒரு புன்னகை புரிகிறான், "நான் சொன்னேனில்ல?".


திடும் என என் அருகில் கதவிற்கு வெளியே ஒரு வெள்ளை உருவம் முளைத்தது. வெளிச்சமாக வெள்ளைச் சேலை, ஷாம்பூ விளம்பரம் போல நீண்டு விரித்த அடர்த்தியான கூந்தல், அதில் கனமாக ஒரு நான்கு முழ மல்லிகைப் பூச்சூடல். சொல்லத் தேவையில்லாமல் அது ஒரு பெண் உருவம்.


சப்த நாடியும் சிலிர்த்துக் கொள்ள "ப்ப்ப்ப்ப்ப்பே........" என  நான் அலறிய அலறல் எட்டு ஊருக்குக் கேட்டிருக்கும்.

திரும்பிப் பார்த்த உதயா, ஒரு கணமும் யோசிக்கவில்லை. டாப் கியரில் வண்டியைக் கிளப்பி விட்டிருந்தான். ஐந்தே நிமிடங்கள்தான். எதையும் யோசிக்காமல், எங்கு செல்கிறோம் எனக்கூட புரியாமல் சந்து பொந்தெல்லாம புகுந்து எங்கெங்கோ சுற்றி சுற்றி கடைசியில் எப்படியோ ஒரு முக்கியச் சாலைக்கு வந்து சேர்ந்தான்.

நான்கைந்து பேர் அந்தச் சாலையில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் பார்த்த பின்தான் என் இதயமே இயங்க ஆரம்பித்தது.

என் செல்போன் சிணுங்க, "டிரான்ஸ்போர்ட் டெஸ்க்" என்றது திரை.

"சார், கிரி சார்! என்ன சார்? லேடி எம்ப்ளாயி வண்டியில ஏற வர்றாங்களாம், நீங்க வண்டி மூவ் பண்ணி வேகமாப் போயிட்டீங்களாம். அவங்க அங்கேயே வெயிட் பண்றாங்க சார். போயி பிக்கப் பண்ணிட்டு வந்துடுங்க சார்", என்றது மறுமுனைக் குரல்.


எங்கள் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
.
.
.
image courtesy: planetsview.blogspot.com / photo.net / 

Jul 20, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦4

பேய்க் கதைகள்



பி.பீ.ஓ'வில் வேலை செய்யத் தொடங்கிய பின் எனக்கு முதன்முதலாய் நேர்ந்த பேய் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முன், இங்கே வேலை பார்க்கும் நாங்கள் எல்லோரும் எப்படிப் பேய்த்தனமாக வேலை பார்க்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய், மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பும் ஜென்மங்கள் இல்லை நாங்கள். அமெரிக்கர்களுக்கு, ஆஸ்திரேலியர்களுக்கு, ஐரோப்பியர்களுக்கு என வகைவகையாக நாங்கள் வேலை பார்ப்பதால், எங்கள் வேலை நடு ராத்திரியில் தொடங்கி நண்பகலில் முடியும். அல்லது நடுப்பகலில் தொடங்கி நள்ளிரவில் முடியும். இல்லையென்றால் முன்னிரவில் தொடங்கிப் பின்னிரவில் முடியும். இரவைத் தரிசிக்காமல் எங்களால் வேலைக்குப் போகவோ அல்லது திரும்பவோ முடியாது.

நாங்கள் வேலைக்குப் புறப்படும்போது ஊரே தூங்கிக் கொண்டிருக்கும். அல்லது நாங்கள் வீடு திரும்பும்போது வீடே தூங்கிக் கொண்டிருக்கும். 

சில நேரங்களில் இதை நினைத்து சுயபச்சாதாபம் தலைதூக்கி நெஞ்சாங்குழி அடைக்கும். வழியில் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு பெப்சியோ கோக்கோ அருந்தும்வரை அது இருக்கும்.

ப்போது எனக்கு ஆஸ்திரேலிய நேரத்தில் வேலை. காலை மூன்று மணிக்கு நான் முதலில் காரில் ஏற வேண்டும். எனக்குப் பின் வியாசர்பாடியில் வெங்கட், பின்னர் திருவல்லிக்கேணியில் நான்கைந்து பேரை ஏற்றிக் கொண்டு அலுவலகம் செல்வோம். வழக்கமாய் வரும் உதயாதான் அன்றும் வண்டியை உருட்டிச் சென்றான். 

பெய்தும் பெய்யாமலும் யோசனையுடன் சாலைகளை நனைத்துக் கொண்டிருந்தது மழை. "சங்கீத சாகரம்" யேசுதாசைப் பாட வைத்துவிட்டுப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார் "யாழ்" சுதாகர்.

ஓரிரு டீக்கடைகளில் நாயர்கள் ஸ்டவ் பற்ற வைத்துக் கொண்டிருந்தனர். போதிய இடைவெளியில் அவ்வப்போது நாடார்கள் தங்கள் எம்-80௦'க்களில் கோயம்பேடு நோக்கிப் பறந்து கொண்டிருந்தனர். எங்கேனும் சில சுவர் ஓரங்களில் சிலர் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டோ கிழித்துக் கொண்டோ இருந்தார்கள். 

இவை தவிர்த்து வழக்கத்திற்குச் சற்றும் மாறாமல் சந்து, வீதி, தெரு, சாலை என எதை எல்லாம் கடக்கிறோமோ அங்கெல்லாம் மக்கள், மாக்கள், வீடு, விடுதி என எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறது.

வெங்கட் வீட்டின் சந்து முனையை அடைந்து "பாம் பாம் பாம்", புதிதாய்ப் பொருத்தியிருந்த ஹாரனை அந்த அகால வேளையில் பரீட்சை செய்து பார்க்கிறான் உதயா. ஒரு நாய் எங்கள் வண்டியை வினோதமாய்ப் பார்த்து விட்டு அந்தச் சந்தினுள் ஓடுகிறது. சந்து முனையில் காத்திருக்கிறோம்.

அந்தச் சந்தில் நான்கைந்து வீடுகள் கடந்தால் வலது புறம் மாடியில் விளக்கு எரிகிறது. "ரெண்டு நிமிஷம் வந்துடறேன்", விரல்களால் வெங்கட் சைகை செய்கிறான்.   நான் அரைத் தூக்கத்தில் கார் கதவைத்  திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.

திடீரென அந்த சூழலே ஏதோ பரபரப்பானதான தோற்றம். ஏதோ சத்தங்கள் அடங்கின, வேறேதோ சத்தங்கள் புதிதாகத் தொடங்கின. உதயாவின் கண்கள் உன்னிப்பாகின. நானும் சத்தம் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்க்கிறேன். 

வெங்கட்டின் வீட்டின் எதிர்த் திசையில் வீடுகள் ஏதுமில்லை. ஒரேயொரு மரம் மட்டும் அடர்ந்து பறந்து நிற்கிறது. இருட்டில் சரியாகத் தெரியவில்லை என்றாலும் அது புளிய மரமாக இருக்கக் கூடும் என யூகம் செய்து கொள்கிறேன்.



உள்ளே ஓடிய அந்த நாய் தன்னுடன் எங்கிருந்துதான் அத்தனை நாய்களை சேர்த்துக் கொண்டதோ, திடீரென அங்கே ஒரு டஜன் நாய்கள் பிரசன்னாமாயின. அத்தனை நாய்களும் ஒரே நேரத்தில் நேர்த்திசையில் அந்த புளிய மரத்தை நோக்கியவாறே நிற்கின்றன.

எனக்கும் சரி உதயாவுக்கும் சரி, இங்கே ஏதோ நிலைமை சரியில்லை என மட்டும் புரிகிறது. இருந்தும் அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதில் சுவாரசியம் கூடிப் போனதால் அந்த சுவாரசியம் எங்கள்  பயத்தைத தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இப்போது எல்லா நாய்களும் ஒரே நேரத்தில் தொண்ணூறு டிகிரிக்குத் தலைகளை உயர்த்தி புளியமர உச்சி நோக்கி ஓலமிட ஆரம்பித்தன. அந்த ஓலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே சுருதியில் குரைத்தலாக மாறத் தொடங்குகிறது.



எனதுடன் சேர்த்து உதயாவின் இதயத் துடிப்பும் தடதடவென எனக்குக் கேட்கிறது. திரும்பி உதயாவைப் பார்க்கிறேன், அவன் ஊசியில் நூல் கோர்க்கும் முகபாவத்தில் புளியமரத்தைப் பார்க்கிறான்.

நாய்களின் தலைகள் அனைத்தும் இப்போது கீழ்நோக்கி எதையோ பார்த்தவண்ணம் ஒருமித்து இறங்க ஆரம்பித்தன. மரத்தின் அடிபாகத்தை நோக்கி இப்போது ஓலமும் குரைத்தலுமாக கலப்பட ஓசைகள் தொடர்கிறது.

இந்த கலாட்டாக்களில் நாங்கள் மறந்து போயிருந்த வெங்கட் வீட்டு பால்கனியில் இன்னொரு விளக்கும் இப்போது எரிகிறது. ஒரு பெரியவர் தன் தலையை வெளியே நீட்டி, "ஏய், போ.....போங்க.....நேரங்கெட்ட நேரத்துல சத்தம் போட்டுட்டு", எனக் குரல் கொடுத்து விட்டு அவர் பங்கிற்கு எங்கள் வண்டி நோக்கி "ரெண்டு நிமிஷம், வெங்கட் வந்துடுவாரு", என சைகை காட்டிவிட்டு உள்ளே மறைகிறார்.


image courtesy: http://all-free-download.com / http://www.stevehornung.com

Jul 12, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦3


கலாச்சார பேதங்கள் 



மேனாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவிலிருந்து வேலை செய்தலில் நமக்குள்ள முதல் பிரச்னை நம்மிடையே உள்ள கலாச்சார பேதங்கள்தான்.

நான் இங்கே கலாச்சாரம் எனச் சொல்வது உடை அணியும் முறை அல்லது வாழ்க்கை முறையை அல்ல. எப்படியும் அந்த விஷயங்களில் நாம் அவர்களுக்கு இணையான பயணங்களை நெடுங்காலம் முன்பே தொடங்கிவிட்டோம். நான் சொல்ல வருவது வேலை செய்யும் முறை, வேலை தரும் மற்றும் பெரும் முறைகளைப் பற்றி.

மேலை நாட்டவர்கள் பெரும்பாலும் நேரிடையாக எதையும் அணுகுபவர்கள். அவர்களுக்கு எதை எடுத்தாலும் "உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை", அவ்வளவுதான். ஆனால், நாம் வளர்ந்த சூழல் அப்படி இல்லை. சிறு வயது முதலே நமக்கு முடியாதென்றாலும் "பண்ணிடலாம் சார்" எனத்தான் சொல்லச் சொல்லி பழக்கப் படுத்தப்பட்டுள்ளோம். "அதை ஏன் மூஞ்சில அடிச்சா மாதிரி முடியாதுன்னு சொல்றே, ஒரு முயற்சி பண்ணி பாத்துட்டு முடியாதுன்னு சொல்லு", என்பார் என் பழைய முதலாளி ஒருவர். அவரைப் பொறுத்தவரையில் முடியாததை முடியாது என்று சொல்தல் முகத்தில் அடிப்பது போல.

நம்மூரில் வண்டியை மெக்கானிக்கிடம் கொண்டு கொடுங்கள். அடுத்த வாரம் கொடுக்கப் போவதை, "நாளைக்கு ரெடி ஆகிடும் சார்", என்பார். நாளைக்கு போன் செய்தால், "தோ வெல்டிங் சொல்லிருக்கேன் சார், கொஞ்சம் டைம் ஆவுது, நீங்க நாளைக்கு எடுத்துக்கங்களேன்", என பதில் வரும். இது மெக்கானிக்குகளுக்கு மட்டுமல்ல, நம்மிடையே பொய்யான உத்திரவாதங்கள் தரும் எல்லோருக்கும் பொருந்தும்.

கலாச்சார பேதங்கள் இது போன்ற உத்திரவாதங்களோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. இதோ என் அனுபவத்தைப் பாருங்கள்....

கிளையன்ட் வருகை நேரம் அது. என் மேனேஜர் டேனியல் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். அவருடனான ஒரு உரையாடலின் போது, ஒரு சின்ன புராஜக்ட் குறித்து விவரித்து விட்டு "என்ன இதை முடிச்சிடலாம் இல்லையா, உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே",என்றார் என்னைப் பார்த்து. நான் "சரி கண்டிப்பாக முடித்திடலாம்" என்னும் நோக்கில் தலையை வலம் இடமாக see-saw பாணியில் அசைத்தேன். அவர்கள் அர்த்தத்தில் நான் சொன்னது "நோ". 

தலையை மேலும் கீழும் ஆட்டினால் சரி. இடம் புறமாக ஆட்டுதல் "இல்லை". இதுதான் அவர்கள் அகராதி. நம்மைப் பொறுத்தவரை தலையைச் சமமாக இடம் வலமாக அசைத்தல் "இல்லை". தலையை உருட்டியாவாறே  இடம் வலமாக அசைத்தால் "எஸ் சார்" என அர்த்தம். இந்தப் புரிதல்கள்  அவருக்குக் கிடையாதே.

"அப்படியா, சரி. உன்னால முடியாதுன்னா இதை முடிக்க வேற எதாவது வழிவகை பார்த்துக்கறேன்", என டேனியல் சொன்னதும்தான் எனக்கு நான் செய்த தவறு விளங்கியது.

"இல்லை டேனியல், என்னால் முடியும் என்பதுதான் என் பதில்", எனச் சொன்னேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார்.

"எஸ்" "நோ" தலையாட்டல்கள் இப்படி என்றால், எந்த விஷயத்திற்கும் "எஸ்" "நோ" சொல்வதில் உள்ள குளறுபடிகள் குறித்து நாம் புத்தகங்களே போடலாம். ஆங்கில மொழியில் இந்த கலாசார பேதங்களை விளக்கி அங்கே சில புத்தகங்கள் கூட கிடைக்கின்றன. "இந்தியர்களுடன் பணிபுரிவது எப்படி", "ஆசிய-மேலை நாட்டுப் பணிமுறைகள் - சில கலாசார வித்தியாசங்கள்" என்று அவர்கள் ஊரில் புத்தகம் போட்டு பணக்காரர்கள் ஆனவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் "எஸ்" என்ற வார்த்தைக்கு "ஆமாம்" "சரி" என்று இரண்டே இரண்டு அர்த்தங்கள்தான். ஆனால் நமது வழக்கத்தில் "எஸ்" என்பதை நாம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக வடஇந்தியர்களிடம் இந்த வாடிக்கை மிக அதிகம். "அச்சா" என்ற பிரயோகம் ஆங்கிலத்தில் அப்படியே "எஸ்" ஆகிப் போவதுதான் குழப்பங்களுக்கான முதன்மைக் காரணம். "அப்படிப் போடு", "அப்படியா?" "அது சரி" என எல்லாமே "அச்சா"தான் அங்கே. அதை அப்படியே இந்தியத் தொனியில் "எஸ்" என்று சொல்கையில் மண்டை காய்கிறது நம் மேனாட்டு வாடிக்கையாளர்களுக்கு.

"அட, விடுங்க சார். நம்மளை இருநூத்தி அம்பது வருஷம் ஆட்சி செய்து காய வெச்சாங்க,.நம்ம கிட்டயும் கொஞ்சம் காயட்டுமே" என சொல்வதற்கில்லை. நாம் இது போல வாங்கிக் கொள்ளும் கறுப்புப் புள்ளிகளுக்கு எல்லாம் பரிசு வேறொன்றுமில்லை. நம் பிசினஸ் நம் கையை விட்டு அடுத்த கம்பெனியின் கைகளுக்குச் செல்வதுதான். 

சி.டி.எஸ். இல்லைன்னா சத்யம். இன்போசிஸ் இல்லன்னா டி.வி.எஸ். என அவர்களுக்கு இந்தியாவில் இந்த வேலை செய்வதக்கு இடம் இல்லாமல் இல்லை. ஆகவே, நாம் வேலை செய்யும் கம்பெனியின் வியாபார நிலைப்பாடு நம் சிறு சிறு அணுகுமுறைகளில் கூட ஒளிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

அதற்கான பயிற்சிகளாகத்தான் வேலை குறித்த விஷயங்களையும் தாண்டி பேசுதல், எழுதுதல் போன்ற அடிப்படை விஷயங்கள் தொடங்கி பல்வேறு நிலைகளில் இங்கே பணி புரிபவர்களுக்கு எங்கள் நிறுவனங்கள் பல பயிற்சிகளைத் தருகின்றன.

ஒரு உதாரணம் பாருங்கள். இன்போசிஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் டிரைனிங்'கிற்கு ஒதுக்கிய பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன் இருநூற்று முப்பது அமெரிக்க மில்லியன்கள். இந்திய மதிப்பில்? மயக்கமடையாதீர்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்கள் மட்டுமே. இந்த பட்ஜெட்டில் வேலை தொடர்பான ப்ராசஸ் டிரைனிங்'குகள் பெரும்பாலும் அடங்கும் என்றாலும், அதைத் தாண்டி ஒவ்வொரு தனி ஊழியரின் இதர மேலாண்மைத் திறன்களை செம்மைப்படுத்துதலுக்கான செலவுகளும் அடக்கம்.

அப்படி என்னத்தை செம்மைப் படுத்துகிறார்கள் எனக் கேட்கிறீர்களா? ஒரு சின்ன பேய்க்கதை இருக்கிறது. அந்த லைட் சப்ஜெக்டைத் தொட்டுவிட்டு அதன்பின் இந்த வெயிட் சப்ஜெக்டைப் பார்ப்போம்.
.
.
.
image courtesy: http://personalisedgifts1.files.wordpress.com / http://www.cartoonstock.com

Jul 5, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦2

கார்பரேட் மொழி

மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண்கிறார்கள். எந்த வீரதீர சினிமாக்காரனும் எண்ணிப்பாராத விதத்தில் நேர்மையாக வருமானவரி கட்டுகிறார்கள். 
- எம் குலத்தோர் பற்றி நாஞ்சில் நாடன் (நன்றி: தீதும் நன்றும், ஆனந்த விகடன்)


_________________________
என்னதான் செய்கிறார்கள்?


"நீங்க பி.பீ.ஓ'வுல அப்படி என்ன வேலைதான்யா செய்றீங்க", என ஒருவர் கேட்டிருந்தார். அதற்கான பதிலாகவே இந்தப் பதிவு.


இரவு சுமார் பன்னிரண்டு மணி. அலுவலக வண்டியில் (cab) வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். வால்டாக்ஸ் ரோடில் போலீஸ்காரர் ஒருவர் வண்டியை மறிக்கிறார்.


"எங்கிருந்து வர்ற?"


"சோழிங்கநல்லூர் சார்", முன்னாலிருந்து டிரைவர் குரல்.


"என்ன கம்பெனி?"


முன்னால் உட்கார்ந்திருக்கும் நண்பன் எங்கள் கம்பெனி பெயர் சொல்கிறான்.


"என்னது?", அவருக்கு சரியாக கேட்கவில்லை அல்லது விளங்கவில்லை.


மீண்டும் சொல்லப்பட, மீண்டும் புரியாமல் போகப்பட....


"ஐ.டி. கார்டு காட்டுங்க?"


தோளில் தொங்கும் அட்டை தூக்கிக் காண்பிக்கப் படுகிறது.


":இதுல கம்பெனி பேரே இல்லையே?"


"சாரி, இது எங்க கம்பெனி டிஸ்ப்ளே கார்டு, ஒரு நிமிஷம் இருங்க", நண்பன் தன் மணிபர்சை எடுத்து அடையாள அட்டை எடுத்துக் காண்பிக்கிறான்.


இன்னமும் அந்தக் காவலருக்கு ஏதோ உடன்பாடில்லை. முன்னால் குனிந்து டிரைவரைப் பார்க்கிறார்.


"என்ன கம்பெனி?"


"கால் சென்டர் வண்டி சார்"


இப்போது காவலர் முகத்தில் ஒரு "ஓகே" சொல்லும் மனோபாவம் தெரிகிறது.


"கால் சென்டரா, இதை மொதல்லையே சொல்லவேண்டியது தான? போ போ"


இப்படித்தான் பி.பீ.ஓ'க்கள் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. பி.பி.ஓ. என்றால் கால் சென்டரா என்கிறார்கள். அங்கே வேலை செய்பவர்கள் எல்லோரும் தொலைபேசியில் யாரையேனும் அழைத்து எதையேனும் விற்க மல்லுக்கு நிற்பவர்கள் அல்லது யாரேனும் அழைத்தால் "வெல்கம் டு ஏர்டெல் மே ஐ ஹெல்ப் யு" என்பவர்கள் என்பதாகவே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கால் சென்டர்கள் எல்லாமுமே பி.பீ.ஓ'க்கள் தான். ஆனால் பி.பீ.ஓ'க்கள் எல்லாமுமே கால் சென்டர்கள் இல்லை. பி.பீ.ஓ. என்றால் நாங்கள் எல்லோரும் அலுவலகம் சென்றதும் தொலைபேசியுடன் எங்களைக் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பவர்கள் இல்லை என்கிறேன். தொலைபேசியைக் கையிலேட்டுத்துக் கொண்டு மக்களுடன் மல்லுக்கு நிற்கும் வேலையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இந்தத் துறையில் பார்க்கிறார்கள், எல்லோரும் அல்ல.





பி.பீ.ஓ. என்றால் "பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்சிங்" என்பதன் சுருக்கம் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்தது. அவுட்சோர்சிங் என்பதை நம் லோக்கல் பாஷையில் "ஜாப் வொர்க்" என்பார்களே அத்துடன் ஒப்பிடலாம். 

டி.வி.எஸ். போன்ற கம்பெனிகள் தங்கள் கம்பெனியில் உருவாக்கப்படும் வண்டிகளுக்கு உதிரி பாகங்கள் அனைத்தையும் உருவாக்கத் தாங்களே யூனிட்டுகளை அமைத்துக் கொள்வதில்லை. அவற்றை வெளியே இதர சிறு சிறு கம்பெனிகளிடம் தந்து தேவையானவற்றை வாங்கிக் கொள்கின்றன. 

இதில் பலவிதங்களில் லாபம் உண்டு. ஒரு யூனிட் தனியே அமைக்கும் செலவு, பணியாளர் நியமனம், அவர்களுடன் மல்லுக்கு நிற்பது அப்படி இப்படியென கம்பெனிகள்  தலைவலி என நினைக்கும் பல படிகள் தவிர்க்கப்படுகின்றன. "வேணும்னா வேணும்" "வேணாம்னா வேணாம்" என ஓரிடத்திலிருந்து ஆர்டரை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும். தனியே சொந்த யூனிட் அமைத்தால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு.

இந்தவகை 'ஜாப் வொர்க்" முறை ஒருவகையில் உள்ளூர் அவுட்சோர்சிங் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

பி.பீ.ஓ'க்களை சர்வதேச "ஜாப் வொர்க்" முனையங்கள் எனச் சொல்லலாம். வெளிநாட்டில் இருக்கும் கம்பெனிகளுக்கு நாங்கள் இங்கே கணக்கு எழுதுகிறோம், காசு வசூல் செய்கிறோம், இங்கே உட்கார்ந்த படியே அவர்கள் இல்லத்து கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்கிறோம், ஆடிட் செய்கிறோம், இங்கிருந்தபடியே அங்கிருக்கும் நோயாளிகளுக்கு மருந்து சிபாரிசு செய்கிறோம், இங்கிருந்தபடியே அங்கே நடக்கும் வழக்குகளுக்கு அங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கு பழைய வழக்குகளிலிருந்து  மேற்கோள்கள் எடுத்துக் கொடுக்கிறோம், வெளிநாட்டு விமானக் கம்பெனிகளுக்கு இங்கிருந்தே "இப்படி செய், அப்படி செய்" என டிசைன் டிப்ஸ் தருகிறோம் . இன்னமும் நிறைய செய்கிறோம்.

பி.பீ.ஓ'க்களில் நாங்கள் கிட்டத்தட்ட உலகில் உள்ள அத்தனை துறைகளுக்கும் வேலை பார்க்கிறோம். சரியாகப் படியுங்கள், எல்லா துறைகளிலும் என்று நான் சொல்லவில்லை. எல்லா துறைகளுக்கும் எனச் சொல்லியுள்ளேன்.

எங்களிடையே அக்கவுண்டண்ட்கள் இருக்கிறார்கள், ஆடிட்டர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் எல்லோரும் அறிந்தது. இவர்கள் மட்டுமல்ல எங்களிடையே டாக்டர்கள், பயோ-மெடிசின் படித்தவர்கள்,  ஏரோ எஞ்சினியரிங் படித்தவர்கள், வழக்கறிஞர்கள்,     பிசியோதெரபிஸ்டுகள், விற்பனை வல்லுனர்கள் என எல்லாவித வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.




பெரிய படிப்புகளுக்குத்தான் இங்கே வேலையென நினைக்காதீர்கள். +2 முடித்தவர்கள், டிப்ளமோ படித்து வேலை தேடுபவர்கள் என இருப்பவர்களுக்கும் எங்கள் துறையால் வேலை தரமுடியும். 

ஓரளவு ஆங்கில ஞானத்துடன் கொஞ்சம் பிழைக்கத் தெரிந்த பேர்வழியா நீங்கள்? உங்கள் படிப்பு என்னவாக இருந்தாலும் ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ ஒரு பி.பீ.ஓ'வில் உங்களுக்கு வேலை நிச்சயம் உண்டு.


"இங்கே எப்படி உள்ளே நுழைவது, எனக்கு உங்க துறைல வேலை கிடைக்குமா?", என்று உங்களில் யாருக்காவது கேள்வி இருக்கிறதா? இது போன்ற கேள்விகளுக்குப் பின்னால் ஒரு பதிவின் வழியே பதில் அளிக்கிறேன். மேலும் உங்கள் கேள்விகள் என்று ஏதேனும் இருந்தால் அவற்றை இங்கே பின்னூட்டமாகவோ அல்லது "தொடர்புக்கு..." என்ற இந்த சுட்டியின் வாயிலாகவோ கேளுங்கள். எனக்குத் தெரிந்தவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

அது சரி, நாங்கள் அலுவலகத்துக்கு உள்ளே என்ன செய்கிறோம் எனச் சொல்லி விட்டேன். வெளியே இந்த நாட்டிற்கும் இந்த சமுதாயத்திகும் இந்தத் துறை என்னவெல்லாம் செய்கிறது?

அதனையும் ஆற அமர பின்னொரு அத்தியாயத்தில் பார்ப்போமே.
.
.
.
image courtesy: saisystems.com / http://openaccessmarketing.com

Jul 2, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦1

கார்பரேட் மொழி
தெரிஞ்ச விஷயத்தை சமாளிக்கறவன் வேலைக்காரன். தெரியாததையும் சமாளிக்கறானே, அவன்தான் மேனேஜர். 
__________________________________________________________________________

காதல் தோட்டா

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய காதலுக்கு பி.பீ.ஓ'க்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? இளசுகளின் ராஜாங்கமான இங்கே வகை வகையான காதல்கள் உண்டு.

வனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். அவன் முழுப்பெயர் ரவிராம் தோட்டா. ஆந்திராவில் ராஜமுந்திரி அவன் ஊர். வீட்டில் பாபு எனப்பெயர். "தோட்டா" குடும்பப் பெயர். "ரவி", "தோட்டா", "பாபு", "லூசு" என எங்கள் வட்டத்தில் இவன் விதவிதமாக விளிக்கப்படுவான்.


தோட்டா பேசும் தமிழ் கேட்கக் காமெடியாக இருக்கும். "அது ஜி..." எனத்தான் எதையும் பேச ஆரம்பிப்பான்.

இவனை உங்களால் கோபப்படுத்தவே முடியாது. அதேபோல இவனுக்கு சீரியசான விஷயம் என்று எதுவுமே இல்லை. எந்த சீரியசான விவாதத்திலும் இவனை யாரும் சேர்க்க மாட்டார்கள். விவாதத்தைக் காமெடியாக்கி எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவான்.

முன்பு வேலை பார்த்த இடத்திலேயே ஒரு கல்யாணமான பெண்ணுடனான ஒரு காதல்கதை (!) ரசாபாசத்தில் முடிந்ததாக தோட்டாவின் பழைய தோழர்கள் சொல்லுவார்கள். அதைப்பற்றிப் பேசினால் கூட பெருமைதான் தோட்டாவுக்கு. "அது ஜி, அந்த பொண்ணோட அப்பா கால்ல வுழுந்துச்சி ஜி, சரி நமக்கு எதுக்கு மத்தவங்க பாவம்னு நிறுத்திட்டேன் ஜி", என்பான். சில நேரங்களில் இவன் ஆபத்தான ஆள் கூட எனப் புரிந்து கொள்ளலாம்.

பக்கத்து புராஜெக்ட் ஒன்றில் வேலை பார்த்த "இப்படி அப்படி" என இருந்த ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் நம்மாளுக்கு இங்கேயும் காதல் கண்டமேனிக்குப் பற்றிக் கொண்டது. அப்பெண்ணின் டீம் லீடர் வாசு நம்ம தோட்டாவின் நல்ல தோஸ்த். ஒரு நல்ல தருணத்தில் ஒரு இன்ட்ரோ தருகிறேன் காத்திரு என தோஸ்த் சொல்ல, காத்திருக்க ஆரம்பித்தான் நம்மவன். ஏனோ தோஸ்த் இருவரிடையே இறுதிவரை இன்ட்ரோ தருவதாயில்லை. அவர் என்ன திட்டத்தில் இருந்தாரோ?

இடையில் அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை எப்படியோ சேகரித்து அவளுக்கு இரண்டொரு மிஸ்டு கால்கள்,

"ஹலோ" - கட்

"ஹலோ, ஹலோ....யாரு வேணும் உங்களுக்கு" - கட்.

"ஹலோ, நான் வோடபோன்ல இருந்து பேசறேன். நீங்க இன்னும் உங்க பில் கட்டலை மேடம்"

"ஹலோ, என்னுது ப்ரீபெய்ட்  கனெக்ஷன் சார்"

"சரி, நாங்க செக் பண்ணிட்டு திரும்ப கூப்பிடறோம் மேடம்",  இப்படிச் சில முறைகள்.

மேலும் இரண்டொரு முறை குறுந்தகவல்கள்

"நான் சத்யம்'ல வெயிட் பண்றேன் டியர், நீ எங்க இருக்க?",

"யாரு நீ"

"ஓ சாரி, ஆள் தெரியாம மெசேஜ் தப்பா உங்களுக்கு அனுப்பிட்டேன், மன்னிக்கணும்", இப்படி பைத்தியக்காரத்தனங்கள் செய்தவாறே திரிந்து  கொண்டிருந்தான்.

அவள் காலை சிற்றுண்டி செல்லும் நேரம் மட்டுமே இவனுக்குப் பசிக்கும். நான்கு மேஜைகள் தள்ளி உட்காருவான். இட்லி, பொங்கல் உள்ளே போகிறதோ இல்லையோ, அவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருப்பான். அவள் சாப்பிட்டு எழுந்தால் "போலாமா ஜி", என எழுந்திருப்பான்.

அவளும் ஒரு மார்க்கமாகத்தான் இவனை நோக்கிப் பார்த்துச் செல்வாள். அது காதல் வகைப் பார்வை இல்லையென்றாலும் அதில் ஒளிந்த அர்த்தம் எங்கள் யாருக்கும், அவன் உட்பட , கடைசி வரை புரியவில்லை.

ஒரு சுபயோகசுப வெள்ளிக்கிழமையன்று அந்தப் பெண்ணை அலுவலகத்தில் காண முடியவில்லை. "அது என்னவோ லீவு போட்டிருக்கு ஜி" என்றவன் தன் காத்திருப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டேன் எனவும் என்னிடம் சொன்னான்.

"நல்ல விஷயம் தோட்டா, இனி உன் வேலைய உருப்படியா பாரு"

"இல்ல ஜி என் காதலை சொல்லிடலாம்னு இருக்கேன், வர்ற திங்கக்கிழமை சொல்லிடலாம்னு நெனைக்கறேன் ஜி. நீங்க என்ன நெனைக்கறீங்க ஜி?"

"நான் ஒண்ணும் நெனைக்கல", என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

திங்கட்கிழமை காலை சிற்றுண்டி நேரம். நான், தோட்டா, தோஸ்த் மூவரும். தட்டுகளில் சுடச்சுட பொங்கல் வடை.

"என்ன தோஸ்த், நம்ம ஆளுக்கு ஏதும் உதவி பண்ண மாட்டேங்கறீங்க. அந்தப் பொண்ணு மேல ரொம்ப ஆர்வமா இருக்கான்."

"யோவ், அது என் தங்கச்சின்னா கூட பரவாயில்லய்யா. வீட்ல செருப்படியோட போகும். என் டீம் மெம்பர்யா. கொஞ்சம் எசகுபெசகு ஆனா எனக்கு வேலையே போயிடும்".

"நம்ம ஆளு இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருக்கான் தெரியுமா?"

"தெரியும் தெரியும், ஆனா அந்தப் பொண்ணு இன்னைக்கும் இன்னும் வரலையேப்பா. லேட்டா இல்லை லீவான்னு தெரியலை".

மேஜை மீது இருந்த போன் சிணுங்கியது. தோட்டா எட்டி யாரெனப் பார்த்தவுடன் முகம் ஆயிரம் வோல்ட் பிரகாசம் ஆனது.

"ஜி ஜி, அந்தப் பொண்ணுதான் ஜி", என்று மிக பவ்யமாக ஏதோ அந்தப் பெண்ணையே கையாள்வது போல இதமாக மொபைலை எடுத்து தோஸ்திடம்  தந்தான். அவன் முகம் பரபரப்பாக தோஸ்த் பேசுவதைக் கேட்கத் தயாரானது.

அத்தனைக் காலையில் கான்டீனில் கூட்டம் குறைவாகவும், தோஸ்தின்  மொபைலில் ஒலியளவு அதிகமாகவும் இருந்ததால் அந்தப் பக்கம் பேசுவதும் எங்களுக்குக் கேட்டது.

"சொல்லும்மா, என்ன இன்னைக்கும் லீவா?"

"ஆமாம் வாசு, நான் இப்போ காஞ்சிபுரத்துல இருக்கேன்", குரலில் ஒரு  யோசனை, இழுவை தெரிந்தது.

"என்னம்மா ஆச்சு?"

"வந்து வாசு.....ம்ம்ம்ம்..... எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சி. வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம், அதான் நாங்க இப்படி....."

பக்கத்தில் படாரென ஏதோ வெடிக்கும் சத்தம். திரும்பிப் பார்த்தால் தோட்டாவின் சட்டை பொசுங்கியிருந்தது .
.
.
.

Jun 28, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - ௦நுழையுமுன் - 1

உள்ளே நுழையுமுன்.... (1)



"கற்றதனால்  ஆய
பயனென் கொல்"
கந்தசாமி வாத்தியார் முன்
கொட்டாவி விடுகிறான்
கோவிந்தன்.

"படிக்காம போனா
பன்னி மேய்க்க 
வேண்டியதுதான்"
பாடமெடுக்கும்
அப்பா முன்
பல் குடைகிறான்
கோவிந்தன்.

"படிக்கலாம் வாடா"
அழைக்கும் பழனியை
படம் போகக் 
கூப்பிடுகிறான்
கோவிந்தன்

"படிக்கலன்னு வெய்யி
என்னைய மாதிரி
பி.பீ.ஓ'வுல
ஒதுங்க
வேண்டியதுதான்"
பையனுக்குப்
பாடமெடுக்கிறான்
கோவிந்தன்
.
.
.

Jun 24, 2010

பி.பீ.ஓ. நாட்குறிப்புகள் - முன்னுரை


"என்னைப்பற்றி" ஏற்கெனவே தனியே எழுதியிருப்பதால் தனியே இங்கே அதிகம் பேசாமல் உள்ளே நுழைகிறேன்.

இந்த பி.பீ.ஓ. வாழ்க்கைக்குள் நான் எப்படி ஒட்டிக் கொண்டேன் என்பது எனக்கே இன்னமும் விளங்காத விஷயம். ஏழெட்டு இடங்களில் வேலை பார்த்துவிட்டே இங்கே  வந்து சேர்ந்தேன்.

நயாகரா சிண்ட்ரோம் என்பார்கள், அதுபோலத்தான் போகிறது வாழ்க்கை. அது இழுத்த இழுப்பிற்குச் போய்க் கொண்டிருக்கிறேன். முந்தைய இடங்களில் வேலை பார்த்த போது கம்பெனி பஸ்களிலும்,  கம்பெனி கார்களிலும் அலுவலக அடையாள அட்டையை கழுத்தில் சுமந்து பயணம் செய்யும் வாலிப வாலிபிகளைக் காணும்போது சற்றே ஏக்கமாக இருக்கும். இது போல நாமும் பட்டை கட்டிக் கொண்டு உயரமான பஸ்களிலும், கார்களிலும் வேலைக்குப் போக வேண்டும் என்று. அவர்கள் கண்களில் தெரிந்த தூங்காத இரவுகள், உண்ணாத பொழுதுகள் மற்றும் இன்னபிற கஷ்டங்களை நான் அப்போது பார்க்கவில்லையோ என்னவோ.

இங்கே வாழ்க்கை கஷ்டமானது இல்லை. ஆனால் உங்களை எளிதில் மூழ்கடித்துத் தொலைக்க வைக்கும் திறமை இந்தத் துறைக்கு உண்டு. நீங்கள் இங்கே கிடைக்கும் அத்தனை அற்ப சந்தோஷங்களிலும் மூழ்கி உண்மையான சந்தோஷங்களைத் தொலைத்துக் கொண்டே இருப்பீர்கள். எனினும் வாழ்க்கை செல்கிறது.

நான் இந்தக் கார்ப்பரேட் ஓட்டத்தை இன்னமும் முழுசாய்க் கற்றுக் கொள்ளவில்லை. என் போன்றவன் கற்றுக் கொள்ள இயலுமா எனவும் தெரியவில்லை. இருந்தாலும், வந்த புதிதிற்கு இன்றைக்குத் தேவலை எனலாம். வந்த புதிதில் இங்கு எல்லாமே எனக்குப் புதிதாக இருந்தது. 

பல்லவன் பஸ் ஏற பதினைந்து நிமிடம் நடந்தவனுக்கு, வீட்டு வாசலில் கார் வந்து நின்று ஆபீஸ் அழைத்துச் சென்றது. "டேய், நீ வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா" என என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

வென்டிங் மெஷின் வைத்து அதில் இலவசமாக காபி, டீ, சாக்லேட் பானம்  தருவது எனக்கு பலரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்தியாக இருந்தது. எங்கே நுழைய வேண்டுமானாலும் சரி, வெளியேற வேண்டுமென்றாலும் சரி ஒரு ஆக்சஸ் அட்டை வேண்டும் இங்கு, கழிப்பறை உட்பட. அடக் கடவுளே என்று இருந்தது முதல் சில நாட்களுக்கு.

வயது பதவிகளைத் தாண்டி இங்கே எல்லோரையும் பெயர் சொல்லியழைக்கும் கலாச்சாரம். சாரும் கிடையாது, "மிஸ்டர் மிசஸ்" அது கூட கிடையாது. நேரிடையாக "முதல் பெயர்" சொல்லி அழைத்தல், இது பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருந்தாலும் பழகிக்கொள்ள நாள் பிடித்தது.

என்னைச் சுற்றி எல்லோரும் மிக புத்திசாலிகளாகத் தெரிந்தார்கள். எல்லா கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் இருந்தது. அறிவுக்கும் திறமைக்கும் வித்தியாசம் கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்குப் புரிந்தது.

இப்படியாக நான் திறந்த வாயை மூடிக் கொள்ள எனக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் பிடித்தன.

இந்தச் சூழல், வாழ்க்கை எனக்குப் பழகி விட்டது. இங்கே நான் காணும் சக மனிதர்கள்? இந்த அனுபவங்கள்? 


அவர்களை....அவற்றைப் பற்றிய என் நாட்குறிப்புகள்தான் இந்தத் தொடர்.

தொடங்கலாமா?
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...