காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 4 (தொடர்ச்சி)
அன்றைய அரங்க அமர்வில் பேசிய மற்ற பிறர் பொதுவாக வாழ்த்துக் கவிதை வாசிக்கும் தொனியில் தங்கள் பேச்சை எடுத்துச் சென்ற போது எல்லாம் நிகழ்ச்சியின் அன்றைய ஒருங்கிணைப்பாளர் அவர்களை மட்டறுத்து தலைப்பையொட்டிப் பேசுமாறு பணித்தார்.
கோவையைச் சேர்ந்த ரவீந்திரன் அவர்கள் பேசும்போது, தான் ஹிந்தி மொழியில் வெளியான பல நல்ல புத்தகங்களை வாசிக்க மொழிபெயர்ப்பு நூல்கள் எவ்வண்ணம் உதவின என்பதனைக் குறிப்பிட்டார். தமிழின் நல்லபல புத்தகங்களும் மேலும் பல மொழிகளில் கொண்டுவரப்படத் தேவை உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பேச்சாளர்கள் பக்கமிருந்து பார்க்கையில், இந்திய கல்வித்துறையின் இணை இயக்குநர் ஆர்.ராஜேஷ் அவர்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. "பக்தி த்ரவிட் உப்ஜி" என்ற சொல்லாடல் வடக்கில் மிகப் பிரபலம்.
भक्ति द्रविड़ उपजी, लाये रामानंद
प्रकट करि कबीर ने, सात द्वीप नौ खंड
பக்தி இயக்கம் தெற்கில் பிறந்தது, ராமானந்தரால் அது இங்கு (வாரணாசிக்கு) கொண்டு வரப்பட்டது.
கபீர் ராமானந்தர் அதை 7 கண்டங்களில், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஒலி மற்றும் மனம் ஆகிய 9 காண்டங்களில் (खंड) எங்கும் நிறைந்ததாக ஆக்கினார். பக்தி இயக்கமானது தெற்கிலிருந்தே உருவாகி வடக்கு நோக்கி நகர்கையில் அந்நகர்வின் மத்தியப் புள்ளியாக காசி மாநகரம் விளங்கியது. எனவே, இந்த காசி - தமிழ் சங்கம நிகழ்வு மிகவும் பொருத்தமான இடத்திலேயே நிகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சங்கம நிகழ்வின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு (மெமென்டோ) வழங்கப்பட்டது.
இடையில் அங்கே கிடைத்த நேரத்தில் அங்கே நமோ படித்துறையை ஒட்டி இருந்த ஸ்டால்களில் எம் இல்லத்துப் பெண்மணிகளுக்கு புடைவைகளும், சுரிதார்களும் வாங்கிக் கொண்டேன்.
ஆர். ராஜேஷ் அவர்கள் நேஷனல் புக் டிரஸ்ட்-க்கு அழைத்துச் சென்று NBT 'யின் உதவி இயக்குநர் (தமிழ்) மதன் ராஜ் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். செம்மொழித் தமிழ் ஆய்வு மைய அரங்கில் மூத்த மொழிபெயர்ப்பாளர் திரு.கோவிந்தராஜன் அவர்களையும் சந்தித்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கும் இனிய வாய்ப்பு திரு.ஆர்.ராஜேஷ் அவர்கள் வழி கிடைத்தது.
செம்மொழி அரங்கில் நான் இருந்தபோது அங்கே கனமாய்ப் பெரிய புத்தகமாய் திருக்குறளின் ஹிந்தி வடிவத்தை ஒரு உள்ளூர் வாசகர் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கில் இருந்த அன்பர் அவருக்கு திருக்குறளின் மகத்துவத்தைக் கூற முற்பட, தனக்குத் திருக்குறள் குறித்துத் தெரியும் எனவும் அதன் ஆங்கில வடிவை முன்னமே வாசித்துள்ளாதாகவும், தற்போது அதன் ஹிந்தி வடிவை வாங்குவதற்கு இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார்.
மூன்று மணி முதல் கலை நிகழ்ச்சிகள் திறந்தவெளி அரங்கில் துவங்கின. தமிழகத்தில் இருந்து 200+ குழுவினர் இந்தப் பதினைந்து நாள் நிகழ்வுகளுக்காக காசிக்குப் பயணப்பட்டு வந்திருந்ததாகச் சொன்னார்கள். நாங்கள் சென்ற நாளன்று மன்னார்குடி நடராஜா நாட்டிய வித்யாலயா மாணவிகளின் பரதம் கண்டோம். உத்திரப் பிரதேச இசைக் கலைஞர்களின் மோஹன வீணை, புல்லாங்குழல், வயலின் இசைக் கச்சேரியும் நடந்தது. இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல எனும் விதம் சிறப்பாக இருந்தன. மேலும் தோல்பாவைக் கூத்து, தப்பாட்டக் குழுவினர்கள் அங்கே அடுத்த நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர். உள்ளூர் சனங்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்து கலை நிகழ்வுகளைக் கண்ணயராமல் கண்டு மகிழ்ந்ததைக் நாம் காண முடிந்தது.
ஒரு குழுப்புகைப்படம் கங்கை நதிக்கரையில் எடுத்துக் கொண்டோம். பின்னர் ஐந்து மணிக்கு எங்கள் 200 பேரையும் தாங்கி அழைத்துச் செல்லும் வண்ணம் ஒரு பெரிய cruise வகைப் படகு நமோ படித்துறையில் காத்திருந்தது. அதில் ஏறி மாலைத் தேநீர் அருந்திய வண்ணம் கங்கை ஆரத்தி காணப் புறப்பட்டோம்.
காசி மாநகரில் கங்கைக் கரையை ஒட்டி 80+ படித்துறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றில் பிரபலமாக அஸ்ஸி காட், மணிகர்ணிகா காட், தஸாஸ்வமேத காட், ரவிதாஸ் காட் என ஐந்தாறு படித்துறைகள் உள்ளன. இங்கேதான் மக்கள் பெரும்பாலும் கூடுகிறார்கள். தசாஸ்வமேத மற்றும் அஸ்ஸி படித்துறைகளில் கங்கை ஆரத்தி நிகழ்கிறது. நமோ காட் பகுதியில் இருந்து நீர்வழி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு பயணப்பட்டு கங்கை ஆரத்தி நிகழும் இடம் வந்து, ஆற்றில் படகில் இருந்தவாறே ஆரத்தியைக் கண்டு களித்தோம்.
காசியில் மேலும் இரு படித்துறைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மணிகர்ணிகா மற்றும் அரிச்சந்திரா படித்துறைகள். வாரணாசியில் இறந்து, இப்படித்துறைகளில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளது. இப்படித்துறைகளில் நாள் முழுவதும் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறைகளில் சிதை மூட்டப்படுவதைக் காணவும் கூட சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். எங்கள் கங்கா ஆரத்திப் பயணவழி ஆற்றிலிருந்து மணிகர்ணிகா படித்துறையைக் கடக்கையில் சிதைகள் எரிவதைக் காணமுடிந்தது.
சுற்றியுள்ள சிலநூறு கிலோமீட்டர் தொலைவில் இறப்பவர்கள் உடல்கள் இங்கே கொண்டுவந்து எரியூட்டப்படுவதும் இங்கே சகஜம். மணிகர்ணிகா படித்துறையானது காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியே இருப்பதால், நீங்கள் கோயில் நோக்கி சந்து-பொந்துக்களில் நடக்கையில், திரும்பி வருகையிலும், வண்டியில் பயணம் செய்யும் போதும் அங்கே மஞ்சள் நிறத் துணியால் முழுக்கப் போர்த்தப்பட்ட சடலங்கள் கொண்டு செல்லப்படுவதைப் பார்க்கலாம். அவற்றைக் காண்பதுவும் நற்பேறுகளுள் ஒன்றாக மக்கள் கருதுகிறார்கள்.
நமோ காட்டில் படகு ஏறிய நாங்கள், ஆரத்திக்குப் பிறகு ரவிதாஸ் காட்டில் இறக்கி விடப்பட்டோம். எங்களுக்கான பேருந்துகள் அங்கே காத்திருந்தன. அவற்றில் ஏறி ஹோட்டல் டீ ஃபிரான்ஸ் சென்று இரவுணைவை முடித்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
No comments:
Post a Comment