Jan 5, 2024

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 5





காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 5


ஆரவாரமான ஐந்தாம் நாள்:

நிகழ்ச்சி நிரலில் ஒரு சிறு மாற்றம் வந்து சேர்ந்தது. ஐந்தாம் நாள் பிரயாக்ராஜ் செல்வதாகவும், ஆறாம் நாள் அயோத்தியாவுக்காக எனவும் இருந்த திட்டம் அயோத்தியா முதலில், பிரயாக்ராஜ் பிறகு என்று ஆனது. அயோத்யா புதிய விமான நிலையத் திறப்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களையொட்டி எங்களுக்கு மறுநாள் அங்கே தங்க அனுமதி இல்லை என்பதால், எங்கள் அயோத்யா திட்டம் ஒருநாள் முன்கூட்டியே அமைந்தது.


எங்கள் வாரணாசிப் பயண நாட்களில் எங்களை எல்லா நிகழ்வுகளுக்கும் சுமந்து சென்றவை 25+ இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் வகைப் பேருந்துகள். இருதின வாரணாசி சுற்றல்கள் முடிந்து அயோத்யா புறப்படுகையில் அப்பேருந்துகளுக்கு பிரியாவிடை தந்தோம். வாரணாசி - அயோத்யா - பிரயாக்ராஜ் - வாரணாசி பயணத்திற்கென சாய்வு இருக்கைகள் கொண்ட ஐந்து பெரிய பேருந்துகள் காத்திருந்தன. 


அன்றைய காலைப் பொழுது வழக்கம்போல சீக்கிரமாகவே விடிந்தது. நான்கு மணிக்குத் துயிலெழுந்து ஐந்தரை மணிக்குப் பேருந்து ஏறி, ஆறு மணிக்கெல்லாம் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு அயோத்யா நோக்கிப் புறப்பட்டோம்.


வாரணாசியில் இருந்து புறப்படும் முன்னமும், அயோத்யாவில் மதிய உணவு முடித்த பின்னரும் தவிர்க்கவியலாத சில காத்திருப்புகளால் இரண்டு மணி நேர தாமதம் நேர்ந்தது. அந்தத் தாமதத்தின் பலன் எங்கள் தொடர் நிகழ்வுகளின் நேர வரையறையைச் சுருங்கச் செய்தது சற்றே சோகமான விஷயம்.


மதிய உணவுப் பொழுதிற்குச் சரியாக அயோத்தியை அடைந்தோம். வழக்கம் போல் அமிர்தமான போஜனம், அயோத்தியில் புதிதாய் உருவாகிக் கொண்டு இருக்கும் பெரிய பேருந்து நிலையத்தில் எங்களுக்காக காத்திருந்தது. தமிழகத்திலிருந்து சென்றிருந்த அறுபது சமையற்கலைஞர்கள் வாரணாசியிலும் அயோத்தியிலும் முகாமிட்டு எங்களுக்கான உணவுப் பணிவிடையை கவனித்தனர். பிரயாக்ராஜ் நகரில் மொத்த நிகழ்விலும் ஒரேயொரு பொழுது மதிய போஜனம் மாத்திரமே திட்டத்தில் இருந்ததால் அங்கு உணவுத் தயாரிப்புக் கூடம் இல்லை. அந்த ஒருவேளை உணவானது வாரணாசியில் தயாரிக்கப்பட்டு படகு வழி நாங்கள் அங்கு வந்து சேருமுன் வந்து சேர்ந்தது ஆச்சர்ய நிகழ்வு.


சரி, அயோத்திக்கு வருவோம்.


மதிய உணவிற்குப் பிறகு ராமஜென்ம பூமிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். உயர்மட்டப் பாதுகாப்பில் இருந்தது மொத்த நகரமும். நகரின் உதவி கலெக்டர் இருவர் எங்களை வரவேற்று கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். மத்திய ரிசர்வ் போலீசை சேர்ந்த உயர் அதிகாரி திரு.பாலசுப்ரமணியன் மற்றும் அவரது அணியினர் எங்கள் குழுவின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை அங்கே உறுதி செய்ததோடு, எங்களுக்கு அங்கே வழிகாட்டியாகவும் இருந்து கோயில், கட்டுமானம், சிற்பங்கள், கலையமைப்பு, தயார்நிலை என்று ஒவ்வொரு சிறு தகவல்களையும் தந்து உதவினார்கள்.


ஜனவரி 22 அன்று பிரதிஷ்டைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் கட்டுமானத்தை தூரத்தில் நின்று பார்க்க முடிந்தது. தற்போது ராமர் ( ராம் லல்லா) குடியிருக்கும் சிறுகோயிலை தரிசிக்கவும் அழைத்துச் சென்றார்கள். தனது ஜென்மபூமி இது என்பதால் பாலகராக ராமர் நின்றிருந்தார். பிரதிஷ்டைக்கு ஒரு மாதம் முன் ராமரை தரிசிக்க இயன்றது பயணத்தின் பெரும்பேறு.


ராமரிடம் கற்கண்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு அனுமனை தரிசிக்கச் சென்றோம். நடை தூரத்தில் சின்னஞ்சிறு குன்றின் மீது அமர்ந்திருந்தான் அனுமன். ராமனை பாலகனாய் தரிசிக்கையில் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி நேர்ந்தது என்றால், Vibe என்று இந்த காலத்துப் பிள்ளைகள் சொல்கிறார்களே, அந்த vibe ஆனது அனுமன் சன்னதியில் மிகுதியாகக் கிடைத்தது. 


காசிக்குச் சென்றால் எதையேனும் விட்டுவிட்டு வரவேண்டும் என்பார்களாம். அப்படி நாம் விடை தரும் பொருளானது நமக்கு மிகவும் தேவையும், நெருக்கமுமான பொருளாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. காசியின் இரண்டாம் நாள் நிகழ்வில் அங்கே பத்து டிகிரி குளிருக்கு மிகவும் தேவையானதுவும், நம் தலையிலேயே சுமக்கும் நெருக்கமானதுமான என் குளிர்க் குல்லாவை கை மறதியாய் எங்கோ விட்டுவிட்டிருக்கிறேன். அயோத்தி வீதிகளில் கிடைத்த அந்த ஐந்து நிமிடங்களில் அங்கே அதற்கு மாற்று குல்லா வாங்கிக் கொண்டேன். அப்படியே கருப்பிலும், காவியிலும் சட்டைகள் இரண்டு அயோத்தி நினைவாக எனக்கும், மகனுக்கும் வாங்கிக் கொண்டேன். மேலே நான் குறிப்பிட்டு இருந்த அந்த இரண்டு மணிநேரத் தாமதம் எங்கள் அயோத்தி கடைத்தெரு உலாத்தலில் கைவைத்துவிட்டது ஒரு பெரும் சோகம். ஆனால், அந்த சோகத்தை மறக்கடிக்க அடுத்த நிகழ்வு காத்திருந்தது.


மீண்டும்  அயோத்தி பேருந்து நிலையத்திற்கு சென்றோம். எங்கள் கலை, கலாச்சார மனங்களுக்கு உவப்பு அளிக்க அந்த பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருந்த பிரமாதமான கலையரங்கத்தில் இசை மற்றும் நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  துணை கலெக்டர்கள் இருவரும் அங்கும் வருகை புரிந்திருந்தனர்.


அரங்கிற்கு எங்களை வரவேற்க உத்திரப்பிரதேச பாரம்பரிய இசை, நடனக் குழுவினர் வாத்தியங்கள் இசைத்து, நடனமாடி, மலர் தூவி, மாலை அணிவித்து எங்களை அரங்கினுள் அழைத்துச் சென்றனர்.


போஜ்புரி, ஆவாதி, ப்ரஜ் மொழிகளில் உள்ளூர்ப் பாடல்களும், நடனங்களும் சுமார் ஒருமணிநேரத்திற்கு எங்களை அந்த அரங்கத்தினில் கட்டிப் போட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக அந்த மரபு சார்ந்த கலைஞர்களின் மாசற்ற குரலும், பண்பட்ட நடன அசைவுகளும் ஆகா என்றிருந்தன. வாரணாசியில் இருந்தும், பிரயாக் நகரில் இருந்தும், மதுராவில் இருந்தும் வந்திருந்த கலைஞர்களின் ராமகாதைப் பாடல்களும், கிருஷ்ண லீலா நடனங்களும் ஒரு நிறைவான நாளை எங்களுக்குத் தந்தன. கலை நிகழ்வுகளின் கடைசி உருப்படியான கிருஷ்ண-ராதா நடனம் பதினைந்து நிமிடங்களுக்கு நீண்டு களைகட்டியது. 


ஒரு கட்டத்தில் நடனக் கலைஞர்கள் அரங்கத்திலும், பார்வையாளர்கள் மேடைக்கும் என இடம் மாறி ஒட்டுமொத்த அரங்கமும் நடனத்தில் இருந்தது. நடனக் கலைஞர்கள் தங்கள் குழுவினரின் பாடலுக்கு உதவி-கலெக்டரையும் கால்களை அசைக்க வைத்தனர்.


செவிக்கும் மனதிற்கும் உணவு தந்து முடித்ததும் பேருந்து நிலைய வளாகத்தில் காத்திருந்த இரவுணவை சுவைக்கச் சென்றோம். உணவுக்குப் பின் சற்றே பயணப்பட்டு அயோத்தியின் இரட்டை நகரம் என்று அழைக்கப்படும் பைசாபாத் நகரில் எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் உறங்கச் சென்றோம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...