காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 4
காசியில் ஒரு நீண்ட நெடிய நாள்: நான்காம் நாள் மிக மிகச் சீக்கிரமாகவே விடிந்தது. காலை கங்கைப் புனிதக் குளியலுடன் நாள் துவங்கியது நீண்ட நெடிய லிஸ்டைத் தாங்கியிருந்த அந்த நன்னாள். ஆறு மணிக்கு முன்னதாகவே ஹனுமான் காட் (படித்துறை) சென்றோம். வெளியே பத்து டிகிரி குளிர். இருந்தும் அனைவராலும் மகிழ்வுடன் கங்கையில் முங்கியெழ முடிந்தது. பயண நோக்கம் கலாச்சார சங்கமம் தான் எனினும், ஒவ்வொருவருக்குள் இருந்த ஆன்மிக அன்பர்களுக்கு வாழ்வின் ஒரு பெரும் கடமை நிறைந்த உணர்வு கங்கையில் மூழ்கி எழுந்த போது. உடை மாற்றும் அறைகள் வசதியாகவே இருந்தன.
முந்தைய நாளின் கோயில் பயணங்களின் போதும் சரி, இப்போது கங்கை சென்றபோதும் சரி; தமிழ் சினிமாக்களில் காட்டும் காசி மாநகரின் சந்து பொந்துக்களில் புகுந்து புகுந்து போன அனுபவம் அலாதியானது.
முகமெல்லாம் விபூதியைத் தீற்றிக் கொண்டு ஒரு சாமியார் அங்கே அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார். தட்டில் காசு போட்ட ஒவ்வொருவருக்கும் ருத்ராட்சங்களும் வழங்கிக் கொண்டிருந்தார். நம் மக்கள் அவரருகே நின்று அவரை வணங்கும் போஸில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்து பாரதி இல்லம். சுப்ரமணிய பாரதி ஒரு மகாகவி என உருவானதில் காசியின் பங்கு மகத்தானது. ஒரு மனிதனைத் தான் யார் என்ற அடையாளத்தை உருவாக்கவல்ல பதின்மப் பருவத்தில் பாரதி வசித்தது, மேற்படிப்பு படித்தது, சில காலங்கள் பணியும் புரிந்தது காசி நகரிலேயே. தன் தந்தையின் மறைவுக்குப் பின் பதினாறாம் வயதில் காசி சென்ற பாரதி ஐந்து ஆண்டுகள் அங்கே தங்கிய காலத்திலேயே பன்மொழிப் புலமையும், பண்டிதத் தன்மையும் பெற்றது எனலாம். அவரது வேட்டி, கோட்டு, மீசை, தலைப்பாகை என்ற அடையாளம் காசி தந்தது என்று எதிரே இருந்த காஞ்சி மடத்தின் பெரியவர் ஒருவர் சொன்னார். சென்ற வருடம் பாரதி வசித்த இல்லத்தை நினைவுச் சின்னமாக தமிழக அரசு அறிவித்து அதுமுதல் அங்கே பராமரிப்பு செலவினங்களை தமிழக அரசு ஏற்று வருகிறது.
பத்துக்குப் பத்து இருந்த அந்த பாரதி இல்லத்தில் அடித்துப் பிடித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு எதிரே இருந்த காஞ்சி மடத்தில் சாமி கும்பிட்டு, ஒரு நல்ல காபி அருந்தி விட்டு மீண்டும் சந்து-பொந்துகள் வழியே வெளியே வந்தோம். காஞ்சி மடம் - காசி - ஆதி சங்கரர் - அயோத்தி ராமர் சார்ந்த பிணைப்புகள் குறித்து தனியே எழுதலாம்.
அடுத்து காலை உணவு. ஹோட்டல் டி ஃபிரான்சில் தான் எங்கள் உணவு ஏற்பாடுகள் மொத்தமும் காசியில். தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட அறுபது சமையற்கலைஞர்கள் எங்களுக்கான உணவுத் தேவையை கவனித்துக் கொண்டார்கள்.
காலை உணவிற்குப் பின் வந்த வேலை துவங்கியது. கங்கை நதிக்கரையில், நமோ படித்துறையில் விருந்தினருக்கான அரங்கமும், கலை நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்திலிருந்தும் - உத்திரப் பிரதேசத்திலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைக் குழுவினருக்கான நதிக்கரையைப் பின்னணியாகக் அழகிய பரந்த மேடையும், பார்வையாளர்களுக்கான திறந்தவெளி இருக்கைகளும் அமைக்கப் பட்டிருந்தன.
எழுத்தாளர்களுக்கான அரங்கில், தமிழ் மற்றும் இந்தி மொழி இலக்கியங்களில் முற்போக்கு சிந்தனைகள் ( Inclusive and Progressive Writing in Tamil & Hindi Literature ) என்ற தலைப்பில் ஒரு அமர்வு நிகழ்ந்தது. தமிழ் இலக்கியங்கள் குறித்துப் பேச கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் வருகை புரிந்திருந்தார். ஹிந்தி இலக்கியங்கள் பக்கம் பேச இந்திய வானொலி உதவி இயக்குநர் (ஒய்வு) நீரஜா மாதவ்.
மூன்றாம் பாலினர் குறித்தும் திபெத்திய அகதிகள் குறித்துமான நீரஜா மாதவ் அவர்களின் எழுத்துக்கள் ஹிந்தி இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் மூன்றாம் பாலினருக்கான மனித உரிமைகள் குறித்தான இந்திய உச்ச நீதிமன்றத்தின் 2014'ஆம் ஆண்டின் மதிப்பு மிக்க தீர்ப்பிற்குப் பின்னால் நீரஜா அவர்களின் எழுத்துக்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் (campaigns) மகத்தான பங்கு உண்டு என நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய திரு. சௌந்தரராஜன் அவர்கள் ( இந்திய மொழிகளின் குழு ஆலோசகர்) குறிப்பிட்டார். அக்காலங்களிலேயே திருநங்கைகள் பற்றிய கதைகள் பல மொழிகளிலும் இந்தியாவில் எழுதப்பட்டன. இது தற்போது குறைந்துள்ளது. திருநங்கைகள் பற்றி அதிகமாக எழுதப்பட வேண்டும் என்று நீரஜா குறிப்பிட்டார்.
அன்றைய அமர்வின் வெற்றியின் பின்னால் நிகழ்வைத் தொகுத்து வழங்கிய திரு.சௌந்தரராஜன் அவர்களின் இருமொழிப் புலமை பெரும்பங்கு வகித்தது. தன்னைக் குறித்த பெரிய அறிமுகம் எதுவும் தந்து கொள்ளாமல் நிகழ்வை சிறப்பாக நடத்திச் சென்றார். இருபக்கமும் பேசியவர்களின் பேச்சின் சாராம்சத்தை மற்றோருக்கு அழகாக மொழிபெயர்த்துத் தந்தார்.
உத்திரப் பிரதேச எழுத்தாளர் ஸ்ரீவத்சவ் தென்னிந்தியர் - வட இந்தியர் என்ற சொற்பதங்கள் inclusive என்ற வார்த்தைக்கு எதிரானவை என்று குறிப்பிட்டார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் ஏ.எஸ்.ரிஜ்வீ சிறப்பு விருந்தினராக வருகை தந்து நிறைவுரை தந்தார்.
தமிழகத்தில் இருந்து சென்றவர்களில் இருவரது பேச்சு எனக்கு சிறப்பானவை எனப்பட்டது.
ஏற்காடு நகரைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர் சதீஷ்ராஜ் பேசுகையில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதன் பின்னணியில் ஆண்டாண்டு காலமாய் பெண்ணுரிமை, பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள் பற்பல மொழிகளிலும் தொடர்ந்து எழுதி வருவது முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார்.
சென்னையைச் சேர்ந்த பிரசன்னா பேசுகையில், செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் பாடலைக் குறிப்பிட்டு பாரததேவி inclusive and progressive என்றவகையில் பயணப்பட வேண்டிய தொலைவுகளைக் குறிப்பிட்டார்.
(நான்காம் நாள் அனுபவங்கள் தொடரும்)
No comments:
Post a Comment