Dec 28, 2023

காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 3

 காசி தமிழ்ச் சங்கமம் - நாள் 3


Most happening day: காசி விஸ்வநாதர் கோயில், காசி விசாலாட்சி கோயில், அன்னபூரணி கோயில் சென்ற திவ்ய அனுபவங்கள் ஒருபுறம், சாரநாத் சென்ற இனிய அனுபவம் மறுபுறம்.


காசியில் வரவேற்பு: காலை நாலரைக்கு பனாரஸ் ( காசி, வாரணாசி, பனாரஸ் - மூன்றுமே ஒரே ஊர்தான் ) வந்திருக்க வேண்டிய ரயில் மூன்று மணிநேர தாமதத்தில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. 


வந்தவர்கள் அனைவருக்கும் உ,பி. அரசின் சார்பில் பலமான சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டது. மாநில பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அமைச்சர் அனில் ராஜ்பர் எங்களை வரவேற்க வந்திருந்தார். உள்ளூர் பாஜக அபிமானிகளும் ரயில் நிலையத்தை தங்கள் வரவால் நிரப்பியிருந்தனர். சிவப்புக் கம்பளமிட்டு, மாலை சூட்டி, பூக்கள் தூவி என நம் வாழ்வில் காணா ஒரு தடபுடல் வரவேற்பு. அரசின் விருந்தினர் என்றால் யார் என்பது இந்தப் பயணத்தில் ஓரளவு விளங்கியது.


காசி மாநகரில் அடுத்த இரு தினங்களுக்கான எங்கள் திட்டப் பயணத்திற்கு என எட்டு எலக்ட்ரானிக் பேருந்துகள் காத்திருந்தன. காசியில் வந்து இறங்கி விட்டோம் என்பதை உலகிற்கு அறிவிக்க பனாரஸ் ரயில் நிலைய வாசலில் நின்று சில செல்ஃபிக்கள் எடுத்து அவற்றை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் செய்துவிட்டு எங்கள் காசி பயணத்தைக் துவக்கினோம்.


முதலில் காலை உணவு. இரண்டு நாட்கள் ரயிலில் ரொட்டி - சப்ஜி தின்று களைத்த நாவுகளுக்கு இட்லி-பொங்கல்-இடியாப்பம்-சட்னி-சாம்பார் அமிர்தமெனக் கிடைத்தது. பின் ஹோட்டல் அறை நோக்கி ஒரு சிறு பயணம். குளியல் முடிந்த பின் புறப்பட்டு காசி விஸ்வநாதர் கோயிலை அடைந்தோம்.


கோயில் நுழைவாயிலில் ஒரு விவிஐபி வரவேற்பு எங்கள் குழுவுக்கு - தந்தவர்கள் கோயிலின் வேத பண்டிதர்கள் அறுவர். கோயிலின் உள் நுழைவாயிலின் உள்ளே நுழைந்ததும் மற்றுமொரு வேத பண்டிதர்கள் குழு வேத முழக்கத்துடன் மலர் தூவி எங்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்தி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். சிறப்பு தரிசனம், வெகு சிறப்பாக.


தரிசனம் முடித்து மணிகர்ணிகா காட் படித்துறையில் அமர்ந்து மணிகர்ணிகா அஷ்டகம் சொன்னது நல்லனுபவம்.


என் அப்பா வழிப் பாட்டியின் பெயர் விசாலாட்சி. அம்மாவின் அம்மா பெயரும் விசாலாட்சி. இவர்களுள் முதல் விசாலாட்சிப் பாட்டியை நான் பார்த்ததில்லை. அம்மாவிடம் இதை பெரும்குறையாக ஒருதரம் சொன்னபோது காசி விசாலாட்சியை தரிசித்தால் உனக்கு அந்தக் குறை தீரும் என்று சொன்ன நினைவு. அம்மாவின் வார்த்தை இன்று பலித்தது மெய்யாகவே. குட்டியூண்டு கருப்பு தேவதை. நம்மூர் தெருமுனை விநாயகர் கோயில் பிரகாரங்களின் அளவிற்கே கோயிலின் மொத்த அளவுமே. நம்மூர் நகரத்தார் பராமரிக்கும் கோயில் - தென்னிந்திய கட்டிடக் கலையை ஒட்டிய கோபுர அமைப்பு.. சுற்றி வர ஒரு நிமிடம் போதும். பெரும் கெடுபிடி, கூட்டங்களும் இல்லாத சிம்பிள் தேவதை.


அடுத்து அன்னபூரணி. விஸ்வநாதருக்கு இணையாக மக்கள் கூட்டம் கூடும் கோயில். சிவபெருமான் கூறியதன்படி பார்வதி தேவி அன்னபூரணியாக உருவெடுத்து வந்து வாரணாசியின் பசி தீர்த்ததாக ஒரு வரலாறு உண்டு. மற்றொரு நம்பிக்கையின்படி சிவனுக்கே அன்னம் படைத்த பூரணி இவள் என்போரும் உண்டு. இதன் காரணமாக, காசியில் அன்னபூரணி தட்டு வாங்கி அதில் அரிசி படைத்து வணங்க வாழ்க்கையில் அன்னத்திற்கு குறை இராது என்பது நம்பிக்கை, குறிப்பாக நம்மூர் மக்களுக்கு. காசியில் தடுக்கி விழுந்தால் அன்னபூரணித் தட்டுகள் மேல்தான் விழ வேண்டும். தமிழிலேயே நாலு நூரு றூபா, மூணு நூரு றூபா என்று விற்கிறார்கள்.


விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி என மூன்று கோயில்களும் கிட்டத்தட்ட ஒரே வளாகத்தினுள் நடை தூரத்திலேயே இருந்தன.


மதியம் ஒரு ராயல் தென்னிந்திய அன்னதானம் விஸ்வநாதர் அருளினார். நல்ல சாம்பார், அருமையான கூட்டு, பொரியல், அற்புதமான ரசம் + அப்பளம் + மோர் - வேறென்ன வேண்டும்? 







உணவுக்குப் பிறகு சாரநாத் சென்றோம். கோயில் பகுதியில் இருந்து ஒரு எட்டு கிமீ தொலைவு பயணம். சாரநாத் அனுபவம் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதுகிறேன்.


காசி மாநகரின், நகர மக்களின் traffic sense நம் சென்னை மாநகர மக்கள்தம் traffic sense'க்கு சற்றும் குறைவில்லாதது. அது குறித்தும் தனியே எழுதலாம் தான். எனினும் நம் பயணமும், அதன் நோக்கமும் அதை கவர் செய்யவல்ல என்பதால், 

இப்போதைக்கு... (தொடரும்) 


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...