இந்த வருடம் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் பங்கு கொள்ள வாய்ப்பு அமைந்தது. இன்று இரண்டாம் நாள் பயணத்தில் இருக்கிறோம்.
காசி தமிழ் சங்கமம் (KTS) - இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் என அறியப்படும் வாரணாசியில் சென்ற வருடம் முதல் நிகழ்ந்து வருகிறது காசி தமிழ் சங்கமம். மத்திய அரசின் ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்னும் முன்னெடுப்பின் கீழ் இந்த சங்கமம் நிகழ்வு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்/கைவினைஞர்கள், நிபுணர்கள், வணிகர்கள், ஆன்மிகம், எழுத்தாளர்கள் என்ற ஏழு பிரிவுகளில் இந்த வருடம் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. சுமார் 60000 விண்ணப்பங்கள், அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட 1500 பேர் இந்த வருடம் பயணப்படுகிறோம்.
ஆறாவது பிரிவான எழுத்தாளர்கள் பிரிவில் எனக்கு ஒரு இருக்கை கிடைத்தது. ஐஐடி மெட்ராஸ் முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்திய கல்வித்துறை இந்நிகழ்வை நடத்துகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயண ஏற்பாடுகளைச் செய்கிறது. அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.
இதோ இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் நாள் காலையான இப்போது வரை ஏற்பாடுகள் பிரமாதமாக உள்ளன. நிகழ்வுக்கான நம் விண்ணப்பப் பதிவை உறுதிசெய்து தகவல் அனுப்பியதில் தொடங்கி, ரயில் பயணச்சீட்டு உறுதி செய்ததில் இருந்து, ரயில் நிலைய வரவேற்பு / வழியனுப்பல், ரயிலில் இதுவரை உணவு உபசரிப்பு என so far so good.
எழுத்தாளர் என்ற அடையாளத்தில் செல்வதால், பிரிவு சார்ந்த கல்வி நிகழ்வுகள் அல்லது அமர்வுகளில் பேச / வழங்க ஒரு சிறு தயார் நிலையில் செல்கிறேன். எப்படி வாய்ப்பு அமைகிறது எனப் பார்க்கலாம். மற்றபடி காசி உலாத்தலும், ஒரு பிரதான திவ்யதேச தரிசனம் செய்துவிட்டு என் பர்சனல் லிஸ்டில் பெருமகிழ்வுடன் ஒரு பெரிய டிக் அடித்துக் கொள்வதுவும் தான் இந்தப் பயணத்தில் என் எதிர்பார்ப்பு என்று தான் புறப்பட்டு வந்தேன்.
இதுவரையிலான பயண நேர அறிமுகங்களில் பலப்பல பின்னணிகளில் இருந்து வந்திருக்கும் மக்களை சந்தித்தது தான் இந்தப் பயணத்தின் முக்கியப் பயனாக இருக்கும் என்று ஒரு மதியம் + மாலை நேர பயணத்தில் புரிகிறது. அவர்களில் சிலர் பற்றி நாளை பார்ப்போம்.
பயணத்திட்டம் இப்படி இருக்கிறது. முதல் இரு தினங்கள் காசி நோக்கிய ரயில் பயணம்.
மூன்றாம் மற்றும் நான்காம் தினங்கள் காசியில்:
நாள் 3:
காசி விஸ்வநாதர் கோவில், காசி உலாத்தல், சாரநாத் பயணம், கங்கை படகு சவாரி, படித்துறைகள், கங்கா ஆரத்தி.
நாள் 4:
உள்ளூர் கோவில்கள், பாரதி இல்லம், ராம்நகர் கோட்டை, லால்பகதூர் சாஸ்திரி அருங்காட்சியகம், பாரதமாதா கோயில்.
மதியம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கல்விசார்ந்த நிகழ்ச்சி
கலாச்சார மாலை
நாள் 5:
பிரயாக் சங்கம், அயோத்தியில் தங்குதல்.
நாள் 6:
அயோத்தி சுற்றிபார்த்தல், வாரணாசிக்கு திரும்புதல், தமிழ்நாட்டிற்கு திரும்புதல்
நாள் 7 & 8: பயணம்.
நன்றி: https://kashitamil.iitm.ac.in/
No comments:
Post a Comment