Oct 21, 2018

அம்ரித்சர்


இங்கே எந்த விபத்தும் நிகழ்வதற்கு முன்னர் இந்தியர்களான நமக்கு வாய்த்தது என்று பட்டியல் இட்டால்...

1) இந்தியாவில் தனி உயிருக்கு என எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. 

2) தனிநபர் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்ய என்று இங்கே  வரையறுத்த முறையான சட்டதிட்டங்கள் இல்லை, அல்லது இருப்பில் உள்ள சட்டதிட்டங்களை அமலாக்கப் போதிய வரையறைகள், வழிகாட்டுதல்கள் இல்லை 

3) அப்படிப்பட்ட வரையறை, வழிகாட்டுதல்கள் இருக்கின்றன என்றாலும் அவை கடைபிடிக்கப் படுகின்றனவா என்பதை உறுதி செய்ய இங்கே தணிக்கைகள் ஏதும் இல்லை. ஆகவே, அவற்றைச் செயற்படுத்த வேண்டிய அதிகாரிகளுக்கு எந்த பயமும் இல்லை

இப்போது அந்த விபத்து அல்லது அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது.


எந்த விபத்தும் நிகழ்ந்த பின்னால் இந்தியர்களான நாம்  செய்வது என்ன என்று பார்த்தால்...

முதல் தகவல் அறிக்கை என்று நாம் தயாரிப்பது: 

அ) விபத்து எந்த மாநிலத்தில் நடந்தது 

ஆ) அங்கே ஆளும்கட்சி யார்?

இ) ஒரு பொது நிகழ்வில் இந்த விபத்து நிகழ்ந்தது எனில், அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்? 

ஈ) அவர்களது கட்சி, மொழி, சாதீயப் பின்னணி என்ன?

அவை தெரிந்த பின்....

1) வழக்கம் போல அரசானது யார் மீது இந்தப் பழியைத் திருப்பலாம் என்பதனை தன் செயற்பட்டியலில் முதல் உருப்படியாக வைத்திருக்கும். அதன் பின்நிகழ்வுகளைச் சொல்லத் தேவையில்லை ( நிகழ்வு என்று அதைத் தாண்டி ஒன்றும் இருக்காது)

2) ஆளும் - எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடையே இரண்டு நாள்களுக்கு இணையத்தில் இரண்டு பிரிவாகப் பிரிந்து அடிதடி நிகழும். 

3) சாதி ரீதியான பின்னணி இதற்கு ஏதும் உள்ளதா என்பது நிச்சயம் ஆராயப்படும். அப்படி ஏதும் இல்லை என்றாலும் கிடைக்கும் ஏதேனும் ஒரு நூல் பிடித்து அப்படி ஒரு சாயம் பூசலாகுமா என்று சில ரத்தம் தோய்ந்த பற்கள் காத்துக் கொண்டிருக்கும். இந்த நூல் கிடைத்தால் அவல் மெல்வதற்கான அவகாசம் மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்படும்

4) இந்நிகழ்வை மறந்துவிட்டு அதன் பின் அடுத்த நிகழ்விற்காகக் காத்திருப்போம்


என்ன நேர்ந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்:

1) மக்கள் திரளாகக் கூடும்போது உயிர்ப் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கத்தக்க அபாயகரமான பகுதி என்று தெரிந்தும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அங்கே நிகழ்த்தியது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்

2) மாநில அரசு நிர்வாகம்: இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பை அறிந்தும் அனுமதி தந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்

3) மத்திய ரயில்வே நிர்வாகம்: ஆண்டாண்டுகாலமாக இந்நிகழ்வு இங்கே தொடர்ச்சியாக நடக்கிறது என்கிறார்கள். 
அ) ரயில்வே நிர்வாகத்தின் பக்கமிருந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் - அனுமதி வழங்குவது 
ஆ) அனுமதி வழங்கச் சாத்தியமற்ற நிகழ்வு எனின், எந்த நிர்தாட்ச்யண்யமும் இன்றி அனுமதி மறுப்பது

4) கீழ் காணும் ட்வீட்டைப் பாருங்கள். என்ன ஒரு அயோக்கிய அசட்டுத்தனத்துடன் நாம் வளர்க்கிறோம் என்று பாருங்கள்.  ஆக, இந்த முட்டாள்தனத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாகிறது. 




அரசாங்கமானது தனிநபர் பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் கொள்வதில்லை. 
என் உயிரின் பாதுகாப்பையும் மற்றவர்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும் - நான் என் போக்கில்தான் இந்த நாட்டில் உலா வருவேன் என்று மக்கள் வாழ்கிறார்கள்.

ஒன்றா அரசாங்கம் மக்களின் லகானைப் பிடிக்க வேண்டும். அது நிகழச் சாத்தியமற்ற ஜனநாயகத்தில் மக்கள்தான் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு முன் வீடு திரும்பும் வழியில் ஒரு S வடிவ வளைவில் வண்டியைத் திருப்பிக் கொண்டிருந்தேன். இடதுபுறமிருந்த ஒரு சிறுசந்தில் இருந்து ஒரு இளைஞர் சாலையைத் தன்பாட்டிற்குக் கடந்து வலதுபுறச் சாலைக்குச் சென்றார்.  தான் சாலை கடப்பதை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அறிவிக்கும் முகமாய், தன் வலது கையை மட்டும் சாலையின் புறமாய்க் காட்டியவாறே ஒற்றை நொடியில் கடந்துவிட்டார். 25 அல்லது 30 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்த நான் வண்டியை நிறுத்தி, வளைத்துத் தடுமாறி அவரைக் கடந்து வந்தேன். எந்தப்புறம் வண்டி வருகிறது என்று தெரியாதவொரு ஒரு குருட்டு வளைவில் தான் சாலையைக் கடக்கிறோம் என்ற நினைப்பு அவரிடம் எள்ளளவும் இல்லை. இது அப்படியே அவர் ரத்தத்தினில் ஊறிய இந்தியத்தனம் என்று சொல்வதைத் தவிர வேறேதுமில்லை.

இது மாறும் வரையில் இப்படிப்பட்ட அம்ரித்சர் நிகழ்வுகளைத் தவிர்ப்பது சாத்தியம் இல்லை.

1 comment:

Unknown said...

ரத்தத்தில் ஊறிய இந்தியத்தனம்.. அருமையாக உங்களது பதிவை முடித்துள்ளீர்..

Related Posts Plugin for WordPress, Blogger...