May 28, 2010

கர்மவினை - சில விளக்கங்கள்

கர்மா பற்றிய நட்பாஸ் அவர்களின் இந்தப் பதிவை "சிறப்புப் பதிவர்கள்" தலைப்பில் வெளியிடுவதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இது பற்றிய உங்கள் கருத்துக்கள், விவாதங்களை வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கள் ஏதேனும் உண்டெனில் அவற்றையும் இங்கு வெளியட பெரு மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன்.
________________________________

உங்களுக்கே தெரியும், நான் இந்த சிறப்புப் பதிவிடும் வாய்ப்பை எத்தனை போராடிப் பெற்றேன் என்பது. அதையும் வேண்டா வெறுப்பாகத்தான் கொடுத்திருக்கிறார் நண்பர் கிரி. "நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தால் அந்த நினைப்பை விட்டு விடு. இரண்டெழுத்து பெயர்களால் செல்லமாகக் கொண்டாடப்படும் அந்த இரு பிரபல எழுத்தாளர்களின் பக்தர்களைப் பார்த்துத் தொடை நடுங்குகிற நீயெல்லாம் அச்சுக்கோக்கிற வேலைக்குத்தான் லாயக்கு.  இருந்தாலும் என் ஒவ்வொரு பதிவுக்கும் நீ பின்னூடிட்டிருக்கிறாய். அதை அனுமதித்த பாவத்துக்காக ஒரே ஒரு பதிவு போட்டுத் தொலைக்க உன்னை அனுமதிக்கிறேன்," என்று சொல்லிவிட்டார் கிரி. "அப்படியானால் என்ன எழுதட்டும்?" என்று கேட்டேன். "என்ன எழுதித் தொலைத்தால் என்ன? நானே என் தலைவிதியை நொந்துக் கொண்டிருக்கிறேன். பேசாமல் கர்மவினை குறித்து எழுதி விட்டுப் போ!"

கிடைத்த வாய்ப்பை விடுவானேன்? நமக்கா எழுதத் தெரியாது!

_______________________

Image Courtesy: http://vi.sualize.us

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது- எங்கள சிறு வயதில் ஒரு நெருங்கிய உறவினரின் வீட்டுக்குப் போயிருந்தோம். இரவு எல்லாரும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்த உறவினரின் பையன், சிறுவன், "அப்பா, நாம் மட்டும் ஏன் சொந்த வீடு கட்டிக்கொண்டு நன்றாக இருக்கிறோம்? இவர்களெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்?," என்று கேட்டான். அதற்கு அவர், "நாம் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறோம். இப்போது நன்றாக இருக்கிறோம். பாபத்தை செய்திருந்தால் நாமும் கஷ்டப்பட வேண்டியதுதான்," என்று பதில் சொன்னார். எங்களைப் போய் பாவம் செய்தவர்கள், என்று இவர் சொல்லிவிட்டாரே,  எனக்குக் கோபம வந்து விட்டது. ஒன்றும் பேசவில்லை, ஆனால், இந்த பாவ புண்ணியம், கர்மபலன் என்பதேல்லாம் பொய் என்று தோன்றிவிட்டது.

இது போன்ற நம்பிக்கைகள், நன்றாக இருப்பவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளவும், கஷ்டப்படுபவர்களை அது உன் தலை எழுத்து என்று கைகழுவிவிடவும் மட்டும்தான் உபயோகப்படுமா? இனி வருவதையும் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள். 

நான் கர்மவினை குறித்து ஆராயும் முகமாக பகவத் கீதை, விவேக சூடாமணி வகையறாக்களுள் நுழையப்போவதில்லை (நுழைந்துதான் என்ன ஆகப்போகிறது- குருடன் யானையைத் தடவிப் பார்த்த கதைதான், விடுங்கள்). நமக்கு நன்கு தெரிந்த விஷயங்களைக் கொண்டே அதைப் பற்றி யோசிக்கலாம். 

இந்தத் தளத்தில் கடந்த வாரம் அதிரத்தக்க சில நிகழ்வுகள் நடந்தன. நாம் பாட்டுக்கு நண்பர்களுடன் பேசிக்கொண்டு போகிறோம், அப்போது வழியில் எதிர்படுகிறவர்களைப் பார்த்து விளையாட்டாகக் கமெண்ட் செய்வோமில்லையா?  அந்த மாதிரி இந்த வலையேடு போய்க்கொண்டிருந்தது. சாத்வீகமானவர்கள், நல்லவர்கள், அவர்கள் காதில் நாம் பேசுவது விழுந்தால் அவர்கள் நின்று நம்மை முறைத்துப் பார்க்கக்கூடும்- அப்புறம் நம்மைக் கடந்து போய் விடுவார்கள். கொஞ்சம் விவகாரமான ஆட்கள் என்றால் என்ன செய்வார்கள்? "யாரைப் பற்றி என்னடா பேசறீங்க? டாடி மம்மி.." என்று வசவு மழை பொழிவார்களா இல்லையா? இரண்டும் நடந்தது. 

இதைத்தான் கர்மவினை என்று சொல்லத் தோன்றுகிறது. நீ எது செய்தாலும்- இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு, இவர் மூலம் நிகழாவிட்டால் வேறொருவர் மூலம், இப்படி இல்லாவிட்டால் வேறு வகையில்- அதற்கான பலன் கிடைக்கவே செய்யும், இல்லையா? யோசித்து பாருங்கள், கறிகாய் வாங்க ரங்கநாதன் தெரு செல்கிறீர்கள், ஒவ்வொரு கடையிலயும் ஒவ்வொரு விலை, எடை, தரம்- நீங்கள் அது குறித்து அந்த இடத்தில் நாட்டாமை பண்ணினால், ஒருத்தர் இல்லாவிட்டால் வேறொருத்தர் சட்டையைப் பிடிப்பார்களா இல்லையா? இதைப் புரிந்து கொள்ள மாய மந்திரம், மத நம்பிக்கை, சித்தாந்தம், வேதாந்தம் என்று எந்த "அது"வும் தேவை இல்லை. 

ஆங்கிலத்தில் சொல்வார்கள், கோலின ஒரு முனையைப் பற்றுகிறவன், அதன் மறுமுனையை ஏற்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று. ஒரு வேலை செய்கிறோம், அதற்குண்டான பலன் கிடைக்கத்தானே செய்யும்?

"என்ன சார் பேத்தலா இருக்கு! தினமும் ரெண்டாளு செய்யற வேலையை நான் ஒழுங்கு மரியாதையா ஒத்தை ஆளா செய்யறேன், அதை எவனும் கண்டுக்கக் காணோம்... என்னத்துக்கு கர்மபலன்னு கதை பண்ணி என்னை ஏமாத்தறீங்க?" அப்படின்னு சில பேர் கேட்கலாம். 

அதற்கு என் பதில் என்னவென்றால், செய்கிற வேலைக்கு ஒரு நாள் இல்லையென்றால் இன்னொரு நாள் தக்க பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையானது உங்கள் உழைப்பை ஊக்குவிக்கும், உள்ளத்துக்கு உரமூட்டும், உயர்வான சிந்தனைக்குக் களமாக இருக்கும். 

ஜே. கிருஷ்ணமூர்த்தி, மறுஜென்மம் போன்ற கோட்பாடுகளில் எள்ளளவும் ஆர்வம காட்டாதவர். ஆனால், அவரே ஒரு உரையாடலின்போது, "கர்மா கர்மா என்று பேசுகிறீர்களே, நீங்கள் நிஜமாகவே கர்மபலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா என்ன? அப்படி உண்மையிலேயே பாவ புண்ணியம் இருக்கிறது, அதற்கான பலன் பிறவிகள் தோறும்  கிடைக்கிறது என்று நினைத்தால், ஐயா, நீங்கள் இந்த மாதிரியா அக்கறையில்லாமல் இருப்பீர்கள்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் அந்த எண்ணம இருக்குமா இல்லையா? உங்கள் வாழ்க்கை எத்தனை உன்னதமானதாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் தெரியுமா?" என்று கேட்டாராம்.

ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்: இந்த நிமிடம் நீங்கள் செய்கிற செயல் உங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றத்தை உண்டாக்கப் போகிறது என்றால்- நீங்கள் நற்செயல்கள் செய்வீர்களா, இல்லை எவன் எக்கேடு கேட்டால் என்ன என்று உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருப்பீர்களா? 

அட, ஒரு பேச்சுக்கு நாம் உழைப்பது நமக்காகத்தான் என்று வைத்துக்கொண்டாலும், இந்த கர்மபலன் கிடைக்கும் என்ற எண்ணம ஊக்கத்தைத்தானே கொடுக்கிறது: இப்போது எனக்கு ஃபோர்ட் , அதுதான் அந்த கார் கம்பனிக்காரர், அவர் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது:-

"எனக்கு இருபத்தாறு வயது இருக்கும்போது நான் மறுபிறவி இருக்கிறதென்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டேன். எது தேவைப்பட்டதோ அதை என் மத நம்பிக்கையால் கொடுக்க முடியவில்லை. வேலை கூட எனக்கு முழுநிறைவு தருவதாயில்லை. ஒரு பிறவி முழுதும் சேகரித்த அனுபவத்தை அதற்கப்புறம் பயன்படுத்த முடியாதென்றால் வேலை செய்வது வீண் செயலே ஆகும். நான் மறுபிறவி பற்றி அறிய வந்தபோது... அதன் பின் காலம் ஒரு எல்லைக்குட்பட்டதாய் இருக்கவில்லை. ஒரு கடிகாரத்தின் கைகளில் இனியும் நான் அடிமையாய் இல்லை... வாழ்க்கை முடிவில்லாமல் நீண்டு நிற்கிறது என்பதை நினைக்கும்போது எனக்குக் கிடைக்கிற நிம்மதியை மற்றவர்களுக்கு அறிய வைக்க ஆசைப்படுகிறேன்"

கதை எப்படி போகிறது பார்த்தீர்களா?

நான் இந்தப் பதிவில் கர்மா என்றால் என்ன, கர்மபலன் எப்படி கிடைக்கிறது என்பது போன்ற விளக்கங்களைத் தவிர்த்துவிட்டேன். அந்த ஆராய்ச்சி பெரிதாய் பிரயோசனப்படாது என்பது என் எண்ணம. ஆனால் செய்கிற வேலைக்குத் தகுந்த கூலி கிடைக்கும், நல்லது நினைத்தால் நல்லது நடக்கும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் போன்ற நம்பிக்கைகளை நாம் நம் வாழ்க்கையை மேம்படுத்த எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஓரிரு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இது உங்களுக்கு உதவுமா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

இப்பொது நானும் கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்:  ஓட்டுப போடலையோ ஓட்டு! 

இருட்டில் விளக்கேற்றுகிற மாதிரி, முடங்கிப்போன சரித்திரத்துக்கு முன்னேறும் பாதையைக் காட்டுகிறார், புண்ணான உள்ளங்களுக்கு அருமருந்திடுகிற மருத்துவர் ஐயா (ஐயே, இது வேற மருத்துவர்)- வாழ்வை மேம்படுத்தும் எண்ணங்களைக் கைகொண்டு, நல்வாழ்வு வாழ நீங்கள் ஆசைப்பட்டால்- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் வாழும் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க நினைத்தால்- வரசித்தன் பக்கங்களுக்கு தினமும் போய் அவர் எழுதுவதைப் படித்துவிட்டு அங்கே போடுங்க ஓட்டு: நீங்களும் நன்றாக இருப்பீர்கள், தமிழர்களும் நலமாக இருப்பார்கள்.

முடிவாக இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; போர்ஹே சொன்ன மாதிரி, "காத்திருக்கிறது காலம், வரையற்று, வரவேற்று"- நீங்கள் செய்யும் எதுவும் வீணாய்ப் போவதில்லை. உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். 

இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், கலைஞர் எழுதி ரகுமான் இசையமைத்த பாடலைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்- 

"தீதும் நன்றும் பிறர் தர வாரா!"
.
.
.

22 comments:

Anand Viruthagiri said...

நன்று. மிக நன்று.

Giri Ramasubramanian said...

நன்றி ஆனந்த்!

இங்கு இந்தப் பதிவு வெளியிட்டதன் பின்னணியில் நீங்களும் ஒருவகையில் காரணமாய் இருக்கிறீர்கள். "உருப்படியா என்ன எழுதியிருக்கிறாய்?" என என் அகங்காரத்தைத் தொட்ட உங்கள் கேள்விக்கு கொஞ்சமேனும் விடையளிக்கவே இந்த சிறு முயற்சி. (கோபமால்லாம் சொல்லலீங்க, நட்போட உரிமையோட சொல்றேன்)

Raghubhaskar said...

@natbas -

oru chinna doubt.... what happens to a person who doesn't have previous birth.... suppose this is his first Janma.... how is his karma calculated.... since this is his first janma, will he have all the luxuries and happiness.... konjam vilakkama sonna nalla irukkum

natbas said...

இதுக்கு பதில் சொல்லணும்னா நான், சுவாமி நன்பாசாங்குஷாலானந்தான்னு பேரை மாத்திக்கிட்டு ஒரு தனி பதிவு போட்டாதான் பொருத்தமா இருக்கும். ஆனா அதுக்கு கிரி ஒத்துக்க மாட்டாரு. சுருக்கமா சொல்லிடறேன்.

கர்மா இல்லாம பிறப்பே இல்லீங்க. கர்மா என்பது செய்யறது மட்டுமில்லே, அதைவிட முக்கியம் நினைப்புதான். ஒருவனுக்கு ஒன்றை அனுபவிக்கணும் என்கிற ஆசை வரும்போதுதான் அதை அனுபவிப்பதற்கான பிறவி கிடைக்கிறது.

இது எனக்கு உபயோகமா இருக்கிற நம்பிக்கை, அவ்வளவுதான்.

நம்ம ஹிந்து மதத்துல எல்லா நம்பிக்கைகளுக்கும் இடமிருக்கு. உங்களுக்கு எந்த நம்பிக்கை நல்லதா படுதோ, அதை நம்புங்க. நம்பிக்கை விஷயத்தில சரி/ தப்பு, உண்டு/ இல்லைன்னு எதுவுமே இல்லை- நம்ம நம்பிக்கை நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறதா, அப்ப டபுள் ஓகே!

அப்படி இல்லாட்டி மாத்திக்குங்க, அவ்வளவுதான் மேட்டர்.

Anonymous said...

Superb Natbas. I think you should open a blog and give more information like this.

Anand Viruthagiri said...

@நட்பாஸ்

நீங்கள் சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் வெட்டி வச்சிட்டு, பக்கத்துலையே உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பின்னால் வரும் சந்ததிகள் அதை பார்த்து..படித்து..தெளிவா நடந்துக்குவாங்க :-))

ஹஹஹா..

Jokes apart.

உண்மையிலேயே என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறப்பான விளக்கம் இது. பதிவுக்கு நன்றி.

@கிரி
இதற்கு முன் நான் யாரை பற்றியும் அத்தனை கடுமையான வார்த்தைகளை கூறியதில்லை. இனி கூற போவதும் இல்லை .

நிச்சயமாக வேறு யாரேனும் அதை இத்தனை வேட்கையோடும், சவாலாகவும் எடுத்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்".

விட்டீர்கள்.

Giri Ramasubramanian said...

ஓவ் ஓவ்.... hang on hang on .... இப்படியே நாம் மாத்தி மாத்தி பேசினா...சராசரிங்க சொறிஞ்சது போதும்னு சொல்லிக்கிட்டு திரும்பவும் நம்ம கண்ணகியோட கோ-சிஸ்டர் வந்துடப் போறாங்க.

ப.கந்தசாமி said...

குழப்பமாக இருக்கு, தெளியவில்லை.

natbas said...

@Anonymous
நீங்க பாராட்டற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்பதை மிக பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். எதைப் பத்தி வேணா எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுத நான் தயாரா இருக்கேன்- நீங்க படிக்கறதா இருந்தா- ஆனா, நீதி, நியாயம், ஒழுக்கம், ஆன்மிகம் பத்தியெல்லாம் எழுதறது தப்பு- உண்மையிலயே எனக்கு அந்த தகுதி இல்லை. நண்பர் கிரி நமக்கு இடம் கொடுத்திருக்கிறார்- இங்கேயே இது பற்றியெல்லாம் விவாதிப்போம். அடிக்கடி பின்னூட்டம் போட்டு உங்க கருத்தைத் தெரிவியுங்கள்- நாங்களும் கத்துக்கறோம். நன்றி.

@ஆனந்த்
ஒறுத்த வேண்டும் நன்னயம் செய்ய வேண்டும், என்ற எண்ணத்தோடு இந்த பதிவைப் பண்ணவில்லை. தயவு செய்து அப்படி நினைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க்கை ரொம்ப சிக்கலான விஷயம். தப்பு பண்ணிதான் அதைப் பற்றி தெரிஞ்சுக்க முடியுது- இந்த உணர்வு ஓரளவுக்கு வந்ததனால, நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுவேனே தவிர ரோஷப்படமாட்டேன்- இதுவரை.

நீங்களும் உங்க கருத்துகளை வெளிப்படையா சொல்லுங்க: அப்போதான் நாங்களும் கத்துக்க முடியும்.

நீங்க என்னைக் காமடி பண்ற அளவுக்கு உரிமை எடுத்துக்கிடடது சந்தோஷமா இருக்கு. ஆனா உங்க ப்ரோபைல்ல ஒரு விவரம் விட்டுப் போயிருக்கே, அதை சரி செஞ்சிடலாமே... நீங்க அதை எடுத்ததுக்கு நானும் காரணமா இருந்தேன் என்பதால் இதை சொல்கிறேன். மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன், உங்க பிளாக் விவரங்களை ப்ரோபைலில் சேர்க்கவும். வேணுமானால் "நான் சொன்னது தப்பு"ன்னு ஒரு அட்டையிலே எழுதி வெச்சுக்கிட்டு (பெரிய கொயிலெல்லாம் பாழாகிப்போய் விட்டது- அது வேலைக்காவாது) வள்ளுவர் கோட்டம் முன்னால போய் உட்கார்ந்து கொள்கிறேன்.

Giri Ramasubramanian said...

Dr .கந்தசாமி அவர்களுக்கு,

தங்களைப் போன்ற மெத்தப் பெரியவர், அனுபவஸ்தர் ஒருவர் இந்தச் சிறுவனின் தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிகவும் நன்றி.

@ நட்பாஸ் சார்.

ஓவர் டு யு. டாக்டர் அய்யாவுக்கு பதில் சொல்ற அளவுக்கு தெளிவானவன் இல்லை நான். (எஸ்கேப்....)

Mohan said...

If you see in depth... Karma is a earthly phenomenon... once you realise the ultimate truth of 'WHO AM I', it will become immaterial.

Krishna said...

I find it really difficult to follow. Somewhere I read an email which explains like whatever happens in your life only 5% is not under control and the rest is how to react to the situation.

On Marupiravi, I feel that if we could count all the living things in the universe or atleast the world, then I think the overall count would remain the same anytime. But as of now no way to prove this.

Giri Ramasubramanian said...

@ Krishna

Do not worry, I am also in the same state where you're (I am not saying about TN!).

It's very difficult to follow, am just trying to follow.

Anand Viruthagiri said...

@நட்பாஸ்

உண்மைதான் . தவறு செய்த பிறகே நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.

என்னுடைய ப்ளாக் விபரங்களை Profile-இல் இருந்து எடுக்க நிச்சயம் நீங்கள் காரணம் இல்லை. உண்மையில் எனது ப்ளாக்-இல் எதுவரை எந்த பதிவும் செய்யவில்லை. எனவே நீக்கினேன் .விரைவில் துவங்குகிறேன்.

நான் சென்னை வந்ததும் நிச்சயம் வள்ளுவர் கோட்டத்தில் வந்து சந்திக்கிறேன் :-)

Shanmuganathan said...

ஹலோ நட்பாஸ்,
உங்கள் பதிவை படித்தேன், நன்று. என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் அவசரமாக ரயில் பிடிக்கபோரவனிடம் விளக்கம் கேட்டது போல் உள்ளது. இன்னும் பெரிய விளக்கத்தை படிக்க எத்தனித்தேன். ஆனால் உங்கள் பணிவும் பண்பையும் மிகவும் ரசித்தேன்.

நன்றி,
சண்முகநாதன்

natbas said...

@Dr .ப.கந்தசுவாமி, சண்முகநாதன், கிரி அண்ட் கிருஷ்ணா-

உங்க பதிவுகளுக்கு நன்றி. இதைப் படித்துவிட்டு என்னைக் கைபேசியில் அழைத்த என் சகோதரருக்கு நான் அளித்த பதிலையே இங்கே தருகிறேன்:

அவர்: "என்னடா, இப்படி அப்படின்னு எதுவும் சொல்லாம வெண்டைக்காய் மாதிரி வழவழ கொழகொழன்னு விஷயமே இல்லாமே எழுதி இருக்கே!"

நான்: "இல்லப்பா, கர்மான்னா இது இன்னதுன்னு தியரைஸ் பண்ணாம அதை பிராக்டிகலா எப்படி யூஸ் பண்ணிக்கலாம்னு எழுதியிருக்கேன்..."

சரியான பதில்தானே?

(ஆனால் அதற்கு அவன், "ஆமாமா, விஷயத்தோட விபரமா எழுதறத்துக்கு நீ என்ன சுவாமி தயானந்த சரஸ்வதியா?"ன்னு கேட்டு, எனக்கு நெஞ்சே வலிக்கற மாதிரி கபகபவென்று சிரித்தான். அதை வெளியே சொல்வதாயில்லை).

@ஆனந்த்

விரைவில் உங்கள் தளத்தில் பதிவுகள் செய்து நாங்களும் படித்து விட்டு பின்னூட்டம் தர வழி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

கவிதை எழுதுவதானால்

"மீன் பிடிக்கும் வலையில்
ஒளிபிடிக்க முயன்ற பேதமை புரிந்து
கடற்கனவில் இருந்து விழித்துக் கொண்டவன்
இப்போது மறந்துபோக முடியாத பாடல் ஒன்றைத்
தேடிக் கொண்டிருக்கிறான்"

என்றோ,

"காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போன அந்த கன்னி என்ன ஆனாள்?"

என்ற வகையறா தொகையறாவில் எழுதவும். இதில் அர்த்தம் இருக்கிறதா இல்லையா, திட்டலாமா வேண்டாமா என்று திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி நாங்கள் விழிப்போம்- நீங்கள் எஸ்கேப்!

வாழ்த்துக்கள்.

malan said...

hi giri,

expected more from natbas...

natbas.. please workit out more..

perumal

natbas said...

@மாலன்- நீங்களும் Dr .ப.கந்தசுவாமி, சண்முகநாதன், கிரி அண்ட் கிருஷ்ணா கூட்டணியில் சேர்ந்து விட்டீர்கள். இப்போதுதான் தெரிகிறது கிரி ஏன் எனக்கு மொக்கை போடும் வாய்ப்பைத் தர இவ்வளவு காலம் மறுத்தார் என்று. மன்னிச்சுக்குங்க கிரி- உங்க அளவுகோல்தான் சரி.

சீரியஸா சொன்னா, கர்மா பத்தி நல்லா யோசிச்சு பிச்சு பீராஞ்சு எழுதணும்னா அதில ஒரு ஆன்மீக தொனி வருவதை தவிர்க்க முடியாது. அப்படி செய்யலாம், தப்பில்லை, ஆனால் அது அவசியம்தானா என்பதைவிட, அப்படியொரு பதிவை தமிழகம் தாங்குமா என்ற கேள்விதான் என் முன் தொக்கி நிற்கிறது. வேணாம், விட்டுரலாம்.

உங்க அன்பான ஆதரவுக்கும், பதிவுகளுக்கும் நன்றி.

வரசித்தன் said...

நட்பாஸ்,

domino effect ஐ தொடர்பு படுத்தியிருக்கிறீர்கள்.மேலும் விரிவாக எழுத வாழ்த்துக்கள்.தசாவதாரத்தில் கமலும் அன்னியனில் சுஜதாவும் சொல்லமுயற்சித்த butterfly effect ,domino effect,chaos theory இவைகளைப்பற்றி சினிமவைத்தொடர்புபடுத்தி எழுதுங்களேன்.ஆன்மிகச்சாயைதெரியாது.

சிபார்சு செய்யும் தவறைச்செய்யாதீர்கள்.சாரு படும்பாடு பார்த்தீர்களா?என் பதிவை சிபார்சு பண்ணி ஒரு கர்மா டொமினொவைத்தட்டியிருக்கிறீர்கள்.
யதார்த்தத்தில் கருத்துக்கள் எல்லாம் ஒத்துவருவதில்லை.கருத்து மாறுபடும்போது சிக்கல்.
DR.AARON BECK தான் எண்ணவழி சிகிச்சையை வடிவமைத்தவர்.அவர்தான் அந்தப்பாதையைப்போட்டவர்.என்னை இழுக்காதீர்கள்.நான் வெறும் கருவி.

natbas said...

@வரசித்தன் தங்கள் இடுகைக்கு நன்றி. அறிவுரைக்கு அதை விட மிக்க நன்றி.

"யதார்த்தத்தில் கருத்துக்கள் எல்லாம் ஒத்துவருவதில்லை.கருத்து மாறுபடும்போது சிக்கல்" என்று தாங்கள் எழுதியிருப்பதன் உள்ளர்த்தம் புரிகிறது. நம் கருத்துகள் ஒத்துப் போகின்றன என்ற நினைப்பில் நான் தங்கள் வலைத்தளத்தைப் படிக்கச் சொல்லவில்லை. இதுவரை தங்கள் பதிவுகள் மிக சிறப்பானவையாக உள்ளன- என் போன்ற சாமானியர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பிழைகள் செய்வதைத் தவிர்க்ககூடியனவாக உள்ளன, அப்படி பிழை செய்ய நேர்ந்தாலும், அந்த பிழைகளை நியாயப்படுத்த வெட்டி உதார் செய்வதில் இருக்கிற அறிவின்மையைக் எடுத்துக் காட்டுகின்றன. கூறுபட்ட மனங்களுக்கும், கூறுபட்ட சமுதாயத்துக்கும் உங்கள் பதிவுகள் மருந்தாய் இருக்கின்றன- அவ்வளவுதான். நம்மிருவரின் சமூக, இலக்கிய, அரசியல், ஆன்மீக, அறிவியல், மந்திர, தந்திர கோட்பாடுகள்/ நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கலாம்- ஆனால் நான் படித்தவரை தாங்கள் தளம் மன நலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கிறது- அதை மற்றவர்களையும் படிக்கச் சொல்வதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

நிச்சயம் கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்த மாட்டேன்- இயன்றவரை இயைந்து வரப் பார்ப்பேன்- இயலாவிட்டால், இதுவும் கடந்து போகும் என்று அமைதியாகப் போய் கொண்டே இருப்பேன். வாழ்க்கை என்ற பெருங்கடலில் கருத்துகளும் சித்தாந்தங்களும் வேதாந்தங்களும் அனைத்து எண்ணங்களும் நம்பிக்கைகளும் தன்னளவில் காய்ந்து வரண்டு போன உயிரில்லாத கட்டைகள் என்பதில் தெளிவாக இருக்கிறேன்- அவற்றைக் கொண்டு கரையேற வேண்டுமே அல்லாமல், அவற்றைப் பற்றிக் கொண்டு நம் வாழ்வையும் பிறர் வாழ்வையும் வீணடிக்கிற வேலையை ஒருபோதும் செய்வதாயில்லை- இதுவரை இப்படிதான் இருந்திருக்கிறேன், இனி எப்படி போகிறது என்று பார்க்கலாம்.

தொடரட்டும் உங்கள் சேவை!
என் போன்ற அறிவிலிகளுக்கு அது இப்போ தேவை!!

Kottees said...

நன்றி!!!

Unknown said...

கர்ம வினை என்பது உண்மை. அதை நம்புரவங்க புண்ணியம் பண்ணிக்கிட்டு இருபாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...