ஆனந்த்.வி said...
சற்றே நீண்ட பின்னோட்டம். படிக்க நேரம் இருக்கும் என்று நம்புகிறேன்.
இணைய வலைபூக்களில் கிரி,நட்பாஸ் இவர்களின் பாங்கு சற்று அரிதானது. சகட்டு மேனிக்கு திட்டுவதும்,பதிலுக்கு கூச்சல் போடுவதுமே பெரும்பான்மை பாங்கு.
ஒரு கவிதையை ஒருவர் எனக்கு கோபம் வரும் அளவு சாடுகிறார் என்றால் (தந்தையின் கவிதை என்பதால் கூடுதல் ரௌத்திரம் :-)), எனது நோக்கம் அவர் கருத்தை மாற்றுவதாக,தவறு என உணர செய்வதாக மட்டுமே இருந்திருக்கவேண்டும்.
சரி,அதற்காக இப்பொழுது என் தந்தை எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார்,எத்தனை பத்திரிகைகளில் அவர் கவிதை வந்துள்ளது என்ற தகவல் அறிக்கையை தர போவதும் இல்லை, அது உங்கள் கருத்தை மாற்ற உதவாது என்றும் நம்புகிறேன்.
நம் அனைவர்க்கும் உள்ள ஒரு ஒற்றுமை - எழுத்தாளர் சுஜாதா -வின் எழுத்து மீது நமக்கு உள்ள காதல். 2003'ம் வருடம்,ஜூலை மாதம்,'கற்றதும் பெற்றதும்' தொடரில் அவர் என் தந்தை - சொல்கேளான் ஏ.வி.கிரி - கவிதையை மேற்கோள் காட்டி எழுதியது இது :
"'இலக்கிய வீதி'யின் வெள்ளிவிழா நிறைவாக சொல்கேளான் (ஏ.வி. கிரி) கவிதைகள் நூல் வெளியீட்டின் அழைப்பிதழ் வந்தது. வரவேற்பில் இனிப்பு மிட்டாய்க்கு பதில் இஞ்சி மிட்டாய், அரங்கில் தேநீருக்கு பதில் சுக்குக்காபி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கேக்களுக்கு பதிலாக புதினாக் கீரைக்கட்டு, முதல் நூல் பெற பார்வையற்ற சகோதரி சுப்புலட்சுமி போன்ற புதுமைகள் இருப்பதாகத் தெரிந்தது.
சொல்கேளான் அழைப்பிதழில் அச்சிட்டிருந்த கவிதைகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது.
அழகான நெற்றியில்
கலையாத சந்தனப் பொட்டு
சட்டைப்பையில்
நான்காக மடித்த காகிதத்தில்
விபூதி குங்குமம்...
கையிலும் கழுத்திலும்
இடுப்பிலும்
வளம் தரவும் நலம்பெறவும்
மகான்கள் மந்திரித்துத் தந்த
கயிறுகள்... தாயத்துகள்
முகவரி மட்டும் இல்லை
பொது மருத்துவமனையில்
சவக்கிடங்கில்
அநாதையாக
இந்தக் கவிதையின் எட்டாவது ஒன்பதாவது வரிகளை நீக்கிப் படித்துப் பார்த்தால் சிறப்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் எல்லாம் ஓ போடுங்கள்!"
முழு கட்டுரை :
http://sujatha-kape.blogspot.com/2003/07/blog-post_13.html
பூ,நிலா,வானம்,காதல் எவை பற்றி கவிதை எழுதும் பலர் மத்தியில் சமூகத்திற்காக எழுதும் என் தந்தையை போன்றவர்களை பாதுகாக்கவேண்டும்.
புதுக்கவிதை என்பது அதன் நடைக்காக அன்றி,அதன் கருத்திற்கும்,நோக்கத்திற்கும் தான் விமர்சிக்கப்படவேண்டும்.
இது பற்றி உங்களுக்கு இன்னமும் மாற்று கருத்து இருந்தால் அதற்காக ஆரோகியமான விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
@நட்பாஸ்: உங்கள் பண்பு சற்று ஆச்சர்யமானது. என்னை பாராட்டியதால் இதை சொல்லவில்லை. எனக்குள் தூங்கும் அந்த மனிதன் உங்களுக்குள் விழித்திருக்கிறான் :-) .
______________________________
@ஆனந்த்,
எனது தந்தையும் கவிதை எழுதுகிறார்- ஆனால் நமக்குள் என்ன ஒரு வேறுபாடு என்றால், நானே அவரது கவிதைகளைக் கடுமையாக விமரிசிக்கிறேன். கவிஞர் கண்ணதாசனுடன் இளம் வயதில் ஓரளவு பழகி இருக்கிறார். எங்கள் வீட்டு வரவேற்பறையில் ரொம்ப நாட்களாக அவரும் கவிஞரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிற புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது.
கவிஞர் ஒரு மாபெரும் மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது திரை உலக வெற்றி, தமிழில் தரமான கவிஞர்களுக்கு தவறான அடையாளத்தைத் தந்து விட்டது என்று நினைக்கிறேன். காரணம், நல்ல கவிஞனாக இருந்தால் அவன் திரைப்பாடல்கள் மூலம் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது- இதுவும் கூட கவிஞரின் குற்றமல்ல. எனது தந்தையும் அந்தக் கவர்ச்சியில் தனது தனித்துவத்தை இழந்தவர் என்பது எனது விமரிசனம். கவிஞரின் ஆளுமை தமிழ் கவிதை உலகை ஆட்டிப்படைத்ததை சுஜாதா "கனவுத் தொழிற்சாலை" நாவலில் நன்றாக பதிவு செய்திருக்கிறார் (என்னைப் பொறுத்தவரை, அவர் எழுதியதிலேயே சிறந்த நாவல் இதுதான்- நானே, கவிஞர் அருமைநாயகம்- அதுதானே அவர் பெயர்?-, அவருக்காக வருத்தப்பட்டிருக்கிறேன், கண்ணீர் கூட விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்).
இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதனால்தான் என்னால் உங்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி நானும் உங்களைப் போலவும், நண்பர் கிரியைப் போலவும் உணர்ச்சிவசப்படுபவன்தான். என்னிடம் சிறப்பாக எந்த நற்குணமும் கிடையாது.
உண்மையை சொன்னால், நான் மூன்றாம் மனிதன்- ஆனால் விவாதத்தில் பாதிக்கப்பட்ட நீங்கள் இருவரும், மிக எளிமையாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு- மன்னிக்கவும் மாற்றிக் கொள்ளவும் கூச்சப்படாமல்- வெளிப்படையாக தவறுகளை திருத்திக்கொண்டு நட்பு பாராட்டுவது எனக்கு நிஜமாகவே உங்கள் இருவர் மீதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. முன்னமேயே சொன்ன மாதிரி, இந்த இளைய தலைமுறை ஒன்றுபட்டு நிற்கும், சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
நீங்களிருவருமே நயத்தக்கோர்- உங்கள் உயர்ந்த குணத்தைத் தாண்டி நீங்கள் கவிதை குறித்து கதைத்து என்ன ஆகப் போகிறது என்று தோன்றுகிறது.
நன்றி.
______________________________
ஆனந்த்,
எனக்கு என்ன எழுத எனத் தெரியவில்லை. எனவே இந்த இரண்டு கடிதங்களை (பின்னூட்டங்களை) மட்டுமே இங்கு தந்தேன். நான் பலவித உணர்வுகளின் சுழலில் இருக்கிறேன் என்பதே உண்மை.
உங்களுக்கு இரண்டேயிரண்டு தகவல்கள்.
நட்பாஸ் என் முதன்மை விமரிசகர். என்னைக் கொண்டாடியதற்கு நிகராக குட்டவும் செய்திருக்கிறார். ஒரு வகையில் அவர் எனக்கு தூரத்து சொந்தம் ஒருவர் மூலமாக குறுஞ்செய்தி வாயிலாக அறிமுகமாகி இணையத்தில் இணைந்தவர். நாங்கள் இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஒரேயொருமுறை (என் மகன் பிறந்த செய்தி சொல்ல) நான் அவரிடம் பேசினேன், நான்கே வரிகள்.
மேலும், உங்களுக்கு நான் எழுதிய சமாதானக் கடிதத்தை வடித்தவர் நட்பாஸ்தான். மேலே கீழே சில விளம்பரங்களையும், நீங்கள் பெரிதுபடுத்தாத கொஞ்சம் கிண்டலையும் சேர்த்தது மட்டுமே நான்.
அன்புடன்,
கிரி
______________________________
4 comments:
@நட்பாஸ்
'நயத்தக்கோர்' என்ற ஒரு வார்த்தையில் உயரத்தில் ஏற்றி வைக்கிறீர்கள். அதற்கு தகுதி உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
@கிரி
கிரி-நட்பாஸ் நட்பு அழகான ஒன்றாக தெரிகிறது. பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு போன்று இனிமையான ஒன்றாக தொடரட்டும்.
உங்கள் வலைமனை மேலும் புகழ் பெற்று, பல நாடுகளில் பரவ வாழ்த்துக்கள் !!.
வேணாம்... அழுதிடுவேன்...
அடக் கண்றாவியே! சராசரிகள் மாறி மாறி சொறிந்து கொள்ளுங்கள்
மீண்டும் மாதவிக்கு,
தங்கள் பின்னூட்டச் சொரிவுக்கு (pouring) நன்றி. எங்கள் சொறிதல் எங்களோடு போகட்டும். அதைக் காணும் வாய்ப்பை உங்களுக்குக் கொடுத்தமைக்காக வருந்துகிறேன்.
Post a Comment