May 29, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்



தமிழில் ஜெய்ஷங்கர் காலத்திற்குப் பிறகு வந்திருக்கும் கௌபாய் ரகப்படம் இது.  மூன்று விஷயங்கள் படத்தின் முக்கிய பிளஸ்.

வித்தியாசமான கதைக்களம்
அட்டகாசமான கலை இயக்கம் (art  direction)
படம் நெடுகத் தூவப்பட்டிருக்கும் வெடிச் சிரிப்புகள்

வீராதி வீரன், துப்பாக்கி சுற்றுவதிலும் சுடுவதிலும் சூரனான ஜெய்சங்கர்புரத்து  "சிங்கம்" லாரன்ஸ் காணாமல் போக, அவருக்கு மாற்றாக பயம் கொண்டான் "சிங்காரம்" லாரன்ஸ் அந்த ஊருக்கு அழைத்து வரப்படுகிறார். ஜெய்சங்கர்புர  மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் "இரும்புக் கோட்டை" வில்லன் நாசரை எப்படி "பயந்தான்கொள்ளி" லாரன்ஸ் வெல்கிறார் என்பதுதான் மீதக் கதை.

லாரன்சுக்கு வழக்கமான ரோல். துப்பாக்கி சுழற்றி சுழற்றி ஸ்டைல் செய்கிறார், பயப்படுகிறார், பதுங்குகிறார், டான்ஸில் கலக்குகிறார். அப்புறம் புதுசா ஏதாவது? அப்படி ஒன்றும் ரிஸ்க் எடுக்கும் கதை இல்லை இ.கோ.மு.சி.

வித்தியாசமாக கதைக் களத்தை யோசித்தமைக்கே இயக்குனர் சிம்புதேவனுக்கு ஒரு பெரிய ஓஹோ போடலாம். சிரிப்புப் படம் என்றாலும் அங்கங்கே தன் வழக்கமான சீரியஸ் சிவப்பு சிந்தனைக் கருத்துக்களையும், சுயாட்சிக் கோரிக்கை வசனங்களையும் தூவத் தவறவில்லை சிம்புதேவன். இவருக்குத் தமிழ்த் திரையுலகில் நிச்சயம் ஒரு தனியிடம் உண்டு.



படத்தின் முதல் பாதியை லாரன்ஸ் தன் ஸ்டைல் கலாட்டாக்கள் மூலம் பார்த்துக் கொள்கிறார். படத்தின் பின்பாதி முழுக்க செவ்விந்தியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அவரின் மொழி பெயர்ப்பாளர் சாம் இருவரிடமும். ரெண்டு பெரும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். 



மௌலி, இளவரசன், டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, வி.எஸ்.ராகவன், வையாபுரி, ஆச்சி மனோரமா, செந்தில் என பெரிய பட்டாளமே கொஞ்சம் அப்படி இப்படி கலகலப்பை அங்கங்கே தருகிறது. மூன்று கதாநாயகிகள் - பத்மப்ரியா. சந்த்யா, லட்சுமி ராய் - அவர்கள் பங்கிற்கு இருக்கிறார்கள்.



பின்னணி இசையிலும் கொள்ளைக்காரி பாடலிலும் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றாகத் தெரிகிறார். சிறப்புப் பாராட்டுகளுக்கு உரியவர் மிக அருமையான செட்களால் நம்மை கௌபாய் கதைக்குள் அழைத்துச் செல்லும் கலை இயக்குனர்.

முக்கால்வாசிப் படம் கலகலப்பைத் தந்து நம்மை சுவாரசியப் படுத்துகிறது என்றால், மீதம் கால்வாசிப் படம் நம்மைப் படுத்தி எடுக்கிறது. வில்லனின் கிளைமாக்ஸ் சவால்கள், ஒண்டிக்கு ஒண்டி சண்டை என தேவையின்றி படம் இழுக்கப்படுகிறது. நாசர் ரொம்பவும் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்ட ஒரு பழைய கஞ்சி வில்லன் ரோல் செய்திருக்கிறார். அவருக்கு அசிஸ்டன்ட் சாய்குமார் இன்னொரு காமெடி வில்லன்.

இந்த மைனஸ் பாயிண்டுகளையும் தாண்டி படத்தை நீங்கள் பார்க்க நாம் மேலே சொன்ன காரணங்கள் திடமாக இருக்கின்றன. ஆகவே.....

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - தவறாமல் குழந்தைகளை அழைத்துச் சென்று பாருங்கள்.
.
.
.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...