Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Jul 14, 2010

ஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயை

“....But I must tell that entry into the film world has suddenly relieved me of all the burdens of a head of a family. Had I not come to this industry, I would have been running from pillar to post to organise money for my son's higher-education,” said the writer.

கடந்த ஞாயிறு ஹிந்து நாளிதழில் இதைச் சொல்லியிருப்பது வேறு யாருமில்லைங்க, நம் மனம் கவர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்தான்.


ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே தமிழில் முன்னணி மற்றும் பிரபல எழுத்தாளராக இருக்கும் ஒருவரே இந்த வகையில் சொல்லும் அவசியம் இருக்கிறது.

மேலும், நேற்று ஒரு வலைப்பதிவர் தன் ஜெமோ சந்திப்பு குறித்து எழுதியிருந்தார். அதில், அந்தச் சந்திப்பு முழுவதிலும் அல்லது பெரும்பாலும் ஜெமோ'வின் பேச்சு சினிமா சார்ந்ததாகவே இருந்தது, இலக்கியம் மிகக் குறைவாகவே ஜெமோ பேசினார் எனக் கூறினார்.


சாரு தன் சமீபப் பதிவொன்றில் "உங்களைப் படிக்கலைன்னா தூக்கம் வரலை, சாப்பாடு எறங்கலை" என்று இணையத்தில் இலவசமாகச் சொல்வதை நிறுத்திவிட்டு தன் புத்தகங்களை வாங்கிப் படிக்குமாறு தன் வாசகர் ஒருவருக்கு வேண்டுகோள் விடுத்தார். அது தன் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள சற்றேனும் உதவும் என்றார். "என்னடா மனுஷன் இப்படியெல்லாம் எழுதறார்" என்று நினைத்தேன்.


இணையத்தில் ஆயிரமாயிரம் வாசகர்கள், ஒரு பக்கம் அன்புச் சொரிதல்கள், மற்றுமோர் பக்கம் ஆவேசக் கூக்குரல்கள், அடிகள், அரவணைப்புகள், புலம்பல்கள், புண்ணாக்குகள். என்ன வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாமே இலவசமாக இலவசத்திற்குக் கிடைப்பன. ஆனால் உண்மை என்னவென்றால் at the end of the day money only can help you live.....!!! அதை நாம் ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்.


சாரு சொன்னதாகட்டும், ஜெமோ'வின் சினிமா சிலாகிப்புகளாகட்டும் என் பார்வையில் யதார்த்தம்! யதார்த்தம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னே நடந்த தமிழ்ப்பதிவர் பிரச்னையின் போது சக பதிவர் ஒருவரிடம் அந்தப் பிரச்னைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், "தினத்தந்தி நாளிதழ் தினமும் இணையத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம் ஒரு லட்சம் ஹிட்ஸ்களைப் பார்க்கிறதாம்", என்றார். 

நாம் இணையத்தில் இலவசமாய் எழுதிக் கொண்டு கூட்டம் கூடுகையில் "என் தளத்துல டெய்லி நானூறு ஹிட்டு, நாலாயிரம் ஹிட்டு" என்று சொந்தமாக பலம் கூட்டி அறைகூவிக் கொள்கிறோம்.

At the end of the day மீசைக்கவிஞன் சொன்னதுபோல், வாழ்க்கை ஒரு ஆழ்ந்த பொருளற்ற அற்ப மாயையாகவும் தோற்ற மயக்கங்களுடன் கூடிய சொற்பனமாகவும்தான் தோன்றுகிறது எனக்கு.
.
.
.

Jul 11, 2010

பகுத்தறிவு?

என் இனிய தமிழ் மக்களே, 

தமிழ்நாட்டுல "பகுத்தறிவு பகுத்தறிவு" என ஒரு வார்த்தை ஆதி காலம்தொட்டுப் புழங்கி வருகிறது.

இதற்கு உங்கள் பார்வையில் அர்த்தம் என்னன்னு சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

துக்ளக் "சோ" அவர்களைக் கேட்டால் அவருக்கே உரிய நக்கலுடன் அது ஒரு கெட்ட வார்த்தை என்பார். ஆனால் அவரும் தெளிவாக இதுவரை ஒரு விளக்கக் குறிப்பு எழுதவில்லை. எனவே திராவிட இயக்கங்களுக்கும்* அவருக்கும் இந்த வார்த்தை குறிப்புரை எழுதியதில் பெரிய வித்தியாசம் இல்லை.

* இந்த ரெண்டு வார்த்தைகளை இங்கே உபயோகிச்சதுக்காக எத்தனை பேரு வெளக்குமாறு தூக்கிட்டு வரப்போறாங்களோ?

வலைத்தேடல்களில் எனக்குக் கிடைத்த ஆனால் என் மனதிற்கு முற்றிலும்  சமாதானம் தராத சில தகவல்கள் இங்கே:


பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. (நன்றி: yarl.com)

அடடா அப்படின்னு ஒருத்தர் எழுதியிருக்காரு. அதை நான் இங்கே பிரசுரம் பண்ண முடியாது. பண்ணினா எனக்கு ஒரு சாயம், அடையாளம் தந்து வசவுப் பின்னூட்டங்கள் வரும் (உ-ம் - பார்ப்பனப் பரதேசி நக்கி நாயாடா நீ?). 



மூத்த பதிவர் வெட்டிப்பயலும் ஒரு பதிவின் வாயிலாக இதே போல் கேள்வி எழுப்பியிருந்தார். அங்கு வந்த பதில்களிலும் அப்படியொன்றும் ஒரு முடிவுரை எழுதும் வண்ணம் ஏதும் தேறவில்லை.


ஆன்மீகவாதிகள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவறில்லை, (இது கூட்டமாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும் தனியாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும்.) (நன்றி: http://blog.mohandoss.com).



பகுத்தறிவுன்னா என்ன? நீங்க என்ன சொல்றீங்க?
.
.
.

May 27, 2010

கர்மா - நிஜமா?

சிக்கலான விஷயங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் நம்மில் பலருக்கும் இல்லை, இந்த "நம்மில்" முக்கியமாக என்னை சேர்த்துக் கொள்கிறேன்.

சிறு வயதில் இருந்து கர்மயோகம் பற்றிய புத்தகங்களைப் பல முறை படிக்க எத்தனித்திருக்கிறேன். எத்தனித்த அத்தனை முறையும் இரண்டே நிமிடங்களில் தூக்கம் அல்லது ஆயாசம் மிகுந்து படித்துக் கொண்டிருந்த புத்தகம் மறுபுறம் சரிந்து சென்ற அனுபவமே நேர்ந்துள்ளது.

சுமார் பத்து வருடங்கள் முன்பு ஒரு யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது அங்கும் கர்மா பற்றிய ஒரு பகுதி இருந்தது. அங்கு எனக்குக் கிடைத்த விளக்கத்தில் ஒரு வார்த்தை கூட என் நெஞ்சில் நிற்கவில்லை.

அலுவலக நண்பர் ஒருவர், "கிட்டு மாமா", என எங்களால் செல்லமாகக் கொண்டாடப் படுபவர். வேதம், உபநிஷதம், விசாகா ஹரியின் காலட்சேபம் என இருக்கும் அவரது மேற்கோள்கள். அவரிடம் நான் இது குறித்து விவாதித்த போது அவர் தந்த விளக்கங்கள் கிறுகிறுப்பை மட்டுமே தந்தன.


என் எழுத்துத் திறமையின் மீதும் (!), அறிவுத்திறன் மீதும் (!!) அபார நம்பிக்கை கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கர்மாவிற்கும் பாவ புண்ணியங்களுக்கும்  இடையேயான தொடர்புகளை எழுதுமாறு ஓரிரண்டு முறைகள் கேட்டுக் கொண்டார். "எனக்கு என்னப்பா தெரியும்", என ஒப்புக் கொள்ளும் பக்குவமின்றி, "சரி கொஞ்சம் டைம் குடுங்க எழுதிடலாம்", என பதில் சொல்லி சமாளித்தேன்..

இந்த வேளையில்தான் நண்பர் நட்பாஸ் "யப்பா, எனக்கு உன் தளத்துல எழுத ஒரு வாய்ப்பைக் குடுப்பா", என நச்சரித்த வண்ணம் இருந்தார். "வாய்யா வா!, என்னோட எத்தனை பதிவுகளை மறைமுகமா கிண்டல் செஞ்சு, வஞ்சகப் புகழ்ச்சி அணி பாடி சந்தோஷப் பட்டிருப்பே. என்னோட பழகின கர்மபலனுக்கு எழுது கர்மா'ங்கற தலைப்புல ஒரு பதிவு"ன்னு கட்டளையிட்டேன்.

அவரும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை புரிந்துகொள்ள முயற்சி செய்த வண்ணம் இருக்கிறேன். நாளை பதிவேற்றம் செய்கிறேன், நீங்களும் உங்கள் கர்மபலனை அனுபவியுங்கள்.
.
.

May 21, 2010

ஆனந்த விருத்தம்




ஆனந்த்.வி said...

சற்றே நீண்ட பின்னோட்டம். படிக்க நேரம் இருக்கும் என்று நம்புகிறேன்.

இணைய வலைபூக்களில் கிரி,நட்பாஸ் இவர்களின் பாங்கு சற்று அரிதானது. சகட்டு மேனிக்கு திட்டுவதும்,பதிலுக்கு கூச்சல் போடுவதுமே பெரும்பான்மை பாங்கு.

ஒரு கவிதையை ஒருவர் எனக்கு கோபம் வரும் அளவு சாடுகிறார் என்றால் (தந்தையின் கவிதை என்பதால் கூடுதல் ரௌத்திரம் :-)), எனது நோக்கம் அவர் கருத்தை மாற்றுவதாக,தவறு என உணர செய்வதாக மட்டுமே இருந்திருக்கவேண்டும்.

சரி,அதற்காக இப்பொழுது என் தந்தை எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார்,எத்தனை பத்திரிகைகளில் அவர் கவிதை வந்துள்ளது என்ற தகவல் அறிக்கையை தர போவதும் இல்லை, அது உங்கள் கருத்தை மாற்ற உதவாது என்றும் நம்புகிறேன்.

நம் அனைவர்க்கும் உள்ள ஒரு ஒற்றுமை - எழுத்தாளர் சுஜாதா -வின் எழுத்து மீது நமக்கு உள்ள காதல். 2003'ம் வருடம்,ஜூலை மாதம்,'கற்றதும் பெற்றதும்' தொடரில் அவர் என் தந்தை - சொல்கேளான் ஏ.வி.கிரி - கவிதையை மேற்கோள் காட்டி எழுதியது இது :

"'இலக்கிய வீதி'யின் வெள்ளிவிழா நிறைவாக சொல்கேளான் (ஏ.வி. கிரி) கவிதைகள் நூல் வெளியீட்டின் அழைப்பிதழ் வந்தது. வரவேற்பில் இனிப்பு மிட்டாய்க்கு பதில் இஞ்சி மிட்டாய், அரங்கில் தேநீருக்கு பதில் சுக்குக்காபி, சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கேக்களுக்கு பதிலாக புதினாக் கீரைக்கட்டு, முதல் நூல் பெற பார்வையற்ற சகோதரி சுப்புலட்சுமி போன்ற புதுமைகள் இருப்பதாகத் தெரிந்தது. 

சொல்கேளான் அழைப்பிதழில் அச்சிட்டிருந்த கவிதைகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது. 

அழகான நெற்றியில்
கலையாத சந்தனப் பொட்டு
சட்டைப்பையில்
நான்காக மடித்த காகிதத்தில்
விபூதி குங்குமம்...
கையிலும் கழுத்திலும்
இடுப்பிலும்
வளம் தரவும் நலம்பெறவும்
மகான்கள் மந்திரித்துத் தந்த
கயிறுகள்... தாயத்துகள்
முகவரி மட்டும் இல்லை
பொது மருத்துவமனையில்
சவக்கிடங்கில்
அநாதையாக
இந்தக் கவிதையின் எட்டாவது ஒன்பதாவது வரிகளை நீக்கிப் படித்துப் பார்த்தால் சிறப்பு கூடுகிறது என்று சொல்பவர்கள் எல்லாம் ஓ போடுங்கள்!"

முழு கட்டுரை :
http://sujatha-kape.blogspot.com/2003/07/blog-post_13.html

பூ,நிலா,வானம்,காதல் எவை பற்றி கவிதை எழுதும் பலர் மத்தியில் சமூகத்திற்காக எழுதும் என் தந்தையை போன்றவர்களை பாதுகாக்கவேண்டும்.

புதுக்கவிதை என்பது அதன் நடைக்காக அன்றி,அதன் கருத்திற்கும்,நோக்கத்திற்கும் தான் விமர்சிக்கப்படவேண்டும்.

இது பற்றி உங்களுக்கு இன்னமும் மாற்று கருத்து இருந்தால் அதற்காக ஆரோகியமான விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

@நட்பாஸ்: உங்கள் பண்பு சற்று ஆச்சர்யமானது. என்னை பாராட்டியதால் இதை சொல்லவில்லை. எனக்குள் தூங்கும் அந்த மனிதன் உங்களுக்குள் விழித்திருக்கிறான் :-) .


______________________________



natbas said...

@ஆனந்த்,
எனது தந்தையும் கவிதை எழுதுகிறார்- ஆனால் நமக்குள் என்ன ஒரு வேறுபாடு என்றால், நானே அவரது கவிதைகளைக் கடுமையாக விமரிசிக்கிறேன். கவிஞர் கண்ணதாசனுடன் இளம் வயதில் ஓரளவு பழகி இருக்கிறார். எங்கள் வீட்டு வரவேற்பறையில் ரொம்ப நாட்களாக அவரும் கவிஞரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிற புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. 

கவிஞர் ஒரு மாபெரும் மேதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது திரை உலக வெற்றி, தமிழில் தரமான கவிஞர்களுக்கு தவறான அடையாளத்தைத் தந்து விட்டது என்று நினைக்கிறேன். காரணம், நல்ல கவிஞனாக இருந்தால் அவன் திரைப்பாடல்கள் மூலம் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது- இதுவும் கூட கவிஞரின் குற்றமல்ல. எனது தந்தையும் அந்தக் கவர்ச்சியில் தனது தனித்துவத்தை இழந்தவர் என்பது எனது விமரிசனம். கவிஞரின் ஆளுமை தமிழ் கவிதை உலகை ஆட்டிப்படைத்ததை சுஜாதா "கனவுத் தொழிற்சாலை" நாவலில் நன்றாக பதிவு செய்திருக்கிறார் (என்னைப் பொறுத்தவரை, அவர் எழுதியதிலேயே சிறந்த நாவல் இதுதான்- நானே, கவிஞர் அருமைநாயகம்- அதுதானே அவர் பெயர்?-, அவருக்காக வருத்தப்பட்டிருக்கிறேன், கண்ணீர் கூட விட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்).

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதனால்தான் என்னால் உங்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி நானும் உங்களைப் போலவும், நண்பர் கிரியைப் போலவும் உணர்ச்சிவசப்படுபவன்தான். என்னிடம் சிறப்பாக எந்த நற்குணமும் கிடையாது.

உண்மையை சொன்னால், நான் மூன்றாம் மனிதன்- ஆனால் விவாதத்தில் பாதிக்கப்பட்ட நீங்கள் இருவரும், மிக எளிமையாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு- மன்னிக்கவும் மாற்றிக் கொள்ளவும் கூச்சப்படாமல்- வெளிப்படையாக தவறுகளை திருத்திக்கொண்டு நட்பு பாராட்டுவது எனக்கு நிஜமாகவே உங்கள் இருவர் மீதும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. முன்னமேயே சொன்ன மாதிரி, இந்த இளைய தலைமுறை ஒன்றுபட்டு நிற்கும், சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

நீங்களிருவருமே நயத்தக்கோர்- உங்கள் உயர்ந்த குணத்தைத் தாண்டி நீங்கள் கவிதை குறித்து கதைத்து என்ன ஆகப் போகிறது என்று தோன்றுகிறது. 

நன்றி.

______________________________


ஆனந்த்,

எனக்கு என்ன எழுத எனத் தெரியவில்லை. எனவே இந்த இரண்டு கடிதங்களை (பின்னூட்டங்களை) மட்டுமே இங்கு தந்தேன். நான் பலவித உணர்வுகளின் சுழலில் இருக்கிறேன் என்பதே உண்மை.

உங்களுக்கு இரண்டேயிரண்டு தகவல்கள். 

நட்பாஸ் என் முதன்மை விமரிசகர். என்னைக் கொண்டாடியதற்கு நிகராக குட்டவும் செய்திருக்கிறார். ஒரு வகையில் அவர் எனக்கு தூரத்து சொந்தம் ஒருவர் மூலமாக குறுஞ்செய்தி வாயிலாக அறிமுகமாகி இணையத்தில் இணைந்தவர். நாங்கள் இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஒரேயொருமுறை (என் மகன் பிறந்த செய்தி சொல்ல) நான் அவரிடம் பேசினேன், நான்கே வரிகள்.

மேலும், உங்களுக்கு நான் எழுதிய சமாதானக் கடிதத்தை வடித்தவர் நட்பாஸ்தான். மேலே கீழே சில விளம்பரங்களையும், நீங்கள் பெரிதுபடுத்தாத கொஞ்சம் கிண்டலையும் சேர்த்தது மட்டுமே நான்.

அன்புடன்,
கிரி
______________________________

May 20, 2010

ஒரு கடிதமும் நான்கு வசவுகளும்


நண்பர் ஒருவரின் ரத்த பந்தத்தின் கவிதை ஒன்றை நான் விமரிசனம் செய்திருந்தேன். அது கடல் தாண்டி அவர் இருந்தாலும், பிட்ஸ்பர்கிலிருந்து பீட்ஸா தின்றபடி கண்டபடி அவர் பின்னூட்டங்கள் இட்டிருந்தார். அவர் உணர்வுகளை நான் மதிக்கிறேன். மேலும் என் தளத்தை விமரிசித்து ஒரு கடிதமும் எனக்கு எழுதியிருந்தார் ஆனந்தமாக.




அட, நான் ஏதேதோ எழுதினாலும் இரண்டு வருடங்களாக எழுபத்து மூன்று நாடுகளில் ஏழாயிரத்து ஐநூறு பேர் என்னைப் படித்திருப்பதை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை தந்தது அவர் கடிதம்.





அன்பு நண்பர் ஆ.வி.கி'க்கு,

உங்கள் கோபம் புரிகிறது- உங்கள் பின்னணியிலிருந்து பார்த்தால் அது நியாயமானதும் கூட.  உங்களை உசுப்பேத்திய என் விமரிசனங்கள் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு வருந்துகிறேன். விமரிசனத்தை அப்படியே விடுத்து, உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் சொற்களை நீக்கியிருக்கிறேன். இப்போது இந்த விமரிசனத்தை ஒரு கிரிட்டிசிசம் ஆக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் என எண்ணுகிறேன். 

நீங்கள் எழுதியது எது குறித்தும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை- பொது வாழ்க்கையில் இது போன்ற வசவுகள் எல்லாம் சகஜம். என் தளத்தை உஷார்ப் படுத்திக் காக்கும் AVG ஆன்டி வைரஸ் மென்பொருளாகவே உங்களை நான் காண்கிறேன். (அட....நீங்களும் AVG தானே?)

பின் குறிப்பு: நானும் ஒரு புத்தகத்தை வெளியிடத்தான் போகிறேன். அது குறித்த பதிவு இந்த ஆண்டு கட்டாயம் வரும். நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு கூடுதால் ஊக்கம் தரவே செய்கிறது. நன்றி. புத்தக வெளியீட்டு விழாவிற்கு நிச்சயம் உங்கள் ஆனந்த mailbox'ற்கு அழைப்பு வரும். விமான டிக்கெட்டிற்கு சொல்லி வையுங்கள். 

மேலும் பின் குறிப்பு: அட எனக்கும் உங்களுக்கும் 19 ராசியான நம்பர் சார். உங்க linkedin contacts பத்தி சொல்றேன் நான்.

Apr 22, 2010

இரு கடிதங்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இது எத்தனை உண்மையான வார்த்தை. இதை நானும் எத்தனை பேருக்கு உபதேசித்திருப்பேன். ஆனால் நானாகப் புரிந்து கொள்ள எனக்கு அவ்வப்போது இனிய அல்லது கசப்பான அனுபவங்கள் தேவைப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் எனக்கு இரண்டு வெவ்வேறு அனுபவங்கள் கிட்டின. ஒன்று நன்று, இன்னொன்று தீது.

கடிதம் 1

மனமாற்றமும் மதமாற்றமும் பதிவிற்கு அன்பர் தமிழ் மீரான் என் கருத்தை மறுத்து எதிர்வினை இட்டார். அவர் கருத்தை நான் ஒப்புக்கொள்ளாவிடினும் அதற்கு நேற்று  என்னால் இயன்றவரை தன்மையாக ஒரு பதிவு வழியாகவே என் பதிலைச் சொல்லியிருந்தேன்,. ஒரே கடிதத்தில் நண்பரானார் தமிழ் மீரான்.


கடிதம் 2

என் நண்பனின் தாயார் "சின்னப்பயல்களிடமும், நாய்க்குட்டிகளிடமும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது", என அடிக்கடி சொல்வர். எந்த நேரத்திலும் உங்களுக்கு சபையில் அவமானம் நேரலாம். நான் செய்ததே தவறு எனினும், இடம் தெரியாமல் ஒரு அரைவேக்காட்டுத் தளத்தில் நேற்று என் கருத்து ஒன்றை கிண்டல் தொனியில்  சொல்லி சற்றே சேற்றை வாரிப் பூசிக்கொண்டேன். 


அது பற்றிய விவரங்களை இங்கே தர விருப்பமில்லை ஏனென்றால்....?

ஒரு கற்பனைக் காட்சிக்கு வாருங்கள்....

பின்னொரு நாளில் நான் ஒரு வேளை பிரபல எழுத்தாளனாகி புத்தகங்கள் வெளியிடும் நிலைக்கு வருகையில் நான் மேடையில் அமர்ந்திருக்கிறேன். முன் வரிசையில் என் நண்பர் பரிதி ஆடலரசன். அவர் அருகில் என்னைப்பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர்,

"யாரு சார் இந்த எழுத்தாளர், புதுசா இருக்காரு?", என என்னைக்  காட்டி வினவ...
நண்பர் பரிதி: "அவரா, அவர்தான் சார் அந்த இந்திரஜித் பய கிட்ட கெட்ட கெட்ட வார்த்தையில ஒரு தடவ திட்டு வாங்கினாரே அவர்தான்", என எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தர.....தேவையா இதெல்லாம் எனக்கு. 

இனி இணையத்தில் அடக்கி வாசிக்க வேண்டும்.

Apr 11, 2010

பெண்களுக்கு எதிரி?

நண்பர் பாஸ்கரின் இன்றைய இடுகை "பெண்ணுக்கு பெண்தான் எதிரி!" படித்ததும் கோபமாக வந்தது.


நான் எப்போதும் பெண்கள் பக்கம் பரிந்து பேசுபவன். மக்கள்திலகம்  எம்.ஜி.ஆர்., சூப்பர்ஸ்டார் ரஜினி, இளையதளபதி விஜய் இந்த மூவருக்கும் அடுத்ததாக தமிழகத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்க ஒருவர்(ன்) உண்டென்றால் அது நான்தான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. சரி அவசரமாக நண்பனைப் பார்க்க வேண்டியிருந்ததால், திரும்பி வந்ததும் காரசாரமாக பாஸ்கர் அவர்களுக்கு கச்சேரி வைத்துக் கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.


வா மச்சான் என பரிவுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றான் நண்பன். "எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவாறு நண்பனின் அண்ணி காப்பி கொண்டு வந்து கொடுத்தார்.  சமீபத்தில்தான் நண்பனின் அண்ணனுக்கு கல்யாணமாகி இருந்தது. "நல்லா இருக்கேன் அண்ணி", என்றவாறு அந்தக் காப்பியை குடித்து முடித்தேன். "காபி நல்லாருக்கு", என்று நான் சொல்ல, "அது டீ", என பதில் வந்து என்னை அசடு வழிய வைத்தது. ஹிஹி என சமாளித்தேன்.

"அம்மா எங்கேடா?", என நான் கேட்க, ஜன்னலைத் திறந்து வீதி முனையைக் காட்டினான். அங்கே அவன் அம்மா ஒரு பெட்டிக்கடையில் அமர்ந்தவாறு மிட்டாய், பிஸ்கட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். "டேய், என்னடா நடக்குது?, இப்போ என்ன தேவைன்னு அங்க கடை போட்டுக் கொடுத்திருக்கீங்க?", எனக் கேட்டேன். அவர்கள் வீட்டில் அவன் அம்மா உழைத்துத்தான் உலை பொங்கும் அவசியம் இல்லை. சுமாராய் வசதி உள்ள குடும்பம்தான்.

"மச்சான் உனக்கே தெரியும், அண்ணனுக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ மச்சான், ரெண்டு சிங்கத்த ஒரு கூண்டுல வெக்கலாம், ஆனா ரெண்டு பொம்பளைங்கள ஒரு வீட்டுல வெக்கக் கூடாதுடா!" என ஏதோ தத்துவம் உதிர்த்தான். எனக்கு ஏதோ புரிந்தது, ஏதோ புரியவில்லை. "சரிடா, நான் வர்றேன்", எனப் புறப்பட்டு வந்தேன்.

ஒருவேளை பாஸ்கர் ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டி எழுதினது சரிதானோ? நீங்கள்  யாராவது சொல்லுங்களேன்.

Feb 12, 2010

பதம் பார்த்த பாஸ்கர்!

துணுக்குறச் செய்தது! திடுக்கிடச் செய்தது! எனலாம் இதனை...

என் நண்பர் பாஸ்கர் பெரிய மனது பண்ணி எனக்காக ஒரு தமிழ்த்தளத்தைத் தொடங்கியிருந்தார் <http://livelyplanet.wordpress.com/>. அவர் எழுதும் high funda  ஆங்கில எழுத்துக்கள் எனக்குப் பிடிபடுவதில்லை <http://vbelonghere.blogspot.com/>. அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கேட்டு ஒருவழியாக அவரைத் தமிழ் எழுத வைத்தாயிற்று.

நான் துணுக், திடுக் உற்ற காரணம் தமிழ்த்தளத்தில் அவர் எழுதியிருந்த முகவுரையே.. பாருங்களேன்: http://livelyplanet.wordpress.com/about/

அது சரி...படிக்க நாப்பது பேரு இருந்தா, பதம் பாக்க நாலு பேரு இருக்கத்தான் செய்வாங்க.

இதில் விசேஷம் என்னவென்றால், நாங்கள் இருவரும் இதுவரை ஒருமுறைகூட நேரில் சந்தித்தது இல்லை. ஒருவர் குரலை ஒருவர் கேட்டதும் இல்லை. எங்கயோ இலக்கியத்துல படிச்சாப்போல இருக்கணுமே! அதுதான்...அதேதான் சார் இது!

Feb 2, 2010

ஒருவன் ஒருவன் முதலாளி......

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தூர்தர்ஷன் விழா ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார், "தமிழில் இரண்டே இரண்டு தொலைக்காட்சி சேனல்கள்தாம் உள்ளன, அவை "பொதிகை மற்றும் ஜெய-ராஜ-விஜய-சன்" என்றார்.

பழைய தூர்தர்ஷன் விளம்பரங்கள் (நிர்மா, ரஸ்னா, ஓல்டு சிந்தால்), பழைய தூர்தர்ஷன் தொடர்கள் (ராமாயண், அலீப் லைலா, ஜுனூன்), வாராந்திர நிகழ்ச்சிகள் (எதிரொலி, முன்னோட்டம், ஒளியும் ஒலியும், செவ்வாய் நாடகம், ரங்கோலி, சித்ரஹார்) என ஒரே சேனலில் நாம் காத்திருந்து ஒரு காலத்தில் கண்டு மகிழ்ந்தோம்.

"ஊர் ரெண்டுபட்டால் ....

...கூத்தாடிக்குக் கொண்டாட்டம்", வேறென்ன? வெறும் வாயை மெல்லும் செய்தி சேனல்களுக்கு அவல் போல் கிடைத்தது, சிவசேனா - ஆர்.எஸ்.எஸ். முட்டல்கள் (சார் அது முட்டாள்கள் இல்லீங்க, சரியா படிங்க, அப்புறம் எங்க வீட்டுக்கு ஆட்டோ வரப்போவுது). 

செய்தி சேனல்களுக்கு நம்மிடம் ஒரேயொரு தேவைதான், "நீ என்னைப் பாரு". நீ என்ன கேக்கறியோ அதுக்கு மேலே நான் தர்றேன். ஒண்ண ரெண்டாக்கணுமா? ஆக்கறேன். உடைச்சக்கடலைய மூணாக்கணுமா? அதுவும் ஆக்கறேன். எது வேண்டுமென்றாலும் செய்வார்கள் அவர்கள்.

Jan 28, 2010

ஒரு தற்காலிகப் பிரிவு..











இரண்டு நாட்களாகவே சோகமும் அது தந்த சோம்பலுமாகவே இருக்கிறது. இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன; ஷைலஜா பிறந்தகம் செல்லப்போகிறாள் பிரசவத்திற்கு. போகப்போறியா, என கண்களில் சோகம் தேக்கி மௌனமாய் நான் கேட்கவும், அதேமௌனத்துடன் தலையசைத்து ஆமாம் என்றுவிட்டு, போகட்டுமா என மேலும் சோகம் தேக்கி அவள் கேட்பதுமாய் பொழுதுகள் நகர்கின்றன. அவள் அம்மா வீடு நான்கு கிலோமீட்டர் தொலைவுதான், எனினும் திருமணமான இந்த இரண்டரை வருடங்களில் நாங்கள் பார்க்காதது இந்தப் பிரிவு.

இதயத்தில் கனம் சேர்த்தவாரே நகர்கின்றன நாட்கள். கல்யாணமான புதிதில் அவள் சுமந்து வந்த சூட்கேசை தூசி தட்டிக் கீழே இறக்கித்தருகிறேன், அவள் துணிமணிகள் உள்ளே போகின்றன. அவள் மருந்து மாத்திரைகளும், வாக்மேனும், கேசட்டுகளும், சார்ஜரும்,பேட்டரிகளும் என ஒவ்வொன்றாய் அவள் கைப்பைக்குள் குதிக்கின்றன. ஏதோ பேச்சு ஆரம்பித்து, எதையோ பேசி அவளின்றி இருக்கப்போகும் எங்கள் அறையின் அந்தத் தற்காலிக வெறுமை குறித்து எண்ணி வெடித்து அழுகிறேன் நான். என் அழுகை கண்டுஅவளும் தேம்பித் தேம்பி அழ.... கண்ணீரில் கரைகிறது இரவு.


காலை எழுந்தவுடன் நானா அழுதேன் என எனக்கே வெட்கமாயிருக்கிறது. "ஏய்! அது முதலைக் கண்ணீர்தானே?" என என்னைசீண்டுகிறாள். "நீ மட்டும் என்னவாம், அது நீலிக் கண்ணீர்", என்கிறேன் நான். அழுகையில் லேசாய்க் குறைந்த இதயக் கனத்துடன் இன்னொரு நாளும் போயிற்று. நாளை புறப்பட வேண்டும்.... இரவில் தூக்கமின்றிப் புரள்கிறோம் இருவரும். "என்ன, தூக்கம் வரலையா,என்ன ஆச்சு?", என ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டு, "ஒண்ணுமில்லை, நீ தூங்கு" என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு ஒருவாறு தூங்குகிறோம்.

அவள் புறப்படுவதை எண்ணி சோகம் கப்பியது போல் விடிகிறது வானம். எழுந்தது முதல் ஏனோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்ப்பதை  தவிர்க்கிறோம். பார்க்க நேர்ந்தால், அதே கேள்வி, "போகப்போறியா?", அதே பதில், "போகணுமா?".  விருப்பமே இன்றி ஒவ்வொரு வேலையும் நடக்கிறது. "சித்தி! பாப்பாவோடதான் இந்த வீட்டுக்கு வருவியா?", கேட்கிறாள் எல்லாம் தெரிந்த சஹானா.

திடீரென என் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் வண்ணம் சடசடவென மழை. தை மாத மத்தியில்  நான் பார்க்கும் முதல்மழை. "ஏய், பாரேன் உன் ஆறுமாதப் பிரிவை நினைத்து அந்த வானம் அழுது", என்கிறேன். "டேய், மழை ரொம்ப நல்ல சகுனம்டா,மதரோட கிரேஸ் அவளுக்கு அருள் மழையா பொழியுது", இது அம்மா.

அவள் அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள். இதய கனம் இன்னமும் கூடுகிறது. தட்டுகளும், பழங்களும், பூக்களும், வெற்றிலைபாக்குக்களும் இங்கும் அங்கும் கைமாறுகின்றன. "அத்தைக்கு நமஸ்காரம் பண்ணிக்கோ", இந்தாங்கோ காபி சாப்பிடுங்கோ, இதுதான்நீங்க வாங்கின புது கம்ப்யூட்டரா?" என ஏதேதோ பேச்சுக்கள் பின்னணியில் கேட்கின்றன.  திடீரென புறப்பட்டேவிட்டாள். நான் வீட்டிற்குவெளியே சென்று அவளை வழியனுப்பக் கூடாதாம். அதுதான் முறையாம். என்னக்கொடுமை சட்டம் சார் இது. படியிறங்குகையில்,அவள் திரும்பிப் பார்க்காவிடிலும் அவள் கண்களில் திரண்டுவரும் கண்ணீர் எனக்குத் தெரிகிறது. அவள் திரும்பிப் பார்க்கவா பார்க்கவா என தடுமாறியவாறே லேசான தள்ளாட்டத்துடன் இறங்குகிறாள்.ஆட்டோ புறப்படும் சத்தம் எனக்கு உச்ச டெசிபலில் கேட்கிறது.

"ஆட்டோ பஸ் ஸ்டாப்பை கடந்திருக்குமோ, இப்போ மூலக்கடையைக் கடந்திருப்பார்களோ, நிதானமா ஓட்டுவானா?" என ஆட்டோவின்பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது மனம். "அம்மா, இப்போ போன் பண்ணி பேசலாமா?" "இருடா அவங்க வீடு போய் போன்பண்ணட்டும்". இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓட, எனக்குத் தாங்கவில்லை, தொலைபேசியை எடுத்து அவளை அழைக்கிறேன். அவள் அப்பாஎடுக்கிறார்.




"சொல்லுங்க மாப்பிள்ளை",
"அப்புறம் மாமா, எங்க இருக்கீங்க",
"லக்ஷ்மியம்மன் கோவில் கிட்ட இருக்கோம்",
"ஓஹ்! சரி, ஷைலஜா எப்படி இருக்கா?",
"இதோ இருங்க", கைபேசி கை மாறுகிறது. அழுது வெடிக்கப்போகிறாள் நாம்தான் நிதானமாகப் பேசவேண்டும் என நான் எண்ணுகையில்,எதிர்த் திசையிலிருந்து உற்சாகமாய் வருகிறது குரல். "ஆங், சொல்லுங்க!"
"எப்படிம்மா இருக்க", அடடா என் குரல் ஏன் இப்படி விவேக் குரல் போல போகிறது?
"நான் நல்லாதான் இருக்கேன், இப்போதானே பொறப்பட்டேன் அங்கருந்து, அதேமாதிரிதான் இருக்கேன், அது சரி, பீரோவ பூட்டியாச்சா?",வந்து விழுந்தது முதற்கேள்வி.
"ஆம், பண்ணிட்டேன்",
"சாவிய எங்க வெச்சீங்க", இது கேள்வி நம்பர் ரெண்டு.
"வெச்சிட்டேன்",
"வெச்சிட்டேன்னா, எங்க வேச்சீங்கன்னு கேட்டேன்", மூன்று...
"உள்ளே வெச்சிட்டேன்"
"உள்ளே எங்க"..நான்கு... அதட்டல் தொடர்கிறது....

அடிப்பாவி, அப்பா அம்மா கூட ஒக்காந்ததும் அப்பிடியே மாறிட்டியேம்மா!

"குத்துங்க எஜமான் குத்துங்க, இந்த பொம்பளைங்களே இப்படித்தான், குத்துங்க எஜமான் குத்துங்க" என என் வலது கையால் நானே என்நெஞ்சைக் குத்திக்கொள்கிறேன்.

Jan 16, 2010

சீனாவும் கூகுளும்


உலகமே இந்த விஷயத்தப்பத்திக் கதைக்கும் போது, நான் மட்டும் எதுக்கு சும்மா இருக்கணும்? இதோ என் பங்குக்கு.....

சீனாவின் (அல்லது சைனாவின்) கூகிள் விஷய அலம்பல்கள் குறித்த விவாதங்கள், கேள்விகள், விசாரிப்புகள் உலகெங்கும் பலவண்ணமாய் இருக்கிறது. அமெரிக்கா கிடைத்த வாய்ப்பை சரியாய்ப் பயன்படுத்தும் விதமாய் எகிறுகிறது. கம்யூனிசத்தின் எதிர் வீட்டுக்காரர்கள் ஏதோ கூகிள் சீனாவை விட்டு வெளியேறினால் அடுத்த நொடி சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும், சீனாவின் முன்னேற்றம் எல்லா அளவிலும் தடைப்பட்டு அது ஒரு அடங்கின ஒடுங்கின நாடாகிவிடும் என்கிற அளவிற்கு கற்பனா விவாதங்கள் புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதில் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். கூகுளுக்கு முன்னாலும் சீனா இருந்தது, கூகிள் வந்த பின்னும் இருந்தது, கூகிள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினாலும் சரி, மண்ணோடு மண்ணாகி மட்கிப் போனாலும் சரி சீனா இருக்கும். மாமியார் ஒடச்சா மண்குடம், மருமக ஒடச்சா பொன்குடம் என்ற கதையாய், தனக்கு கொஞ்சமும் ஒத்து வராத நாட்டிலிருந்துதான் கூகிள் வெளிவரப் பார்க்கிறது. இதே போன்றதொரு விஷயம் இந்திய விஷயத்தில் நடந்திருந்தால் அதில் அவர்களின் நடவடிக்கையை நாம் பார்த்திருக்க வேண்டும்.

சரி சரி... நான் இதுக்கு மேலே எழுத விரும்பலை. சீனா போற வாய்ப்பு நமக்கு இல்லாம போனாலும், நாளபின்ன கூகிள்-ல வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். இத்தோட நிறுத்திக்கறேன்.

Jan 12, 2010

வரையறைகளை மாற்றும்போது...




யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் எனக்குப் பிடிப்பதில்லை...! இந்த மனுஷன் கம்போஸ் பண்றதோட நிறுத்தக் கூடாதா? பாடி வேற தொலைக்கணுமா எனத் தோன்றும்.

இந்த ரீமிக்ஸ் செய்யப்படும் பாடல்களின் ஜிம்மிக்ஸ்கள் எனக்கு ஆர்வமூட்டுவதில்லை, எரிச்சலே தருகின்றன.

புதுசு புதுசா பாடறாங்க, யாரு என்னன்னே தெரியலை எனக்கு. SPB-யின் குரலையும், K.J.யேசுதாசின் குரலையும் அவர்கள் உச்சரிக்கும் இரண்டாவது வார்த்தையிலேயே கண்டறிய முடிகிறது.

தமன்னா, நயன்தாரா , ஸ்ரேயா யாரேனும் ஒருவராவது பார்க்க லட்சணமாக இருக்கிறார்களா என்ன?

இவ்வாறாக, அலுவலகத்திற்கு செல்கையில் காரில் முன் அமர்ந்தவாறு பேசிச் செல்கிறேன் நான்.

பின்னாலிருந்து ஒரு இருபத்தைந்தின் குரல் கேட்கிறது, "சார், உங்களுக்கு வயசாயிடுச்சி சார்".

ஓ! நமக்கு முப்பது தாண்டிடுச்சா?

Jan 10, 2010

படிக்காமல் கிழித்தது....

இடம்: சென்னை புத்தக கண்காட்சி.
காட்சி: குப்பை, கூளம்


இதுக்கெல்லாம் யார் சார் பொறுப்பு?

அரசாங்கமா?
மாநகராட்சியா?
இந்த கண்காட்சி அமைப்பாளர்களா?
இல்ல இந்த குப்பையை போற வர்றவங்க கைல திணிக்கிற ஆட்களா?              
இல்ல அத படிச்சும் படிக்காமலும் எல்லா எடத்துலயும் சிதறடிச்சி, இடத்தை குப்பை கூளமாக்கற நானும் நீங்களுமா?

Sep 9, 2009

சாலை விபத்துகள் - follow up

இது "குடி குடியை கெடுக்கும்" என்று நான் சமீபத்தில் எழுதிய சாலை விபத்துகள் குறித்த blog-இன் follow up. இந்த சம்பவம் குடியின் பலனால் வந்ததல்ல. The so called இந்திய அசட்டையால் நிகழ்ந்தது.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தின் மேனேஜர் ஒருவர் தன் 15 மாத குழந்தையை சாலை விபத்தில் இழந்தார். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தையை feed செய்வதற்காக முன்னே எடுத்து, தான் அணிந்திருந்த seat-belt-ஐ அவர் release செய்த வேளையில் விபத்து நடந்திருக்கிறது. அவருக்கு எலும்பு முறிவு. குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஏக ரத்த இழப்பு நேர்ந்து , நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ரத்த இழப்பிலேயே குழந்தை இறந்து விட்டது.



Seat-belt உங்களை எல்லா நேரத்திலும் காப்பாற்றி விடும் என உறுதி சொல்ல முடியாது. ஆனால் இது போன்ற minor accident-களில் குறைந்தபட்சம் தலைக் காயங்களையாவது அது காப்பாற்றும். கார்களில் குழந்தைகளை free-யாக முன்னே உட்கார வைக்கும் இந்திய வாடிக்கையை இனியாவது நிறுத்துவோம். ஒரு உயிர் என்பது விலை மதிப்பில்லாதது. யாராலும் திருப்பித் தர இயலாதது....!!

எனவே நண்பர்களே..... Please wear seat-belts.....!! Please....Please......!

Aug 14, 2009

ஐயோ அம்மா காப்பாத்துங்க Swine Flu

"ஐயோ அம்மா காப்பாத்துங்க Swine Flu"

கிட்டத்தட்ட இந்தக் குரல்தான் ஒலிக்கிறது எந்த News Channel-ஐ திருப்பினாலும்.

சில உண்மைகள்:
- நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு இல்லை என்றால், நீங்கள் mask அணிந்தாலும் சரி அல்லது இரும்பு கூடாரம் அமைத்து உள்ளே அமர்ந்தாலும் சரி உங்களை swine-flu தாக்கியே தீரும்.
- Swine-flu தாக்கிய 10000 பேரில் ஒருவர் தான் இறக்கிறார். அவரையும் நம்மால் காப்பாற்ற முடியும், முறையான சிகிச்சை கொடுத்தல் மற்றும் இந்திய டிவி.க்கள் வசம் இருந்து அவரை நாம் திசை திருப்பி வைத்தால்.

இந்திய Media-க்களுக்கு "Creating Awareness" என்பதற்கும் "Creating Panic" என்பதற்குமான வித்தியாசம் தெரியாமல் போனது தான் இந்தியாவின் உச்சகட்ட பரிதாபம். Swine-Flu பற்றி யாரும் கவலைப் படத் தேவையில்லை என்பதல்ல என் கருத்து. "ஐயய்யோ பத்து பேர் செத்துட்டாங்க, இந்தியாவின் இருபதாவது மரணம்" என்ற "Breaking News"-கள் யாவும் குணமடையும் நிலையில் இருப்பவனையும் கூட சாகடிக்கும் விஷ மருந்துகள் தான்.

என் முந்தைய Blog-ல் எழுதியது போல் வருடத்திற்கு 90000 பேரை காவு வாங்கும் விபத்துகள் குறித்து என்ன awareness-ஐ உருவாக்கின இந்த மீடியாக்கள்? அவர்களுக்கு எப்போதும் ஏதேனும் சுடச்சுட செய்தியுடன் படபடப்பாக பரபரப்பாக உச்சஸ்தாயியில் பின்னணி இசையுடன் அலற வேண்டும். குறிப்பாக நீங்கள் CNN-IBN இரண்டு நாட்கள் தொடர்ந்து பாருங்கள், மூன்றாம் நாள் உங்கள் BP குறைந்தபட்சம் 10 பாயிண்ட் ஏறி இருக்கும்.

மீடியாக்களுக்கு சின்ன வேண்டுகோள்: உங்கள் swine-flu வியாபாரம் நீர்த்துப் போனபின், TB என்று ஒரு பழைய வியாதி இருக்கிறது. அதனால் வருடத்திற்கு 400000 பேர் இறக்கிறார்களாம். அவர்களுக்காக ஏதேனும் அலறுங்கள், please.

Aug 9, 2009

குடி குடியை கெடுக்கும்

தினமலரில் இன்றைய செய்தி: சாலை விபத்துகளில் இறந்தவர் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 90000. (இது உலக அளவிலான செய்தி என நம்புகிறேன்). சிறிய காயங்களுடன் தப்பிப்பவர்கள் பல லட்சம் பேர். நிரந்தர ஊனத்திற்கு தள்ளப்படுபவர்கள் சில லட்சம் பேர் என்கிறது அறிக்கை. நிஜத்திலும் நிஜக் கொடுமையான செய்தி.

இந்த சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக போக்குவரத்து இயக்குனர் தெரிவித்து இருப்பது Drink & Drive. அதிலும் குறிப்பாக 35 வயதுக்கு உட்பட்டவர்களின் drink drive. சிறு வயதில் கன்னா பின்னா என சம்பாதிப்பது அதிகரித்ததே இதன் காரணம் என நினைக்கிறேன்.

My friends; நல்லா சம்பாதிங்க, நல்ல்ல்ல்ல்லா குடிங்க, ஆனா மத்தவங்க குடிய கெடுக்காதீங்க, please. Never drive while you are on drink's control.

விபத்துகளுக்கான இன்னொரு காரணம் அதிவேகமாக வண்டி ஓட்டுவது. இவர்களை என்ன சொல்லி திருத்த. ஒன்றே ஒன்றுதான் நான் செய்வது. அது லேனா தமிழ்வாணன் அருளிய ஒரு அறிவுரை. எப்போதும் உங்களைச் சுற்றி 20 முட்டாள்கள் வண்டி ஓட்டுவதாய் நினைத்து உங்கள் வண்டியை ஓட்டுங்கள். இந்த வகையில் ஓட்டும் போது தன்னாலே நீங்கள் முடிந்தவரை உங்களைக் காத்துக் கொள்கிறீர்கள்.

Jul 26, 2009

Rakhi Ka स्वयंवर





தொலைக்காட்சிகள் தனியார் வசமான இந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ முட்டாள் தனமான நிகழ்ச்சிகளை கண்டிருக்கிறோம். ஆனால் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல நடப்பதுதான் NDTV Imagine-ல் வரும் இந்த "Rakhi Ka स्वयंवर" நிகழ்ச்சி. கவுண்டமணி பாஷையில் சொல்லவேண்டும் என்றால், "யம்மா யப்பா! என்னா டகால்டி வேல காட்டரீங்கடா சாமி?"
விஷயம் என்னவென்றால் இந்த celebrity நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து "அந்த சுற்று" "இந்த சுற்று" என எல்லோரையும் சுற்றியடித்துவிட்டு கடைசி சுற்றில் வெற்றி பெரும் வெற்றியாளனைத் திருமணம் செய்யப் போகிறாராம். இப்போது கடைசியாக மூன்று அல்லது நான்கு போட்டியாளர்கள் கடைசி ரவுண்டில் ரவுண்டு கட்ட காத்திருக்கிறார்கள்.
விசேஷம் என்னவென்றால் போட்டியாளர்களில் பலர் முன்னமே மணமானவர்கள், சிலர் குழந்தைகள் பெற்றவர்கள், சிலர் ராக்கியின் முன்னாள் காதலர்கள். Idiot Box என்று தெரியாமலா சொன்னார்கள் T.V. யை?


Nov 9, 2008

தெலு(ங்)கு

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் வீட்டில் சுந்தரத் தெலுகு மாட்லாடும் ஒரு கோடி பேரில் நானும் ஒருவன். சென்னைத் தெலுகு சேலம் தெலுகுவை கிண்டலடிப்பதும், சேலம் தெலுகு திருநெல்வேலித் தெலுகுவைக் கிண்டலடிப்பதும், திருத்தணி சென்னையைக் கிண்டலடிப்பதும்தான் இதில் காமெடி.

அவரவர் வட்டாரத்தமிழை தெலுகுவாக transliterate செய்வது அடுத்த காமெடி. உதாரணம்: கோவையில் செஞ்சுபோட்டு, தின்னுபோட்டு என்பார்கள், தமிழில். சிலர் இதைத் சேசிவேசி, தினிவேசி என்று தெலுகுப் "படுத்துகிறார்கள்".

சும்மா என்ற சொல், சுகமா என்பதில் இருந்து வந்ததாய் சொல்வர். நெல்லை வட்டாரத்தில் "சௌக்கியமா" என்பதை "சுகமா இருக்கீயளா?" என்பார்கள். இதை தெலுகுப் படுத்தி, "ஊரிக (சும்மா) உன்னாரா (இருக்கீங்களா) ? என்கிறார்கள்....!!?

ஏமி கொடும பாசு இதி...!!!!

By the way... மொழி விற்பன்னர்கள் தெலுகுவை இந்தியாவின் இரண்டாவது இனிய மொழியாக பெங்காலிக்கு அடுத்து சொல்கிறார்கள். தமிழ் எங்கே சார்....?

Nov 1, 2008

வட சென்னையும் அதன் சாபக்கேடும்..

1990ல் சென்னை வந்தேன். 18 வருடங்கள். அதே சாலைகள், அதே பாலங்கள், அதே போக்குவரத்து நெரிசல், மழை வந்தால் அதே குண்டும் குழியுமான கடந்தே செல்ல முடியாத வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பாலங்கள். சாலைகளில் காத்திருந்து காத்திருந்து வயது ஏறியதுதான் மிச்சம்.

கட்டப்பட இருந்த ஒரே பெரம்பூர் பாலத்தையும் கட்ட விடாமல் 'அம்மா' அவர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார். பத்து வருடங்களாக ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது பால வேலை. வாழ்க ஜனநாயகம்.

வைரமுத்து "கள்ளிக்காட்டு இதிகாசத்தில்" எழுதியது போல், கடந்து செல்லும்போது கடவுள் கூட கண்ணை மூடிக்கொள்வார் என நினைக்கிறேன்.

தென் சென்னைக்காரன் கட்டும் அதே வரியைத்தான் நானும் கட்டுகிறேன். ஏலே அரசியல்வாதிகள், ஏன் இந்த ஓர வஞ்சனை?
Related Posts Plugin for WordPress, Blogger...