நான் எப்போதும் பெண்கள் பக்கம் பரிந்து பேசுபவன். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., சூப்பர்ஸ்டார் ரஜினி, இளையதளபதி விஜய் இந்த மூவருக்கும் அடுத்ததாக தமிழகத்தில் பெண்களுக்காக குரல் கொடுக்க ஒருவர்(ன்) உண்டென்றால் அது நான்தான் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. சரி அவசரமாக நண்பனைப் பார்க்க வேண்டியிருந்ததால், திரும்பி வந்ததும் காரசாரமாக பாஸ்கர் அவர்களுக்கு கச்சேரி வைத்துக் கொள்ளலாம் எனப் புறப்பட்டேன்.
வா மச்சான் என பரிவுடன் வீட்டினுள் அழைத்துச் சென்றான் நண்பன். "எப்படி இருக்கீங்க?" எனக் கேட்டவாறு நண்பனின் அண்ணி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். சமீபத்தில்தான் நண்பனின் அண்ணனுக்கு கல்யாணமாகி இருந்தது. "நல்லா இருக்கேன் அண்ணி", என்றவாறு அந்தக் காப்பியை குடித்து முடித்தேன். "காபி நல்லாருக்கு", என்று நான் சொல்ல, "அது டீ", என பதில் வந்து என்னை அசடு வழிய வைத்தது. ஹிஹி என சமாளித்தேன்.
"அம்மா எங்கேடா?", என நான் கேட்க, ஜன்னலைத் திறந்து வீதி முனையைக் காட்டினான். அங்கே அவன் அம்மா ஒரு பெட்டிக்கடையில் அமர்ந்தவாறு மிட்டாய், பிஸ்கட்டுகள் விற்றுக் கொண்டிருந்தார். "டேய், என்னடா நடக்குது?, இப்போ என்ன தேவைன்னு அங்க கடை போட்டுக் கொடுத்திருக்கீங்க?", எனக் கேட்டேன். அவர்கள் வீட்டில் அவன் அம்மா உழைத்துத்தான் உலை பொங்கும் அவசியம் இல்லை. சுமாராய் வசதி உள்ள குடும்பம்தான்.
"மச்சான் உனக்கே தெரியும், அண்ணனுக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ மச்சான், ரெண்டு சிங்கத்த ஒரு கூண்டுல வெக்கலாம், ஆனா ரெண்டு பொம்பளைங்கள ஒரு வீட்டுல வெக்கக் கூடாதுடா!" என ஏதோ தத்துவம் உதிர்த்தான். எனக்கு ஏதோ புரிந்தது, ஏதோ புரியவில்லை. "சரிடா, நான் வர்றேன்", எனப் புறப்பட்டு வந்தேன்.
ஒருவேளை பாஸ்கர் ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டி எழுதினது சரிதானோ? நீங்கள் யாராவது சொல்லுங்களேன்.