Aug 5, 2010

ரத்த சரித்திரம் - நிஜமான....


முன் குறிப்பு 1: Universal donar / Universal recipient இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் 'சரியான' அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.



முன்குறிப்பு 2: சூர்யா நடிக்கும் RGV'யின் ரக்தசரித்ரா'விற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மன்னிக்கவும்.

லுவலகத்தில் ரத்த தானம் பற்றிய பேச்சு வந்த போது வழக்கம்போல நண்பர்கள் ஓ' பாசிடிவ் வகை ரத்தத்தை தவறுதலாக யுனிவேர்சல் டோனர் (உலகளாவிய கொடையாளி) எனக் குறிப்பிட்டனர். பி' பாசிடிவ் ரத்த வகையினர் யுனிவெர்சல் ரெசிபியன்ட் (உலகளாவிய பெறுனர்) எனவும் சிலர் தவறுதலாகச் சொன்னார்கள்.  


சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள். 
Universal Donors என்பவர்கள் ஓ' நெகடிவ் (O-) ரத்த வகையினர்.
Universal Recipients AB பாசிடிவ் (AB+) வகை ரத்தப் பிரிவினர்.

நவயுகக் கர்ணர்கள்:

கர்ணன் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவனது ரத்த க்ரூப் ஓ நெகட்டிவாக இருந்திருக்கும். கர்ணனுக்கு ஓ போடுவதில் தமிழர்களாகிய நமக்குத்  தயக்கம் ஒன்றும் இருக்காது, ஆனால் இருப்பது அத்தனையும் கொடுத்த கர்ணனுக்கு நெகட்டிவ் என்ற பதம் தருவது நியாயம்தானா  என்றால் வேறு வழியில்லை- அவன் நெகட்டிவ் காரக்டர்தான். கர்ணன் ஓ நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில்தான் கேட்டவருக்கெல்லாம் அவனால் ரத்தம் கொடுக்க முடியும். அப்படி இல்லாவிட்டால்  துரியோதனன் மருத்துவமனையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும்போது கர்ணனாகவே இருந்தாலும் கையைப் பிசைந்துகொண்டு நிற்க வேண்டியதுதான். செஞ்சோற்றுக் கடனை அந்த வகையில் அவனால் கழிக்க முடியாது.



எனவே, ஓ நெகட்டிவ் ஆட்கள் நவயுக கர்ணன்கள்: அதனால்தான் அவர்கள் யூனிவர்சல் டோனார்ஸ்- அகில உலகக்  கொடையாளர்கள் - என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் (ஜே.கே.ரித்தீஷ் மற்றும்  ஆன்மீக அண்ணா / "சின்ன எம்,ஜி.ஆர்." சுதாகரன் ரசிகர் மன்றத்தினர்  மன்னிக்கவும்). 

ஓ நெகடிவ் வகையினர் ரத்த தானம் செய்கிறவர்களானால் இவர்களுக்கு கோயிலே கட்டிக் கும்பிடலாம். இவர்கள் காப்பாற்றும் உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அமெரிக்காவில் நூற்றுக்கு ஏழு பேர் இப்படியென்றால் இந்தியாவில் நூற்றுக்கு இரண்டு பேர்தான் இப்படிப்பட்ட கொடை வள்ளல்களாக  இருக்கிறார்கள். 



நவயுகக் குசேலர்கள்:

அகில உலகக்  கொடையாளர்கள் என்று இருந்தால் அகில உலக குசேலர்களும் இருக்க வேண்டுமே!- AB பாசிட்டிவ் ஆட்களுக்கு எல்லாருடைய ரத்தமும் பொருந்தும். நீ இத்த குடுத்தாத்தான் வாங்குவேனப்பா அத்தக் குடுத்தாத்தான் வாங்குவேனப்பா என்னும் ரகங்களில்லை இவர்கள். அட நீ எத்தக் குடுத்தாலும் ஏத்துக்குவானப்பா இவன் என்பவர்கள். ஒரு வகையில் அதிஷ்டசாலி ரத்த வகையினர் இவர்கள் எனலாம். 


புரியும்படி சொல்லவேண்டுமென்றால், O- ரத்த வகை தண்ணீரைப் போல. பெரும்பாலும் எந்த திரவத்துடனும் உறவாடிக்கொள்ளும். இங்கேதான் சேருவேன் அங்கேதான் சேருவேன் என்று  சொல்லாது.

AB+ வகையினரை "அவியலுடன்" ஒப்பிடலாம். எதுவும் என்னில் சேரும் என்னும் ரகத்தினர் இவர்கள்.

"அது எப்படி இவர்கள் இருவரும்?" எனக் கேட்டீர்கள் என்றால் இவர்களின் அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.


நீங்கள் அறிவியல் பசி கொண்டவர் என்றால் இங்கே ஆன்ட்டிபாடி மற்றும் ஆண்டிஜென் பற்றிப் படியுங்கள்....இல்லையென்றால் நேரிடையாக "எப்படித் தீர்மானிக்கிறார்கள்" பகுதிக்குத் தாவுங்கள்.

ஒரு கொலைகார யுத்தம்:



A, B, O என்று ரத்தத்தை அணி பிரிக்கிறோம், இல்லையா, இதை எப்படி செய்கிறோம்? சில சிறு குறிப்புகள். 


முதலில் ஆன்ட்டிபாடி என்றால் என்ன? இதைப் படித்ததும் நீங்கள் நமட்டு சிரிப்பு சிரித்தால் யூட்யூபில் மல்லு மல்லு என்று தேடித் தேடித் தவறான பாடம் படிக்கிறீர்கள் என்று பொருள்.

பூட்டில் சாவியைப் பொருத்துகிற மாதிரி ஆண்ட்டிபாடி ஆண்ட்டி ஜென்னைப் பொருத்திக் கொள்கிறது. மறுபடியும் சிரித்தால் உங்க அம்மாகிட்ட சொல்லி அடி வாங்கிக் கொடுப்பேன். 

ஆண்ட்டிபாடி என்றால் என்ன? அது ஒரு வகை புரதம் (ப்ரோடீன்- செக்). இதை வைத்து நம் எதிர்ப்பு சக்தி அந்நிய சக்திகளை அடையாளம் கண்டு அழிக்கிறது. எப்படி செய்கிறது என்பதுதான் வினோதம். 

காட்ரேஜ் பூட்டு இருக்கிறது. உங்க வீட்டு பூட்டும் என் வீட்டுப் பூட்டும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் என் சாவி உங்க பூட்டைத் திறக்குமா? திறக்காது இல்லையா? ஒவ்வொரு பூட்டும் ஒவ்வொரு மாதிரி.

அப்படி தான் ஆண்ட்டிபாடி விஷயத்திலும்.



இந்த குழாயின் முனையில் மஞ்சளாக என்னமோ தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது இல்லையா? அதுதான் ஆண்ட்டிஜென. இங்கேதான் ஆண்டவனின்/ இயற்கையின் அறிவு வேலை செய்கிறது.

 இது மாதிரி கோடிக்கணக்கான ஆண்ட்டிபாடிக்கள் இருக்கும். அதில்  ஒவ்வொன்றின் முனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆண்ட்டிஜென் என்றால் பூட்டு என்று சொன்னேன் இல்லையா?

நாமெல்லாம் சாவியைப் பூட்டில் பொருத்துகிறோம் என்றால், நம் ரத்தத்தில் பூட்டு தேடிக் கொண்டு போய் சாவியில் பொருந்துகிறது. ஆண்ட்டிபாடி தான் பூட்டு. ஆண்ட்டிஜென் தான் சாவி. மறந்திருக்க மாட்டீர்கள்தானே?

ரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றன இல்லையா? அவை படைத்த மோகினிகள் தான் இந்த ஆண்ட்டிபாடிக்கள். இவை ரத்தம் எங்கும் விரவி நிற்கும். இவற்றைப் பெற்ற வெள்ளை ரத்த அணுக்கள் ஒன்றும் பண்ணாது. 

ஆனால் வெளியிலிருந்து கிருமிகள் வருகின்றன அல்லவா? அவற்றுக்கும் ரத்த சரித்திரம் நம்மைப் போலத்தான். ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு எதிராக போர் செய்து படுகொலை செய்கிற மாதிரி ஒரு ரத்தம் இன்னொரு ரத்தத்தில் கலக்கும்போது கலவரம் ஏற்படுகிறது. 

ஆமாம் ஒரு கிருமி உங்கள் உடலில் நுழைந்தால் அதன் ஆண்ட்டிஜென்கள் நம் உடலில் நுழைகின்றன. நம் உடலைத் திறந்து உயிரைக் குடிக்க கிருமிகள் பயன்படுத்தும் சாவிகள் அவை.

ஆனால் நம் ஆரோக்கியத்துக்குதான் ஆண்ட்டிபாடி வடிவில் பூட்டு இருக்கிறதே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடலில்: தனக்குத் தக்க- தான் பொருந்துகிற மாதிரியான ஆண்ட்ஜென கிடைத்ததும்- கபாலேன்று கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னோடு பிணைத்துக் கொண்டு விடுகிறது.

அப்புறம் என்ன? எதிரியை அடையாளம் கண்டு பிடிச்சாச்சு. யார் மேலடா கை வெச்சே? என்று வெள்ளை அணுக்கள் போருக்குப் புறப்பட்டு கும்மோ கும்மென்று கும்மி கிருமிகளின் சாவிகளை (ஆண்டிஜென்) பரலோகத்துக்கு அனுப்பி வைக்கும். ரொம்ப சிம்பிள் ஜென்டில்மென்!

என்னமோ கதை விடுறீங்க- ஆண்ட்டிபாடி கட்டிப் பிடித்து காட்டிக் கொடுத்த ஆண்ட்டிஜென்- பூட்டு சாவி, லாக் அவுட்டுன்னு ஏதேதோ சொல்றீங்களே, இதுக்கும் ரத்த க்ரூப்புக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்கறீங்களா? 

இருக்குன்னேன்- 

ரத்தத்துல நாலு வகையான அடையாளம் கண்டு வெச்சிருக்காங்க: A, B, AB, O: இதுக்கு அடிப்படையே இந்த ஆண்ட்டிபாடி ஆண்ட்டிஜென் விளையாட்டுதாங்க. 



எப்படித் தீர்மானிக்கிறார்கள் ?

ரத்தத்தில் சிவப்பு அணுக்களைச் சுற்றி மூன்று வகையான புரதங்கள் (proteins) உள்ளன. அவை முறையே A, B மற்றும் Rh ஆகியன. A மற்றும் B ஆகியன ரத்த வகையையும் Rh குறியீடு ரத்தம் "பாசிடிவா அல்லது நெகடிவா" என்பதையும் தீர்மானிக்கின்றன.

A அல்லது B இரண்டு வகைப் புரதங்களும் அமையாத ரத்த வகை ஓ வகை ரத்தம் ஆகிறது.

இப்போது இந்த உதாரணத்தைப் பாருங்கள்:

A வுடன் சேர்ந்து Rh இருந்தால் அது A+
A மட்டும் தனியே இருந்தால் அது A-
B'யுடன் Rh இருந்தால் அது  B+
B தனியே இருந்தால் B-
A, B மற்றும் Rh ஒருசேர இருப்பது AB+
Rh துணை இல்லாமல் A மற்றும் B மட்டும் கூட்டணி அமைத்திருந்தால் அது AB-
A'வும் இல்லை B'யும் இல்லை ஆனால் Rh மட்டும் இருக்கு சார்" என்றால் அது O+
சிவப்பு அணுக்களை சுத்தி இவங்கள்ல யாருமே இல்லப்பா என்றால் அவர்தான் நம்ம அகில உலகக் கொடையாளி O-
தலை சுத்துதா? கொஞ்சம் நிதானமாப் படிச்சிப் பாருங்க புரியும்.


முடிக்குமுன்....


யார் யாரிடம் பெறலாம், யார் யாருக்குத் தரலாம் என்பதை எளிமையாக விளக்கும் ஒரு எளிய டேபிள். (நன்றி: விக்கி வழியே மோகன் )






கடைசியாக.....

எப்படி Universal donor  / Universal Recipient?

ஓ நெகடிவ் (O-) ரத்தத்தில் எந்த புரதங்களும் (புரோட்டீனும்) இல்லாததால் அது எல்லோருடனும் சேர முடிகிறது.

ஏபி பாசிடிவ் (AB+) ரத்தத்தில் எல்லாப் புரதங்களும் கலந்திருப்பதால் எந்தத் தங்கு தடையும் இன்றி அது யாரை வேண்டுமானாலும் கூட்டு சேர்த்துக் கொள்ள முடிகிறது. 

.
நன்றி: 


நட்பாஸ் அவர்களுக்கு - மொழி பெயர்ப்பு மற்றும் பூட்டு சாவித் தகவல்களுக்கு...
விக்கி மற்றும் இன்ன பிறர்: தகவல் உதவிக்கு.
.
.
.


24 comments:

Breeze said...

Very useful information Giri.

I think there is also one more blood group AB negative?

Anyways Great work. You took me to +2 biology room. If you had studied this a bit early(may be 12 years back), you would have become a doctor. Hope this is not taunt.

S S said...

Giri,

Thanks for the very useful information.

Would expect from you a blog about Blood donation awareness informations like how many liters of blood a human body is having and how much they can donate at single time and what is the intervel of donating the blood, In how many days/months it get produced again., etc., etc.,

It helps those (like me) who are fearing to donate blood...

varasiththan said...

nice.

antigen ,antibody க்கான கலைச்சொற்கள் ஏற்கனவே தமிழில் இருக்கின்றன. பிறபொருள்-antigen,பிறபொருளெதிரி-antibody.
ஒரு உடலுக்கு இன்னொருவருவரின் இரத்தம் பிறபொருள்.
வாழ்த்துக்கள்.
இரத்தத்தில் o+,மனத்தில் B+

natbas said...

பூட்டு சாவி சரிதான், ஆனா ஆண்ட்டிபாடி ஆண்ட்டிஜென் விஷயத்தை இன்னும் விவரமா விளக்கி இருக்கலாம்.

திடீர்னு கதைக்குள்ள வந்துட்டாங்க. கொஞ்ச நேரத்துக்கு யாரு இவங்க, இவங்களுக்கு இங்க என்ன வேலைன்னு ஒண்ணும் புரியல.

ஆனா ஒண்ணு, படிக்கற வகையில சுவாரசியமா எழுதி இருக்கீங்க.

நன்றி.

Unknown said...

ரத்தம் பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்... நன்றி..

Rams said...

நல்ல தகவல்...நன்றி...Dr கிரிக்கு ஒரு ஓ போடுவோம்..

Giri Ramasubramanian said...

@ Breeze

Thanks very much for your comments and also for your complements (though they are too much....)

Giri Ramasubramanian said...

@ S S

Thanks for your comments. Will definitely write something per your request.

Giri Ramasubramanian said...

@ டாக்டர்

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி!! டாக்டர் ஒருவர் இப்படிப்பட்ட என் முந்திரிக்கொட்டைப் பதிவிற்கு "nice" எனச் சொன்னதை பெரும் பேராய்க் கொள்கிறேன்.

தங்கள் மேலான தகவல்களுக்கு நன்றி. ஆங்கிலப் பதமே இங்கு கடினமாய் இருக்கையில், நான் எங்கே தமிழ்ப் பதங்களை உபயோகிக்க. இருப்பினும் அவற்றின் இருப்பை நான் அறிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி.

நானும் ரத்தத்தில் உங்களைப் போலத்தான். மனத்தில் இன்னும் + வளர வேண்டும்.

மேலும், ஜெமோ தளத்தில் தங்கள் சுஜாதா பதில் வாசித்தேன். "நச்!!!"

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

நன்றி. எழுத எழுதத்தான் அந்தக்கலை வரும். சரி செய்து கொள்கிறேன்.

Giri Ramasubramanian said...

@ கே.ஆர்.பி. அவர்களுக்கு

மிக்க நன்றி.

Giri Ramasubramanian said...

@ ராம்

ஓஹோ! நன்றிகள் பலப்பல...

natbas said...

@வரசித்தன்

இந்தப் பின்னூட்டத்தை நீங்கள் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இது ஜெமோ தளத்தின் நீங்கள் அளித்த பின்னூட்டத்தின் விளைவு. மிக நீளமான பின்னூட்டமாக இருக்கப் போகிறது என்பது எனக்குத் துவங்கும்போதே தெரிகிறது (ஸாரி கிரி) நீங்கள் தயவு செய்து படித்துப் பார்த்துவிட்டு பதில் தர வேண்டும்- ஏனென்றால் எனக்கே இப்போது தங்களது cognitive உளவியல் சிகிச்சை மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. :)
-
நாம் பள்ளியில் படிக்கிற காலத்தில் நம் கல்வி எங்கே போய் நிற்கப்போகிறது என்பது தெரிவதில்லை: மனம் போன போக்கில் ஆர்வமூட்டும் விஷயங்களை எல்லாம் படித்துக் கொண்டு போகிறோம். ஒரு வழியாக ஏதோ ஒரு முட்டுச் சந்தில் போய் செட்டில் ஆகிறோம்- அதனால் நாம் விரும்பி அறிந்த சங்கதிகளில் நாட்டம் குறைந்து போய் விடுவதில்லை, சில நேரம். அப்படிதான் நான் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பகிரும் முகமாக சென்ற வருடம் வரை நண்பர்களிடம் விவாதிப்பேன்- வலை கிடைத்தவுடன் அதையே இடுகைகளாகச் செய்கிறேன். அவ்வளவுதான். இதுவன்றி நான் என்னைக் குறித்து எந்த விதமான பாவனைகளும் ஏற்படுத்திக் கொள்வது கிடையாது.
---
டாக்டர், உங்கள் பாவனையும் எங்கள் பாவனையும் வேறு வேறு: நீங்கள் ராமகிருஷ்ணர் தன்னைக் கிருஷ்ணராக பாவித்துக் கொள்வது போல் பாவிக்கிறீர்கள்- நாங்கள் நித்தியானந்தர் தன்னைக் கிருஷ்ணராக பாவித்துக் கொள்வது போல் பாவிக்கிறோம்: எங்கள் பாவனைக்குப் பொருள் தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பது. நீங்கள் எங்களை பாவிப்பது வேறு- நாங்கள் உங்களை பாவிப்பது வேறு. எங்கள் தற்கால வழக்கில் பாவனை என்றாலே உண்மைக்குப் புறம்பானத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது, கையாள்வது என்று பொருள்.

அந்த வகையில் எனக்கு என்னைக் குறித்து எந்த விதமான அதீதமான பாவனைகளும் ,கிடையாது :)
---
இதற்குதான் நீங்கள் எனக்கு சிகிச்சை தர வேண்டும்: ஒருவரை மிக உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் அவரது தவறுகளும் கூட நமக்குத் தவறாகத் தெரிவதில்லை. ஆனால் அவரே நமக்கு வேண்டிய இன்னொருவரைக் குறித்துத் தவறாகப் பேசும்போது மட்டும் திடீரென்று காதில் புகை வருகிறது: இந்தக் காமாலை நோயை எப்படி குணப்படுத்திக் கொள்வது?

என் பிரச்சினை: நான் விரும்பி வாசித்த ஜெயமோகன் அவர்கள் தன் தளத்தில் சுஜாதா அவர்களின் அறிவியல் மற்றும் பிற படைப்புகளை மட்டும் நிராகரிக்கவில்லை, அவரது வாழ்வையே நிராகரித்து விட்டது போல் தெரிகிறது- இதை சற்றே விளக்குகிறேன்.

ரமணர், தனது உபதேச உந்தியாரில்,

மனவுரு மாய மெய் மன்னிய யோகி தனக்கோர் செயலிலை- உந்தீ பற,
தன்னுரு சார்ந்தனன் உந்தீ பற!

என்று பாடுகிறார்.

'நான்' என்பது எப்போதும் மன உருதானே- மனம் கொண்டு "நான் இத்திறத்தவன்" என்று ஏற்படுத்திக் கொண்ட உரு - நீங்கள் சொல்கிறமாதிரி சொன்னால், பாவனை- இந்த மனத் தோற்றம் மாய்ந்த பின் ஒருவன் தன்னை அறிய மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டுவதற்கில்லை- அவன் தனது மெய் உருவைச் சார்ந்தவன் ஆகிறான். இதையே வீடுபேறு என்கிறார் ரமணர். இது மரணத்தின் பின் மட்டும் நிகழ்கின்ற ஒன்றல்ல, வாழும்போதே நம் மன உருவங்கள் மாய்ந்ததெனில் நாம் வீடுபேறு உற்றவர்கள் ஆகிறோம்.

வீடு என்பதை அகம் என்றும் சொல்வார்கள். அகம் என்பது நாம் இருக்கும் இடம், நமது இயல்பான நிலை. வீடுபேறு என்பது புற நாட்டங்கள் வழி நம்மை அறிதலில் உள்ள விருப்பை விடுத்து, நமக்கு இயல்பான நிலையில் நிற்றல்.

உளவியல் அடிப்படையில்கூட வீடுபேற்றை ஏற்காதவர்களும் மனவுரு மாய்தல் என்பது தன்னிலை சார்தலை ஒக்கும் என்பதை ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இதுவெல்லாம் திரு ஜெயமோகன் அவர்களுக்குத் தெரியாததில்லை: இருந்தாலும், சுஜாதா அவர்களின் எழுத்தில் இருந்த evasiveness (இது வாழ்வின் ஆதாரங்களை எதிர் கொள்ள இயலாமல் தப்பிச் செல்லும் பாவனைதானே, ஒரு வகையில் பார்த்தால்), அவர் தனது முதுமைக் காலத்தில் புனைந்து கொண்ட பாவனைகள் (இளைஞர் போல் ஆடை அணிவது, டை அடிப்பது, அவர்கள் படிக்கிற விஷயங்களைப் படிப்பது)- இவற்றை முன் வைத்து சுஜாதா அவர்களுக்கு வைகுண்டப் ப்ராப்தி கிடைத்திருக்குமா என்பது ஐயமே என்கிறார்: ஆனால் இவ்வளவையும் சொல்லி விட்டு நாம் எழுத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர வீடுபேற்றை அல்ல என்றும் சொல்கிறார். ஒரு ஆளை அடித்துப் போட்டு மண்ணில் புதைத்தபின், "நமக்கெதுக்குப்பா ஊர் வம்பு? நம்ம வேலையை நாம் பாப்போம்!", என்று சொல்லிக் கொண்டு கையில் இருக்கிற மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு கிளம்புகிற மாதிரி. அதன் பின்தான் வருகிறது சுஜாதாவின் அறிவியல் குறித்த எழுத்துகளை முற்றிலுமாக புறம் தள்ளி விடலாம் என்ற நிராகரிப்பும் தங்கள் பின்னூட்டமும்.

natbas said...

2/2

சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்களையோ மற்ற பிற ஆக்கங்கள் அனைத்தையுமே நிராகரித்தல் குறித்து வருத்தம் எதுவும் இல்லை- வேண்டாம் என்பவர்களிடம் வேண்டும் என்ற விருப்பை ஏற்படுத்துவது கடினமான செயல். ஆனால் மறைந்த ஒருவரது இயல்பை, அவரது வாழ்வை ஒட்டு மொத்தமாக நிராகரித்தல் எந்த வகையில் நியாயம்? அதுவும் அதற்கான தேவைகள் எதுவும் இல்லாதபோதே?

இதுதான் என் கேள்வி. இதை இரு வகைகளில் அணுகலாம்: இல்லை, மூன்று நான்கு வகைகளில் கூட அணுகலாம்.

அவற்றைவிட முக்கியமாய் இன்னொன்று. நானும்கூட வாழ்வின் ஆதாரங்களை எதிர்கொள்ளும் திராணி அற்றவனாக, புறவயப்பட்ட வாழ்வை வாழ்கிறேன்- இந்த நிராகரித்தல் எனக்கு என் வாழ்வை மட்டுமல்ல, என் மீட்சிக்கான சாத்தியங்களையும் நிராகரிப்பதாகவே இருக்கிறது. இந்த உண்மைதான் என்னை உணர்ச்சி வசப்படச் செய்கிறது. ஆனாலும்கூட, என்னளவில் திரு ஜெயமோகன் சொல்வது உண்மைதான் என்பதை முழு மனதுடன் ஒப்புக் கொள்வேன்: இருந்த போதிலும் இதையே மறைந்த ஒருவரைக் குறித்து அவர் சொல்லும்போது என் மனம் ஏற்க மறுக்கிறது- அந்த கடைசி கணங்களில் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம், இல்லையா? நாம் எப்படி அது குறித்து முடிவு செய்ய முடியும், என்றுதான் தோன்றுகிறது. அதுவும் அவர் அது குறித்து எந்த தன்னிலை விளக்கமும் தருவதற்கில்லாத நிலையில்.

வேறு யாராவது இப்படி சொல்லி இருந்தால் வருத்தப் பட்டிருக்க மாட்டேன்: திரு ஜெயமோகன் ஆன்மீக விஷயங்களும் அறிந்தவர், அறிவு புலத்திலும் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர், அவர் சுஜாதாவைப் படித்த மாதிரி நான் படித்திருக்க மாட்டேன்- இலக்கியத்தைத் தன் மூச்சாகவே வைத்திருப்பவர்- அதனை ஒரு ஆன்ம சாதனையாகவே தொடர்பவர்: இப்படிப்பட்டவர் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருப்பது எனக்கு ஒரு வாரமாகவே உளைச்சலாக இருக்கிறது: என் நிலை மன அளவில் இடிபாடுகளுக்கு இடையில் இருக்கிற ஒருவனது நிலை போல் இருக்கிறது என்று சொல்லலாம்.

அதன் விளைவாக திரு ஜெயமோகனின் புனைவுகளை மட்டும் ரசிப்பது, அதை விடுத்து அவரது அபுனைவுகளை, அறிவார்ந்த வாதங்களை, முற்றிலும் நிராகரிப்பது என்ற முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்: இதற்காகத் தர்க்க ரீதியிலும் சில அடிப்படைகளை பாவித்துக் கொள்ளத் துவங்கி விட்டேன்.

எனக்கே என் மனப்போக்கு விசித்திரமாக, ராத்திரி வேலையில் சத்தம் கேட்டது என்று கதவைத் திறந்தால் அங்கு ஒரு பேயின் நிழலாட்டத்தை எதிர்கொண்டால் எப்படி இருக்கும்- அந்த மாதிரி இருக்கிறது. நான் இத்திறத்தவன் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.

ஒரு உளவியலராக- என் வாதங்களை விடுங்கள், என் விளக்கங்களை விடுங்கள்- அவற்றை என் மன ஓட்டத்தை நீங்கள் அறிவதற்காக இங்கே பதிவு செய்கிறேன்- இதற்கு நீங்கள் எனக்கு சிகிச்சை தர வேண்டும்: ஒருவரை மிக உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் அவரது தவறுகளும் கூட நமக்குத் தவறாகத் தெரிவதில்லை. ஆனால் அவரே நமக்கு வேண்டிய இன்னொருவரைக் குறித்துத் 'தவறாக'ப் பேசும்போது காதில் புகை வருகிறது: அந்த உணர்ச்சி வேகத்தில் நாம் எதிர்வினை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்: இந்தக் காமாலை நோயை எப்படி குணப்படுத்திக் கொள்வது?

மிக்க நன்றி. தாங்கள் அளிக்கும் பதில் நீண்டதாக இருக்கும் பட்சத்தில் பதிவாகவே இடுங்கள்: படித்துப் பயன் பெற்றால் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

Giri Ramasubramanian said...

@ நட்பாஸ்

இது கிட்டத்தட்ட நீங்கள் சொல்வது போல் ஒரு நோய்.

அபிமான எழுத்தாளர் ஒருவர் மீது வைக்கும் அபிமானம் பெரும்பாலானவர்களுக்கு கிட்டத்தட்ட தம் மனைவி அல்லது கணவன் மீது வைக்கும் அபிமானம் போல ஆகிவிடுகிறது. பலவேளைகளில் அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ரசிக்கிறோம், ஆனால் தம் குடும்பம் பற்றியோ அல்லது தம் அகங்காரத்தைத் தொடும் விதாமாகவோ ஏதேனும் அவர்கள் சொல்லிவிட்டால்..... "நீ....நீ எப்படி அப்படிப் பேசலாம்" என்ற கோபம்தான் இருவரிடையேயான முட்டல் மோதல்களுக்கு வழிவகுக்கிறது.

"மத்தவன் பேசறான் அதைகூட நான் ஒத்துப்பேன், நீ எப்படி பேசலாம் அப்படி", என்ற அர்த்தமற்ற கேள்விதான் இது. அவர் அவ்வாறு நாம் விரும்புவதை எழுதாத காரணம் "அவர் நாம் இல்லை", உங்கள் கருத்தை அவர் எழுத வேண்டுமென்றால் அதற்கு அவர் "அவராக" இருக்கும் அவசியமற்றுப் போகிறது.. அவர்மீது நமக்கு திடீரெனக் கோபம் வரக் காரணம், நாம் அவர் மீது வைக்கும் அதீத நம்பிக்கை அல்லது அவர் மீதான தவறான புரிதல் நிலை. இவை இரண்டையும் உங்கள் கண்ட்ரோலில் வைத்தால் அவர் என்ன எழுதினாலும் உங்களுக்கு அவர் மீது மாற்றுக் கருத்து வர நியாயம் இல்லை.

இது அவர் எண்ணம் அவர் எழுதுகிறார், நான் இந்நிலையில் இருந்து மாறுபடுகிறேன், அவ்வளவுதான் என போய்க் கொண்டே இருப்பீர்கள்.

ஏதோ தத்துபித்தென்று எழுதிவிட்டேன். வரசித்தன் அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

சௌந்தர் said...

ரத்தம் பற்றி இவ்வளவு விசயம்....இருக்கா

Giri Ramasubramanian said...

வாங்க சௌந்தர்!

ஆமாங்க! இது மட்டுமில்லே. இன்னும் நெறைய இருக்காமே!

virutcham said...

ரத்தச் சரித்திரம் அருமை. இது மாதிரி எல்லாம் கூட எழுதுவீங்களா? வாழ்த்துக்கள்.



இதைப் பற்றி தொடர்ந்து எழுவதா உத்தேசம் இருந்தா, platelet பற்றியும், ரத்த தானம் செய்யத் தேவையான விழிப்புணர்வு பற்றியும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆமாம் ரத்தத்துக்கு நடுவிலே இது என்ன சத்தம்? அந்த உளவியல் புரியலையே. அதை தூக்கி தனிப் பதிவா போட்டு விவாதிச்சா நாங்களும் புரிந்து கொண்டு பங்குபெறுவோம்

A doctor said...

நட்பாஸ்,

அதென்ன ராமகிருஷ்ணர்-கிருஷ்ணர் பாவனை.
உங்கள் மன உளைச்சல் புரிகிறது. cognitive therapy உண்மையில் என் மனக்குறைகளைப்போக்குவதற்காக படித்தேன் அதை பகிர்ந்துகொள்ளலாம் என்று பகிர்ந்தேன்.அதை நம்பி நீங்கள் இப்படிப்பேசவருகிறீர்கள்.cognitive என்பது உரையாடல்தான்.
ரத்தத்துக்கு நடுவே என்ன சத்தம் என்கிறார் விருட்சம்.
ஆட்கள் வராத ஒதுக்குப்புறமாகபோய் உரையாடுவோம்.என்பக்கத்தில்.
என் தோலுரியும் நேரம் அதாவது என் பாவனை வெளிக்கப்போகிறது வாங்கோ

Giri said...

@ வரசித்தன்

சரிதான். விருட்சம் கேட்டுக் கொண்டபடி இதைத் தனிப்பதிவாகவே இட்டுவிடுங்கள். உங்கள் வரசித்தன் பக்கங்கள் பதிவில் ஆனாலும் சரி. அல்லது "பேசுகிறேன்" பக்கங்களில் என்றால், மேலே "தொடர்புக்கு" சுட்டியில் நுழைந்து உங்கள் பதிலைப் பகிரவும். தனிப் பதிவை இட சித்தமாய் இருக்கிறேன். விருட்சமும் பங்கு கொள்கிறேன் என்கிறார். நாம் ஏன் கெடுப்பானேன்.

Giri said...

@ விருட்சம்
நன்றி. முயல்கிறேன் எழுத.

A doctor said...

நன்றி கிரி.
நட்பாஸ் பதிவில் பின்னூட்டமாக இட்டுவிட்டேன்.தனிப்பதிவாக போடக்கூடியளவுக்கு பதில் ஆழம் அகலம் ஒன்றும் இல்லை.உரையாடல்தான்.சரியும் பிழையும் இருக்கும்.

Anonymous said...

Naan AB+ anaa neraya blood kuduthuthaan irukken.
apram A1, B1 nulaam neraya solraanga... ippallam same blood thaan use pandraanga. vera vazhiye illanaathaan mela ulla table

Giri Ramasubramanian said...

@ Anony

Thanks for your visit and comments. I need to check on them. When I write my next post on blood / blood donation, I will make sure I will cover this

Related Posts Plugin for WordPress, Blogger...