சிதறிக் கிடந்த என் துணிகளெல்லாம் பீரோவினுள் சென்று ஒளிகின்றன. இத்தனை நாளாய் அழுக்குத் துணிக் கூடைக்குள் செல்ல மறுத்துக் கொண்டிருந்த அத்தனை ஜீன்ஸ்களும் டி.சர்ட்டுகளும் ஒவ்வொன்றாய் ஓடிக் குதித்து அறையைவிட்டு வெளிநடப்பு செய்கின்றன.
இத்தனை நாட்களாக அண்ணன் மகள் சஹானாவின் விளையாட்டு அறை என் அறை. இறைந்து கிடந்த அவள் விளையாட்டுப் பொருட்களுக்கும், பந்து, பலப்பங்கள், புத்தகங்களுக்கும் இடையே புதைந்து கிடந்த என் அறை, அத்தனையையும் மூட்டை கட்டி அண்ணனின் அறைக்கு மாற்றிய பின் சற்றே விசாலமாய்த் தெரிகிறது.
அறையின் சுவரோர சிலந்திப் பின்னல்களையும் ஜன்னலோரத் தூசுகளையும் காணாமல் செய்தாயிற்று. படித்தும் படிக்காமலும் பக்கத்திற்கு ஒன்றாய்க் கிடந்த புத்தகங்களையும் அலமாரிக்குள் அடுக்கியாயிற்று.
பின்னணியில் வாணலியில் கரண்டி கிண்டும் 'டிங் டிங் டிங் டிங்" ஓசை கேட்கிறது. அம்மா கேசரி கிளறிக் கொண்டிருக்கிறார்.
காலைமுதல் ஒன்று மாற்றி ஒன்றாய் இந்தப் பாடல்கள் கணினியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.... மண்ணில் வந்த நிலவே, சின்ன சின்னக் கண்ணனுக்கு, சின்னத் தாயவள்...
ஆறு மாத அம்மா வீட்டு வாசத்திற்குப் பின் இன்று அகிலுடன் அகம் வருகிறாள் அன்பு மனைவி.
அகில் வருகையை எண்ணிக் குதூகலமாக இருக்கிறது.
"அப்போ அன்பு மனைவியின் வருகையை எண்ணி?" யாரோ கிராஸ் டாக்கில் கேட்கிறார்கள்.
ஹ ஹ ஹா.... அட சந்தோஷந்தாங்க!!
வாழ்வின் புதிய அத்தியாயங்களுக்குத் தயாராகிறேன்.
பழைய அத்தியாயம் ஒன்று தொடர்பான இடுகை இங்கே: ஒரு தற்காலிகப் பிரிவு..
.
.
.
image courtesy: http://qwickstep.com/search/a-cartoon-mom.html
5 comments:
congratulations :)
happy parenting :)
நன்றி விதூஷ்!
உங்கள் "பதிவுலகில் நான்...." நீங்கள் எழுதிய போதே படித்தேன். குறிப்பாக அந்தக் கடைசிக் கேள்விக்கான பதில் அருமையாக இருந்தது.
நல்ல பதிவு நன்றி கிரி.
நன்றி நட்பாஸ் Ji,
நல்ல பதிவான்னு தெரியலை. ஆனா, தற்காலிகப் பிரிவைப் பதிவு செஞ்சவன், வருகையையும் பதிவு செய்யறதுதான் நியாயம்னு தோணிச்சி. பண்ணினேன்.
நனைந்து விடும் உடைகளுக்கும்
தூக்கமில்லா இரவுகளுக்கும்
தள்ளிப் போடப்படும் வேலைகளுக்கும்
முத்தாய்ப்பாக அந்த பிஞ்சின்
அன்பு முத்தங்களுக்கும்
பொக்கை சிரிப்பிற்கும்
உரிமையோடான பஞ்சு மிதியல்களுக்கும்
வாழ்த்துக்கள்
குழந்தையைப் பார்த்துக்காம அப்படி
பதிவு எழுதலேன்னா என்ன ?
மனைவியின் அதட்டலுக்கும் தான்
Post a Comment