Showing posts with label Universal Recipient. Show all posts
Showing posts with label Universal Recipient. Show all posts

Aug 5, 2010

ரத்த சரித்திரம் - நிஜமான....


முன் குறிப்பு 1: Universal donar / Universal recipient இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் 'சரியான' அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.



முன்குறிப்பு 2: சூர்யா நடிக்கும் RGV'யின் ரக்தசரித்ரா'விற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மன்னிக்கவும்.

லுவலகத்தில் ரத்த தானம் பற்றிய பேச்சு வந்த போது வழக்கம்போல நண்பர்கள் ஓ' பாசிடிவ் வகை ரத்தத்தை தவறுதலாக யுனிவேர்சல் டோனர் (உலகளாவிய கொடையாளி) எனக் குறிப்பிட்டனர். பி' பாசிடிவ் ரத்த வகையினர் யுனிவெர்சல் ரெசிபியன்ட் (உலகளாவிய பெறுனர்) எனவும் சிலர் தவறுதலாகச் சொன்னார்கள்.  


சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள். 
Universal Donors என்பவர்கள் ஓ' நெகடிவ் (O-) ரத்த வகையினர்.
Universal Recipients AB பாசிடிவ் (AB+) வகை ரத்தப் பிரிவினர்.

நவயுகக் கர்ணர்கள்:

கர்ணன் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவனது ரத்த க்ரூப் ஓ நெகட்டிவாக இருந்திருக்கும். கர்ணனுக்கு ஓ போடுவதில் தமிழர்களாகிய நமக்குத்  தயக்கம் ஒன்றும் இருக்காது, ஆனால் இருப்பது அத்தனையும் கொடுத்த கர்ணனுக்கு நெகட்டிவ் என்ற பதம் தருவது நியாயம்தானா  என்றால் வேறு வழியில்லை- அவன் நெகட்டிவ் காரக்டர்தான். கர்ணன் ஓ நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில்தான் கேட்டவருக்கெல்லாம் அவனால் ரத்தம் கொடுக்க முடியும். அப்படி இல்லாவிட்டால்  துரியோதனன் மருத்துவமனையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும்போது கர்ணனாகவே இருந்தாலும் கையைப் பிசைந்துகொண்டு நிற்க வேண்டியதுதான். செஞ்சோற்றுக் கடனை அந்த வகையில் அவனால் கழிக்க முடியாது.



எனவே, ஓ நெகட்டிவ் ஆட்கள் நவயுக கர்ணன்கள்: அதனால்தான் அவர்கள் யூனிவர்சல் டோனார்ஸ்- அகில உலகக்  கொடையாளர்கள் - என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் (ஜே.கே.ரித்தீஷ் மற்றும்  ஆன்மீக அண்ணா / "சின்ன எம்,ஜி.ஆர்." சுதாகரன் ரசிகர் மன்றத்தினர்  மன்னிக்கவும்). 

ஓ நெகடிவ் வகையினர் ரத்த தானம் செய்கிறவர்களானால் இவர்களுக்கு கோயிலே கட்டிக் கும்பிடலாம். இவர்கள் காப்பாற்றும் உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அமெரிக்காவில் நூற்றுக்கு ஏழு பேர் இப்படியென்றால் இந்தியாவில் நூற்றுக்கு இரண்டு பேர்தான் இப்படிப்பட்ட கொடை வள்ளல்களாக  இருக்கிறார்கள். 



நவயுகக் குசேலர்கள்:

அகில உலகக்  கொடையாளர்கள் என்று இருந்தால் அகில உலக குசேலர்களும் இருக்க வேண்டுமே!- AB பாசிட்டிவ் ஆட்களுக்கு எல்லாருடைய ரத்தமும் பொருந்தும். நீ இத்த குடுத்தாத்தான் வாங்குவேனப்பா அத்தக் குடுத்தாத்தான் வாங்குவேனப்பா என்னும் ரகங்களில்லை இவர்கள். அட நீ எத்தக் குடுத்தாலும் ஏத்துக்குவானப்பா இவன் என்பவர்கள். ஒரு வகையில் அதிஷ்டசாலி ரத்த வகையினர் இவர்கள் எனலாம். 


புரியும்படி சொல்லவேண்டுமென்றால், O- ரத்த வகை தண்ணீரைப் போல. பெரும்பாலும் எந்த திரவத்துடனும் உறவாடிக்கொள்ளும். இங்கேதான் சேருவேன் அங்கேதான் சேருவேன் என்று  சொல்லாது.

AB+ வகையினரை "அவியலுடன்" ஒப்பிடலாம். எதுவும் என்னில் சேரும் என்னும் ரகத்தினர் இவர்கள்.

"அது எப்படி இவர்கள் இருவரும்?" எனக் கேட்டீர்கள் என்றால் இவர்களின் அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.


நீங்கள் அறிவியல் பசி கொண்டவர் என்றால் இங்கே ஆன்ட்டிபாடி மற்றும் ஆண்டிஜென் பற்றிப் படியுங்கள்....இல்லையென்றால் நேரிடையாக "எப்படித் தீர்மானிக்கிறார்கள்" பகுதிக்குத் தாவுங்கள்.

ஒரு கொலைகார யுத்தம்:



A, B, O என்று ரத்தத்தை அணி பிரிக்கிறோம், இல்லையா, இதை எப்படி செய்கிறோம்? சில சிறு குறிப்புகள். 


முதலில் ஆன்ட்டிபாடி என்றால் என்ன? இதைப் படித்ததும் நீங்கள் நமட்டு சிரிப்பு சிரித்தால் யூட்யூபில் மல்லு மல்லு என்று தேடித் தேடித் தவறான பாடம் படிக்கிறீர்கள் என்று பொருள்.

பூட்டில் சாவியைப் பொருத்துகிற மாதிரி ஆண்ட்டிபாடி ஆண்ட்டி ஜென்னைப் பொருத்திக் கொள்கிறது. மறுபடியும் சிரித்தால் உங்க அம்மாகிட்ட சொல்லி அடி வாங்கிக் கொடுப்பேன். 

ஆண்ட்டிபாடி என்றால் என்ன? அது ஒரு வகை புரதம் (ப்ரோடீன்- செக்). இதை வைத்து நம் எதிர்ப்பு சக்தி அந்நிய சக்திகளை அடையாளம் கண்டு அழிக்கிறது. எப்படி செய்கிறது என்பதுதான் வினோதம். 

காட்ரேஜ் பூட்டு இருக்கிறது. உங்க வீட்டு பூட்டும் என் வீட்டுப் பூட்டும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் என் சாவி உங்க பூட்டைத் திறக்குமா? திறக்காது இல்லையா? ஒவ்வொரு பூட்டும் ஒவ்வொரு மாதிரி.

அப்படி தான் ஆண்ட்டிபாடி விஷயத்திலும்.



இந்த குழாயின் முனையில் மஞ்சளாக என்னமோ தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறது இல்லையா? அதுதான் ஆண்ட்டிஜென. இங்கேதான் ஆண்டவனின்/ இயற்கையின் அறிவு வேலை செய்கிறது.

 இது மாதிரி கோடிக்கணக்கான ஆண்ட்டிபாடிக்கள் இருக்கும். அதில்  ஒவ்வொன்றின் முனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆண்ட்டிஜென் என்றால் பூட்டு என்று சொன்னேன் இல்லையா?

நாமெல்லாம் சாவியைப் பூட்டில் பொருத்துகிறோம் என்றால், நம் ரத்தத்தில் பூட்டு தேடிக் கொண்டு போய் சாவியில் பொருந்துகிறது. ஆண்ட்டிபாடி தான் பூட்டு. ஆண்ட்டிஜென் தான் சாவி. மறந்திருக்க மாட்டீர்கள்தானே?

ரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றன இல்லையா? அவை படைத்த மோகினிகள் தான் இந்த ஆண்ட்டிபாடிக்கள். இவை ரத்தம் எங்கும் விரவி நிற்கும். இவற்றைப் பெற்ற வெள்ளை ரத்த அணுக்கள் ஒன்றும் பண்ணாது. 

ஆனால் வெளியிலிருந்து கிருமிகள் வருகின்றன அல்லவா? அவற்றுக்கும் ரத்த சரித்திரம் நம்மைப் போலத்தான். ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு எதிராக போர் செய்து படுகொலை செய்கிற மாதிரி ஒரு ரத்தம் இன்னொரு ரத்தத்தில் கலக்கும்போது கலவரம் ஏற்படுகிறது. 

ஆமாம் ஒரு கிருமி உங்கள் உடலில் நுழைந்தால் அதன் ஆண்ட்டிஜென்கள் நம் உடலில் நுழைகின்றன. நம் உடலைத் திறந்து உயிரைக் குடிக்க கிருமிகள் பயன்படுத்தும் சாவிகள் அவை.

ஆனால் நம் ஆரோக்கியத்துக்குதான் ஆண்ட்டிபாடி வடிவில் பூட்டு இருக்கிறதே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாடலில்: தனக்குத் தக்க- தான் பொருந்துகிற மாதிரியான ஆண்ட்ஜென கிடைத்ததும்- கபாலேன்று கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னோடு பிணைத்துக் கொண்டு விடுகிறது.

அப்புறம் என்ன? எதிரியை அடையாளம் கண்டு பிடிச்சாச்சு. யார் மேலடா கை வெச்சே? என்று வெள்ளை அணுக்கள் போருக்குப் புறப்பட்டு கும்மோ கும்மென்று கும்மி கிருமிகளின் சாவிகளை (ஆண்டிஜென்) பரலோகத்துக்கு அனுப்பி வைக்கும். ரொம்ப சிம்பிள் ஜென்டில்மென்!

என்னமோ கதை விடுறீங்க- ஆண்ட்டிபாடி கட்டிப் பிடித்து காட்டிக் கொடுத்த ஆண்ட்டிஜென்- பூட்டு சாவி, லாக் அவுட்டுன்னு ஏதேதோ சொல்றீங்களே, இதுக்கும் ரத்த க்ரூப்புக்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்கறீங்களா? 

இருக்குன்னேன்- 

ரத்தத்துல நாலு வகையான அடையாளம் கண்டு வெச்சிருக்காங்க: A, B, AB, O: இதுக்கு அடிப்படையே இந்த ஆண்ட்டிபாடி ஆண்ட்டிஜென் விளையாட்டுதாங்க. 



எப்படித் தீர்மானிக்கிறார்கள் ?

ரத்தத்தில் சிவப்பு அணுக்களைச் சுற்றி மூன்று வகையான புரதங்கள் (proteins) உள்ளன. அவை முறையே A, B மற்றும் Rh ஆகியன. A மற்றும் B ஆகியன ரத்த வகையையும் Rh குறியீடு ரத்தம் "பாசிடிவா அல்லது நெகடிவா" என்பதையும் தீர்மானிக்கின்றன.

A அல்லது B இரண்டு வகைப் புரதங்களும் அமையாத ரத்த வகை ஓ வகை ரத்தம் ஆகிறது.

இப்போது இந்த உதாரணத்தைப் பாருங்கள்:

A வுடன் சேர்ந்து Rh இருந்தால் அது A+
A மட்டும் தனியே இருந்தால் அது A-
B'யுடன் Rh இருந்தால் அது  B+
B தனியே இருந்தால் B-
A, B மற்றும் Rh ஒருசேர இருப்பது AB+
Rh துணை இல்லாமல் A மற்றும் B மட்டும் கூட்டணி அமைத்திருந்தால் அது AB-
A'வும் இல்லை B'யும் இல்லை ஆனால் Rh மட்டும் இருக்கு சார்" என்றால் அது O+
சிவப்பு அணுக்களை சுத்தி இவங்கள்ல யாருமே இல்லப்பா என்றால் அவர்தான் நம்ம அகில உலகக் கொடையாளி O-
தலை சுத்துதா? கொஞ்சம் நிதானமாப் படிச்சிப் பாருங்க புரியும்.


முடிக்குமுன்....


யார் யாரிடம் பெறலாம், யார் யாருக்குத் தரலாம் என்பதை எளிமையாக விளக்கும் ஒரு எளிய டேபிள். (நன்றி: விக்கி வழியே மோகன் )






கடைசியாக.....

எப்படி Universal donor  / Universal Recipient?

ஓ நெகடிவ் (O-) ரத்தத்தில் எந்த புரதங்களும் (புரோட்டீனும்) இல்லாததால் அது எல்லோருடனும் சேர முடிகிறது.

ஏபி பாசிடிவ் (AB+) ரத்தத்தில் எல்லாப் புரதங்களும் கலந்திருப்பதால் எந்தத் தங்கு தடையும் இன்றி அது யாரை வேண்டுமானாலும் கூட்டு சேர்த்துக் கொள்ள முடிகிறது. 

.
நன்றி: 


நட்பாஸ் அவர்களுக்கு - மொழி பெயர்ப்பு மற்றும் பூட்டு சாவித் தகவல்களுக்கு...
விக்கி மற்றும் இன்ன பிறர்: தகவல் உதவிக்கு.
.
.
.


Related Posts Plugin for WordPress, Blogger...