கார்பரேட் மொழி
தெரிஞ்ச விஷயத்தை சமாளிக்கறவன் வேலைக்காரன். தெரியாததையும் சமாளிக்கறானே, அவன்தான் மேனேஜர்.
__________________________________________________________________________
காதல் தோட்டா
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய காதலுக்கு பி.பீ.ஓ'க்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? இளசுகளின் ராஜாங்கமான இங்கே வகை வகையான காதல்கள் உண்டு.
அவனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். அவன் முழுப்பெயர் ரவிராம் தோட்டா. ஆந்திராவில் ராஜமுந்திரி அவன் ஊர். வீட்டில் பாபு எனப்பெயர். "தோட்டா" குடும்பப் பெயர். "ரவி", "தோட்டா", "பாபு", "லூசு" என எங்கள் வட்டத்தில் இவன் விதவிதமாக விளிக்கப்படுவான்.
தோட்டா பேசும் தமிழ் கேட்கக் காமெடியாக இருக்கும். "அது ஜி..." எனத்தான் எதையும் பேச ஆரம்பிப்பான்.
இவனை உங்களால் கோபப்படுத்தவே முடியாது. அதேபோல இவனுக்கு சீரியசான விஷயம் என்று எதுவுமே இல்லை. எந்த சீரியசான விவாதத்திலும் இவனை யாரும் சேர்க்க மாட்டார்கள். விவாதத்தைக் காமெடியாக்கி எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவான்.
முன்பு வேலை பார்த்த இடத்திலேயே ஒரு கல்யாணமான பெண்ணுடனான ஒரு காதல்கதை (!) ரசாபாசத்தில் முடிந்ததாக தோட்டாவின் பழைய தோழர்கள் சொல்லுவார்கள். அதைப்பற்றிப் பேசினால் கூட பெருமைதான் தோட்டாவுக்கு. "அது ஜி, அந்த பொண்ணோட அப்பா கால்ல வுழுந்துச்சி ஜி, சரி நமக்கு எதுக்கு மத்தவங்க பாவம்னு நிறுத்திட்டேன் ஜி", என்பான். சில நேரங்களில் இவன் ஆபத்தான ஆள் கூட எனப் புரிந்து கொள்ளலாம்.
பக்கத்து புராஜெக்ட் ஒன்றில் வேலை பார்த்த "இப்படி அப்படி" என இருந்த ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் நம்மாளுக்கு இங்கேயும் காதல் கண்டமேனிக்குப் பற்றிக் கொண்டது. அப்பெண்ணின் டீம் லீடர் வாசு நம்ம தோட்டாவின் நல்ல தோஸ்த். ஒரு நல்ல தருணத்தில் ஒரு இன்ட்ரோ தருகிறேன் காத்திரு என தோஸ்த் சொல்ல, காத்திருக்க ஆரம்பித்தான் நம்மவன். ஏனோ தோஸ்த் இருவரிடையே இறுதிவரை இன்ட்ரோ தருவதாயில்லை. அவர் என்ன திட்டத்தில் இருந்தாரோ?
இடையில் அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை எப்படியோ சேகரித்து அவளுக்கு இரண்டொரு மிஸ்டு கால்கள்,
"ஹலோ" - கட்
"ஹலோ, ஹலோ....யாரு வேணும் உங்களுக்கு" - கட்.
"ஹலோ, நான் வோடபோன்ல இருந்து பேசறேன். நீங்க இன்னும் உங்க பில் கட்டலை மேடம்"
"ஹலோ, என்னுது ப்ரீபெய்ட் கனெக்ஷன் சார்"
"சரி, நாங்க செக் பண்ணிட்டு திரும்ப கூப்பிடறோம் மேடம்", இப்படிச் சில முறைகள்.
"நான் சத்யம்'ல வெயிட் பண்றேன் டியர், நீ எங்க இருக்க?",
"யாரு நீ"
"ஓ சாரி, ஆள் தெரியாம மெசேஜ் தப்பா உங்களுக்கு அனுப்பிட்டேன், மன்னிக்கணும்", இப்படி பைத்தியக்காரத்தனங்கள் செய்தவாறே திரிந்து கொண்டிருந்தான்.
அவள் காலை சிற்றுண்டி செல்லும் நேரம் மட்டுமே இவனுக்குப் பசிக்கும். நான்கு மேஜைகள் தள்ளி உட்காருவான். இட்லி, பொங்கல் உள்ளே போகிறதோ இல்லையோ, அவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருப்பான். அவள் சாப்பிட்டு எழுந்தால் "போலாமா ஜி", என எழுந்திருப்பான்.
அவளும் ஒரு மார்க்கமாகத்தான் இவனை நோக்கிப் பார்த்துச் செல்வாள். அது காதல் வகைப் பார்வை இல்லையென்றாலும் அதில் ஒளிந்த அர்த்தம் எங்கள் யாருக்கும், அவன் உட்பட , கடைசி வரை புரியவில்லை.
ஒரு சுபயோகசுப வெள்ளிக்கிழமையன்று அந்தப் பெண்ணை அலுவலகத்தில் காண முடியவில்லை. "அது என்னவோ லீவு போட்டிருக்கு ஜி" என்றவன் தன் காத்திருப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டேன் எனவும் என்னிடம் சொன்னான்.
"நல்ல விஷயம் தோட்டா, இனி உன் வேலைய உருப்படியா பாரு"
"இல்ல ஜி என் காதலை சொல்லிடலாம்னு இருக்கேன், வர்ற திங்கக்கிழமை சொல்லிடலாம்னு நெனைக்கறேன் ஜி. நீங்க என்ன நெனைக்கறீங்க ஜி?"
"நான் ஒண்ணும் நெனைக்கல", என்று அங்கிருந்து நகர்ந்தேன்.
திங்கட்கிழமை காலை சிற்றுண்டி நேரம். நான், தோட்டா, தோஸ்த் மூவரும். தட்டுகளில் சுடச்சுட பொங்கல் வடை.
"என்ன தோஸ்த், நம்ம ஆளுக்கு ஏதும் உதவி பண்ண மாட்டேங்கறீங்க. அந்தப் பொண்ணு மேல ரொம்ப ஆர்வமா இருக்கான்."
"யோவ், அது என் தங்கச்சின்னா கூட பரவாயில்லய்யா. வீட்ல செருப்படியோட போகும். என் டீம் மெம்பர்யா. கொஞ்சம் எசகுபெசகு ஆனா எனக்கு வேலையே போயிடும்".
"நம்ம ஆளு இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருக்கான் தெரியுமா?"
"தெரியும் தெரியும், ஆனா அந்தப் பொண்ணு இன்னைக்கும் இன்னும் வரலையேப்பா. லேட்டா இல்லை லீவான்னு தெரியலை".
மேஜை மீது இருந்த போன் சிணுங்கியது. தோட்டா எட்டி யாரெனப் பார்த்தவுடன் முகம் ஆயிரம் வோல்ட் பிரகாசம் ஆனது.
"ஜி ஜி, அந்தப் பொண்ணுதான் ஜி", என்று மிக பவ்யமாக ஏதோ அந்தப் பெண்ணையே கையாள்வது போல இதமாக மொபைலை எடுத்து தோஸ்திடம் தந்தான். அவன் முகம் பரபரப்பாக தோஸ்த் பேசுவதைக் கேட்கத் தயாரானது.
அத்தனைக் காலையில் கான்டீனில் கூட்டம் குறைவாகவும், தோஸ்தின் மொபைலில் ஒலியளவு அதிகமாகவும் இருந்ததால் அந்தப் பக்கம் பேசுவதும் எங்களுக்குக் கேட்டது.
"சொல்லும்மா, என்ன இன்னைக்கும் லீவா?"
"ஆமாம் வாசு, நான் இப்போ காஞ்சிபுரத்துல இருக்கேன்", குரலில் ஒரு யோசனை, இழுவை தெரிந்தது.
"என்னம்மா ஆச்சு?"
"வந்து வாசு.....ம்ம்ம்ம்..... எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சி. வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம், அதான் நாங்க இப்படி....."
பக்கத்தில் படாரென ஏதோ வெடிக்கும் சத்தம். திரும்பிப் பார்த்தால் தோட்டாவின் சட்டை பொசுங்கியிருந்தது .
.
.
.