எனக்கு ரொம்பவெல்லாம் தைரியம் கிடையாது. கொஞ்சம் இங்கே அங்கே இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரசியலாளர்களையும், சில எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது எதையாவது எழுதித் தொலைக்கிறேன். இருந்தும், என் தெரு முக்கில் ஏதேனும் ஆட்டோ சத்தம் கேட்கையில் என் வீட்டினும் தடதடவென ஏதோ வினோதச் சத்தம் கேட்பதாக பக்கத்து வீட்டு ராகவ சிவகுமார் அடிக்கடி புகார் சொல்கிறார்.
சரி, அதற்கு இப்போது என்ன என்கிறீர்களா?
அந்த சினிமா இயக்குனர் கம் தமிழர் தலைவர் வழியில் நான் இங்கு ஒன்று எழுத இருக்கிறேன். ஆனால், அவர்களைக் குறித்தே அடிப்பேன் உதைப்பேன் என அவர் பேசி இருப்பதால், எனக்கான பாதுகாப்பு பற்றிய என் பயம் காரணமாக நான் பூடகமாக எழுதுவதை நீங்களாகப் புரிந்து கொள்ளுங்கள். புரிய வில்லை என்றால் என் மின்னஞ்சல் முகவரிக்கு <ஒரே.தமிழன்.நான்மட்டுமே@அடிப்பேன்உதைப்பேன்.காம்> ஒரு அஞ்சலைத் தட்டி விடுங்கள். பதில் உங்கள் வீடு தேடி வரும்.
"எங்க ஆளுங்களை உங்க ஆளுங்க அது பண்ணினா, உங்க ஆளுங்களை எங்க ஆளுங்க இது பண்ணுவாங்க", என தலைவர் சொல்லி இருக்கிறார். இதே வழியைத்தான் நானும் பின்பற்றப் பார்க்கிறேன். ஆனால், இந்த முறையில் செயல்பட்டால் அது தேசிய பாதுகாப்பு சட்டப்படி குற்றமா எனத் தெரியவில்லை.
என் ஐடியா இதுதான்....
சென்னை மாதவரம் மூலக்கடைப் பகுதியில் இருந்து நூறடிச்சாலை பாலம் வரை கடந்த இருபது வருடங்களாக சாலை விளக்குகள் ஏதும் இல்லை, அல்லது இருந்தும் பயனில்லை. இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்ததா என எனக்குத் தெரியாது, நான் அப்போது சென்னைவாசி அல்லன்.
ஆந்திராவை, ஏன் வட இந்தியா முழுவதையும் சென்னையுடன் இணைக்கும் சாலை வழி இதுவே. ஆனால் இப்படி இந்தச்சாலை இப்படி இருட்டடிப்பு செய்யப்படுவதை எந்த உள்ளூர் அரசியல்வாதியும் கண்டு கொள்வதாக இல்லை.
அதேபோல மாதவரம் தபால்பெட்டி முதல் மாதவரம் பால்பண்ணை வரை உள்ள சாலையும் காலம் காலமாக இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கிறது. கேட்டால் ஆளாளுக்கு மற்றவரைக் கை காட்டுகிறார்கள்.
இந்த இரண்டு சாலைகளிலும் சாலை விளக்குகள் நிறுவாமல் பாராமுகம் காட்டும் அரசாங்கத்தைக் கண்டித்து, நூதன முறையில், எம் மக்கள் ஒரு நூறுபேரை அழைத்துக் கொண்டு (ஏய், ஏய்....ஓடாதீங்கப்பா, நான் உங்களுக்காகத்தான் குரல் தர்றேன்) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அனைத்து சாலை விளக்குகள் மீதும் கல்லெறி போராட்டம் நடத்தலாம் என இருக்கிறேன். எனக்கு விளக்கு எரியலைன்னா, உனக்கும் விளக்கு இல்லாம பண்ணுவேன்.
இதற்கான அறிவிப்பை பொதுவில் அறிவிக்குமுன், இது தேசிய பாதுகாப்பை மீறும் செயலா என யாரேனும் தெரிவிக்க இயலுமா?
.
.
.
.படங்கள் உதவி: ஒரு படம் - என் கேமரா. மற்றவை யாரோ இணையப் புண்ணியவான்கள்.