மேனாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவிலிருந்து வேலை செய்தலில் நமக்குள்ள முதல் பிரச்னை நம்மிடையே உள்ள கலாச்சார பேதங்கள்தான்.
நான் இங்கே கலாச்சாரம் எனச் சொல்வது உடை அணியும் முறை அல்லது வாழ்க்கை முறையை அல்ல. எப்படியும் அந்த விஷயங்களில் நாம் அவர்களுக்கு இணையான பயணங்களை நெடுங்காலம் முன்பே தொடங்கிவிட்டோம். நான் சொல்ல வருவது வேலை செய்யும் முறை, வேலை தரும் மற்றும் பெரும் முறைகளைப் பற்றி.
மேலை நாட்டவர்கள் பெரும்பாலும் நேரிடையாக எதையும் அணுகுபவர்கள். அவர்களுக்கு எதை எடுத்தாலும் "உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை", அவ்வளவுதான். ஆனால், நாம் வளர்ந்த சூழல் அப்படி இல்லை. சிறு வயது முதலே நமக்கு முடியாதென்றாலும் "பண்ணிடலாம் சார்" எனத்தான் சொல்லச் சொல்லி பழக்கப் படுத்தப்பட்டுள்ளோம். "அதை ஏன் மூஞ்சில அடிச்சா மாதிரி முடியாதுன்னு சொல்றே, ஒரு முயற்சி பண்ணி பாத்துட்டு முடியாதுன்னு சொல்லு", என்பார் என் பழைய முதலாளி ஒருவர். அவரைப் பொறுத்தவரையில் முடியாததை முடியாது என்று சொல்தல் முகத்தில் அடிப்பது போல.
நம்மூரில் வண்டியை மெக்கானிக்கிடம் கொண்டு கொடுங்கள். அடுத்த வாரம் கொடுக்கப் போவதை, "நாளைக்கு ரெடி ஆகிடும் சார்", என்பார். நாளைக்கு போன் செய்தால், "தோ வெல்டிங் சொல்லிருக்கேன் சார், கொஞ்சம் டைம் ஆவுது, நீங்க நாளைக்கு எடுத்துக்கங்களேன்", என பதில் வரும். இது மெக்கானிக்குகளுக்கு மட்டுமல்ல, நம்மிடையே பொய்யான உத்திரவாதங்கள் தரும் எல்லோருக்கும் பொருந்தும்.
கலாச்சார பேதங்கள் இது போன்ற உத்திரவாதங்களோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. இதோ என் அனுபவத்தைப் பாருங்கள்....
கிளையன்ட் வருகை நேரம் அது. என் மேனேஜர் டேனியல் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். அவருடனான ஒரு உரையாடலின் போது, ஒரு சின்ன புராஜக்ட் குறித்து விவரித்து விட்டு "என்ன இதை முடிச்சிடலாம் இல்லையா, உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே",என்றார் என்னைப் பார்த்து. நான் "சரி கண்டிப்பாக முடித்திடலாம்" என்னும் நோக்கில் தலையை வலம் இடமாக see-saw பாணியில் அசைத்தேன். அவர்கள் அர்த்தத்தில் நான் சொன்னது "நோ".
தலையை மேலும் கீழும் ஆட்டினால் சரி. இடம் புறமாக ஆட்டுதல் "இல்லை". இதுதான் அவர்கள் அகராதி. நம்மைப் பொறுத்தவரை தலையைச் சமமாக இடம் வலமாக அசைத்தல் "இல்லை". தலையை உருட்டியாவாறே இடம் வலமாக அசைத்தால் "எஸ் சார்" என அர்த்தம். இந்தப் புரிதல்கள் அவருக்குக் கிடையாதே.
"அப்படியா, சரி. உன்னால முடியாதுன்னா இதை முடிக்க வேற எதாவது வழிவகை பார்த்துக்கறேன்", என டேனியல் சொன்னதும்தான் எனக்கு நான் செய்த தவறு விளங்கியது.
"இல்லை டேனியல், என்னால் முடியும் என்பதுதான் என் பதில்", எனச் சொன்னேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார்.
"எஸ்" "நோ" தலையாட்டல்கள் இப்படி என்றால், எந்த விஷயத்திற்கும் "எஸ்" "நோ" சொல்வதில் உள்ள குளறுபடிகள் குறித்து நாம் புத்தகங்களே போடலாம். ஆங்கில மொழியில் இந்த கலாசார பேதங்களை விளக்கி அங்கே சில புத்தகங்கள் கூட கிடைக்கின்றன. "இந்தியர்களுடன் பணிபுரிவது எப்படி", "ஆசிய-மேலை நாட்டுப் பணிமுறைகள் - சில கலாசார வித்தியாசங்கள்" என்று அவர்கள் ஊரில் புத்தகம் போட்டு பணக்காரர்கள் ஆனவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் "எஸ்" என்ற வார்த்தைக்கு "ஆமாம்" "சரி" என்று இரண்டே இரண்டு அர்த்தங்கள்தான். ஆனால் நமது வழக்கத்தில் "எஸ்" என்பதை நாம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக வடஇந்தியர்களிடம் இந்த வாடிக்கை மிக அதிகம். "அச்சா" என்ற பிரயோகம் ஆங்கிலத்தில் அப்படியே "எஸ்" ஆகிப் போவதுதான் குழப்பங்களுக்கான முதன்மைக் காரணம். "அப்படிப் போடு", "அப்படியா?" "அது சரி" என எல்லாமே "அச்சா"தான் அங்கே. அதை அப்படியே இந்தியத் தொனியில் "எஸ்" என்று சொல்கையில் மண்டை காய்கிறது நம் மேனாட்டு வாடிக்கையாளர்களுக்கு.
"அட, விடுங்க சார். நம்மளை இருநூத்தி அம்பது வருஷம் ஆட்சி செய்து காய வெச்சாங்க,.நம்ம கிட்டயும் கொஞ்சம் காயட்டுமே" என சொல்வதற்கில்லை. நாம் இது போல வாங்கிக் கொள்ளும் கறுப்புப் புள்ளிகளுக்கு எல்லாம் பரிசு வேறொன்றுமில்லை. நம் பிசினஸ் நம் கையை விட்டு அடுத்த கம்பெனியின் கைகளுக்குச் செல்வதுதான்.
சி.டி.எஸ். இல்லைன்னா சத்யம். இன்போசிஸ் இல்லன்னா டி.வி.எஸ். என அவர்களுக்கு இந்தியாவில் இந்த வேலை செய்வதக்கு இடம் இல்லாமல் இல்லை. ஆகவே, நாம் வேலை செய்யும் கம்பெனியின் வியாபார நிலைப்பாடு நம் சிறு சிறு அணுகுமுறைகளில் கூட ஒளிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அதற்கான பயிற்சிகளாகத்தான் வேலை குறித்த விஷயங்களையும் தாண்டி பேசுதல், எழுதுதல் போன்ற அடிப்படை விஷயங்கள் தொடங்கி பல்வேறு நிலைகளில் இங்கே பணி புரிபவர்களுக்கு எங்கள் நிறுவனங்கள் பல பயிற்சிகளைத் தருகின்றன.
ஒரு உதாரணம் பாருங்கள். இன்போசிஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் டிரைனிங்'கிற்கு ஒதுக்கிய பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன் இருநூற்று முப்பது அமெரிக்க மில்லியன்கள். இந்திய மதிப்பில்? மயக்கமடையாதீர்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்கள் மட்டுமே. இந்த பட்ஜெட்டில் வேலை தொடர்பான ப்ராசஸ் டிரைனிங்'குகள் பெரும்பாலும் அடங்கும் என்றாலும், அதைத் தாண்டி ஒவ்வொரு தனி ஊழியரின் இதர மேலாண்மைத் திறன்களை செம்மைப்படுத்துதலுக்கான செலவுகளும் அடக்கம்.
அப்படி என்னத்தை செம்மைப் படுத்துகிறார்கள் எனக் கேட்கிறீர்களா? ஒரு சின்ன பேய்க்கதை இருக்கிறது. அந்த லைட் சப்ஜெக்டைத் தொட்டுவிட்டு அதன்பின் இந்த வெயிட் சப்ஜெக்டைப் பார்ப்போம்.
.
.
.
.
.
image courtesy: http://personalisedgifts1.files.wordpress.com / http://www.cartoonstock.com