Showing posts with label கார்பரேட் கனவுகள். Show all posts
Showing posts with label கார்பரேட் கனவுகள். Show all posts

Jan 13, 2013

புத்தக விழாவில் நம் புத்தகம்

இந்தமுறை சென்னை புத்தகவிழாவில் கடை விரித்திருக்கும் ஐநூற்று தொண்ணூற்று மூன்று ஸ்டால்களிலும் “கார்பரேட் கனவுகள்” புத்தகம் ஸ்டாலுக்கு ஆயிரம் காப்பிகள் என்ற மேனிக்கு அடுக்கி வைத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்றமுறை போல மக்கள் ஒன்றிரண்டு ஸ்டால்களில் முண்டியடித்து நம் புத்தகத்தை வாங்குவதற்காக வேட்டி கிழிப்புகளில் ஈடுபட்டு மற்ற புத்தகர்களின் யாவாரத்தைக் கெடுத்த நிலைமை மீண்டும் வாராது தவிர்க்கவே இந்த ஏற்பாடு.


அந்த ஐநூற்று தொண்ணூற்று மூன்றில் 590 கடைகளில் புத்தகம் தீர்ந்துபோய் யாவாரிகள் கைவிரித்தாலும் கீழ்கண்ட மூன்று ஸ்டால்களில் “கார்பரேட் கனவுகள்” கட்டாயம் கிடைக்கும் என்று உறுதி சொல்கிறேன்.

அருணோதயம் - ஸ்டால் எண்: 392 & 393

செல்வ நிலையம் - ஸ்டால் எண்: 23

புத்தகப் பூங்கா - ஸ்டால் எண்: 137


புத்தகத்திற்கு என்.சொக்கன் எழுதிய அணிந்துரை இங்கே

பிகு: புத்தகம் வாங்கிவிட்டு கடையின் வாசலிலேயே நின்று படித்தல், அங்கேயே உட்கார்ந்த வண்ணமோ அல்லது வீடு போகும் வழியில் காரை / பைக்கை ஓட்டிய வண்ணமோ எனக்குக் கடிதம் எழுதும் காரியங்களைத் தவிருங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Jan 6, 2012

அறிவாலயத்தில் நம் புத்தகம்

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று கோலாகலமாய்த் துவங்கியுள்ளது.

ஸ்டால்களின் எண்ணிக்கை, வருகை புரிவோர், புத்தகங்களின் விற்பனை என அனைத்திலும் இந்த முறை சென்ற ஆண்டைவிட சாதனைகள் இருக்கும் என நம்புவோம்.

நான் எழுதி சென்ற மார்ச் மாதம் வெளிவந்த கார்பரேட் கனவுகள் புத்தகம் கீழ்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.



அறிவாலயம் - ஸ்டால் எண் 308 - 309

ஸ்ரீ செல்வ நிலையம் - ஸ்டால் எண் 399



மறக்காமல் வாங்கிப் படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நன்றி!




35ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி

செயிண்ட் ஜார்ஜ் பள்ளி (பச்சையப்பன் கல்லூரி எதிரில்)
சென்னை.
வார தினங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 வரை.
விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 வரை.


Mar 26, 2011

கார்பரேட் கனவுகள் - ஒரு சின்ன போஸ்டர்

காலை எழுந்ததும் செல்போனில் கண்விழிப்பது சமீப வருடங்களாக வழக்கம். இன்றும் அதே.

ஒரு எழுத்தாளனுக்கு (!!) நூற்று சொச்ச மிஸ்கால்களும் அதே சொச்ச குறுஞ்செய்திகளும் அந்த இரவில் வந்திருக்க வேண்டும். ஆனால் நான் மடிப்பாக்கத்தில் வாழ்ந்து தொலைப்பதால் (எத்தனை நாள்தான் இந்தியா, தமிழ்நாடு என்றெல்லாம் டேமேஜ் செய்வது. சொந்த லொகாலிடியையும் டேமேஜ் செய்வோம் தோழர்ஸ்) அப்படி பாக்கியம் ஏதும் எனக்கில்லை.

ஆனால் எண்ணி ரெண்டே ரெண்டு குறுஞ்செய்திகள். இரண்டுமே அலுவலகத் தோழி ஒருவரிடமிருந்து.

முதல் செய்தி - 01:32am ==> "Just started your book"


இரண்டாம் செய்தி - ௦2:26am ==> "Finished reading. Feedback in the morning"

அவ்வளவுதான்......!

Feedback வந்தவுடன் நான் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னமும் புத்தகம்  வாங்கவில்லை என்றால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
.
.
.

Mar 21, 2011

புத்தக வெளியீடு - "சுகப்பிரசவம்"

அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது! 

மூன்று மணி சுமாருக்கு விழா அரங்கத்தினுள் நுழைந்தபோது இந்த அரங்கம் இந்த விழாவிற்குப் போதுமா, சரியாக இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.. வரப்போகும் முக்கிய விருந்தினர்கள், வருகையாளர்கள் அனைவரையும் கற்பனைக் கண்ணால் ஓட்டிப் பார்த்தபோது ஏனோ திருப்தியில்லை. மண்டபம் சிறிதோ, மேடை சிறிதோ என்று சந்தேகம். நூற்று ஐம்பது பேர் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர்கள் எட்டுபேர் என்பதால் நீளமாக ராம்ப் போல இருந்த மேடையை மாற்றியமைத்து அகலமாக்கினோம். கொஞ்சம் திருப்தியானது.

ஐந்து மணிமுதல் மண்டபம் நிறையத் தொடங்கியது.  சிலம்பொலி ஐயா அவர்கள் முதலில் வந்தார், அடுத்து சொக்கன் அவர்கள், சற்றே இடைவெளி விட்டு லேனா தமிழ்வாணன் அவர்கள், இனியவன் அவர்கள் என ஐந்து பதினைந்திற்கு முன்னதாகவே முக்கிய விருந்தினர்களில் சரி பாதி அரங்கத்தில் இருந்தனர். சரியாக ஐந்தரைக்கு மண்டபம் நிறைந்துவிட்டது.

வருபவர்களுக்கு சமோசா தருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால்..................................... பின்னர் அது ஸ்வீட் காரம் காபி வழங்க என ஏற்பாடானது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுடன் முந்திரி பக்கோடா. நூற்று ஐம்பது பேரை எதிர்பார்த்தோம். கடைசியில் வந்த நாற்பது பேருக்கு ஸ்வீட்டும் இல்லை காரமும் இல்லை என்றாகும் அளவிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் விழாவிற்கு அதிக ரெஸ்பான்ஸ்.

ஆறு மணிக்கு சற்று முன்னே டாக்டர் ஷ்யாமா அவர்களும் வந்து சேர, ஐந்தரை மணியளவில் நிகழ்ச்சி என்று சொல்லியிருந்தாலும் இந்திய காலநேர நிர்ணயங்களைக் கருத்தில் கொண்டு ஆறு மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கியது. ஆறு ஐந்திற்கு பி.கே.பி. அவர்களும் வந்து சேர்ந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் பாக்யம் ராமசாமி அவர்கள் வர இயலவில்லை.

முதலில் பதிப்பாளர் செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்களின் வரவேற்புரை அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கும், புத்தகம் வெளிவரப் பின்னணியில் பணி புரிந்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புத்தகம் வெளியிடப்பட்டது. என் வாழ்வின் முக்கிய மைல் ஸ்டோன்! ஒரு மாபெரும் தருணம்! சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்ட செங்கை பதிப்பகத்தின் அரு.சோலையப்பன் அவர்களின் தந்தை "அருணோதயம்" அருணன் அவர்களின் நட்பினைப் பாராட்டி இந்த விழாவில் சிலம்பொலியார் கலந்து கொண்டார்.

நான் ஆதிநாள் தொட்டு திரு பி.கே.பி. அவர்களின் தீவிர வாசகன். எனவே பதிப்பாளரிடம் என் முதல் புத்தகத்தின் முதல் பிரதியை பி.கே.பி. அவர்கள் பெற்றுக் கொண்டால் அது பெருமைக்குரியதாக இருக்கும் என குறிப்பிட்டேன். திரு. அருணன் அவர்கள் வாயிலாக அதுவும் சாத்தியமாயிற்று. (பி.கே.பி.அவர்களின் முதல் புத்தகம் அருணோதயம் வாயிலாகவே வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

பின்னர் முக்கிய விருந்தினர்கள் புத்தகத்தைப் பாராட்டிப் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பதை நான் இங்கே சொன்னால் இது சுயதம்பட்டப் பதிவு ஆகிவிடும். ஆகவே அதனைத் தவிர்க்கிறேன். எனினும், இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேசிய எல்லோருமே புத்தகத்தை அட்டை டு அட்டை படித்துவிட்டு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் மூன்று பதிவுகள் குறித்து குறிப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கென அவர்கள் ஒதுக்கிய நேரத்தை நினைத்து மிகவும் பெருமிதமாக இருந்தது. 

சிலம்பொலியார் அவருடைய களம் இதுவல்ல என்றாலும் புத்தகத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினது ஏதோ விழாவிற்கு வருகிறோம், எதையோ பேசுவோம் என்றில்லாது சிறியவிழா எனினும் அதற்கும் தயாராக வந்த நேர்மையை பறைசாற்றியது.  பேசி முடித்தபின் அவர் சபையினில் எனக்கு பொன்னாடை போர்த்தியபோது "நான் சரியாகத்தான் பேசினேனா?" என என்னிடம் கேட்டுக் கொண்டார். ஒரு தமிழ் இலக்கிய சூழலின் ஒரு மாபெரும் ஆளுமை என்னைப் போன்றவனிடம் அதைக் கேட்கும் தேவை இல்லை எனினும் அவரின் அந்தப் பண்பை மிகவும் வியந்தேன்.

பி.கே.பி. அவர்கள் பதினைந்து நிமிடங்கள் பேசினார். நான் மேடையில் அமர்ந்திருக்க.... என் குரு என்னைப் பாராட்டிப் பேசினார். இதுவன்றோ வாழ்வின் தலைசிறந்த தருணம்? தொட்டால் தொடரும், பின்னிரவில் நதியருகில், நாயகி நாளை வருவாள், மன்மதப் புதிர், ஒரு நிஜமான பொய் , டிசம்பர் பூ டீச்சர் என பி.கே.பி. அவர்களின் கதைகளைத் தேடித்தேடிப் படித்த தருணங்களில் நான் நினைத்தும் பார்த்திருக்க மாட்டேன் இப்படி அவர் வாயால் என் படைப்பிற்கு வாழ்த்துக்கள் கிடைக்கும் என. 

சொக்கன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் (சற்றே பதட்டத்துடனும் கூட) புத்தகத்தை அறிமுகம் செய்தார். ஒரு அறிமுக எழுத்தாளன் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியதுடன் அழைப்பை ஏற்று நேரிலும் அவர் கலந்து கொண்டது நிச்சயம் எனக்கு மிகவும் பெருமை சேர்த்த விஷயம். காலத்திற்கும் அவருடனான நட்பு தொடரவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ஷ்யாமா மற்றும் "இலக்கியவீதி" இனியவன் அவர்கள் இருவரும் தங்கள் உடல் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. இவர்கள் இருவருமே அவரவர் சார்ந்த சூழலில் சத்தமில்லாமல் படைத்து வரும் சாதனைகளைப் பட்டியல் இடுதல் சிரமம். 

லேனா அவர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சியின் ஹைலைட் என்றால் அது மிகையில்லை. தான் பேசவேண்டியதை எல்லாம் பி.கே.பி. அவர்கள் பேசிவிட்டதாக லேனா அவர்கள் குறிப்பிட்டுவிட்டுப் பேசத் துவங்கினாலும் சரியாக முப்பது நிமிடங்கள் என்றால் முப்பது நிமிடங்கள் பேசினார் லேனா. அவருக்காகவே என நிகழ்ச்சியைக் காண வந்தவர்களை அவர் ஏமாற்றவில்லை. எத்தனை நிமிடங்கள் பேசினாலும் கேட்பவர்களை பேச்சால் எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்பதை அவரிடம் நிச்சயம் கற்க வேண்டும்.

விழாப் பிரபலங்கள் அனைவருமே அவரவர் துறையில் இப்படியப்படி நகர நேரமில்லாமல் உழன்று கொண்டிருப்பவர்கள். இருந்தும் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுதை என் புத்தக வெளியீட்டிற்கென ஒதுக்கியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன்.


இறுதியாக நான் ஆற்றிய ஏற்புரை / நன்றியுரை அதனைத் தொடர்ந்த நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.


நேரில் வந்து விழாவைச் சிறப்பித்த என் அலுவலக நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்க வருகை தந்த கோவை திரு.ஜெயராமன்-சரஸ்வதி, திருவனந்தபுரம் திரு.அசோக்-ரமா ஆகியோருக்கும், என் "பி.பீ.ஓ குரு"   பெங்களூரு அர்விந்த் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள்!

இதுவரை ஆயிரத்தி இருநூறு புத்தகங்கள் விற்றுள்ளன என சொல்ல ஆசைதான், இருந்தாலும் அதற்கு ஒரு ஆயிரம் புத்தகங்கள் குறைவாக விற்றுள்ளதால் அப்படிச் சொல்ல இன்னமும் நாளாகும்.

புத்தகத்தை இணையத்தில் பெற ==> உடுமலை டாட் காம்


விழாவில் நாங்கள் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே
(புரொபஷனல் கலைஞர் எடுத்த படங்கள் பின்னர்...)

 தமிழ்த்தாய் வாழ்த்து

எழுத்துலக அ'னா ஆ'வன்னா கற்றுத்தந்த என் குருவுக்கு


இந்தப் புத்தகம் எழுதத்தூண்டிய சொக்கனுக்கு 

 புத்தகம் வெளியான அந்த அருமையான தருணம் 

சிலம்பொலியார் இந்தச் சிறுவனுக்கு செய்த சபை மரியாதை


 என் குரு என் எழுத்தைப் பாராட்டி பேசினபோது...

லேனா அவர்களின் அந்த ஹைலைட்டான முப்பது நிமிடங்கள்! 


 பதிப்பாளரிடம் என்னை அறிமுகம் செய்த பழனிக்கு மரியாதை
இனியவன் ஐயாவுடன் ஒரு இனிய தருணம் 

Mar 14, 2011

புத்தக வெளியீடு அழைப்பு - கார்பரேட் கனவுகள்!



அன்பு நண்பர்களுக்கு, 


நான் எழுதி வெளிவந்துள்ள என் முதல் புத்தகம் "கார்பரேட் கனவுகள்" வெளியீட்டு விழா வரும் பத்தொன்பதாம் தேதி சென்னை ராயப்பேட்டை ஸ்வாகத் மினி ஹாலில் நடைபெற உள்ளதால் தாங்கள் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். 


விழா விபரங்கள்:


நாள்: சனிக்கிழமை, 19/03/2011 மாலை 05:30 மணிக்கு. 
இடம்: ஹோட்டல் ஸ்வாகத் (மினி ஹால்), ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை.
 
புத்தக வெளியீடு: அய்யா சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்
முதல் பிரதியைப் பெறுபவர்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.
நூல் அறிமுகம்: எழுத்தாளர் திரு. என்.சொக்கன் அவர்கள்


வாழ்த்து:
மூத்த எழுத்தாளர் திரு.ஜ.ரா.சு அவர்கள் (பாக்யம் ராமசாமி)
மூத்த பதிப்பாளர் அருணோதயம் திரு. அருணன் அவர்கள்
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அவர்கள்
டாக்டர் ஷ்யாமா அவர்கள்
"இலக்கியவீதி" இனியவன் அய்யா அவர்கள்.






"கார்பரேட் கனவுகள்" புத்தகம் குறித்து....


BPO -  இந்த மூன்றெழுத்துக்கள் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாக்கிய மாற்றத்தை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இப்புத்தகம்.

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் ஒரு முயற்சியே இந்தப் புத்தகம்.


பி.குதங்கள் நண்பர்களிடம் இந்த அழைப்பைப் பகிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.


ஸ்வாகத் ஹோட்டலுக்கு மேப் : http://goo.gl/4352X  





.
.
.

Jan 12, 2011

முன்னூறாவது பதிவும் என் முதல் புத்தகமும்!

யெஸ்! இது என் முன்னூறாவது பதிவு. 

image courtesy: http://www.law.ed.ac.uk

இங்கே கோ-இன்சைட் ஆகி வந்திருக்கும் மற்றொரு நற்செய்தி, நான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் "கார்பரேட் கனவுகள்" புத்தகம் கடைசி ப்ரூஃப் கட்டத்தை இன்று எட்டியுள்ளது.

நூறாவது பதிவு வரைகையில் ஏதோ தலைக்குமேல் கொம்பு வளர்ந்த நினைப்பில் எழுதின ஞாபகம் வருகிறது. இருநூறு மொக்கையிலும் மொக்கை. இதோ இப்போது முன்னூறாவது பதிவு எழுதுகையில் இந்த நம்பர் கேமில் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற தெளிவு வந்திருக்கிறது போல் சற்றே தெரிகிறது.


சேர்த்துக் கொண்ட சொத்து விபரம்:

இங்குமங்குமாக சுமார் நானூற்று சொச்ச ஃபாலோவர்கள் சேர்த்துக் கொண்டது, அலேக்சாவில் ஏதோ கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி ஒரு ரேங்கிங்  (உபயம்: எந்திரன், ஜெமோ, அறிவியல் பற்றின என் ஒரு பதிவு மற்றும் அதற்கு கூகிள் தரும் ஓஹோ ஆதரவு, தமிழர்களின் குஷ்பூ தேடல்கள், கிரிக்கெட்), சிலப்பல நல்ல நண்பர்கள், கொஞ்சமே கொஞ்சம் கெட்ட வார்த்தை வசவுகள் (உபயம்: சாரு குஞ்சுமோன்கள்) ஆகியவற்றை முதல் ஐந்து சொத்துப் பட்டியலில் சொல்லலாம்.

நான் சற்றே டுவிட்டரின் வம்புமடத்திற்குத் தாவிய சமீபத்தில் பதிவுகள் நசநசத்துப் போனதென்னவோ நிஜம். #டென்ட் தட்ட வேண்டும்.

வலைப்பூவில் எழுதிய பயனில் முக்கியமாகக் கிடைத்தது புத்தகம் எழுதும் வாய்ப்பு.

கார்பரேட் கனவுகள் - புத்தக வெளியீடு குறித்து....



அலுவலக நண்பர் பழனியின் மூலமாக செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் (அருணோதயம் அருணன் அவர்களின் புதல்வர்) அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஊக்குவித்ததன் பயனாக விரைவில் "கார்பரேட் கனவுகள்" வெளிவரவிருக்கிறது.

பி.பீ.ஓ. நாட்குறிப்புகளாக நம் தளத்தில் வெளி வந்த தொடர் இடையில் நிறுத்தப்பட்டதன் ரகசியம் இந்தப் புத்தகம் வெளிவருவதே. ஆறேழு அத்தியாயங்கள் மட்டுமே இங்கே வெளிவந்த அத்தொடர் இருபது அத்தியாயங்களுடன் புத்தக வடிவில் வெளிவர உள்ளது.

நம் தளத்தில் வெளிவந்த முன்னுரை இங்கே

வெறுமனே கதை சொல்லும் அனுபவக் குறிப்புகளாக மட்டுமில்லாமல் அல்லது வெறுமனே பி.பீ.ஓ. என்றால் என்ன என்னும் வகையில் விளக்கக் குறிப்புப் புத்தகமாக இல்லாமல் இரண்டையும் கலந்து கொடுக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.

பி.பீ.ஓ’க்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தகவல்கள் தொடங்கி இங்கே இருக்கும் வேலை முறைகள், வேலைச் சிக்கல்கள், இத்துறை சார்ந்த மனிதர்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள், ஒபாமா மசோதாக்களால் இந்தத்துறை காணும்  பாதிப்புகள், சக ஊழியர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், குதூகலங்கள், துயரங்கள், வெற்றி ரகசியங்கள், நான் சந்தித்த சில சுவாரசிய மனிதர்கள், சில சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது இந்தப் புத்தகம். 

புத்தகத்திற்கு பிரபல நட்சத்திர எழுத்தாளர் என்.சொக்கன் அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பது புத்தகத்தின் முக்கிய பலம் என நான் கருதுகிறேன். வல்லினம், மெல்லினம் இடையினம் என ஐ.டி.துறை குறித்து எழுதிய கைகளால் இந்த பி.பீ.ஓ. புத்தகத்திற்கு அணிந்துரை கிடைத்தது சாலப் பொருத்தம் எனவும் நான் நம்புகிறேன். 

விரைவில் புத்தக வெளியீட்டுத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்!
.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...