Showing posts with label புத்தக வெளியீடு. Show all posts
Showing posts with label புத்தக வெளியீடு. Show all posts

Mar 21, 2011

புத்தக வெளியீடு - "சுகப்பிரசவம்"

அற்புதமாக நடந்து முடிந்தது விழா! இன்னமும் உள்ளே அலையடித்துக்கொண்டே இருக்கிறது! 

மூன்று மணி சுமாருக்கு விழா அரங்கத்தினுள் நுழைந்தபோது இந்த அரங்கம் இந்த விழாவிற்குப் போதுமா, சரியாக இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டது.. வரப்போகும் முக்கிய விருந்தினர்கள், வருகையாளர்கள் அனைவரையும் கற்பனைக் கண்ணால் ஓட்டிப் பார்த்தபோது ஏனோ திருப்தியில்லை. மண்டபம் சிறிதோ, மேடை சிறிதோ என்று சந்தேகம். நூற்று ஐம்பது பேர் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு விருந்தினர்கள் எட்டுபேர் என்பதால் நீளமாக ராம்ப் போல இருந்த மேடையை மாற்றியமைத்து அகலமாக்கினோம். கொஞ்சம் திருப்தியானது.

ஐந்து மணிமுதல் மண்டபம் நிறையத் தொடங்கியது.  சிலம்பொலி ஐயா அவர்கள் முதலில் வந்தார், அடுத்து சொக்கன் அவர்கள், சற்றே இடைவெளி விட்டு லேனா தமிழ்வாணன் அவர்கள், இனியவன் அவர்கள் என ஐந்து பதினைந்திற்கு முன்னதாகவே முக்கிய விருந்தினர்களில் சரி பாதி அரங்கத்தில் இருந்தனர். சரியாக ஐந்தரைக்கு மண்டபம் நிறைந்துவிட்டது.

வருபவர்களுக்கு சமோசா தருவதாகத்தான் முதலில் இருந்தது. ஆனால்..................................... பின்னர் அது ஸ்வீட் காரம் காபி வழங்க என ஏற்பாடானது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுடன் முந்திரி பக்கோடா. நூற்று ஐம்பது பேரை எதிர்பார்த்தோம். கடைசியில் வந்த நாற்பது பேருக்கு ஸ்வீட்டும் இல்லை காரமும் இல்லை என்றாகும் அளவிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் விழாவிற்கு அதிக ரெஸ்பான்ஸ்.

ஆறு மணிக்கு சற்று முன்னே டாக்டர் ஷ்யாமா அவர்களும் வந்து சேர, ஐந்தரை மணியளவில் நிகழ்ச்சி என்று சொல்லியிருந்தாலும் இந்திய காலநேர நிர்ணயங்களைக் கருத்தில் கொண்டு ஆறு மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கியது. ஆறு ஐந்திற்கு பி.கே.பி. அவர்களும் வந்து சேர்ந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் பாக்யம் ராமசாமி அவர்கள் வர இயலவில்லை.

முதலில் பதிப்பாளர் செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்களின் வரவேற்புரை அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கும், புத்தகம் வெளிவரப் பின்னணியில் பணி புரிந்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புத்தகம் வெளியிடப்பட்டது. என் வாழ்வின் முக்கிய மைல் ஸ்டோன்! ஒரு மாபெரும் தருணம்! சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்ட செங்கை பதிப்பகத்தின் அரு.சோலையப்பன் அவர்களின் தந்தை "அருணோதயம்" அருணன் அவர்களின் நட்பினைப் பாராட்டி இந்த விழாவில் சிலம்பொலியார் கலந்து கொண்டார்.

நான் ஆதிநாள் தொட்டு திரு பி.கே.பி. அவர்களின் தீவிர வாசகன். எனவே பதிப்பாளரிடம் என் முதல் புத்தகத்தின் முதல் பிரதியை பி.கே.பி. அவர்கள் பெற்றுக் கொண்டால் அது பெருமைக்குரியதாக இருக்கும் என குறிப்பிட்டேன். திரு. அருணன் அவர்கள் வாயிலாக அதுவும் சாத்தியமாயிற்று. (பி.கே.பி.அவர்களின் முதல் புத்தகம் அருணோதயம் வாயிலாகவே வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

பின்னர் முக்கிய விருந்தினர்கள் புத்தகத்தைப் பாராட்டிப் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்பதை நான் இங்கே சொன்னால் இது சுயதம்பட்டப் பதிவு ஆகிவிடும். ஆகவே அதனைத் தவிர்க்கிறேன். எனினும், இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பேசிய எல்லோருமே புத்தகத்தை அட்டை டு அட்டை படித்துவிட்டு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் மூன்று பதிவுகள் குறித்து குறிப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கென அவர்கள் ஒதுக்கிய நேரத்தை நினைத்து மிகவும் பெருமிதமாக இருந்தது. 

சிலம்பொலியார் அவருடைய களம் இதுவல்ல என்றாலும் புத்தகத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினது ஏதோ விழாவிற்கு வருகிறோம், எதையோ பேசுவோம் என்றில்லாது சிறியவிழா எனினும் அதற்கும் தயாராக வந்த நேர்மையை பறைசாற்றியது.  பேசி முடித்தபின் அவர் சபையினில் எனக்கு பொன்னாடை போர்த்தியபோது "நான் சரியாகத்தான் பேசினேனா?" என என்னிடம் கேட்டுக் கொண்டார். ஒரு தமிழ் இலக்கிய சூழலின் ஒரு மாபெரும் ஆளுமை என்னைப் போன்றவனிடம் அதைக் கேட்கும் தேவை இல்லை எனினும் அவரின் அந்தப் பண்பை மிகவும் வியந்தேன்.

பி.கே.பி. அவர்கள் பதினைந்து நிமிடங்கள் பேசினார். நான் மேடையில் அமர்ந்திருக்க.... என் குரு என்னைப் பாராட்டிப் பேசினார். இதுவன்றோ வாழ்வின் தலைசிறந்த தருணம்? தொட்டால் தொடரும், பின்னிரவில் நதியருகில், நாயகி நாளை வருவாள், மன்மதப் புதிர், ஒரு நிஜமான பொய் , டிசம்பர் பூ டீச்சர் என பி.கே.பி. அவர்களின் கதைகளைத் தேடித்தேடிப் படித்த தருணங்களில் நான் நினைத்தும் பார்த்திருக்க மாட்டேன் இப்படி அவர் வாயால் என் படைப்பிற்கு வாழ்த்துக்கள் கிடைக்கும் என. 

சொக்கன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் (சற்றே பதட்டத்துடனும் கூட) புத்தகத்தை அறிமுகம் செய்தார். ஒரு அறிமுக எழுத்தாளன் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியதுடன் அழைப்பை ஏற்று நேரிலும் அவர் கலந்து கொண்டது நிச்சயம் எனக்கு மிகவும் பெருமை சேர்த்த விஷயம். காலத்திற்கும் அவருடனான நட்பு தொடரவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ஷ்யாமா மற்றும் "இலக்கியவீதி" இனியவன் அவர்கள் இருவரும் தங்கள் உடல் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. இவர்கள் இருவருமே அவரவர் சார்ந்த சூழலில் சத்தமில்லாமல் படைத்து வரும் சாதனைகளைப் பட்டியல் இடுதல் சிரமம். 

லேனா அவர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சியின் ஹைலைட் என்றால் அது மிகையில்லை. தான் பேசவேண்டியதை எல்லாம் பி.கே.பி. அவர்கள் பேசிவிட்டதாக லேனா அவர்கள் குறிப்பிட்டுவிட்டுப் பேசத் துவங்கினாலும் சரியாக முப்பது நிமிடங்கள் என்றால் முப்பது நிமிடங்கள் பேசினார் லேனா. அவருக்காகவே என நிகழ்ச்சியைக் காண வந்தவர்களை அவர் ஏமாற்றவில்லை. எத்தனை நிமிடங்கள் பேசினாலும் கேட்பவர்களை பேச்சால் எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்பதை அவரிடம் நிச்சயம் கற்க வேண்டும்.

விழாப் பிரபலங்கள் அனைவருமே அவரவர் துறையில் இப்படியப்படி நகர நேரமில்லாமல் உழன்று கொண்டிருப்பவர்கள். இருந்தும் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுதை என் புத்தக வெளியீட்டிற்கென ஒதுக்கியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன்.


இறுதியாக நான் ஆற்றிய ஏற்புரை / நன்றியுரை அதனைத் தொடர்ந்த நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.


நேரில் வந்து விழாவைச் சிறப்பித்த என் அலுவலக நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்க வருகை தந்த கோவை திரு.ஜெயராமன்-சரஸ்வதி, திருவனந்தபுரம் திரு.அசோக்-ரமா ஆகியோருக்கும், என் "பி.பீ.ஓ குரு"   பெங்களூரு அர்விந்த் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள்!

இதுவரை ஆயிரத்தி இருநூறு புத்தகங்கள் விற்றுள்ளன என சொல்ல ஆசைதான், இருந்தாலும் அதற்கு ஒரு ஆயிரம் புத்தகங்கள் குறைவாக விற்றுள்ளதால் அப்படிச் சொல்ல இன்னமும் நாளாகும்.

புத்தகத்தை இணையத்தில் பெற ==> உடுமலை டாட் காம்


விழாவில் நாங்கள் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே
(புரொபஷனல் கலைஞர் எடுத்த படங்கள் பின்னர்...)

 தமிழ்த்தாய் வாழ்த்து

எழுத்துலக அ'னா ஆ'வன்னா கற்றுத்தந்த என் குருவுக்கு


இந்தப் புத்தகம் எழுதத்தூண்டிய சொக்கனுக்கு 

 புத்தகம் வெளியான அந்த அருமையான தருணம் 

சிலம்பொலியார் இந்தச் சிறுவனுக்கு செய்த சபை மரியாதை


 என் குரு என் எழுத்தைப் பாராட்டி பேசினபோது...

லேனா அவர்களின் அந்த ஹைலைட்டான முப்பது நிமிடங்கள்! 


 பதிப்பாளரிடம் என்னை அறிமுகம் செய்த பழனிக்கு மரியாதை
இனியவன் ஐயாவுடன் ஒரு இனிய தருணம் 

Oct 21, 2010

புத்தக வெளியீட்டு விழா அழைப்பு

நண்பர்களுக்கு,

செங்கை பதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள டாக்டர்.ஷ்யாமா அவர்கள் எழுதிய "மகப்பேறு மகத்துவம்" நூலின் வெளியீட்டு விழா வரும் 23.10.2010 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு சென்னை-மயிலை லஸ் சர்ச் சாலை "ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹாலில்" நடைபெற உள்ளது.

பெண்கள் நல மருத்துவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நூலினை வெளியிட மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் திருமதி அனுராதா சேகர் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்கள். 

விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்:

அருணோதயம் திரு.அருணன் அவர்கள்,
சுவாமி விமூர்த்தானந்த ஜி (ஆசிரியர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்),
திரு ஏ.நடராஜன் அவர்கள் (சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர்),
திரு கவிதா சொக்கலிங்கம் அவர்கள் (உரிமையாளர் - கவிதா பதிப்பகம்).

செங்கை பதிப்பகம் அரு.சோலையப்பன் அவர்கள் சார்பில் தங்கள் அனைவரையும் இவ்விழாவில் தங்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் மற்றும் "மகப்பேறு மகத்துவம்" நூலாசிரியர் அறிமுகத் தகவல்களை இணைத்துள்ளேன்.





Related Posts Plugin for WordPress, Blogger...