Mar 15, 2015

ஒரு வாய்ப்பு குடுங்க சார் ப்ளீஸ்



இந்த அனுபவத்தை எழுதியே தீரவேண்டும் என்று எழுதுகிறேன். உங்களுக்கு அசுவாரசியமான விஷயமாக இது தோணலாம். மேலும் இங்கே முதலில் சில கேள்விகள். போரடிக்கும் என்றால் நீங்கள் நேரடியாக ஐந்தாம் பத்திக்குத் தாவலாம். ரொம்பவும் போரடித்தால் அடுத்த ப்ளாகுக்கு நீங்கள் தாவலாம். ஓகே, ரைட்.... ஹியர் யூ கோ!

ஒரு உண்மையான கலைஞனின் அங்கீகாரத்திற்கான ஏக்கத்தை நேரடியாக தரிசித்திருக்கிறீர்களா? அவன் தன் திறமையைக் காட்ட மேடையேறி வருகையில் நிறைந்த அரங்காக இருந்த ஒரு அரங்கு ஒரு சலசலப்புடன் கலைந்து போவதைப் பார்த்திருக்கிறீர்களா? கலைந்த அரங்கைக் கண்டவன் ஒரு தடுமாற்றத்துடன் தன் நிகழ்வைத் தொடங்கக் கண்டிருக்கிறீர்களா?

கைத்தட்டலுக்காக ஏங்கியிருக்கிறீர்களா? முதுகில் தட்டிக் கொடுத்து யாரேனும், “ஷோக்கா செஞ்சபா நிய்யீ”, என உங்களை உற்சாகப் படுத்துவார்களா என்று காத்திருந்தது உண்டா? அப்படி ஏதும் கைத்தட்டல், முதுகுத்தட்டல் கிடைத்தது உண்டா? இல்லையா? கிடைத்தும் கிடைக்காமற் போனதும் உண்டா?

நாம் எல்லாருமே ஒருவகையில் இந்த உணர்ச்சிகளைத் தாண்டாமல் வந்ததில்லை. சரி விஷயத்திற்கு வருகிறேன்....

வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தில் ஒரு ஐந்து மணிநேரம் அலுவல் இல்லாத அலுவல் செய்யத் தலைப்பட்டேன். 

அமெரிக்கா ஹேஸ் காட் டேலண்ட் (America's Got Talent) அல்லது ”இந்தியா’ஸ் காட் டேலண்ட்” போல எங்கள் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தப் பிரியப்பட்டோம். கடந்த மூன்று - நான்கு மாத நேர கடின உழைப்பில், வேலை நேரம் போக மீத நேரத்தில் அல்லது வேலை நேரத்தின் இடையேவே கூட கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதற்காகத் திட்டமிட்டு, கான்கால்கள் அட்டெண்ட் செய்து, இங்கே ஓடி, அங்கே ஆடி, பல விஷயங்களை அப்படியிப்படி ஒருங்கிணைத்து ஒருமாதம் முன் prelims நடத்தி ஒருவாறாக வெள்ளியன்று Grand Finale அமோகமாக நடந்தேறியது.

எங்கள் கம்பெனியின் மூன்று அலுவலகங்களில்  (facilities என்று எங்கள் பாஷையில் சொல்வோம் - சோழிங்கநல்லூரில் இரண்டு, போரூரில் ஒன்று என்று எங்கள் BPO’வுக்கு மூன்று அலுவலகங்கள் சென்னையில் உண்டு) prelims என்கிற முதற்சுற்று நடந்தது. மூன்று இடங்களிலும் இருந்து இறுதிப் போட்டிக்கு 22 பேரைத் தேர்வு செய்தோம். சோழிங்கநல்லூரின் தாய் அலுவலகத்தில் இறுதிப் போட்டி நடந்தேறியது.

ஆட்டம், பாட்டம், MIME, மிமிக்ரி, flash mob என நிகழ்வுகள் நடந்து முடிந்து முடிவுகளை அறிவிக்க நடுவர்களின் ஸ்கோர்ஷீட்டுகளை நாங்கள் எடுத்துக் கொண்டு லாப்டாப் தேடியோடி, மூன்று நடுவர்களின் மார்க்குகளையும் ஆள்மாறாமல் வரிசை மாறாமல் பட்டியலிட்டு என்று நாங்கள் உழன்ற வேளையில் - stop gap arrangement அல்லது filler அல்லது ஏதோ ஒன்று செய்ய வேண்டுமே என்று இறுதிப்போட்டியில் பங்கேற்காத ஒரு பயலை மிமிக்ரி பண்ண அழைத்து வந்திருந்தோம். இறுதிப் போட்டியிலேயே  கூட ஒரு போட்டி நிகழ்வாக மிமிக்ரி இருந்திருந்தாலும் முடிவு அறிவிப்பிற்கு முன் நேரக்கொலைக்கு பயல் தேவைப்பட்டான்.

முந்தைய prelims ரவுண்டில் இந்த மிமிக்ரி செய்த பயல் பங்கேற்று ஏனோ இறுதிக்குத் தேர்வாகவில்லை. ஒருவாரம் முன் இந்த நிகழ்ச்சிக் கமிட்டியின் இன்னொரு மெம்பர் ஸ்ரீ என்னை எங்கள் கேண்டீனில் பார்த்தபோது, இந்தப் பயல் தான் ஏன் தேர்வாகவில்லை என்று கேட்கிறான். குறைந்தபட்சம், இறுதிப் போட்டியின் போது ஒரு guest appearance'ஆக தான் ஒரு ஐந்து நிமிடம் மிமிக்ரி செய்ய விரும்புவதாகச் சொல்கிறான், அனுமதிக்கலாமா” என்று கேட்டார். எங்கள் facility'க்கு இந்த நிகழ்வுக்கு நான்தான் lead. ”இல்லை வேண்டாம், இது மற்ற participants இடையே தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும், வேண்டாம்” என்று முடிவு செய்து விட்டோம்.

மறுநாள் ஸ்ரீ’யிடம் இருந்து ஒரு மெயில். இந்தப் பயல் அவருக்கு எழுதியிருந்தான். “சான்ஸ் ப்ளீஸ்”, என்பதுதான் மெயிலின் சாராம்சம். நிகழ்வின் சீனியர் தலைவரை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மீண்டும், “நோ”, என்று அந்த மெயிலுக்கு பதில் எழுதினேன்.

வெள்ளியன்று மாலை இறுதிப் போட்டிகள். வியாழன் இரவு ஒன்பதேமுக்காலுக்கு எனக்கு அலுவலகம் நிறைந்து cab ஏற வேண்டும். ஒன்பதரைக்கு என் project தேடி, என் சீட்டினைக் கண்டுபிடித்து பயல் நேரில் வந்து நிற்கிறான். கூட துணைக்கு ஒரு தோழன்.

தோழன்தான் பேசினான். ”சார், ஒரு சான்ஸ் குடுங்க. எப்படி என்ன குரல்’லாம் பேசறான்’னு மட்டும் பாருங்க”.

“இல்லைங்க. குடுக்கக்கூடாதுன்னு இல்லை. இது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். blah blah blah” என்று பேசினேன். Cab பிடிக்க வேண்டும். நேரமாச்சு, ஓட வேண்டும். “ஓகே, லெட் மீ செக். ஐ வில் கெட் பேக்”, என்று விட்டு, பயலுக்கு என் மொபைல் நம்பரைத் தந்துவிட்டு cab பிடிக்க விரைந்தேன்.

Cab பயணத்திலேயே ஒருவழியாக தாய் அலுவலகத்தின் உபதலைவனைப் மொபைலில் பிடித்து அவனிடம் அனுமதி வாங்கி (stop gap, filler என்று காரணங்கள் சொல்லி), இவனுக்கு ஃபோன் செய்து, “ஓகேப்பா. நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு அந்த ஆஃபீசுக்கு வந்துடு” என்றேன். நமக்கு இறுதியில்தான் இவன் தொட்டுக் கொள்ளத் தேவைப்படுவான்.

நிகழ்ச்சிகள் நான்கு மணிக்குத் துவங்கின. ஆறுமணிக்கு வரச் சொன்னவன், ஐந்து மணிக்கு வந்து நின்றான். அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உட்கார்ந்தவர்களுக்கு போட்டிருந்த நாற்காலிகள் அனைத்தையும் சுற்று வளைத்துக் கட்டி மக்கள் நின்றபடி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லா நிகழ்ச்சிகளும் நிறைந்து எங்கள் கூட்டல் கழித்தல் நேரம் வந்தது. பயல் மேடை ஏறினான். இது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் என்று அறிவித்தோம்.

இருபத்தி இரண்டு போட்டி நிகழ்வுகளும் நிறைந்து விட்டதால் கூட்டம் கலையத் துவங்கியது. பார்வையாளர்களில் பலருக்கு யார் பரிசை வாங்குகிறார்கள் என்பது அநாவசியம். நிகழ்ச்சி முடிந்ததா போகலாம் எனும் மனோபாவம்.

மக்களின் கலைதல் பயலின் முகத்தில் இருட்டைக் கொணர்ந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இருந்தாலும் பேசத் துவங்கினான். இரண்டாவது மிமிக்ரியில் ஒரு ஜெர்க் தெரிந்தது. இருந்தாலும் சுதாரித்துத் திறமை காட்டிப் பேச கலைந்த கூட்டம் மீண்டும் சேரத் துவங்கியது.

அதன் பின் அங்கே நிகழ்ந்ததெல்லாம் ஒரு மேஜிக். ஆயிரம் வாலா பட்டாசு, வாண வேடிக்கை போல மிமிக்ரியில் சபையை அப்படியே கட்டிப் போட்டான் பயல். ஆரவாரம், உற்சாகம், கரகோஷம், ஆர்ப்பரிப்பு - ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தான். 

ஸ்கோர் டோட்டலிங் முடிந்து முடிவுகளை அறிவிக்க நடுவர்கள் தயாராகிவிட்டார்கள். இரண்டு நிமிடம் போல் தெரிந்தாலும், நிச்சயம் பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் கைகளை உயர்த்திக் காட்டி நேரமாச்சு நேரமாச்சு எனச் சொல்ல ஒருவழியாக தன் மிமிக்ரியை முடித்துக் கொண்டான் பயல்.

“இத்தோட முடிச்சிக்கறேன். ரொம்ப நன்றி”, என்று அவன் சொன்னபோது ஏதோ தோன்ற முன்வரிசையில் உட்கார்ந்திருந்த நான் நாற்காலியை விட்டு எழுந்து நின்று கைத் தட்டினேன்.

திரும்பிப் பார்க்கிறேன், அரங்கம் முழுவதும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது. அத்தனைக் கைத்தட்டல், அத்தனை உற்சாகம். அப்படி ஒரு பாராட்டுதல். அதன்முன் நிகழ்ந்த அந்த இருபத்தியிரண்டு போட்டிப் பங்களிப்புகளுக்கும் கூட கிடைக்காத அங்கீகாரம். கிட்டத்தட்ட அவன் கண்களில் நீர்.

”நான் மிமிக்ரி ஆரம்பிச்சப்ப நீங்கல்லாம் கலைஞ்சு போனதப் பாத்ததும் நான் வெக்ஸ் ஆயிட்டேன். ஆனா இப்போ மிமிக்ரி முடிஞ்சதும் எல்லாரும் கை தட்டுனது ரொம்ப சந்தோஷமா இருக்கு”, என்றான். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எனக்கு.

வெள்ளி இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை தெரியுமா உங்களுக்கு? அது என்ன உணர்வு என்றே புரியவில்லை. சந்தோஷமா, அந்த சந்தோஷம் தந்த அதீத மனவெழுச்சியா.... என்னவென்று தெரியவில்லை. 

நான் ஏன் இத்தனை உணர்ச்சி வசப்பட வேண்டும் என்கிறீர்களா?


நிகழ்ச்சி, கைத்தட்டல், ஆரவாரம் எல்லாம் அடங்கினபின், “இந்த சான்ஸை எனக்குத் தந்த கிரி சாருக்கும் ஸ்ரீ மேடத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்று அவன் தழுதழுக்கக் கூறியபோதுதான் நான் எத்தனை பெரிய விஷயத்தைப் பண்ணியிருக்கிறேன் என்று எனக்கே புரிந்தது. 


அதன் தொடர்ச்சியாகத்தான் இத்தனை விஷயங்களையும் ரீவைண்டில் ஓட்டி ஒரு பெரிய சினிமாவையே கிட்டத்தட்ட நிகழ்த்தியிருக்கிறோம் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

”சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” என்று வைரமுத்து இந்தியன் படத்தில் எழுதியிருப்பார். சின்னச்சின்ன அங்கீகாரங்களில்தான் வாழ்க்கையுடன் நம்மை ஒட்ட வைக்கும் பசை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

பை தி வே, விக்னேஷ் என்பது பயலின் பெயர்.
Related Posts Plugin for WordPress, Blogger...