Oct 15, 2017

ஸாட்நேம் சுப்பி ஸார்

அகிலுக்குப் பள்ளிக்கூடத்தில் கோடை விடுமுறைத் தொடக்கத்திலேயே இந்த ஆண்டுக்கான புத்தகங்கள் தந்துவிட்டார்கள். தமிழ்ப் புத்தகம் மட்டும் அச்சேறி வராததால் பள்ளி தொடங்கியபின் தருவோம் எனப் புத்தகப் பட்டியற்சீட்டில் குறித்துத் தந்தனர்.

பள்ளி துவங்கி இரண்டுநாள் ஆகியிருந்த நேரம் அது. அன்று பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கியதும் உற்சாகமாகத் தன் பையைத் திறந்து புதுப் புத்தகத்தைக் காட்டினான்.

"புக் குடுத்துட்டாங்கப்பா!", சின்னச்சின்ன விஷயங்களுக்கும் உற்சாகத்தின் உச்சிக்குச் செல்ல குழந்தைகளிடம்தான் கற்க வேண்டும்.

"ஆனா வெற்றிக்கு புது புக் தரவேயில்லப்பா", தன் வகுப்புத் தோழனைச் சுட்டினான் அகில்.

நான் என்ன என்று கேட்பேன் என்று உணர்ந்தோ என்னவோ உடனடியாக… "இந்த வருஷத்துல இருந்து ஹிந்தி போட்டுருக்கோம்", என்றார் அவன் அம்மா.

"ஓஹோ...", என்று முடித்துக் கொண்டேன்.

மேலே கேட்டால் "தமிழ் கட்டாயப் பாடமில்லை. இரண்டாம் வகுப்பு வரை படித்த தமிழே வாழ்க்கைக்கும் போதும். என்ன பஸ், ட்ரெய்ன், நேம்போர்டுல்லாம் எழுத்துக் கூட்டிப் படிச்சா போதாதா? ஐந்திலிருந்து ஃப்ரெஞ்ச் சேர்க்க வேண்டும்" என்றெல்லாம்தான் பதில் வரும், சர்வநிச்சயமாய்.

#StopHindiImposition எனும் ஹாஷ்டேகை அவர் முகத்திற்கு முன் நீட்ட முடியாதது வெட்கமாகத்தான் இருக்கிறது.

பிறகு எதுக்குங்க வெற்றிச்செல்வன்'னு அழகா பேரு வெச்சீங்க எனக் கேட்டால், "ஸாட்நேம் சுப்பி ஸார்" பாணியில் "வீட்ல அநிருத்'னுதான் கூப்பிடறோம் சார்", என்ற பதில் கிடைத்திருக்குமோ என்னவோ...!?

Oct 2, 2017

அணியும் பணியும்....

நன்றி: http://www.stage3.in

மனசை முள் கொண்டு கீறினாற்போல ஒரு விஷயம்.

கௌதம் மேனனின் "அச்சம் என்பது மடமையடா" கே.டிவியில் ஓடிக்கொண்டிந்தது. பாடல்களுக்காகவே இந்தப் படத்தை FDFS பார்க்க நினைத்தவன், படம் வெளியானபோது டெக்ஸாஸில் இருந்ததால் அது இயலாமற்போனது. பிறகு வாழ்க்கை பிசிபிசி ஆகி படமே மறந்துவிட்டிருந்தது.

இன்று நான் பார்க்கத் தொடங்கிய போது "ராசாளி" பாடல் பாதியிலிருந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் முடிந்த இரண்டாவது நிமிடம்  "அவளும் நானும்" பாடல் தொடங்கியது. அவளும் நானும் நிறைந்த அடுத்த நிமிடம் "தள்ளிப் போகாதே" தொடங்குகிறது. தொலைக்காட்சிக்காரர்கள் கத்தரி ஏதும் இடையில் வீசி நடுவில் வரும் காட்சிகளை அவ்வளவு தூரம் வெட்டி வீசவில்லை என நம்புகிறேன்.

அதன் பின் நான் பார்த்த முப்பது நிமிடங்களில் எந்தப் பாடலும் இல்லை. படத்தின் மிச்சப் பாடல்கள் இரண்டும் அதற்கு முன்னதாக அதே போல back to back ஓடினவோ என்னவோ. 

கெளதம் புதுமை இயக்குனர்தான். பாட்டு இல்லாமல் படம் எடுப்பார். ஒட்டுமொத்தப் படத்திலும் இசையே இல்லாமல் (இசையமைப்பாளரும் இல்லாமல்) படம் எடுப்பார். 

அறுபதுகளுக்கு முன் வந்த நம் திரைப்படங்களில் இப்படி back to back பாடல்கள் இருக்கும். ஆனால் அந்தப் படங்களில் மொத்தம் பதினைந்து இருபது பாடல்கள் கொட்டிக் கிடைக்கும். எழுந்தால், நின்றால், நடந்தால், விழுந்தால் பாடல்கள் ஆரம்பித்துவிடும்.  

இந்தப் படத்தில் என்னவோ அப்படி ஏதும் உறுத்தாமல் பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக அழகாகக் கோர்க்கிறார் கௌதம். படத்தின் மொத்தப் பாடல்களையும் படத்தின் முன் பாதியிலேயே முடித்து விட்டு படத்தின் பின் பாதியில் வேகத்தடைகள் ஏதுமின்றி படத்தை ஓட்ட நினைத்திருக்கலாம் கௌதம்.

இங்கே கீழே நான் காப்பி பேஸ்ட் அடித்திருப்பது சென்ற வருடம் ஜூன் மாதம் இப்படப் பாடல்கள் வெளியான புதிதில் நான் பேஸ்புக்கில் எழுதியது. இன்று படம் பார்க்கும்போது மீண்டும் மனசை முள்ளால் கீறினது போல வலித்துக் கொண்டே இருந்தது.

தன் திரைப்படப் பாடல்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தரும் கௌதம் இந்த "அணியும் பணியும்" விஷயத்தை எப்படி மிஸ் செய்தார் என்பதுதான் இங்கே எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். 

இதை சிலாகித்து மொழி பெயர்ப்பவர்களும் துரிதஸ்கலிதர்களாக "Team and Humility: என்றே முழி பேர்க்கிறார்கள். வலி மிகுகிறது. 


அணியும் பணியும்....


அச்சம் என்பது மடமையடா படத்திற்காக ரஹ்மான் கொடுத்திருக்கும் பாவேந்தரின் “அவளும் நானும்” பாட்டைக் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன் - இன்னும் இல்லையெனில் < https://www.youtube.com/watch?v=g-dWqptsFfE > இந்த இணைப்பில் கேளுங்கள்.
இந்தப் பாடல்தான் நான்கைந்து நாளாக என்னுள் சுழன்று கொண்டிருக்கிறது. என்னைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.
கடந்த மூன்று நாளாய் தினம் காலை எழுந்ததும் என் facebook ஸ்டேடஸ் இந்தப் பாடலின் இரண்டு வார்த்தைகளில் துவங்கியது. அவை எல்லாம் சிலாகிப்புகள். பாவேந்தரின் வரிகள் குறித்த என் வியப்பும் ஆச்சர்யங்களும். இத்தனைக்கும் மிக எளிய வரிகள்தாம்.
இன்றைய ஆச்சர்யம் இந்தப் பாடலின் இடையே "அணியும் பணிவும்" என்று விஜய் யேசுதாஸ் பாடுவதே. பாடலில் இரண்டு இடங்களிலும் "பணிவும்" என்றே பாடுகிறார் விஜய் யே.
இந்தப் பாடல் ரஹ்மானின் concept என்பதால் உச்சரிப்பு அவர் சொல்லிக் கொடுத்ததாய்த்தான் இருக்கும்?
"நானும் அவளும் அணியும் பணிவும்" என்றால் என்ன அர்த்தம் வரும்?
Team and Humility? Team and Modesty?
"நானும் அவளும் அவையும் துணிவும்" என்ற வரிகளில் பெரிய கார்ப்பரேட் பாடம் உள்ளது என்று இருதினம் முன் ஸ்டேடஸ் போட்டிருந்தேன்.
நானும் அவளும் "அணியும் பணிவும்" என்ற வரிகளில் அதேபோல் இன்றைய கார்ப்பரேட் கலாசாரத்தை அன்றைக்கே புட்டு வைத்தார் பாவேந்தர் எனலாமா ஆன யோசித்தாலும் ஏதோ இடிக்கிறது.
அணி என்பதற்கு அலங்காரம் என்ற பொருளும் இருப்பதால் "எவ்ளோ மேக்கப் போட்டுக்கினு ஜம்முன்னு இருந்தாலும் அடக்கவொடுக்கமா இருக்கணும் கண்ணு" என்ற பொருள் வருகிறதோ என்றும் யோசித்துவிடடேன்.
பாவேந்தர் கவிதைத் தொகுப்பு என்னிடம் இல்லாததால், இணையத்தில் தேடியதில் இரண்டு இடங்களில் "அணியும் பணியும்" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அடடே! இது சரியாக வருகிறதே.
"நானும் அவளும் அணியும் பணியும்" - Team and Work. இதுதான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இது சரியான வரி என்றால் இதை எப்படி சரிபார்க்காமல் பாடலைப் பதிந்து வெளியிட்டிருக்கிறார்கள்? இடையில் ஒருத்தருக்குமா "அணியும் பணிவும்" என்ற வரிகளில் ஏதும் சந்தேகம் வந்திருக்காது?
இசை தந்தவர்? அவரது உதவியாளர்கள்? பாடலுக்கு உழைத்திட்ட இதர இசைக்கலைஞர்கள்? பாடியவர்? படத்தின் இயக்குனர்?
மிகவும் ரசித்துத் தின்று கொண்டிருந்த ஒரு அபார விருந்தின் இடையே பல்லிடுக்கில் சிக்கிய கல்லாய்....!!!
இதனிடையே இந்தப் பாடலுக்கு யூட்யூயில் ஓடும் ஆங்கில வரிகளில் இதனை Anaiyum Panivum என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆஹ்ஹா....!!
Related Posts Plugin for WordPress, Blogger...