ஏதேனும் ஐநூறு வார்த்தைகள் கிறுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய பதிவு இது. படிக்கலாம், அல்லது வேறேதும் உருப்படியான விஷயமும் பண்ணலாம். உங்கள் சாய்ஸ்!
பொதுவாகச் சொல்லுவார்கள், நூலகத்தில் மூடிக்கிடக்கும் புத்தகத்தைப் போல நாம் இருக்கவேண்டுமாம். அப்போதுதான் நமக்கு மதிப்பு உண்டாம். தேவையானவர்கள் தேவையான தருணத்தில் நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை அறிய தானாகவே வருவார்களாம்.
இந்த அறிவுரைக்கு சற்றும் தொடர்பில்லாத நான் ஒரு வளவளா கேஸ்.
பார்த்திபன் வடிவேலு காமெடி ஒன்று உண்டு. பார்த்திபன் மௌனவிரதம் இருந்த நேரமாகப் பார்த்து அவரை வாய்பேச முடியாதவர் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் வந்து சிக்குவார் வடிவேலு. விரதம் கலைந்தபின், "எனக்கு சின்னவயசுல பேச்சு சரியா வராதாம். நல்லா பேச்சு வந்தா வாரம் ஒருக்கா மௌனவிரதம் இருக்க வைக்கறதா எங்க அம்மா வேண்டிக்கிச்சி", என்பார் பார்த்திபன். "உனக்கு? பேசவராது?", இது வடிவேலு. "சின்னவயசுல", என்பார் பார்த்திபன்.
என் கேஸும் அதேதான். ஏழாம் வகுப்புவரை பேச்சு என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவன் நான் என்றால் என் வட்டத்தில் யாரும் நம்பமாட்டார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், "அம்மா எங்கடா?", என்று கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க எனக்குக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் பிடிக்குமாம்.
இப்போது எனக்குப் பேச்சு வராது என்றால் அதை நம்பும் ஒரே ஜீவன் என் மனைவியார் மட்டுமே. "என்கிட்ட எங்கனா பேசறீங்களா நீங்க? ஒண்ணா மொபைலு இல்லைன்னா கம்ப்யூட்டரு. என்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா இது ரெண்டுல ஒன்னுத்த நீங்க கட்டியிருக்கலாம்", என்பார். நான் யாரிடமேனும் போனில் பேசிக்கொண்டிருக்கையில் பின்னணியில், "டேய், வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க கூட ஒரு மனுஷனை நேரம் செலவு பண்ணவிடாம என்னடா போன் வேண்டிக்கெடக்கு. வைடா போனை", என்று என்றேனும் நீங்கள் போன் செய்கையில் பின்னணியில் ஏதும் குரல் கேட்டால் மிரண்டுவிடாதீர்கள். இப்போதே எச்சரித்து வைக்கிறேன்.
சரி, வளவளா பேச்சுக்கு வருவோம். வளவளாவெனப் பேசுபவர்களை சிலருக்குப் பிடிக்கிறது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் சிலருக்குத்தான் பிடிக்கிறது. பல பேருக்குப் பிடிப்பதில்லை. அதற்கான காரணத்தைப் பார்த்தீர்களேயானால் அப்படிப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றா திறந்த புத்தகமாக இருப்பார்கள் அல்லது எதையும் அல்லது எல்லாவற்றையும் நேருக்கு நேராய் விமர்சிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இன்றைய அவசர உலகில் சத்ருக்கள் அதிகம் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
இன்னொரு பக்கம், "நேராப்பேசு, விமர்சனம் பண்ணு; வேணாங்கலை. வெளிப்படையாப் பேசு; கேட்டுக்கறேன். ஆனா, சுருக்கமாப் பேசு எனக்கு நெறைய வேலையிருக்கு", இப்படித் திரியும் கூட்டம் ஒன்றும் உண்டு.
சமீபத்தில் ஒரு இணையக்குழும விவாதத்தில் சோஷல் மீடியாவின் தாக்கம்தான் நம்மை எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்ல / செய்ய வைக்கிறது என்றார் நண்பர் ஒருத்தர். வம்புமடம் போல எத்தையோ மென்று தின்று துப்பிவிட்டு டைம்லைன் கடந்தவுடன் மறந்துவிட்டுப் போய்விடவேணும். அவ்வளவுதான்.
இணைய வாழ்க்கையின் தாக்கம் அல்லது அவசரயுகத்தில் அடுத்த பஸ்ஸை/வேலையை/பிசினசை/ஏதோவொரு வாய்ப்பை/ஸ்கூல் அட்மிஷனை என்று ஒன்றைப் பிடித்தாக வேண்டிய பரபரப்பில் இருப்பவர்களிடம் போய் ஆயிரத்து இருநூறு வார்த்தைக் கட்டுரை ஒன்றைக் கொடுத்து, "கொஞ்சம் வாசியுங்களேன், நல்லா இருக்கு", என்றால் சப்பென்று உங்கள் கன்னத்தில் அறை விழுவது திண்ணம்.
இன்னும் ஒரு கூட்டமும் உண்டு, "என்ன வேணாப் பேசு; ஆனா எல்லாத்தைப் பத்தியும் பேசாத". அதாவது இவர்களுக்கு ஒரு மனிதர் எல்லா சப்ஜக்டுகளையும் தொட்டுப் பேசினால் பிடிக்காது. இப்படிப்பட்ட ஒவ்வாமை கொண்ட மனிதர்களின் மனோநிலை, நிலைப்பாடு பற்றி ஏதேனும் மனவியல் ஆராய்ச்சி உண்டா எனத் தெரியவில்லை. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், ஹீரோ என்று எல்லாத் துறைகளிலும் கால்பதித்த ஒரு மனிதரை நம்மில் எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது சொல்லுங்கள். நமக்கு கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அவர் சொல்லும் "டண்டணக்கா யே டனக்குனக்கா மட்டுந்தானே!"
ஆயிரத்து இருநூறு பக்கம் என்று சொன்னேனல்லவா? அப்படிச் சொன்னதும் நிறைய பேசுபவர்கள் இருவர் நினைவுக்கு வருகிறார்கள். என் மனம் கவர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் அவர்கள். இரண்டு பேருமே அவரவர் தளத்தில் நிறைய கதைப்பவர்கள். நிறைய என்றால் சும்மா நி...றை...ய.... என்று வாசிக்காதீர்கள். நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கதைப்பவர்கள். என்னவும் பேசுவார்கள். எல்லாமும் பேசுவார்கள். ஆனால் தெரிந்ததை மட்டும் பேசுவார்கள்.
ஒருவர் இலக்கிய எழுத்தாளர் + இணையத்தில் சூறாவளித்தனமாய்க் கதைப்பவர். இவரைப் பொறுத்தமட்டில் நாம் மாங்கு மாங்கென்று எழுதும் ஐநூறு வார்த்தைக் கட்டுரைகள் எல்லாம் "மிகச் சுருக்கமானவை". ஏனென்றால் இவர் கருத்தில் ஒரு நல்ல கட்டுரை என்பது ஆயிரத்து இருநூறு வார்த்தைகள் இருக்கவேணும்.
மற்றொருவர் பிரபல எழுத்தாளர் + டிவிட்டரில் ஒரு சூப்பர்ஸ்டார். இந்த இருவரில் ஒருவருக்கு சில ஆயிரம் அபிமானிகளும் பலநூறு அ'அபிமானிகளும் உண்டு. இன்னொருவருக்கு எண்ணிக்கையில் இங்கேயங்கே மாற்றமிருக்கலாம். இவர்களைப் பலருக்குப் பிடிக்கக் காரணம் இவர்கள் பேசும் பேச்சின் அடர்த்தி. சிலருக்குப் பிடிக்காமல் போகும் காரணம் இவர்கள் எல்லாவற்றையும் பேசுவதும் , நேரிடையான விமர்சனங்களை வைப்பதுவும்.
நிறையப் பேசாதவர்கள் உம்மணாமூஞ்சி என்றோ சிடுமூஞ்சி என்றோ பட்டப் பெயர்கள் மட்டும்தான் வாங்குகிறார்கள். ஆனால் நிறையப் பேசுபவர்கள் கொஞ்சம் பட்டப்பெயர்களோடு சேர்த்து நிறையவே கெட்டப்பெயர்களும் வாங்குகிறார்கள்.
அதிகமாகப் பேசாமல் இருப்பது சரிதான். அளவாகப் பேசி நல்ல பெயர் எடுத்தாலும் சரிதான். ஆனால் ஒன்றுமே பேசாமல், "அவரு ரொம்ப சைலன்ட்டுங்க" என்று நல்ல பெயர் எடுப்பவர்களைப் பார்த்தால்தான் நமக்கு..... நறநற!
1 comment:
/// ஆனால் நிறையப் பேசுபவர்கள் கொஞ்சம் பட்டப்பெயர்களோடு சேர்த்து நிறையவே கெட்டப்பெயர்களும் வாங்குகிறார்கள். ///
மிகச்சரியே...
Post a Comment