Dec 2, 2012

கானுயிர் வாரமும் ஜெமோ கடிதமும்

வனவிலங்குகள் வாரத்தையொட்டி கடந்த மாதம் ஒரு வாரம் முழுவதும் வனவிலங்குகள் குறித்த புத்தகங்களை ஆம்னிபஸ் தளத்தில் அறிமுகம் செய்தோம். 66A விவகாரத்தில் தமிழ் இணையவுலகம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த் நேரம். எனவே சத்தமின்றி , வழக்கமாகச் செய்யும் விளம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி நாங்கள் இந்தப் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்தோம். 

ஐந்தாறு புத்தக அறிமுகங்கள் வந்திருந்தன. அன்று ஜெமோ தளத்தில் “மிருகங்களைப் பற்றி” என்ற பதிவு வந்திருந்தது. அடடே! ஜெமோ’வும் வனவிலங்கு வாரத்திற்கு ஏதோ எழுதியிருக்கிறார் போல என்று பார்த்தால், நம் “ஆம்னிபஸ்” தளத்தின் வனவிலங்கு வாரப் பதிவுகள் பற்றி நான்கு வரிகள் எழுதிவிட்டு பதிவுகளுக்கெல்லாம் இணைப்பு தந்திருந்தார் ஜெமோ.

மகிழ்ச்சியுடன் இந்தக் கடிதம் எழுதினேன்:

அன்புள்ள ஜெ,
ஆம்னிபஸ் தளத்தில் வந்த வனவிலங்கு வாரம் தொடர்பான கட்டுரைகள் குறித்த உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
நாங்கள் ஆம்னிபஸ் தளத்தில் ‘வனவிலங்கு வாரம்’ கொண்டாடினதைப் பற்றி எங்கள் குழுமம் தவிர்த்து யாரிடமும் பேசவில்லை. உங்கள் பதிவு வருமுன் அதுபற்றி எங்கள் யாருடைய தளத்திலும் அதுபற்றி விளம்பரம் செய்யவும் இல்லை. எனினும் இதனையும் கவனித்துத் தாங்களாகவே தந்த அறிமுகம் மிக்க மகிழ்ச்சியையும் மேலும் நிறைய புத்தகங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் தருகிறது.
நன்றி கலந்த அன்புடன்,
கிரி ராமசுப்ரமணியன்

ஜெமோ அதற்கு எழுதியிருந்த பதில்:

அன்புள்ள கிரி
தொடர்ச்சியாக ஆம்னிபஸ் தளத்தை வாசித்துவருகிறேன். சிறப்பாக எழுதுகிறார்கள். ஆர்வமும் தொடர் உழைப்பும் கொண்ட முயற்சிகளுக்கு எப்போதுமே மதிப்புண்டு வாழ்த்துக்கள்
ஆம்னிபஸ் இணையதளத்தில் ஒரு பட்டியல் செய்யலாம். அதில் விமர்சிக்கப்பட்டுள்ள நூல்கள், ஆசிரியர்களுக்கு அகரவரிசைப்படி ஒருபட்டியலைக் கொடுத்தால் வரும்காலத்தில் குறிப்புகளை தேடி எடுக்க வசதி. இப்போதே நிறைய கட்டுரைகள் ஆகிவிட்டன
ஜெ

ஜெமோ போன்றோரும் நம் தளத்தைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள் என்னும் சேதி ஒருபுறம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. மறுபுறம் எங்கள் எல்லோருக்கும் பொறுப்பு இன்னமும் கூடுகிறது. 

ஜெமோ குறிப்பிடும் ஆர்வமும் தொடர் உழைப்பும் எங்களிடம் நிலைத்திருக்க வேணும்.

இந்தப் பட்டியல் விஷயத்தை சிரத்தையாகச் செய்யுமாறு ஆம்னிபஸ் அன்பர்கள் முதலிலிருந்தே என்னை ஓட்டிக் கொண்டுள்ளார்கள். நான்தான்  ”தோ தோ” என்கிறேன். ஜெமோ’வும் சொல்லிவிட்டார். இனியாவது செய்தாகவேணும்.

Related Posts Plugin for WordPress, Blogger...