உன்னாலே உன்னாலே, மங்காத்தா இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
ஆரம்பம் தொட்டு, கடைசி காட்சிக்கு முந்தின காட்சி வரை அங்கங்கே தூவி விட்டாற்போல் சில சுவாரசிய காட்சிகளும், மற்றபடி படம் நெடூக இழுவையாக சீட்டில் உட்கார முடியாதபடி இருக்கும் படங்கள் இரண்டுமே. இறுதியில் “நச்”சென்று இறங்கும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால்.... “அரேரே படம் சூப்பரப்பூ”, என்று நம் மூக்கின் மீது மைக்கை வைக்கும் தொலைக்காட்சி நிருபரிடம் நாம் சொல்லிவிட்டு நடையைக் கட்டலாம். இந்த வரிசையில் சூப்பர்ஸ்டாரின் அருணாசலத்தையும் சேர்த்துக் கொள்வேன் நான்.
”கடல்” க்ளைமாக்ஸுக்கு முந்தின காட்சிவரை ஒரு கச்சிதமான மணிரத்னப் படம். க்ளைமாக்ஸ் காட்சியில் க்ராஃபிக்ஸ் ப்ரம்மாண்டத்திற்கு யோசித்த யோசனையை படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்ற டிஸ்கஷனில் ”கடல்” படத்தில் பணிபுரிந்த ஜீனியஸ்கள் விவாதித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
திரைக்கதையில் இருக்கும் கனெக்டிவிடி ப்ரச்னையும், படத்தில் எந்தக் காட்சியிலும் நம்மால் ஒன்ற முடியாமல் செய்யும் யதார்த்தத்திலிருந்து ரொம்பவே விலகிய நாடகபாணியில் படம் பயணிப்பதும் அடுத்தது.
மாற்றான் படத்தில் கே.வி. ஆனந்த் செய்த அதே தவறு இந்தப் படத்தில் மணி செய்ததுவும். வில்லத்தனம் நன்கு செய்யத் தெரிந்த வெயிட்டான நடிகரை படத்தில் சேர்த்தாலே படம் பாஸ்மார்க். அர்ஜூன் போல “எனக்கெல்லாம் வில்லன் வேஷம் செட்டாவாது சார். வுட்றுங்க”, எனச் சொல்பவர்களை வில்லத்தனம் பண்ண வைத்தது படத்தின் பெரிய ப்ரச்னை.
க்ளைமாக்ஸில் அரவிந்த்சாமியும், அர்ஜூனும் படகில் பண்ணும் ஏற்ற இறக்கக் காட்சிகளில் நாம் கீழே இறங்கணுமா, மேலே ஏறணுமா எனப் புரியாமல் பேந்தப் பேந்த விழிக்கிறோம்.
படத்தின் ப்ளஸ் என நிறைய இருக்கிறது. ஒளிப்பதிவு (இது மணி படத்தில் என்று சொதப்பியிருக்கிறது?), ஒளிப்பதிவில் கடல், back water சார்ந்த காட்சிகள் மட்டுமல்லாமல், நிறைய இடங்களில் கேமரா ஆங்கிள் கலக்குகிறது (உம்: அரவிந்த்சாமி மீண்டும் ஊர்வந்து இறங்கும் காட்சி), தென்பாண்டித் தமிழில் ஜெயமோகன் வசனம்-, சில சின்னச் சின்னக் காட்சிகளின் நுணுக்கம்... (உம்: ரத்தக்களரியாக அரவிந்த்சாமி வேனில் நடிக்கும் நடிப்பு, பொன்வண்ணனைக் கீழே சாய்த்துக் கத்தியெடுக்கும் காட்சியில் கவுதம் கார்த்திக்கின் “உஃப் உஃப்” நடிப்பு, ஏலே கீச்சான், மூங்கில் தோட்டம், அடியே தவிர்த்த பிற பாடல்களை படத்தில் ‘பல்ஜ்’ ஆக்காமல் காட்சிகளினூடே சேர்த்திருப்பது....
இப்படிப் படம் நெடூக நிறைய இருந்தாலும் இவை படத்தின் முழுமைக்கு பலம் சேர்க்கவில்லை.
மணிரத்ன, ஜெயமோஹ, ரஹ்மானிய த்வேஷர்களுக்கு ஒண்ணரை டன் லட்டைத் தந்திருக்கிறார் மணி.
No comments:
Post a Comment