Dec 21, 2014

இப்பல்லாம் யார் சார்.....

முன்குறிப்பு:இந்தப் பதிவு உண்மையிலேயே ஒரு சீரியஸ் பதிவு. சத்தியமாக சமூக அக்கறையுடன் எழுதப்பட்டது. 

--   --

நிஜ வாழ்வில் புருஷன் பொண்டாட்டி சண்டை, மாமியார் மருமகள் பிரச்னை, டேமேஜர் எம்ப்ளாயி பிரச்னைகளுக்கு இணையாக இந்த சாதி சார்ந்த அடிதடிகள் இணையத்தில் வாழ்வாங்கு வாழும் போல...! எத்தனை வருடம் ஆனாலும் கதை, திரைக்கதை, வசனம் என்று எதுவுமே மாறாத அதே வறட், வறட் பதிவுகள்... அதே அதே பின்னூட்ட அடிதடிகள். ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆயாசமாய் இருக்கிறது.

இணையம் வந்த புதிதில் இந்த சாதி சார்ந்த அடிதடிகள் எல்லாம் எனக்கு விசித்திரமாக இருக்கும். பார்ப்பனீயம், ஆரியம், திராவிடம், அடிவருடி, வந்தேரிகள் (றி?) மற்றும் இன்னபிற வார்த்தைகளை நாள்தவறாமல் வாசிக்கத் தொடங்கின போது கொஞ்சநாள் நன்றாகவே பொழுது போனது. பின்னர் நாளாக நாளாக ‘என்னாங்கடா டேய்’ எனும் ரேஞ்சுக்கு எரிச்சலானது. கொஞ்சம் உக்கிரமாகி நாமும் சற்றே “உர்ர்ர்ர்ர்ர்”, எனப் பொங்கவும் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொலைவெறியுமாகி, பின்னர் நிறுத்தி நிதானமாக யோசித்து, நம் ரத்தக் கொதிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம்மால் நாய் வாலையெல்லாம் நிமிர்த்த முடியாது என்று தீர்மானித்து மறுபடியும் சைலண்ட் வாட்சர் ரேஞ்சுக்கு எல்லாவற்றையும் மேய்வதோடு நிறுத்தும் நிலைக்கு வந்தாயிற்று.

பை தி வே, வெறுமனே ஆரியம், அடிவருடி, பார்ப்ஸ் என பொங்குபவர்கள், எதிர்ப் பொங்குனர்கள் எனக்கு ஓகே. நேரம் எப்போதாவது எச்சாய்க் கிட்டும் சில பொழுது போகாத தருணங்களில் பதிவுகள், பின்னூட்டப் பொங்கல்களைப் படித்து ரசிக்க ருசிக்க அவர்கள் உதவுகிறார்கள்.

ஆனால் பாருங்கள், சாதியற்ற சமூகத்தை சமைக்க இந்த ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், தத்தமது ப்ளாகுமே (blog) போதும் என கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் குதிப்போருக்கு ஆற்றுவதற்கு நிறையவே பிசிக்கல் வொர்க் இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். சீரியஸாகச் சொல்கிறேன். உட்கார்ந்த இடத்தில் பொங்கினால் ஒன்றும் உதவாது. உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு வாருங்கள். களமிறங்கி ஆற்றோ ஆற்று என்று ஆற்ற கடமைகள் ஆயிரம் உண்டு உமக்கு.

நிறைய விஷயங்களை நீங்கள் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். லேபர் வார்டிலேயே ஆரம்பித்தால் இன்னமும் க்ஷேமம்.


தமிழ்சார் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக் உலகத்தையும் தாண்டி உள்ள பரந்து விரிந்த உலகில் (கிட்டத்தட்ட சமீபத்தில்) நடந்த சம்பாஷனைகள் நான்கினை இங்கே தருகிறேன். உங்களுக்கு எவ்வளவு வேலை காத்துக் கிடக்கிறது என்பது சரியாய்ப் புரியும்.

இந்த நான்கு காட்சிகளுமே நான் வேலை பார்ப்பது போன்றதொரு நிறுவனத்தில் நடந்ததே:

காட்சி 1: புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பெண்ணிடம் விவரங்கள் சேகரிக்கும் நேரம்.

அலுவலர்: உங்க முழுப்பெயர் என்னம்மா? people file;ல அப்டேட் பண்ணனும் சொல்லுங்க.

புதியவர்: XYCABZ....

அலுவலர்: < ஆர்வ மிகுதியில் > நீங்க கேரளாவா?

புதியவர்: இல்லையே.

அலுவலர்: ஓ... ரைட். உங்க பேர்ல மலையாள வாடை அடிச்சதால கேட்டேன்.

புதியவர்: இல்லை சார் நாங்கல்லாம் ABCDFG < தன் சாதியின் பெயரை சொல்கிறார் >

அலுவலர்: மைண்ட் வாய்ஸ் - நான் கேட்டனா முருகேஷா?

காட்சி 2: 
அதே அலுவலகம். அதே அலுவலர். அதே போன்றதோர் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்.

அலுவலர்: அதே முதற்கேள்வி...

புதியவர்: ஆனந்த்  XXXYYY.

அலுவலர்: சாரி, உங்க surname இன்னொரு தடவை சொல்லுங்க.

புதியவர்: XXXYYY

அலுவலர்: pardon me. சரியாப் புரியலை. can you spell it?

புதியவர்: X X X Y Y Y - we are vaishyaas sir....

அலுவலர்: அதே கடைசி மைண்ட் வாய்ஸ்.

காட்சி 3: 

நகரின் மத்தியில் தன் நண்பரின் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. அது குறித்த தகவல்களை சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அன்பர்.

அன்பர்: நல்ல குடும்பமா வாடகைக்கு இருந்தா சொல்லுங்கப்பா.

அன்பரின் நண்பர்: பேச்சிலர்ஸ்ன்னா ஓகேவா சார்?

அன்பர்: இல்லப்பா வேணாம். ஃபேமிலியாத்தான் பாக்கறான் என் ஃப்ரெண்டு. May be XYCABZ < ஒரு சாதியின் பெயர் > பசங்களா இருந்தா ஓகே. பசங்க நல்லவங்களா இருக்கணும் பாரு.
பிகு: அன்பர் XYZABZ சாதியைச் சேர்ந்தவர் இல்லையாம்.
பிகு 2: விதி படத்தில் வரும் இடைச்செருகலான பாக்யராஜ் ஜோக்தான் நினைவுக்கு வந்தது.


காட்சி 4: மதிய உணவு வேளை. பக்கத்து மேஜை.

அன்பர் 1: ஆம்லெட் எடுத்துக்கங்கப்பா.

அன்பர் 2: இட்ஸ் ஓகே சார்., சாப்புடுங்க.

அ1: தட்ஸ் ஓகே.... எடு. நான் இன்னும் கை வெக்கல.

அ2: இல்ல சார். நான் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்.

அ1: வெஜிடேரியனா நீ?

அ2: யெஸ்

அ1: ???ரா? (ஒரு சாதியின் பெயர்....)

அ2: நீங்க பன்னிக் கறி திம்பீங்களா?

அ1: சீச்சீ

அ2: அப்போ நீங்க ???மா? (ஒரு மதத்தின் பெயர்)

(ஐந்து நிமிடத்திற்கு ஒரு tug of war லெவலுக்கு இருவருக்கும் பிடிகொடா விவாதம். ஐம்பத்தியிரண்டு சாதிகளையும் அவர்களின் உணவு முறைகளையும் அங்கே அந்தட் டேபிளில் விரித்துப் பரப்புகிறார்கள்)

இடையில் என்னைப் போன்றதொரு வேலைவெட்டி இல்லாத (இணையத்திலும் இருக்கும்) அன்பர் உட்புகுகிறார்

அன்பர் 3: யோவ்.... உங்களுக்கு வேற வேலையே இல்லையா? இப்போ எதுக்குய்யா சாதி பேர் சொல்லி ஒரு விவாதம்?

அன்பர் 1 & 2 (கூட்டாக): மிஸ்டர் புலவர், உங்க வெங்காய வெள்ளைப்பூண்டு பேச்சையெல்லாம் ஃபேஸ்புக் ஷேரிங்கோட நிறுத்திக்கோங்க. சும்மா இங்க வந்து உங்க டகுளு (!!??) வேலையெல்லாம் காட்ட வேணாம்.

அன்பர் 3: ங்ஙே.....

என்னருகே அமர்ந்திருந்த அன்பர் 4: கிரி, இந்த ஜாதியெல்லாம் ஒழிக்க முடியாதில்ல? 

நான்: (ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறு மோர்க் குழம்பு சாதத்தில் மூழ்கியிருக்க....)

அன்பர் 4: முடியாதுன்றீங்களா?

நான்: (கண்களில் கண்ணீர்ப் பெருக.... நாயகன் கமல் குரலில்): த்த்த்தெரியலியேப்பா......

Oct 5, 2014

ஆரம்பம்.....


Courtesy: The Hindu

இன்னும் 12 தினங்களில்.....!


Aug 6, 2014

தெலுசுகோ தெலுகு



ட்விட்டரில் #Telugu365 என்ற tag'ன் கீழ் ஒரு 365 தின ப்ராஜக்ட் துவக்கி கடந்த 25 நாட்களாக தெலுகு வார்த்தைகளுக்கு அர்த்தம் பகிர்ந்து வருகிறேன்.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குச் சரியாக தெலுகு தெரியாது. பிறந்தது கிருஷ்ணகிரி. வளர்ந்தது மேற்கு மற்றும் வட தமிழகம். அதிகம் போனால் திருப்பதியின் ஜருகண்டி ஜருகண்டி தெலுசு. கொஞ்சம் அருகே சித்தூரில் உறவினர் இருந்தமையால் அங்கே ஓரிருமுறை சென்று வந்தது உண்டு. இவை தாண்டி அக்கட தேசத்துடன் நமக்கு வேறெந்த எக்ஸ்ட்ரா ஸ்னானப்ராப்தியும் லேது.

வீட்டில் நாம் பேசும் மொழி தெலுகு. அது எப்படி எங்கள் மாத்ருபாஷா ஆனது என்பதன் வரலாறையும் நாம் அறியோம். 

நாம் பேசும் உடைந்த தெலுகுவை சரி செய்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எப்போதும் நமக்கு உண்டு. அலுவலகத்தில் அதனாலேயே தெலுகு பேசும் அக்கட தேசத்து நண்பர்களிடம் சரியோ தவறோ தெலுகுவில் பேசி விடுவது. அவர்கள் திருத்தம் சொல்லிச் சொல்லி இப்போது 25% fluency என்பது 30% வரை என்று வந்துள்ளது. ஆந்திரத் தெலுகு பேசுமளவிற்கு / எழுதுமளவிற்கு பண்டிதன் ஆகும் எண்ணமெல்லாம் இல்லை. எனினும், தெரிந்ததை கொஞ்சம் மேலும் சரியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே இந்த ப்ராஜக்டைத் தொடங்கியதன் நோக்கம்.

எனக்குத் தெரிந்த தெலுகுவை வைத்து, நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, இணையத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு இந்த ப்ராஜக்டைத் துவங்கியுள்ளேன்.

ஆர்வம் இருப்பவர்கள் https://twitter.com/ipammal என்ற என் ட்விட்டர் ஹேண்டிலையோ அல்லது https://twitter.com/hashtag/Telugu365 எனும் ஹேஷ்டேகையோ தொடரலாம்.

இந்த ப்ராஜக்டின் முடிவில் புதிதாக சிலப்பல வார்த்தைகள்/அர்த்தங்களை நாமும், நம்மால் ஒரு பத்து வார்த்தைகளை மற்றோரும் கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. மேலும், இந்த ப்ராஜக்டின் முடியுமுன் தெலுகுவை தட்டுத்தடுமாறியேனும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

இவற்றை பத்து பத்து ட்வீட்டாகத் தொகுத்து ஒவ்வொரு பதிவாக இங்கே அவ்வப்போது நம் ப்ளாகில் பகிர்கிறேன். அந்தப் பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட விரும்பும் பதிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்  :)

Jul 19, 2014

காலமென்னும் தேர்

மாதவன் பெங்களூரிலிருந்து வந்திருக்கிறான். அங்கே பிறந்து, படித்து, வளர்ந்த தமிழ்ப்பயல். ப்ரமோஷன் தர்றோம் என்று சொன்னவுடன் ட்ரான்ஸ்ஃபர் பேப்பரைக் கையில் வாங்கிக்கொண்டு பொட்டி கட்டிக்கொண்டு சென்னை வந்துவிட்டான். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனியே பேயிங் கெஸ்ட் அகாமடேஷன் பெருங்குடியில்.

வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று எங்கேயோ படித்திருப்பான் போல, வந்துவிட்டான் பாவம்.

மூன்று வாரங்கள் கடந்த நிலையில் சென்ற வாரயிறுதிக்கு பெங்களூர் போகத் தயாரானவனிடம், “என்னய்யா ப்ளான் வீக்கெண்டுக்கு?”, வினவினேன்.

”ஊருக்குதான் சார். கொஞ்சம் திருவான்மியூர்ல ட்ராப் பண்றீங்களா? அங்கயே டைரக்டா ட்ரெய்ன் டிக்கெட் வாங்கிக்கிட்டு சென்ட்ரல் போயி லாஸ்ட் ட்ரெய்ன் ஏறிடுவேன்”

“கேள்வி கேட்டதுக்கு இப்டியா.... சரி வாய்யா ட்ராப்பிடறேன். மண்டே லீவா? லாங் வீக்கெண்ட்?”

“அதெல்லாம் இல்லை சார். வீக்கெண்ட் மட்டும் அப்டியே ஃப்ரீஸ் ஆகிட்டா தேவலாம்”, என்றான்.

சிரித்தபடி தலையாட்டிக் கொண்டேன்.

“என்ன சார்?”

“ஒண்ணுமில்லே”, என்றேன்.

அவன் சொன்னதைக் கேட்டதும் இந்தப் பாடலின் வாலி வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு;
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு?



இந்த வரிகளைக் கேட்ட நாள்முதல் அதைச் சிலாகிக்காத நாளே இல்லை. இப்படி யோசிக்க முடிவதால்தான் அவன் கவிஞன் என்று நான் நினைத்துக் கொள்வது.

ஆனால் இந்தக் குறிப்பிட்ட வரிகளுக்கான நூலை வாலி எங்கே பிடித்தார் என்று வெகு சமீபத்தில்தான் புலப்பட்டது நமக்கு, கீழ்காணும் இந்தப் பாடலில். 

வாலிபக் கவிஞருக்கே இன்ஸ்பிரேஷன் தந்தவர் நம்ம கங்கை அமரன். அந்த வரிகள் என்ன என்று உங்கள் தேடலுக்கே விடுகிறேன்.



இரண்டு பாடலுக்கும் சிச்சுவேஷன் என்னவோ கதைநாயகியின் விரகதாப சிச்சுவேஷன்தான். முன்னது கல்யாணத்துக்கு முன்னே நாயகி நாயகனுடன் இணையும் கட்டம்; பின்னது கல்யாணமான நாயகி வேற்று ஆடவனுடன் கொள்ளும் கூடல்போதில் வருவது.

கங்கை அமரன் சொல்வதற்கு நேரெதிரான வரிகளை வாலி சொல்கிறார். ஆனால் இரண்டு இடங்களிலும் நாயகியின் எதிர்பார்ப்பில், மன வெளிப்பாட்டில் இம்மியளவும் வித்யாசமில்லை.

வாலிக்கு கங்கை அமரன் இன்ஸ்பிரேஷன் என்றால், கங்கையாருக்கு கண்ணதாசனாய் இருந்திருக்கலாம். கண்ணதாசனுக்கு கம்பன்? அப்போ கம்பனுக்கு?

ok, coming back to மாதவன்... அவன் வார இறுதியில் காலமெனும் தேர் ஆடிடாமல் நின்றுவிட எதிர்பார்ப்பது அவன் சென்னையில் சந்திக்கும் கல்ச்சுரல் ஷாக் என்று அவதானிக்கிறேன். இதைப் பற்றி தெளிவாய்ப் புரிந்து கொண்டபின் தனியாகத்தான் அதை எழுதவேணும் :)


Jun 29, 2014

படைச்சவன் கொங்கை ஓயல்ல

நேற்று ட்விட்டரில் நிகழ்ந்த வாலி பற்றிய ஒரு சுருக்கமான சம்பாஷனை ஒரு பழைய நிகழ்வை நினைவுப்படுத்தியது....

-----

தோளில் வந்து விழுந்த கை யாருடையது என திரும்பிப் பார்த்தேன்.

”சார், ஒரு டவுட்டு. உங்களைக் கேட்டாதான் சரிவரும்”

“சொல்லுங்க”, என்றேன்.

”கொங்கை’ன்னா என்ன சார்”, கேட்டார் தோளைத் தொட்ட நண்பர்.

’அது ஏன்யா என்னப் பாத்து இந்தக் கேள்வியக் கேட்ட?’ என்று முகம்சுளிக்க நான் பார்ப்பதை உணர்ந்து...

“நீங்கதான சார் நம்ம சர்க்கிள்லயே புலவர், அதான் உங்க கிட்ட கேட்டா பதில் கெடைக்கும்னு....”

“யோவ்! நான் என்னைக்குய்யா சொன்னேன் நான் புலவன்னுட்டு”

நண்பர் சற்றே சத்தமாகத்தான் கேட்டதைக் கேட்டதால், சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். இரண்டு இருக்கைகள் தாண்டி அமர்ந்திருந்த பெண் கர்மசிரத்தையாக தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டிருந்தாள்.

நண்பர் வேறு யாருமல்ல. நாம் இவரைப் பத்தி முன்னமே எழுதியிருக்கோம் இங்கே.

“உமக்கு ஏன்யா திடீர்ன்னு இந்த சந்தேகம், இப்படி சந்தேகம்?”

“நம்ம வாலி ஒரு பாட்டுல எழுதியிருக்காரு. அதான் அர்த்தம் தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன் சார்”

மனுஷர் ஒரு மிகப் பெரிய வாலி ரசிகர். எப்படி, ஏன் ரசிகர் என்று நாம் அறியோம். ஆனால் வாலி வெறியர் போல தம்மை வெளிப்படுத்திக் கொள்வார். நாம் ஏதேனும் ஒரு பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் அங்கே வாலியைக் கொண்டு இடைச் செருகுவார். ”சார், இதைவிட பெட்டரா வாலி எழுதியிருக்கிறார் சார்”, என்று வாலியின் பாட்டு ஒன்றினை சம்பாஷனைக்கு இடையில் தூக்கிப் போடுவார். வைரமுத்து பற்றி இவரிடம் பேசிவிடவே முடியாது. வைரமுத்துவை விட வாலிதான் பெட்டர் தெரியுமா என்று மறக்காமல் ஒவ்வொரு முறையும் சொல்லுவார். நான் மையமாகச் சிரிப்பதோடு சரி. நமக்கு வைரமுத்து, கங்கை அமரன், வாலி, நா.முத்துக்குமார் என்று எல்லோருமே லெஜெண்டுகள்தானே.

திடீரென்றுதான் நினைவுக்கு வந்தது.

“யோவ்! நீர்தான் வைணவ வழியைப் பின்பத்துறவராச்சே. இந்தக் கேள்வியே நீர் கேக்கப்படாதே?”

“அது ஏன் அப்படி சொல்றீங்க?”

”கோவர்த்தனைப் பார்க்காமல் பயனில்லாத கொங்கையைக் கிழங்கோடு பறித்து எறிந்து அழலை தீர்வேன் அப்படின்னு ஆண்டாள் எழுதியிருக்காங்களேய்யா?”

”திருப்பாவைலயா?”

“சரியாப் போச்சு. அது நாச்சியார் திருமொழி தம்பி”

”பாத்தீங்களா, நான் உங்களை புலவன்னு சொன்னது சரியாப்போச்சு”

“சரியாப் போச்சு. பேசிக்கிட்டே கூகுளக் கேட்டேன் சொல்லிடுச்சுய்யா”

“ரைட்டு. அதை நான் கவனிக்கலை. சரி அப்போ அது பிரபந்தம் இல்ல!”

“செத்தாண்டா சேகரு. யோவ்! அதுவும் நாலாயிரத்துல சேர்த்திதான்யா”

”அதுவும் கூகுள் சொல்லிச்சா”

”ஹே ராம். அது எனக்கே தெரியும்யா. இது பிரபந்தம்தான்.”

“இல்லை சார் பிரபந்தமெல்லாம் நான் அவ்வளவா படிச்சது இல்லை. எங்களுக்கு வேதம்தான் மெயின்”

“இதுவும் திராவிட வேதம்தானய்யா. சரி சரி! அந்த அரசியல், காண்ட்ராவெர்ஸிக்கெல்லாம் நான் வரல்லை. இந்த வார்த்தையை எங்க படிச்ச? அத்தச் சொல்லு”

“மரியான் படத்துல வருதே சார் பாட்டு”

“மரியான் படத்துல கொங்கையா?”

“ஆமா சார். வருதே!”

“????”

“ஓய ஓயல்ல!  எந்த நாளும் ஓயல்ல! என்னைப் படைச்சவன் கொங்கை ஓயல்ல”, இப்போதும் மீண்டும் சத்தமாக. திரும்பினால் அந்த துப்பட்டா பெண் சேஃப்டி பின்னை எடுத்து துப்பட்டாவை காபந்து பண்ணிக் கொண்டிருந்தார்.

“யோவ்! மெதுவாப் பேசுய்யா”

“ஏன் சார்? எதான கெட்ட வார்த்தையா?”

“கொங்கை’க்கு அர்த்தம் அப்புறமா சொல்றேன். ஆனா அதுக்கு முன்னால ஒண்ணு தெரிஞ்சிக்கோ. சோனாப்பரியா பாட்டுல வர்றது கொங்கை இல்ல, கொடுக்கும் கை. கொடுக்கும் கை ஓயல்ல’ன்னுதானே வாலி எழுதியிருப்பாரு”

“நோ நோ! இல்லை சார். கொங்கை ஓயல்லதான்”

“இல்லைய்யா! படைச்சவன் கொடுக்கும் கை ஓயல்ல”

“ஆர் யூ ஷ்யூர் சார்?”

“ஆக்சுவல்லி, கொங்கைன்னா என்னன்னா ........... “, சொன்னேன்.

அதற்கு மேல் நம்ம ஆளு அங்கே எப்படி ரீயாக்ட் செய்தார் என்பது, சுற்றுமுற்றும் யார் யார் இந்த சம்பாஷனையை கவனித்தார்கள் என்று கவனியாதது போல் கவனித்தது, மெதுவாக அந்த ஸீனில் இருந்து நழுவியதை எல்லாம் இங்கே வார்த்தையில் எழுதி வருணிக்க இயலாது.


Jun 25, 2014

வெல்லப் பிள்ளையார்

எழுத்தாளர் பா.ராகவனை சென்ற ஞாயிறன்று சந்திக்கப் போயிருந்தேன். “ஸ்டீவ் ஜாப்ஸ்” அப்புவும் உடன் வருவதாகச் சொன்னார். 

”ஒன்பதே முக்காலுக்கு குரோம்பேட்டைல மீட் பண்ணலாம். என்னை பிக்கப் பண்ணிடுங்க, அங்கருந்து பத்து மணிக்கு பாரா வீட்டுக்குப் போயிடலாம்”  என்று சொன்ன அப்பு ஒன்பது இருபத்தைந்துக்கு போன் செய்து, “சார், நான் சீக்கிரமாவே வந்துட்டேன். அதனால நான் நேரா பாரா வீட்டுக்குப் போயிடறேன். நீங்களும் வீட்லருந்து நேரா வந்துடுங்க”, என்று சொன்னதன் விளக்கம் எனக்குப் பின்னர்தான் புரிந்தது.

பாரா வீட்டிற்குப் போனபோது ’அட்வான்ஸ்’ அப்பு அங்கே தோசையை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். #நல்லவரய்யா!

ஓகே... ஒரு சம்பவம் அல்லது கதை:

தென்கச்சி சுவாமிநாதனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. அவர் ஆல் இந்தியா ரேடியோவில் “இன்று ஒரு தகவல்” சொல்லிக் கொண்டிருந்தபோது அவருக்கு நிறைய நேரங்களில் தகவல், துணுக்குகள் அன்றாடம் திரட்ட உதவியாக “ராமகிருஷ்ண விஜயம்” புத்தகம் இருந்ததாம். அவரது நிகழ்ச்சிக்கு ஒரு ரெஃபரன்ஸ் கைட் “ராமகிருஷ்ண விஜயம்” என்றால் அது மிகையில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் தென்கச்சி. அனைவரும் அறிந்த பொதுவான துணுக்குகள், குட்டிக் கதைகள்தான் என்றாலும் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியருக்கு ஒரு நன்றி தெரிவிக்காமல் அவற்றைக் கையாள்வது அவருக்கே வருத்தமாயிருந்திருக்கிறது. 

அந்நேரத்தில் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியரிடமிருந்து தென்கச்சிக்கு ஒரு அழைப்பு.

என்னவோ ஏதோ என்று யோசனை தென்கச்சிக்கு. “எப்படிய்யா எங்க அனுமதி இல்லாம எங்க விஷயத்தையெல்லாம் ரேடியோவுல சொல்லுவ?”, என்று ஆசிரியர் டோஸ் விடப்போகிறார் என்று பயந்தபடி நேரில் செல்கிறார் தென்கச்சி.

“வாங்க! அது வந்து.... நீங்க டெய்லி ரேடியோவுல பேசறதை நான் தவறாம கேக்கறது உண்டு. ரொம்பவும் சுவாரசியமா இருக்கு. நீங்க ஏன் ராமகிருஷ்ண விஜயம் புத்தகத்துல ஒரு கட்டுரைத் தொடர் எழுதக் கூடாது?”, என்றாராம் ஆசிரியர்.

அது சரி, இந்த கதைக்கும் பாரா சந்திப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

பாராவை சந்தித்ததும் முதலில் அவர் என்னிடம், “உங்க ட்வீட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கு”, என்று சொன்னார்.

Jun 21, 2014

அறை குரை

Wrote in FB a couple of days back. Posting it here.... rather pasting it here! :))

பெல்ஜியமும் அல்ஜீரியாவும் ஆடி முடித்த இடைவெளி. இதோ பிரேசில் மெக்சிகோவுடன் மோதத் தயாராகும் இடைவெளியில் கிடைக்கும் பத்து நிமிஷத்தில் ஏதும் எழுதலாமென்று பார்க்கிறேன்.

எழுதி நெம்ப நாளாச்சு. அதிலும்நெகட்டிவாக ஏதும் எழுதி ஜன்மம் ஒன்று கடந்தாற்போல் உணர்வு. ஆகவே இதோ....

நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னவொரு விஷயம் இதை எழுதத் தூண்டியது. தூண்டியதை சுத்தமாய் மறந்தே மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இருந்தும், நினைவில் நிற்பவற்றை அரைக்கிறேன். அவர் சொன்ன வார்த்தைகள் இந்தப் பதிவின் கடைசி பத்தியில்.

அதற்குமுன்....

எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியாது
எனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியாது

இப்படித்தான் நாலுவகையாக மக்களை நான் பிரித்துக் கொள்வேன். இரண்டாவது ஆள் அலட்டல் பார்ட்டி. நான்காவது ஆள் முட்டாள்.

எங்கேயோ படித்ததை “யாரோ” என்றும் கூடக் குறிப்பிட்டு க்ரெடிட் தாராது தன் பெயரில் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுக் கொள்பவர்களைக் கண்டால் முன்பெல்லாம் பத்திக் கொண்டு வரும். இப்போதெல்லாம் அப்படி வருவதில்லை. காரணம் இந்த ஐந்தாவது வகை மக்கள்.

"Jack of all trades; master of none" - டேமியனில் வேலை பார்த்தபோது தன்னைப் பற்றி இப்படி சொல்லிக் கொள்வார் ப்ரேம் சார்.

ப்ரேம் சாருக்கு கீபோர்டு வாசிக்கத் தெரியும், கிடார் வாசிப்பார், அரசியல் அத்துப்படி, மெடிக்கல் பேசுவார், கடவுள் நம்பிக்கை அரைக்கால் மாத்திரையளவே இருந்தாலும் பைபிளில் இருந்து கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பார், எங்கள் ஆபீஸின் கம்ப்யூட்டர் கில்லாடி அவர்தான்... இன்னும் சொல்லிக் கொண்டே....

இருந்தும் தன்னை மாஸ்டர் ஆஃப் நன் என்றுதான் ஒரு கோடு போட்டு நிறுத்தி வைத்துக் கொள்வார். அவரை எழுத வாராத சுஜாதா என்றால் அது மிகைதான் என்றாலும் அதில் கொஞ்சமே கொஞ்சம் உண்மையும் உண்டு. தனக்குச் சொந்தமில்லாத விஷயத்திற்கு என்றும் சொந்தம் கொண்டாட மாட்டார் ப்ரேம் சார். அங்க படிச்சம்பா, இங்க படிச்சம்பா என்று யாருடைய சரக்கு அது என்று சொல்லிவிடுவார்.

மேலே சொன்ன நான்கு வகைகளில் ப்ரேம் சார் முதல்வகையறா. எனக்குத் தெரியும் என்பதுடன் சேர்த்து சைலண்ட்டாக < டாட் > என்று தனக்குள் முடித்துக் கொள்பவர்.

சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு வந்தபிறகு; குறிப்பாக ட்விட்டருக்கு வந்த பிறகு மேலே சொன்னவைகள் அல்லாது இதில் ஐந்தாவது வகை நபர்கள் சிலரைச் சந்திக்க (அல்லது அவர்களுடன் உரையாட) நேருகிறது.

எனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும்; ஆனா அது இங்க யாருக்கும் தெரியாது என்கிற ரகம் இவர்கள்.

ஒரு கம்ப்யூட்டர் (அல்லது மொபைல் அல்லது டேப்) ஒன்றையும் தேடும் நல் சூட்சுமத்தையும் கையகப் படுத்திக் கொண்டு இவர்கள் செய்யும் அலப்பரை இருக்குதே...... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷபாஆஆஆஆஆ!

தெரியாத விஷயத்தைப் பேசும்போதும் கூட உச்சாணிக் கொம்பில் ஏறி நின்றுகொண்டு ஆத்தெண்டிக்காகப் பேச ஒரு பெரும் மனோதிடம் வேண்டும் பாருங்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் இந்த உச்சாணிக் கொம்பர்களை விட எனக்கு உச்சாணிக் கொம்பின் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டு “அண்ணா, அண்ணா, தம்பீ, தம்பீ, மகனே, மக்கா, அக்கா” என்று அந்த உ.கொ’களை இன்னும் உச்சிக்கு ஏற்றி விடும் பிருஹஸ்பதிகளைக் கண்டால்தான் சிரிப்புப் பொத்துக் கொண்டு வருவது.

ஆ.... இதோ மேட்ச் தொடங்கி விட்டது. ப்ரேசிலப் பெண்மணியர் குதித்துக் குதித்துத் தம் நாட்டின் தேசிய கீதந்தனைப் பாடிக் களிக்கின்றனர் அரங்கத்தினில்.

எது ஹெட் எது டெயில் என்று இரண்டு கேப்டன்களுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டு காயினைச் சுண்டுகிறார் அம்பயர்... இல்லையில்லை இவர் அவர்.... ஆம் ரெஃப்ரீ...!

மேல்மருவத்தூருக்க்கு நேர்ந்து கொண்டார்போலான உடையில் டீம் ஹட்டுல் நடத்துகிறார்கள் சலவைக்காரி நாட்டினர்....

ஆம்... மேட்ச் தொடங்கிவிட்டது.

ஆ... நண்பர் ஏதோ சொன்னதாய்ச் சொன்னேனே....

That fellow is always like that. What surprises me is that why many think he knows a lot despite his half baked knowledge on everything 

May 22, 2014

ஜஸ்ட் இன் தி ஹெவன்

வாவ்வ்வ்வ்வ்வ்வ்! என்பதைத் தவிர வேறொரு வார்த்தையில்லை இந்தப் பாடல் குறித்து சொல்ல. பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வரும் ”காதல் வந்தாச்சோ” - ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கார்த்திக், பிரஷாந்தினி பாடிய பாடல்.

என் குரலில் கீழே :)

Apr 5, 2014

ஃபுல் மீல்ஸ்

வெள்ளிக்கிழமை.

ஹரி, நாகா இருவருக்கும் ஃபோன் செய்து இரவு உணவுக்கு வெளியே போகலாம் என உறுதி செய்து கொண்டேன். மாசம் ஒருக்கா இப்படி நாங்கள் மூவரும் சேர்ந்து தின்னப் பிரயாணிப்பது வாடிக்கை.

ஹரி ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார், “பத்து மணிக்கு ஹோட்டல்ல இருக்கணும் கிரி. இல்லைன்னா நம்ம ஓயெம்மார்’ல தின்றதுக்கு ஒண்ணும் கெடைக்காது”.

ஒரே அலுவலகம் என்றாலும் அவர்கள் வேலை பார்க்கும் கட்டடம் எங்களதிலிருந்து அரை கிமீ தூரத்தில் இருப்பதால், அவர்களை அங்கிருந்து பிக்கப் - ட்ராப் செய்வது என் கடமை. என் வேலை நேரம் இரவு பத்து மணிக்கு முடியும். அவர்களுக்கு காலை மூன்றுவரை கனடாக்காரனிடம் மேய்படும் வேலை.

வழக்கம்போல் எல்லோருக்கும் கழுத்தைப் பிடிக்கும் வேலை இருந்து தொலைக்க, ஓயெம்மார் சங்கீதாவை அடையும் போது நேரம் சரியாக பத்தரை.

“தோசை, சப்பாத்தி, பூரி இருக்கு சார்”, என்றார் பேரர்.

”ரைஸ் வெரைட்டி எதும்”

“இல்லை சார். தோசை, சப்பாத்தி, பூரி”

சுர்ரென வந்தது கோபம் எனக்கு, “இருக்கற பசிக்கு ஆந்த்ரா மீல்ஸ் அஞ்சு சாப்டுவன்யா. யானப்பசிக்கு சோளப்பொரியா”, என்றெல்லாம் மனசில் நினைத்துக் கொண்டு....

“பூரி’ன்னா சோலா பூரியா இல்லை சின்ன பூரியா?”

“கொஞ்சம் இருங்க சார். பூரி இருக்கான்னும் செக் பண்ணிக்கறேன்”, நகர்ந்தவர் நாற்பத்தி நாலாவது செகண்டில் திரும்ப வந்து, “சாரி சார்! பூரியும் இல்லை. ஆனா, பரோட்டா இருக்கு”


“போலாம் ஹரி. சரவணபவன் போலாம்”, எழுந்து விட்டேன்.

“அங்க பதினொண்ணுக்கு கடை அடைச்சிடுவாங்க. சீக்கிரம் வண்டி எடுங்க”

வண்டியை விரட்டி, டோல் பூத்தைக் கடந்து, யூ அடித்து, சரவணபவன் நுழைந்து, பார்க்கிங்கில் வண்டியைச் சாத்திவிட்டு முதல்மாடி ஏறி இருக்கை பார்த்து அமர - நேரம் சரியாக பத்து மணி ஐம்பது நிமிடங்கள்.

“வணக்கம் சார்! இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா இருக்கு சார். என்ன வேணும்?”

“ரைஸ் வெரைட்டி?”

“பத்தரைக்கு எல்லாம் க்ளோஸ் சார்”

“ஷ்ஷபாஆஆஆஆஆ”

“சரி. மூணு தட்டு இட்லி கொண்டு வாங்க மொதல்ல. தோசை சப்பாத்தி பின்ன சொல்றோம். அப்புறம்....”

“சொல்லுங்க சார்!”

“சார் இங்க பாருங்க. இந்த ராஜீவ் காந்தி சாலைல ஐடி கம்பெனி, பிபீஓ மக்கள் மாதிரியான ராக்கோழிங்கதான் ஜாஸ்தி. வெள்ளிக்கிழமைன்னா நாங்க கொஞ்சமாக் குதூகலமாகி வெளிய சாப்பிட வருவோம். கொஞ்சம் வெள்ளிக்கிழமையாவது ஒரு பதினொண்ணு, பன்னண்டு வரைக்கும் ரைஸ் வெச்சா என்ன? சரவணபவன்ல சோறு திங்கணும்னு தேடி வர்றமே. கொஞ்சம் கருணை காட்டப்படாதா? நாங்க சாப்ட்டுட்டு இந்த அர்த்தராத்திரில திரும்ப ஆபீஸ் போய் வேலை பாக்கற ரகம்”

“எங்க மேனேஜர் கிட்ட இது பத்தி சொல்றேன் சார்”

இரண்டாவது நிமிஷம் அம்மாஞ்சி தோரணையில் ஒருவர் வந்து, “எஸ் சார். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”

“சார் இங்க பாருங்க. இந்த ராஜீவ் காந்தி சாலைல ............................... ...................... ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ............. ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ............. ..................................................... ....... ................ .......................... . ........................ ................ ............. ............ வேலை பாக்கற ரகம்”


"ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க, நாங்க ராத்திரி பத்தரையோட க்ளோஸ் பண்ணிடறோம். அதுக்கு மேல அரை மணி நேரம் டிஃபன் ஐட்டம் அவ்வளோதான்”

இட்லி வந்து மேஜையில் அமர்ந்தது. கொலைப்பசி போல, இட்லி வந்து அமர்ந்த முப்பத்தியேழாவது மில்லி செகண்டில் ஹரியும், நாகாவும் இட்லியை பிய்க்கத் துவங்கியிருந்தனர்.  நான் மேனேஜர் பக்கமாகக் கழுத்தைத் திருப்பத் தேவைப் பட்டதால் வந்தமர்ந்த இட்லி வெண்ணிறமா கருநிறமா என கன்ஃபர்ம் செய்து கொள்ளவியலாத நிலை.

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க, இப்படித்தான் ஒரு கப்புள் வந்தாங்க. ஹஸ்பண்ட் வொய்ஃப். அந்தம்மா புழுங்கலரிசி கேட்டாங்க, அவரு பச்சரிசி கேட்டாரு. மணி என்ன தெரியுமா? பத்து முப்பத்தி அஞ்சு. ஜஸ்ட் அபவ் ஃபைவ் மினிட்ஸ் ஆஃப் அவர் டெட்லைன். சரி’ன்னு ரைஸ் இருக்கான்னு செக் பண்ணிட்டு கொண்டு வந்து கொடுத்தோம். அந்த அம்மா ரைஸ அப்படியே தள்ளிவெச்சுட்டாங்க. சூடு இல்லைன்னுட்டாங்க”

இட்லியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேன். என் தட்டில்தான் இருந்தது வெண்ணிறமாகவே. ஹரியும் நாகாவும் அவரவர் இட்லியை முடித்துவிட்டு என் இட்லித் தட்டை விரகதாபத்துடன் பார்ப்பது தெரிந்தது.

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க, ராத்திரி சாப்பாட்டுக் கடை ஏழு மணிக்குத் தொடங்கறோம். ஏழு மணின்னா அதுக்கான ப்ரிபரேஷன்ஸ் ஆறரைக்குத் தொடங்கியாகணும். யூ கென்னாட் எக்ஸ்பெக்ட் அஸ் டு.... யூ நோ. இருந்தாலும், அந்தம்மாவுக்காக வேண்டி ஐ டுக் தி ரைஸ் அண்ட் கெப்ட் இட் இன் ஸ்டீம். சூடு பண்ணிக் குடுத்துட்டோம்”

இட்லிய்யை ஹரியோ, நாகாவோ லவட்டியிருப்பார்களோ? ச்சே ச்சே, ரெண்டுபேரும் கடைந்தெடுந்த ஜெண்டில்மேன்கள் அதெல்லாம் செய்யமாட்டார்கள்.

”ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க! நான் இந்த ஹோட்டல்ல இருவது வருஷமா வேலை பாக்கறேன். நேரடியா ஒண்ணும் மேனேஜர் ஆகிடலை. மொதல்ல பில்லிங் க்ளர்க்கா வேலை ஆரம்பிச்சு, சூபர்வைசர் ஆகி, அஸிஸ்டண்ட் மேனேஜராகி, அப்புறம் இப்போ மேனேஜர் ஆகியிருக்கேன், எட்டு மாசந்தான் ஆச்சு. அஸிஸ்டண்ட் மேனேஜரா எட்டு வருஷம் இருந்தேன். என்னோட முன்னூறு ஏஎம் இருந்தாங்க போட்டிக்கு. நமக்கு மேனேஜர் வாய்ப்பு வந்தது. எப்படி?”


”ஒரு பரோட்டா, ஒரு நெய் ரோஸ்ட்”, ஹரியும் நாகாவும் இரண்டாவது ரவுண்டு ஆர்டர் கொடுக்கப் போய்விட்டார்கள். “எனக்கும் ஒரு நெய் ரோஸ்ட் கொண்டு வந்துடுங்க”, இது நான் - அட்வான்ஸ் ஆர்டர்.

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க! கஸ்டமர்ஸ் ஆர் அவர் பாஸ். ஆம் ஐ ரைட்? இதைத்தான் எங்க மொதலாளியும் சொல்லுவார். அண்ணாச்சி இருக்காரே. அவர் எப்பவும் சொல்லுவார். கஸ்டமர் ஈஸ் அவர் பாஸ்’ன்னு. அவர் எப்பவும் தமிழ்லதான் பேசுவாரு பாருங்க. நாம கஸ்டமரை பாஸாப் பாக்கறோம். ஆனா சிலர் ஹோட்டல்காரந்தானே’ன்னு ஏளனமா நம்மளை ஓட்டறாங்க.ஸ்டில் தே ஆர் அவர் கஸ்டமர்ஸ்.அண்ட் அஃப்கோர்ஸ் தே ஆர் அவர் பாஸ்”

தலையைத் திருப்பாமல் கையால் இட்லியைத் தொட்டு... அது சூடாகத்தான் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். இப்போது வெதுவெதுப்பாக ஆகியிருந்தது”

“ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் சார்! ஆனா பாருங்க! பகல்ல அறுநூறு மீல்ஸ் ஓடும். ராத்திரின்னா அறுவது ஓடுனா யதேஷ்டம். யதேஷ்டம்னா தெரியும்ல உங்களுக்கு? ஓகே நீங்க இட்லி சாப்பிடுங்க சார். ஆறியிருக்கப் போவுது. அந்த அறுவது மீல்ஸை ஆறு தவணைல உலைல வெக்க முடியாது பாருங்க. ஆறிப் போனா பரவால்லை சார். ஒரு சாப்பாடு நமக்காக எடுத்து வெய்ங்கன்னு ஃபோன் போட்டு சொல்லுவாங்க (சட்டைப் பையைத் தட்டிக் கொள்கிறார்). அவங்களுக்காக எடுத்து வெச்சிடுவேன். நீங்களும் வேணும்னா நம்ம நம்பர் எடுத்துக்கங்க. எழுநூத்தி எண்பது நானூத்தி எண்பது நாப்பத்தஞ்சி அம்பத்தாறு. எனி டைம், பேர் நோட் பண்ணிக்கங்க (பெயரட்டையைத் தட்டிக் காண்பிக்கிறார்).

”ஓகே சார்”

“யுவர் குட் நேம் சார்”

“கிரி.... பிபீஓ கிரி’ன்னு கூப்பிட்டா சொல்றேன்”

“கிரி.... இது போதும் சார். வாட் எ டைனமிக் நேம் (!!!!) ஐ கேன் ரிமெம்பர். யூ எஞ்சாய் அவர் இட்லி. தேங்க்யூ மிஸ்டர் கிரி”

முதலாவது மாடியிலிருந்து குதித்துவிடும் உத்வேகத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கண்ணீர் மல்க இட்லியைத் தின்று முடித்தேன். 

“என்ன கிரி! ஃபுல் மீல்ஸ் எப்டி இருந்துச்சு?”, ஹரியோ நாகாவோ யாரோவொருத்தர் கேட்டார்கள்.

பிகு: கை கழுவப் போன இடத்தில் அதே அம்மாஞ்சி சார் என்னை வழி மறித்து அவர்கள் நிறுவனத்திற்கான மின்சார உபயோகம் குறித்துப் பேசியதை நான் இங்கு எழுத நேர்ந்தால் நீங்கள் என்னை நேரில் வந்து அடிக்கத் தலைப்படும் என்பதால்....

                                                       .....சுபம்....


Feb 1, 2014

வொய் ராஜா is God

மணி பத்தே முக்காலைக் கடந்து பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்த நேற்றைய என் அதிகாலைப் பொழுது. மணி பதினொன்றைத் தொட நம் வீட்டு வாண்டு அகில் தன் play school உள்ளே இருக்க வேண்டும். இத்தனை சீக்கிரம் பள்ளியைத் திறக்கும் அநியாயம் எங்கும் நடக்குமா? நம்மூர் பம்மலில் நடக்கிறதே.

பத்து முப்பதுக்குத் தொடங்கி அகில் வீட்டின் எழுநூற்று சொச்ச சதுர அடியையும் எழுபது முறை சுற்றிச் சுற்றி ஓடியாட அவர் பின்னே சுற்றிச்சுற்றி ’இதை நான் அதை நீ’ என்று கால் சட்டை, மேல் சட்டை, இந்தக் கால் சாக்ஸ், அந்தக் கால் சாக்ஸ், ஷூ, மற்றும் ஒரு ஷூ, ஐடெண்டிடி கார்டு என நானும் மனைவியாரும் ஒவ்வொன்றாக அவருக்கு அணிவித்துக் கொண்டிருந்தோம்.

அடுத்தது பையை எடுத்து முதுகில் மாட்ட வேண்டும்.

“அப்பா, ராஜராஜ சோழன் பாட்டு போடேன்”, லாப்டாப்பை நோக்கி அகில் கை நீண்டது. அகிலின் லேட்ட்ட்ட்டஸ்ட் ஃபேவரிட் இந்தப் பாடல் என்பது என் சமூகம் அறிந்தது (இதுவரை அதனை அறியாத சமூகம் இந்தப் பதிவின் வாலைப் பிடித்துப் பார்க்கவும்).

நேரம் சரியாக பத்து மணி ஐம்பது நிமிடங்கள். இரண்டு நிமிடத்தில் காரைக் கிளப்பினால் மூன்று நிமிடத்தில் பள்ளியில் இருக்கலாம்.

”கண்ணா, ஸ்கூலுக்கு இப்பவே லேட்டாயிடுச்சிடா. ராஜராஜ சோழன் கார்ல இருக்கு ப்ளே பண்றேன்”

“இல்ல இல்ல! ஆப்பீஸ்ல ராஜராஜ சோழன் போடு”, மீண்டும் லாப்டாப் நோக்கி கை நீள்கிறது. (அகில் பாஷையில் “ஆப்பீஸ் = லாப்டாப்” )

இதென்னடா வம்பாப் போச்சு. சரி ஆனது ஆச்சு, ப்ளே பண்ணுவோம் என லாப்டாப்பைத் திறந்து பாடலைத் தேடிப் பிடித்து ஓட விடுகிறேன். அகில் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பவர். இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்கும் நம்மவருக்கு.

பாடல் ஓட ஓட நம்மவர் அறியாமலேயே அவர்தம் முதுகில் பள்ளிப் பையை மாட்டியாச்சு. காருக்கு கீழே இறங்கும் வரை அதை அவர் முதுகுதான் சுமக்க வேண்டும் என்பது அவர் எழுதாத கட்டளை.

....செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி..... என்று முதல் சரணம் நிறைக்கிறார் யேசுதாஸ்.

“கண்ணா! இந்த பாட்டு நம்ம கார்ல இருக்கே. கார்ல கேட்டுக்கிட்டே ஸ்கூல் போலாமா?”

“கார்ழ்ல இழுக்கா?”

“இருக்கே....”, பொய்! காரில் இருந்த பென் ட்ரைவை நண்பன் இரவல் வாங்கிப் போயிருந்தான்.

”அப்போ ஸ்கூல் போலாம்”, கீழே இறங்குகிறோம்.

காரைக் கிளப்பியதும். மறக்காமல், “அப்பா, ராஜராஜ சோழன்... ம்ம்ம்ம்ம்ம் போடு”

இல்லாத ராஜராஜனை எங்கிருந்து பிடித்து வர? சரி, எஃப்.எம் ஏதும் வைப்போம். நம்மவருக்குப் பிடித்த பாடல் ஒன்று கூடவா இல்லாமல் போகும். மூடு மாறுகிறதா பார்ப்போம்.

சேனல் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் நம்மவருக்குத் தெரிந்த பாடல் ஒன்றும் அகப்படவில்லை.

“ப்பா.... ராஜராஜ சோழன்...ம்ம்ம்ம்ம்”

“போடறேன் கண்ணா.... தோ போடறேன்”

இருக்கும் ஒண்ணேகால் டஜன் சேனல் ஒன்றிலும் எந்தப் பாட்டும் தேறவில்லை நம்மவருக்கு. கை ஓடி நிறுத்திய இடத்தில் Big FM RJ யாரோ ஒரு பெண்மணியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

“சரி, இந்த மூணு பாட்டும் உங்களுக்கு ஏன் பிடிக்கும் சொல்லுங்க?”

“மூணுமே இளையராஜா பாட்டுங்க. வேறென்ன காரணம் வேணும்”, எதிர்முனையில் RJ’விடம் ஃபோனில் பேசும் அம்மணி சொல்கிறார்.

“ஓக்கேய்ய்ய்ய்.... உங்களுக்காக இளையராஜாவோட இந்த மூணு பாட்டும் back to back.... மனசத் தொட்ட மெலடீஸ் only on Big FM 92.7 உங்க மிருதுளாவோட....”

ஆஹ்ஹா! மூணு ராஜா பாட்டா? இன்னும் இரண்டு நிமிஷத்தில் ஸ்கூல் வந்துவிடும். அகிலுக்காக முதல் பாடல் ராஜராஜ சோழனாக இருக்கக் கூடாதா?

“ஆண்டவா! இந்தப் பாட்டு ராஜராஜ சோழனா இருக்கட்டும்”, வேண்டிக் கொள்கிறேன்.

ச்சே! இதென்ன கிறுக்குத்தனம். நமக்கு ஒரு பாட்டு பிடிக்குதுன்னு நெனைச்சிக்கிட்டா எல்லாம் அந்தப் பாட்டு ரேடியோவுல வந்துடுமா? என்று என் கிறுக்குத் தனத்தை எண்ணி நானே வியக்கிறேன்.

இருந்தாலும்.... ”இது என்ன பாட்டு என்ன பாட்டு என்ன பாட்டு.....!” என்று வரப்போகும் பாட்டை எதிர்நோக்குகிறது மனசு.

நாதஸ்வர ஓசையுடன் ஆரம்பிக்கிறது அந்தப் பாட்டு..... ச்ச! ராஜராஜ சோழன் கிடார் beat'டோட இல்ல தொடங்கும்.

இது “தலையைக் குனியும் தாமரையே” - ஒரு ஓடம் நதியாகிறது படப் பாட்டு ஆச்சே! சரி போ கேப்போம். என்று ஏமாற்றத்துடன் அகில் பக்கம் திரும்புகிறேன்.

அகில் பரிதாபமாக என்னைப் பார்த்து, “ப்பா....ராஜராஜ சோழன் ம்ம்ம்ம்ம்”, விட்டால் அழுதுவிடுவான் போல.

“லேதுரா கண்ணா”, என்று உதடு பிதுக்குகிறேன். இருக்குன்னு சொன்னியேப்பா என்று கேட்காமல் பரிதாப முகம் கொண்டு கேட்கிறான். என்ன சொல்ல எனப் புரியாமல் காரை செலுத்துகிறேன்.

பாடலின் ப்ரீலூட் இசை நிறைந்து எஸ்பிபி, “தலையைக் குனியும் தாமரையே” என்று தொடங்கும் இடம் வருகிறது. sudden brake..... காருக்கு அல்ல. prelude'ன் நிறைவிலேயே பாடல் நிற்கிறது.

”ஜ்ஜிங் ஜ்ஜிங் ஜ்ஜிங் ஜ்ஜிஜிங்....” - கிடார் இசை அதிர்கிறது.

அகில் என்னைப் பார்த்து வாய்நிறைய சிரிக்கிறான்.

நான் புரியாமல் விழிக்கிறேன்.

“ப்பா.... ராஜராஜ சோழன்”. என் மூளைக்கு உறைக்குமுன் அவன் மூளைக்குள் நுழைந்து விட்டிருந்தது பாட்டு.இதென்னடா மெடிகல் மிராக்கிள் என்று யோசிக்கிறேன்.

நம்பினால் நம்புங்கள்--------“தலையைக் குனியும்” பாடல் ஆரம்பிக்கும் முன்னமே அதை pause செய்து விட்டு ராஜராஜ சோழன் பாட்டை இசைக்க ஆரம்பிக்கிறது  Big FM.

”அக்க்க்கீல்ல்ல்ல்ல்ல்...... என்ன பாட்டு இது.... உற்சாகமாகக் கத்துகிறேன் நான்”

வெட்கப் புன்னகையுடன் அகில் சொல்கிறான்....”ராஜராஜ சோழன்”




பிகு: ராஜராஜ சோழன் நிறைந்ததும் மறவாமல் “தலையைக் குனியும் தாமரையே” prelude இல்லாமல் நேரடியாகத் தொடங்கி இசைத்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...