எழுத்தாளர் பா.ராகவனை சென்ற ஞாயிறன்று சந்திக்கப் போயிருந்தேன். “ஸ்டீவ் ஜாப்ஸ்” அப்புவும் உடன் வருவதாகச் சொன்னார்.
”ஒன்பதே முக்காலுக்கு குரோம்பேட்டைல மீட் பண்ணலாம். என்னை பிக்கப் பண்ணிடுங்க, அங்கருந்து பத்து மணிக்கு பாரா வீட்டுக்குப் போயிடலாம்” என்று சொன்ன அப்பு ஒன்பது இருபத்தைந்துக்கு போன் செய்து, “சார், நான் சீக்கிரமாவே வந்துட்டேன். அதனால நான் நேரா பாரா வீட்டுக்குப் போயிடறேன். நீங்களும் வீட்லருந்து நேரா வந்துடுங்க”, என்று சொன்னதன் விளக்கம் எனக்குப் பின்னர்தான் புரிந்தது.
பாரா வீட்டிற்குப் போனபோது ’அட்வான்ஸ்’ அப்பு அங்கே தோசையை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். #நல்லவரய்யா!
ஓகே... ஒரு சம்பவம் அல்லது கதை:
தென்கச்சி சுவாமிநாதனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. அவர் ஆல் இந்தியா ரேடியோவில் “இன்று ஒரு தகவல்” சொல்லிக் கொண்டிருந்தபோது அவருக்கு நிறைய நேரங்களில் தகவல், துணுக்குகள் அன்றாடம் திரட்ட உதவியாக “ராமகிருஷ்ண விஜயம்” புத்தகம் இருந்ததாம். அவரது நிகழ்ச்சிக்கு ஒரு ரெஃபரன்ஸ் கைட் “ராமகிருஷ்ண விஜயம்” என்றால் அது மிகையில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் தென்கச்சி. அனைவரும் அறிந்த பொதுவான துணுக்குகள், குட்டிக் கதைகள்தான் என்றாலும் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியருக்கு ஒரு நன்றி தெரிவிக்காமல் அவற்றைக் கையாள்வது அவருக்கே வருத்தமாயிருந்திருக்கிறது.
அந்நேரத்தில் ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியரிடமிருந்து தென்கச்சிக்கு ஒரு அழைப்பு.
என்னவோ ஏதோ என்று யோசனை தென்கச்சிக்கு. “எப்படிய்யா எங்க அனுமதி இல்லாம எங்க விஷயத்தையெல்லாம் ரேடியோவுல சொல்லுவ?”, என்று ஆசிரியர் டோஸ் விடப்போகிறார் என்று பயந்தபடி நேரில் செல்கிறார் தென்கச்சி.
“வாங்க! அது வந்து.... நீங்க டெய்லி ரேடியோவுல பேசறதை நான் தவறாம கேக்கறது உண்டு. ரொம்பவும் சுவாரசியமா இருக்கு. நீங்க ஏன் ராமகிருஷ்ண விஜயம் புத்தகத்துல ஒரு கட்டுரைத் தொடர் எழுதக் கூடாது?”, என்றாராம் ஆசிரியர்.
அது சரி, இந்த கதைக்கும் பாரா சந்திப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
பாராவை சந்தித்ததும் முதலில் அவர் என்னிடம், “உங்க ட்வீட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கு”, என்று சொன்னார்.
No comments:
Post a Comment