நேற்று ட்விட்டரில் நிகழ்ந்த வாலி பற்றிய ஒரு சுருக்கமான சம்பாஷனை ஒரு பழைய நிகழ்வை நினைவுப்படுத்தியது....
-----
தோளில் வந்து விழுந்த கை யாருடையது என திரும்பிப் பார்த்தேன்.
”சார், ஒரு டவுட்டு. உங்களைக் கேட்டாதான் சரிவரும்”
“சொல்லுங்க”, என்றேன்.
”கொங்கை’ன்னா என்ன சார்”, கேட்டார் தோளைத் தொட்ட நண்பர்.
’அது ஏன்யா என்னப் பாத்து இந்தக் கேள்வியக் கேட்ட?’ என்று முகம்சுளிக்க நான் பார்ப்பதை உணர்ந்து...
“நீங்கதான சார் நம்ம சர்க்கிள்லயே புலவர், அதான் உங்க கிட்ட கேட்டா பதில் கெடைக்கும்னு....”
“யோவ்! நான் என்னைக்குய்யா சொன்னேன் நான் புலவன்னுட்டு”
நண்பர் சற்றே சத்தமாகத்தான் கேட்டதைக் கேட்டதால், சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தேன். இரண்டு இருக்கைகள் தாண்டி அமர்ந்திருந்த பெண் கர்மசிரத்தையாக தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டிருந்தாள்.
நண்பர் வேறு யாருமல்ல. நாம் இவரைப் பத்தி முன்னமே எழுதியிருக்கோம் இங்கே.
“உமக்கு ஏன்யா திடீர்ன்னு இந்த சந்தேகம், இப்படி சந்தேகம்?”
“நம்ம வாலி ஒரு பாட்டுல எழுதியிருக்காரு. அதான் அர்த்தம் தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன் சார்”
மனுஷர் ஒரு மிகப் பெரிய வாலி ரசிகர். எப்படி, ஏன் ரசிகர் என்று நாம் அறியோம். ஆனால் வாலி வெறியர் போல தம்மை வெளிப்படுத்திக் கொள்வார். நாம் ஏதேனும் ஒரு பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் அங்கே வாலியைக் கொண்டு இடைச் செருகுவார். ”சார், இதைவிட பெட்டரா வாலி எழுதியிருக்கிறார் சார்”, என்று வாலியின் பாட்டு ஒன்றினை சம்பாஷனைக்கு இடையில் தூக்கிப் போடுவார். வைரமுத்து பற்றி இவரிடம் பேசிவிடவே முடியாது. வைரமுத்துவை விட வாலிதான் பெட்டர் தெரியுமா என்று மறக்காமல் ஒவ்வொரு முறையும் சொல்லுவார். நான் மையமாகச் சிரிப்பதோடு சரி. நமக்கு வைரமுத்து, கங்கை அமரன், வாலி, நா.முத்துக்குமார் என்று எல்லோருமே லெஜெண்டுகள்தானே.
திடீரென்றுதான் நினைவுக்கு வந்தது.
“யோவ்! நீர்தான் வைணவ வழியைப் பின்பத்துறவராச்சே. இந்தக் கேள்வியே நீர் கேக்கப்படாதே?”
“அது ஏன் அப்படி சொல்றீங்க?”
”கோவர்த்தனைப் பார்க்காமல் பயனில்லாத கொங்கையைக் கிழங்கோடு பறித்து எறிந்து அழலை தீர்வேன் அப்படின்னு ஆண்டாள் எழுதியிருக்காங்களேய்யா?”
”திருப்பாவைலயா?”
“சரியாப் போச்சு. அது நாச்சியார் திருமொழி தம்பி”
”பாத்தீங்களா, நான் உங்களை புலவன்னு சொன்னது சரியாப்போச்சு”
“சரியாப் போச்சு. பேசிக்கிட்டே கூகுளக் கேட்டேன் சொல்லிடுச்சுய்யா”
“ரைட்டு. அதை நான் கவனிக்கலை. சரி அப்போ அது பிரபந்தம் இல்ல!”
“செத்தாண்டா சேகரு. யோவ்! அதுவும் நாலாயிரத்துல சேர்த்திதான்யா”
”அதுவும் கூகுள் சொல்லிச்சா”
”ஹே ராம். அது எனக்கே தெரியும்யா. இது பிரபந்தம்தான்.”
“இல்லை சார் பிரபந்தமெல்லாம் நான் அவ்வளவா படிச்சது இல்லை. எங்களுக்கு வேதம்தான் மெயின்”
“இதுவும் திராவிட வேதம்தானய்யா. சரி சரி! அந்த அரசியல், காண்ட்ராவெர்ஸிக்கெல்லாம் நான் வரல்லை. இந்த வார்த்தையை எங்க படிச்ச? அத்தச் சொல்லு”
“மரியான் படத்துல வருதே சார் பாட்டு”
“மரியான் படத்துல கொங்கையா?”
“ஆமா சார். வருதே!”
“????”
“ஓய ஓயல்ல! எந்த நாளும் ஓயல்ல! என்னைப் படைச்சவன் கொங்கை ஓயல்ல”, இப்போதும் மீண்டும் சத்தமாக. திரும்பினால் அந்த துப்பட்டா பெண் சேஃப்டி பின்னை எடுத்து துப்பட்டாவை காபந்து பண்ணிக் கொண்டிருந்தார்.
“யோவ்! மெதுவாப் பேசுய்யா”
“ஏன் சார்? எதான கெட்ட வார்த்தையா?”
“கொங்கை’க்கு அர்த்தம் அப்புறமா சொல்றேன். ஆனா அதுக்கு முன்னால ஒண்ணு தெரிஞ்சிக்கோ. சோனாப்பரியா பாட்டுல வர்றது கொங்கை இல்ல, கொடுக்கும் கை. கொடுக்கும் கை ஓயல்ல’ன்னுதானே வாலி எழுதியிருப்பாரு”
“நோ நோ! இல்லை சார். கொங்கை ஓயல்லதான்”
“இல்லைய்யா! படைச்சவன் கொடுக்கும் கை ஓயல்ல”
“ஆர் யூ ஷ்யூர் சார்?”
“ஆக்சுவல்லி, கொங்கைன்னா என்னன்னா ........... “, சொன்னேன்.
அதற்கு மேல் நம்ம ஆளு அங்கே எப்படி ரீயாக்ட் செய்தார் என்பது, சுற்றுமுற்றும் யார் யார் இந்த சம்பாஷனையை கவனித்தார்கள் என்று கவனியாதது போல் கவனித்தது, மெதுவாக அந்த ஸீனில் இருந்து நழுவியதை எல்லாம் இங்கே வார்த்தையில் எழுதி வருணிக்க இயலாது.