"ஏண்டா! எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை. இப்போதானே சாப்ட்டு எந்திருச்ச. கொஞ்சம் இருந்துட்டுதான் போறது?"
ஆமாம்! அவன் சொல்வதுபோல் கிட்டத்தட்ட மாமாங்கம் இருக்கும்.
மல்லேஸ்வரத்தில் படித்து முடித்துத் திரும்பிய பின் நானும் அவனும் வெவ்வேறு ஊர்களில் செட்டிலாகி தொடர்புகளை இழந்து, இப்போதுதான் ஃபேஸ்புக் உதவியில் அவனைக் கண்டுபிடித்தேன்.
"இல்லைடா! இன்னொருக்க வர்றேன். ஃபேமிலிய அழைச்சிட்டு வர்றேன்டா?"
"அதென்ன இன்னொருக்க? இந்த பத்தூரு பாஷைய கலந்தடிக்கறத இன்னும் நிப்பாட்டலியா நீ?",
சிரித்தேன்.
சாப்பிட்ட இடத்தை மாப் வைத்து துடைத்தபடியே அவன் மனைவி, "போஜனம் ஆன கையோட பொறப்பட வேணாம்ணா! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. நாளைக்கு ஸன்டேதானே."
"ஆமாண்டா. அப்பா மணலி வரை போயிருக்கார். அஞ்சு மணிக்கு வந்துடுவார். உன்னையும் பாத்து எத்தனை நாளாச்சு. சந்தோஷப்படுவார்"
ஆமாம் என்பதாய் தலையசைத்தாள் அவன் மனைவி.
"ஏய்! அந்த புக்கு கொண்டாயேன்டி. அதான் உன் கஸின் எழுதினான்னு சொன்னியே, எதோ ஓயெம்மார் ரோடுன்னு புக்கு"
"ண்ணா! அவன் என் கஸினா?"
"ரைட்டு! கஸினுக்கு ஃப்ரெண்டா, இல்லை ஃப்ரெண்டுக்கு கஸினா? ஐடி பயலுங்க பூரா சல்லின்னு எழுதியிருக்கானே"
"ஏண்டா! நீ பாபநாசம் படம் பாத்தியா?", கேட்டேன்.
"ஏண்டா?"
"இல்லை! இந்த சல்லின்னெல்லாம் வார்த்தை எங்கயிருந்து கத்துக்கிட்ட?"
"அதை விட்றா. ஏய் கொண்டாயேன்டி புக்கை"
"வேணான்டா. அந்த புக்கு வேணாம்", வார்த்தை முடிவதற்குள் புத்தகம் என் கையில் திணிபட்டது.
"அங்கே பால்கனியில பெஞ்ச் இருக்குண்ணா. நல்ல வேப்பங்காத்து. ஜில்லுனு இருக்கும். படிச்சிட்டே படுங்கோ. தூக்கம் வந்தா தூங்குங்கோ. அப்பா வந்தா எழுப்பறேன். காபி சாப்ட்டுட்டு பொறப்படலாம்"
"ஏன்டா வர்றவங்க கையில புஸ்தகத்தைத் திணிக்கற வாடிக்கையை வந்தவளுக்கும் கத்துத் தந்தாச்சா?", என்றேன் ஸ்ரீவத்சனிடம்.
"ஹ்ஹஹ்ஹா! அதெல்லாமில்லைடா. டேய் அந்த ஸ்வாமின்னு ஒரு போஸ்ட் எழுதுனியே உன் ப்ளாக்ல அதுல இந்த புஸ்தகத் திணிப்பு பத்தி சொல்லியிருக்கியே"
"அதுக்குள்ள ப்ளாக்கை மேஞ்சுட்டியா?"
"ஃபுல்லாவெல்லாம் மேயலை. உன் ப்ளாக்ல என் பேரை சர்ச் அடிச்சிப் பாத்தேன், இது வந்து வுழுந்துது. டேய்! அந்த திவ்யா கதையை எல்லாம் எடுத்து வுட்டுருக்கியாடா எங்கயாவது?", இல்லாள் அருகில் இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே கேட்டான்.
"திவ்யாவா வித்யாவா? நீயே பேரை மறந்தாச்சா? ம்ம்ம்ம்! அது ஒண்ணு இருக்குல்ல. இல்லைடா, இனிதான் எழுதணும்",
"ஆ! நானாத்தான் உளறிட்டனாடா"
"லுங்கி வேஷ்டி எதும் வேணுமாடா?", என்றவனுக்குக் கைகளிலேயே வேண்டாம் என்றுவிட்டு வெளியே வந்தேன்.
-------
வத்சனின் இல்லாள் சொன்னதுபோல நல்ல வேப்பங்க்காற்று. என்ன படித்தேன் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
"ம்மா பால்", காதுக்குப் பக்கமாய் யாரோ கூவ பதறிக்கொண்டு எழுந்தேன்.
"ஐயோ! சாரி சார்! பயமுறுத்திட்டனா? சாரி சாரி!", பால் வந்து விட்டது. வத்சனின் அப்பாவும் வந்து விட்டார் என்றால் புறப்பட்டுவிடலாம்.
ஏதோ குறைவதாய்த் தோன்றியது. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு, அது உள்ளே இருந்து கொண்டு வந்த புத்தகம் எனப் பிடிபட்டது. பதறி எழுந்த வேகத்தில் புத்தகம் பால்கனித் தடுப்பைத் தாண்டி மெயின் கேட்டுக்கு வெளியே விழுந்து கிடந்தது.
பால்கனித் தடுப்புக்கும் மெயின் கேட்டுக்கும் இடைவெளி குறைந்தது பதினைந்து அடி தூரம் இருக்கும். இங்கே புறப்பட்ட புத்தகம் அத்தனை தூரம் எப்படி பிரயாணப்பட்டிருக்கும் என யோசனையுடன் பிரமை பிடித்தவன் போல யோசித்துக் கொண்டிருன்தேன்.
"நல்லா தூங்கினீங்களா அண்ணா .... கால் லிட்டர் சேத்து ஊத்துப்பா.... அப்பா வந்துட்டார் அண்ணா....", என் பிரமையிலிருந்து நான் விடுபட்டு அந்த ஒன்பது சொற்களும் என் மூளையை எட்டுமுன் உள்ளே போய் விட்டாள்.
புத்தகம் எடுக்க மெதுவாய்க் கீழே இறங்கினேன். செம்மண் கலவையாய்க் கிடந்த சிறு குளத்தை ஜஸ்ட் மிஸ் செய்திருந்தது புத்தகம். அதைக் கையில் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் கூட்டம் கூடின எதிர் வீடு. எல்லோருக்கும் மத்தியில் அவர் உட்கார்ந்திருந்தார். அக்கறையில்லாத ஒரு முண்டா பனியன் அணிந்து எல்லோருக்கும் நடுநாயகமாய். சங்கு மார்க் லுங்கி விளம்பரத்திற்கு அமர்ந்தாற்போல் பளிச் என்று ஒரு வெள்ளையில் நீலக்கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். மற்ற ஐம்பத்து சொச்ச மக்களும் எனக்கு ஏனோ அவுட் ஆப் போகஸில் தெரிய..... இவர் எப்படி இங்கே வந்தார், இவர் எதற்கு இங்கே வந்தார் என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.
அந்த வீட்டில் ஏதோ நல்லதோ அல்லது கெட்டதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கப் போகிறது என்பதைப் உள்மனம் புரிந்து கொண்டாலும் அது என்ன எது என்னும் யோசனைகள் மனதுக்குத் தேவைப்படவில்லை. இவர் எங்கே இங்கே வந்தார் என்று மட்டும் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதிலும் சம்பந்தமில்லாமல் முண்டாபனியன் லுங்கியில்?
இவர் இப்போ அமெரிக்காவில் இல்லையா இருக்கிறார். நேற்று கூட இவருடைய ப்ளாக் படித்தேனே? லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இருப்பதாக எழுதியிருந்தாரே. இன்னும் பத்து நாட்கள் அங்கேதானே டேரா என்று எழுதியிருந்தார்.
இவர் அவராக இருக்கமாட்டார் என்று எனக்கு நானே முடிவெடுத்துக் கொண்டு விட்டேன் என்றாலும் அவரை ஏனோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் பக்கம் பார்வையைத் திருப்பினாற்போலவும் என் பார்வையை கவனித்தவராக என்னைப் பார்த்து ஒரு ஸ்நேகப் புன்னகை பூத்தாற்போலவும் எனக்குத் தோன்றியது.
அந்த வீட்டின் வாசலில் இருந்த பெயர்ப்பலகையை கவனித்தேன்.
J.மோகன் என்று இருந்தது.
சினிமாத்தனமான கையில் இருந்த புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது. தலையைச் சிலுப்பிக் கொண்டு வீடு நோக்கித் திரும்பினேன்.
"காஃபி சாப்பிடலாம் வாங்கண்ணா. ஓ, அங்க இருக்கீங்களா", என்று மாடியில் இருந்து குரல் ஒலித்தது.
என்னவென்று புரியாத ஒரு யோசனையுடன் படியேறத் துவங்கினேன்.
நான் தூங்கிக் கொண்டிருக்கிறேனா அல்லது விழித்துவிட்டேனா என்று எப்படித் தெரிந்து கொள்வது?
No comments:
Post a Comment