குஷ்பு குளித்த குளம் என்று பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றி ஒரு பதிவு எழுதியிருப்பார் ஜெயமோகன்.
கேட்பாரற்றுக் கிடந்த பேய் உலாத்தும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த அரண்மனையின்பால் சினிமாக்காரர்கள் பார்வை பட்டதும் எப்படி மாறிப்போனது அந்த அரண்மனை என்பதான பதிவு,
இதோ மேலே உள்ள இந்தக் கட்டிடத்தைக் கடந்த பல வருடங்களாக இந்த ஓயெம்மாரில் பார்க்கிறேன். இப்படி வண்ணவொளி விளக்குகள் மின்ன மின்னவெல்லாம் இல்லை. அழுது வடிந்த ஒரு பழைய கட்டிடமாய் இருந்தது, கேட்பாரற்று. உஸ்ஸ் உஸ்ஸ் என்று அழைத்து அவிழ்த்துக் காட்டிடும் மோகினிப் பேய்களெல்லாம் இருந்திருக்குமோ என்னமோ?
இப்போது ஓவியா திறப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று சரவணா ஸ்டோர்ஸாக எழுந்து நிற்கிறது. நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு நேர் என்றால் நேர் நேர் எதிரே இந்தக் கட்டிடம்.
காலையில் அலுவலகம் போனதும் மூன்றாம் வரிசையில் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் எழுந்து நின்று கேட்ட முதற்கேள்வி - "என்ன சார்? எத்தனை மணிக்காம்?".
"போகப் போறியா?", என்ற என்னிடம் ,"போவும்போது கண்டிப்பா சொல்றேன் சார்".
"சொல்லு சொல்லு. மறக்காம சொல்லு. நான் தப்பித்த தவறி கூட அந்தப்பக்கம் வந்துடக் கூடாது பாரு", என்று வேலையில் மூழ்கிப் போனேன்.
மதியம் ஒரு மணிக்கு யதேச்சையாக நினைவு வர, நான் பணிபுரியும் ஆறாம் தளத்தின் சாளரத் திரைகளைத் தூக்கிவிட்டு எட்டிப் பார்த்தால் எதோ ஆரவாரம் நடந்து முடிந்து அடங்கிய கோலத்தில் இருந்தது அந்தப் புதிய கட்டிடம்.
இருக்கைக்குத் திரும்பி வந்து நண்பரிடம், "என்னய்யா போய் வந்தாச்சா?", என்ற கேள்விக்கு நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டினார். "ஜென்ம சாபல்யம் சார்", என்றார்.
இதோ இது இன்னொரு அலுவலகத் தோழி ஒருத்தரின் ஃபேஸ்புக் பதிவு.
அண்ணாச்சி பிரேக் ஈவனை தான் எதிர்பார்த்ததற்கு மிகமிக முன்னதாகவே அடைந்து விடுவார் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.
மாலையில் வேலை ஓய்ந்து வெளியே வரும்போது தடதடத்து வந்து நின்ற ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய எட்டுப் பத்து பேர் சாலையைக் கடக்கும் முன் இந்தப்புறம் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தா அங்கதாண்டா மேடை போட்டிருந்தாங்க. இந்தா இங்கதாண்டா தலைவி மைக் புடிச்சி நின்னாங்க என்று அவர்களுள் ஒருவன் ஒருத்தன் கூவிக் கொண்டிருந்தான்.
அங்கே நின்றிருந்த காரைச் சுட்டிக்காட்டி இதுதான் ஓவியாவோட ட்ரைவர் ஓட்டினு வந்த காரு என்று சொல்லியிருந்தால் எதிர்க்கேள்வி ஏதும் கேட்காமல் தொட்டுக்க கும்பிட்டுவிட்டு அவர்கள் அனைவரும் அங்கப்பிரதட்சணம் வந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.