Jan 26, 2011

சிறுத்தை - அவசியம் பாருங்க (!!)


கயிற்றுப் பாலம். இரண்டு வில்லன்களில் இரண்டாம் வில்லனாம் தம்பி வில்லன் பத்ரா அந்தக் கயிற்றுப் பாலத்தைத் தன் கையிலிருக்கும் நெடும் கத்தியைக் கொண்டு ஒவ்வொரு கயிறாக வெட்டி விடுகிறான். கீழே தொங்கிக் கொண்டிருக்கும் நான்கு வயது ஸ்வேதா என்னாவாளோ ஏதாவாளோ எந்த நொடியில் கீழே விழுவாளோ என நமக்குப் பதைக்கிறது. ராக்கெட் ராஜா ஸ்வேதாவைக் காப்பாற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு தடை அல்லது பத்ராவிடமிருந்து மூக்கில் ஒரு குத்து ஏதேனும் ஒன்று கிடைக்கிறது.

மற்றொருபுறம் வில்லன்களில் அண்ணன் வில்லனும் முக்கிய வில்லனுமாகிய பாவாஜியோ அல்லது பாவ் பாஜியோ எவனோ ஒருவன், அவன் ஸ்வேதாவைக் காக்க மறுபுறமிருந்து போராடும் தமன்னாவை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தூக்கியடிக்கிறான். தமன்னாவின் ஸ்வேதா காக்கும் முயற்சியும் வெற்றியில் முடியுமா தெரியவில்லை.

கயிற்றிலிருந்து கை நழுவவிடும் ஸ்வேதாவைக்  கடைசியில் ராக்கெட் ராஜா காப்பாற்றி வில்லன்களை வதம் செய்தானா என்பதில் முடிகிறது படம்.

"அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க" என்று படத்தில் பத்து தடவை  சொல்லிக்கொண்டே அம்மா பாடிய "ஆராரோ ஆரிரோ" பாடலை கேசட் ப்ளேயரில் படம் நெடுக இருபது தடவை கேட்கும் ஸ்வேதாவை  ராக்கெட் ராஜா என்கிற காமெடி கார்த்தி எதற்குக் காக்க வேண்டும்?



இதுபற்றி தெரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பின்னோக்கிப் போகவேண்டும். ஸ்வேதாவின் அப்பாவும் தன் உருவத்தையொத்த ரத்தினவேல் பாண்டியனுமான சீரியஸ் கார்த்தி சாகக்கிடக்கும் படுக்கையில் ராக்கெட் ராஜா செய்து தரும் "உங்க பொண்ணு இனிமே என் பொண்ணு சார்" என்பதான வாக்குறுதியே "காக்க காக்க" காரணம்.

ர.பாண்டி எப்படி செத்தார்?

கொஞ்சம் நீங்க செஞ்சுட்டு இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு வாங்களேன், என்ன ஊருப்பா அது? ஆந்திராவுல தேவிப்பட்டினமா? வாங்க அங்க போயிட்டு வரலாம்.

ருக்குள் ரயில் விட்டு இறங்கி வெளியே நடந்தாலே நான்கு அச்சுபிச்சு ரவுடிகள் உங்களிடம் மாமூல் வாங்கிக் கொண்டு உங்கள் பேமிலியை டோட்டல் டேமேஜ் செய்யும் வண்ணம் பேசிவிட்டு ஊருக்கு உள்ளே அனுமதிக்கிறார்கள். அவர்களிடம் காலம் காலமாய் கப்பம் கட்டிவரும் கரும்பு வண்டி, இரும்பு வண்டி வியாபாரிகள் அவர்களைக் காக்க வந்த ஆபத்பாந்தவன் நீங்கள்தானா என ஏக்கத்துடன் பார்க்கிறார்கள்? அந்த அச்சுபிச்சுக்களை நீங்கள் அடித்துத் துவைத்தால் ஒரு சந்தோஷ நடனம் ஆடத் தொடங்கணுமே என்ற ஏக்கப் பரபரப்பில் இருக்கிறார்கள்.

ஊருக்குள் போனால் அங்கே சொல்லிவைத்தாற்போல் டெர்ரர் வில்லன் பாவாஜி ஊரின் பிச்சைக்காரன் முதல் போலீஸ்காரன் வரை அத்தனை பேரின் மனைவியையும் தன் மகனுக்கு விருந்து கொடுத்து நடுக்கூடத்தின் உயரிய ஆசனத்தில் அமர்ந்து கெக்கலித்துக் கொண்டிருக்கிறான். வழக்கம் மாறாமல் மனிதர்கள், மாடுகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் அவனை எதுவும் கேட்பதில்லை. 

உள்ளூரில் பாவாஜி என்றால் ஊருக்கு வெளியே அவன் தம்பி பத்ராவின் ராஜ்ஜியம். தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, சாக்குமூட்டை வைத்து அந்தத் தலையையும் மூடிக் கொண்டு, கண்ணுகுக் கீழே பெரியதாய் ஒரு புண்ணோ மண்ணோ எத்தையோ ஒட்டிக் கொண்டு பத்ரா பார்வையிலேயே நம்மை பயமுறுத்த நினைத்து காமெடி செய்கிறான். 

சொல்லும் அவசியமின்றி மாமூல் ரவுடிகளையும், பாவாஜி - பத்ரா கோஷ்டியையும் அடக்க வந்திறங்கியவன் எவனோ அவன் "பாண்டியண்டா" என மீசை முறுக்கும் நம்ம டி.எஸ்.பி. ரத்தினவேல் பாண்டியன் ஆகிப் போகிறான்.


மேலும் சொல்ல அவசியமின்றி உள்ளூர் வெளியூர் ரவுடிகளை அதகளம் செய்து அடக்குகிறான் ர.பாண்டி. தாங்குமா உள்ளூர் பா'வுக்கும் வெளியூர் ப'வுக்கும்? ஊரே கூடி பாண்டிக்கு விழா எடுக்கும் வேளையில் முதுகில் உள்ளே விட்டு வயிற்றில் வெளியே வரும் நீண்ட கத்தியை ர.பாண்டி வயிற்றில் செருகுகிறான் மறைந்திருக்கும் பத்ரா.

சந்தேகம் வேண்டாம் என்று ர.பாண்டியின்  பக்கவாட்டுத் தலை தெறிக்க ஒரு துப்பாக்கிக் குண்டும் செலவு செய்தாயிற்று. ஊரே ஊளையிட சூளுரைக்கிறார்கள் சகோதரர்கள் "எங்களை யாராவது எதிர்த்தா.... தூஊஊஊ ......". டேய், சூளுரைத்தாயே அவன் செத்துவிட்டானா என உறுதி செய்தாயா? படம் அப்படியாவது முடியும் அல்லவா?" என நாம் கேட்க எத்தனிக்குமுன்னே அந்த இடத்தைக் காலி செய்கிறார்கள் வில்லன்கள்.

மீண்டும் நாம் சொல்லத் தேவையில்லாமல் ர.பாண்டி லேசாக முனகி உயிர்த்தெழுகிறான். அவன் சகாக்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்து அவனை தாற்காலிகமாக காப்பாற்றுகிறார்கள். இப்போது அவனுக்கு இருக்கும் பிரச்னை மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏதோ கோளாறு. அங்கே திடீரென அடைப்பு வந்தால் ஒரேயொரு சொட்டாவது தண்ணீர் அவன் தலையில் பட வேண்டும். அப்போதுதான் ர.பாண்டி தன்னுயிர் காத்துக் கொண்டு நம்முயிர் எடுக்க ஏலும்.

இப்போது அவனுடைய அடுத்த இலக்கு மீண்டும் வயிற்றில் கத்திக் குத்து வாங்கிக் கொண்டு "டாஆஆஆஆய்.... டாஆஆஆஆஆய்" எனக் கத்திக் கொண்டு  பறந்து விரிந்த மைதானத்தில் வைத்து ஐம்பத்தியெட்டு ரவுடிகளைக் கொன்றுவிட்டு பின் செத்துப் போக கீழே விழுவது.

"இந்த அம்பத்திஎட்டுப் பேருல ஒரேயோருத்தன் சாகறதுக்கு ஒரு நொடி முன்னால என் உயிர் போச்சுன்னா என் மீசைய மழிச்சிட்டு என்னைப் பொதைங்க" என்று தமிழர் பெருமக்களுக்கு காலம் காலமாக போதை தந்துவரும் மீசை மாதவ டயலாக் ஒன்றை வேறு உதிர்க்கிறார் ரவுசு பாண்டி...மன்னிக்கணும் ரத்னவேல் பாண்டி.



கீழே விழுமுன் தன சகா ஒருவரைப் பார்த்துக் கதறுகிறார் ர.பா. "இன்னும் எவனாவது உயிரோட இருக்கானாடா? "

"நோ ஸ்ஸார்", என்கிறது திரையில் ஒரு குரல்.

"ந்நோ ந்நோ ந்நோ ந்நோ .ந்நோ ஸ்ஸார்", என்கிறது திரையரங்கில் நூறு குரல்கள். அத்தன பயலும் செத்துப் போயிட்டனில்ல.

இதைத் தொடர்ந்துவரும் மற்றுமொரு மருத்துவமனைக் காட்சியில்தான் "உங்க பொண்ணு இனிமே என் பொண்ணு சார்" என்பதான "காக்க காக்க" வாக்குறுதிக் காட்சி நிகழ்ந்தேறுகிறது.

அப்படியே பின்னோக்கி நகர்ந்து நாம் கிட்டத்தட்ட இடைவேளைக்கு வந்துவிட்டோம். கொஞ்சம் இருங்கள் வெளியே போய் ஒரு பாட்டில் தண்ணி எடுத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு இடைவேளைக்கு முன்னோக்கிச் செல்லலாம். நம்ம மூளை நரம்பு அடைச்சிக்கிச்சி.

ஓகே.... இதுவரை படித்துவிட்டு இந்தப் படத்தையும் பார்க்க வேண்டுமா என நீங்கள் யோசித்தால்....? அதுக்குதானே வெச்சுருக்கோம் சந்தானத்தோட கலக்கல் காமெடியோட மொத பாதி! படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம். சந்தானம் இல்லாமல் இந்தப் படத்தை எண்ணிப் பார்க்கவே குலை நடுங்குகிறது. மனிதர் வழக்கம் போல் காட்சிக்குக் காட்சி வசனத்திற்கு வசனம் தன் ட்ரேட்மார்க் எகத்தாளம் செய்து நம்மை சிரிக்க வைக்கிறார்.


ஜேப்படி ஜோடி ராக்கெட் ராஜா (கார்த்தி) மற்றும் காட்டுப்பூச்சி (சந்தானம்). செய்யும் அலப்பறையும் வழக்கமான அச்சுப் பிச்சு தமன்னாவின் நான்கு இடைவெளிச்சக் காட்சிகளும்தான் முதல் பாதி.

ஃபார்முலா காமெடி காட்சிகளை வைத்து அங்கங்கே சிரிக்க வைத்திருக்கிறார்கள். முதல் பாதி காமெடிதான் என்றாலும் கோவை கே.ஜி.தியேட்டரில் நான் படம் பார்த்தபோது தியேட்டரே முதல் பாதிக்கு அளவுக்கு மீறி குலுங்கிக் கொண்டிருந்தது போல் இரைச்சல். அங்கே தியேட்டரில் செயற்கைச் சிரிப்பு எஃபெக்ட்டைப் பரவ விடுகிறார்கள் என்று  மெதுவாகத்தான் விளங்கியது . அடப் பாவிகளா? இங்க கூடவா?

தமன்னா படுத்தோ படுத்து என்று படுத்துகிறார். அழகால் அல்ல... பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கொஞ்சல், கெஞ்சல் கோபக் காட்சிகளால். ஒரு முறை பொதுஜனத்தில் பார்த்து மறுமுறை தன் வீட்டுக் கல்யாணத்தில் பார்க்கும் கார்த்தியிடம் இடையாடையவிழ்த்து இடுப்பில் கைவைடா என்னும் பழக்கம் மாறா தமிழ்க் கதாநாயகி.


வித்யாசாகரை படத்தின் டைட்டிலில் மட்டும் பார்க்க முடிந்தது. மற்றபடி மலரே மௌனமாவும், அற்றைத் திங்கள் வானிலே'வும் தந்த அந்த ஜீனியஸ் இசைக் கலைஞனின் மெல்லிசையை படம் நெடுக வல்லிசைதான் விழுங்கிவிட்டது.

அண்ணனின் சிங்கத்தைத் தொடர்ந்து சிறுத்தை தர நினைத்ததும், தன் ஐந்தாவது படத்தில் இரட்டை வேடமணிய நினைத்ததும் கார்த்தியின் தவறல்ல.  தெலுங்கிலிருந்து சுட்டபோது எண்பதுகளில் வந்த கதையம்ச வாடையைப் பின் பாதியிலும், சமீபத்திய பிராண்டட் அச்சுப் பிச்சு காதல் அளப்பறைகளை முன்பாதியிலும் தவிர்த்திருந்தால் படம் பரவாயில்லை என்றிருக்கலாம்.

படம் பார்த்துவிட்டு மொதல் ரவுண்டு ரெவியூ "சூப்பர் படம்" எனச் சொன்ன என் அலுவலகத் தோழர் தோழிமார்களுக்கு என் மேல் என்ன கோபமோ?

"சிறுத்தை பார்க்கப் போகிறேன்" என்ற என் அப்டேட்டுக்கு "படம் மொக்கையோ மொக்கை"  எனவும், "உங்கள் சொந்த ரிஸ்கில் செல்லவும்" எனவும் கடைசி நேரத்தில் தகவல் தந்த என் ட்விட்டர் சகாக்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் தியேட்டரில் நுழைந்தது என் தவறு.

ஒரு பழைய டயலாக்: நான் படம் நல்லா இல்லை எனச் சொல்லவில்லை. நல்லாயிருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் எனத்தான் சொல்கிறேன்.
.
.
.


5 comments:

baln said...

siruthai super sir...boxoffice report la 1st ...pattaiya kilapputhu ..neenga visay visiri aah?

கரன் said...

baln said...
//siruthai super sir...boxoffice report la 1st ...pattaiya kilapputhu ..neenga visay visiri aah? //

(Only) Chennai Box office report:

Kavalan

No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 221
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai:Rs.47,90,030
Total collections in Chennai: Rs. 1.51 Crore

Aadukalam

No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 271
Average Theatre Occupancy over this weekend: 90%
Collection over this weekend in Chennai: Rs. 49,07,151
Total collections in Chennai: Rs. 1.70 Crore


Siruthai

No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 293
Average Theatre Occupancy over this weekend: 91%
Collection over this weekend in Chennai: Rs. 62,51,323
Total collections in Chennai: Rs. 1.98 Crore

மூலம்: behindwoods.com

கடந்த வார இறுதி சராசரி திரையரங்க மக்கள் வருகையைப் பார்த்தால், காவலனுக்கு (95%) மற்ற இரு படங்களை விட அதிகம்.
அதே நேரம் கடந்த வார இறுதி திரையிடல்களின் எண்ணிக்கை(221) மற்ற இரு படங்களை விட மிகக் குறைவு. ஆகவே, மொத்த வசூல் குறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயம்.
இதுதான், தற்போதய நிலவரம்.

அனேகமாக 3 படங்களுமே ஓரளவுக்காவது வெற்றி பெறும் போல்தான் தெரிகிறது. பாரப்போம்.

கீழேயுள்ள இணைப்புகளையும் ஒருமுறை பார்க்கவும்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2011/01/vijay-s-kaavalan-declared-as-super-aid0091.html

http://www.sify.com/movies/vijay-s-kaavalan-is-a-hit-news-tamil-lbzkgaadefh.html?scategory=tamil

natbas said...

@karan தேர்ந்தெடுத்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டமைக்கு நன்றி. நீங்கள் எதுவும் எழுதுவதில்லையா? ப்ரோபைலில் விபரம் ஒன்றும் காணோமே?

Giri Ramasubramanian said...

@ கரன்

செம்ம தகவல் தல... ரொம்ப நன்றி.

@baln
நான் விஜய் ரசிகன் அல்லன். நேற்றைக்குத்தான் காவலன் பார்த்தேன் - "முடியலை" என்று ஒற்றை வரி விமர்சனம் மட்டும்தான் எழுத ஆசை.

Sivakumar said...

singam,siruthai, kuruvi, suraa...raskols!!

Related Posts Plugin for WordPress, Blogger...