Jan 30, 2011

தியாகிகள் தினம்


மகாத்மாவின் நினைவு தினம் என்ற கூகுள் தேடலில் எனக்குக் கிடைத்த அவர் குறித்த எதிர்மறைத் தகவல்கள் அதிர்ச்சியைத் தந்தது. அவை சாதாரண எதிர்வாதங்கள், தர்க்கரீதியான கருத்துகள் எனின் தவறில்லை. ஆனால் அவற்றில் பல உணர்ச்சியின் வேகத்தில் அரைகுறை விவரங்களோடு எழுதப் பட்டவை எனப் படிக்கையிலேயே புரிகிறது. இப்படியும் கூட நம் தேசபிதா குறித்து இணையத்தில் எழுத இவர்களுக்கு எப்படி சுதந்திரம் இருக்கிறது என ஆச்சர்யம் மேலிட்டது. அது சரி, அவர் முன்னின்று பெற்றுத் தந்த சுதந்திரமல்லவா இவர்களை இப்படிப் பேச அனுமதிக்கிறது?

காதலர் தினத்தை அவமதிப்பவர்களை இந்நாடு பழமைவாத பத்தாம் பசலிகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் காண்கிறது. ஊடகங்கள் ஒரு படி மேலே போய் அவர்களைத் தீவிரவாதிகள் நிலைக்குக் காட்டுகிறது. ஆனால் தேசபிதாவை அவமதிக்கும் கருத்துக்களுக்கு, அதிலும் அவர் நினைவு நாளிலேயே அவரை அர்ச்சிக்கும் எழுத்துக்களுக்கு இங்கு எதிர்க்கருத்துக்கள் இல்லை. எப்போதாவது யாராவது காங்கிரஸ்காரர் இதை கவனித்துவிட்டு குரல் கொடுத்தால் உண்டு. அதிலும் அவருக்கு அது டெம்ப்ளேட் உத்தியோகம் ஆகிப் போனதால்.


சரி, காந்திக்குத்தான் இந்த நிலை தந்தோம். தியாகிகள் நினைவு தினமாக அனுஷ்டிக்கப்படும் அவர் நினைவு நாளில் தியாகிகள் நினைவாக என்ன செய்தோம்? சத்தியமாக நான் ஒன்றும் செய்யவில்லை முத்தமிழ் தமிழ் இணையக்குழுவில் மதிப்பிற்கு உரிய விசாலம் அம்மா அவர்கள்  எழுதியிருந்த இந்த மடலைப் படிக்கும் வரையில்.

இன்றைய நிலையில் எனக்கு மிகவும் அர்த்தம் பொதிந்ததாகத் தெரிந்த அந்த மடலை  அவர் அனுமதியுடன் அப்படியே வெளியிடுகிறேன்.



நம் நாட்டில் "காதலர் தினம்" வரும் ஒரு மாதம் முன்பாகவே  கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடுகிறது   கடைகள் எல்லாம் பல பரிசுகளால் நிரம்ப  டிவியில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய எங்கும்"ரொமான்ஸ் "தான் ஆனால்  இந்தத்தியாகிகள் தினம் பலருக்கு ஞாபகம் வராதது ஏனோ ? 

அவர்களை ஞாபகம் வைத்துக்கொண்டு என்ன ஆகப்போகிறது! தியாகிகள்   நாட்டிற்காக உழைத்தார்கள் .நாட்டின் நன்மைக்காகவே வாழ்ந்தார்கள் . அவர்கள் உடலில் தேசபக்தி என்ற இரத்தமே ஓடியது .எத்தனைத்தியாகிகள் ! மனதில் அவர்கள் பெயரைக்கொண்டு வர வால் போல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது ,வாழவேண்டிய இளைஞர்கள் கூட தங்கள் மூச்சு எல்லாம் பாரதமாதாவிற்கே என்று தங்களையே அர்ப்பணித்தார்கள்.

கொடிக்காத்த திருப்பூர் குமரனைத்தான் மறக்க முடியுமா? தூக்குத்தண்டனைக்கு கூட பயப்படாமல் வீர மரணம் எய்திய சர்தார் பகத்சிங் ஜி  ராஜகுரு ஜி சுக்தேவ் ஜி நம் சரித்திரத்தில்  அழியா இடம் பெற்றவர்கள் அல்லவா ? தன் குழந்தையும் தன் முதுகில் கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி வாள் வீசி பல சத்ருக்களை அழித்த ஜான்சிராணி   சரித்திரத்தில் இன்றும்  வைரம் போல் மின்னுகிறாள்.

இன்றைய நிலைமையைப்பார்த்தால் தியாகி என்ற சொல்லே  மறைந்துப்போய் விட்டதோ எனத்தோன்றுகிறது  மஹாத்மாஜியின் நினைவு  நாள் கொஞசம் ஞாபகம் வந்தாலும் தியாகிகள் தினம்  ஞாபகத்திற்கு வருவதில்லை ஒரிரெண்டு டிவி சேனல்களில் காலையில் "சாந்த அஹிம்ஸா   மூர்த்தே " வைஷணவ ஜனதோ " என்ற பாடல்கள் வரும் .

முன்பெல்லாம் பதினோறு  மணிக்கு ஒரு சைரன் ஊத பாரத நாட்டில் மக்கள் ஒரு நிமிடம்  அப்படியே சிலைப்போல் நிற்கும் இடத்தில் நின்று அஞ்சலி செலுத்துவவர்கள் ,சாலையில் ஓடும் வாகனங்களும் அந்த நேரம் நின்றுவிடும்  பள்ளியில் சிறுவர்களும் ஆசிரியர்களுடன் நின்று மௌனம் சாதிப்பார்கள் இன்றைய காலத்தில் இதெல்லாம் காற்றில் பறந்து போய்விட்டது என  நினைக்க மனம் வருத்தமடைகிறது
சுய நலம் அதிகமாக  தியாகச்சிந்தனை எங்கிருந்து வரும் ? தன்னலமில்லாத ஒரு எதிர்ப்பார்ப்புமில்லாத அன்பே தியாகத்திற்கும் வழி காட்டுகிறது, பொருளும் பணமும் மேலும் மேலும் பெருக்க வைத்து தானும் பெருத்து குடும்பத்தையும் வளமாக்கி "வாழ்க வளமுடன்" என்ற ஆசிகள் அங்குப்பலித்து ரௌடிகள் போல் அரசியல் தலைவர்கள் இருக்க மேலே சென்ற தியாகிகள் நிச்சியம்  கண்ணீர் வடிப்பார்கள் அல்லது "நல்ல வேளை நாம் இந்தச்சமயத்தில் அங்கு இல்லை "என்று பெருமூச்சும் விடலாம்.

நாட்டிற்காக உயிரைக்கொடுத்த எல்லா தியாகிகளையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்


 image courtesy: bbc.co.uk



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...