Dec 17, 2011

இலக்கிய விருதுகள்


இலக்கியம் என்றால் என்ன என்ற தியரிடிகல் கேள்விகளுக்கெல்லாம் பதில் கேட்டால் இண்டர்வியூவில் விழிப்பது போல் நான் பேந்தப் பேந்த விழிப்பேன். எனினும், எனக்குத் தெரிந்தவரையில்.... ”மேக்கப் ஏதும் அணியாமல் நீதியையோ போதனையையோ சொல்லாமற் சொல்லும், எங்கேனும் உங்கள் வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும், படிக்கையில் (அல்லது முடிக்கையில்) பேரானந்தம் தரும்” படைப்புகளை நான் இலக்கியம் எனக் கொள்கிறேன்.


பூமணி அவர்களுக்கு கோவையில் நாளை வழங்கப்படும் “விஷ்ணுபுரம் விருது” அழைப்பிதழை நேற்று நம் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அது தொடர்பாக நண்பர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியும் அது சார்ந்த எங்கள் சிறு விவாதத்தின் தொடர்ச்சியுமே இந்தப் பதிவைக் கொணர்ந்தது.

இந்த விருது விழாவில் வழங்கப்படும் பணமுடிப்பின் மதிப்பு ஐம்பதினாயிரம் ரூபாய்கள். இன்றைய காலகட்டத்தில் பெருமதிப்பிற்குரிய பணம் ஒன்றுமல்ல இது. இன்று நம் ஊர்களில் மேலைநாட்டு நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் ஆயிரமாயிரம் இளைஞர்களின் மாத ஊதியம் கிட்டத்தட்ட இதற்கு நிகராகவே இருக்கிறது. 

ஆனால், எழுத்தில் தன் வாழ்க்கையை அமிழ்த்தி வைத்துவிட்டுத் தன் சமூகத்திற்கென இலக்கியம் படைத்துத் தேயும் எழுத்தாளனுக்கு இங்கே தரப்படும் பணமுடிப்பை விட இந்த அங்கீகாரம்தான் பெரிது என்பேன் நான்.  தான் வாழ்ந்த காலகட்டத்தின் சாதாரண நிகழ்வுகளை, அசாதாரண வாழ்வியல் அழகுகளை,  சமூக அவலட்சணங்களை ஆவணப்படுத்திவிட்டுப் போகும் ஓர் இலக்கியக் கர்த்தாவுக்கும் அவனைப் பின்பற்றி இந்தச் சூழலில் எழுத்தினைப் பிடித்துக் கொண்டு வாழும் படைப்பாளிகளுக்கும் இது போன்ற விருதுகள் நிச்சயம் ஊக்கம் தரும், சந்தேகமேயில்லை. அவர்களை நிச்சயம் உயிர்ப்புடனும் வைத்திருக்கும்.

ஆக, இந்த அழைப்பிதழை நான் வெறும் ஜெமோ வாசகன் என்றமுறையில் மட்டும் இங்கே பகிரவில்லை. இது போன்ற விருதுகள் ஊக்கங்கள் மேலும் வளரவேண்டும் என்பதை என்னால் முடிந்த விதத்தில் பதிவு செய்வதே என் முழுமுதல் நோக்கம்.


இதுவரை இதுபோன்ற விருதுகள் தனிப்பட்டவர்களின் பையிலிருந்தோ அல்லது ஏதேனும் தொண்டு நிறுவனங்களின், பதிப்பாளர்களின், புகழ்பெற்ற நிறுவனங்களின் (உ-ம்: நல்லி, த ஹிந்து) பையிலிருந்தோதான் வருவது நடைமுறையாக இருக்கிறது. இனி இதுபோன்ற விருது வழங்கல்களில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கினை கொண்டு வருவது எப்படி என்பது குறித்து நாம் யோசிக்கலாம். 

ஊழியர்களின் கேளிக்கை சார்ந்த விஷயங்களுக்கும், கிரிக்கெட் ஆட்டங்களைக் காண மொத்தமாகத் தம் ஊழியர்களுக்கு ஒரு கேலரியைக் குத்தகைக்கு எடுப்பது போன்ற விஷயங்களுக்கும், இவைபோல இன்னபிற கொண்டாட்டங்களுக்கும் என கார்பரேட்கள் ஒதுக்கும் பட்ஜெட்கள் ஒருபுறம் இருக்க, CSR Activities என்ற பெயரில் (Community for Social Responsibility) கார்பரேட் நிறுவனங்கள் இன்றைக்கு நம் நாட்டில் எத்தனையோ சமூக விழிப்புணர்வு சார்ந்த நல்விஷயங்களில் ஈடுபடுகின்றன. அதற்கென அவர்களிடம் எப்போதும் ஒரு தனி பட்ஜெட் இருக்கவே செய்கிறது. 

”இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ என்றோ நான் இறந்திருப்பேன்” என்ற பாடல் நம் எல்லோருக்கும் தெரியும். இங்கே இலக்கியமும் நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில் அப்படித்தான் உள்ளது. நல்ல எழுத்துக்களை வாசித்தே போகத் துடிக்கும் ஜீவனை இருகப் பற்றியிருப்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். நாம் வாழ ஏதேனும் அர்த்தத்தைத் தந்து கொண்டிருக்கும் நம் இலக்கியக் கர்த்தாக்களை அங்கீகரிப்பதும் என் பார்வையில் ஒரு சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி’தான்.


4 comments:

natbas said...

அருமை.

எதிர்காலத்தில் இது நடக்கும் என்று நம்புவோம்.

நன்றி.

rishvan said...

அருமை...


நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

natbas said...

@ரிஷ்வன் நண்பரே, நீங்கள் டிவிட்டரில் தொடர்ந்து உரையாடுங்கள். நட்பைவிடச் சிறந்த அழைப்பில்லை. :)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

Related Posts Plugin for WordPress, Blogger...