Jan 5, 2012

ஏடிஎம் (அ) வாடிக்கையாளர்

வீட்டு விசேஷத்திற்கு ஆடைகள் எடுக்க இரு தினங்களுக்கு முன் சென்னை தி.நகரின் புகழ்பெற்ற துணிக்கடைக்குப் போயிருந்தோம். மாடிக்கு மாடி தாவிச்சென்று வேண்டிய ஆடைகளை அள்ளிக்கொண்டு வேட்டி எடுக்க வேண்டிய பகுதிக்கு வந்தோம். சாதாரண வேட்டியாக இல்லாமல் ஜரிகை போட்ட நல்ல வேட்டியாக எடுக்க வேண்டும்.. எங்கள் மனதில் இருந்த பட்ஜெட் ஐநூறுக்கு மேல் ஆனால் ஆயிரத்திற்கு மிகாமல். 

வேட்டிகள் பகுதியில் இருந்த சிப்பந்தி வரவேற்றார். 

“என்ன ரேஞ்சுலருந்து இருக்குங்க?”

“2500’லருந்து தொடங்குது சார்?”

“ரெண்டாயிரத்தி ஐநூஊஊறாஆஆஆ?”

”ஆமாம் சார், பட்டு வேட்டிங்க”

“இல்லை பட்டு வேணாம், ஆனா கொஞ்சம் க்ராண்டா வேணும் நல்ல வேட்டியா”

“அங்க வஸ்திரம் இல்லாம ரெண்டாயிரத்தி நூறுக்கு வரும் சார்”

“அது என்ன வகையறா?”

“இதுவும் பட்டுதான் சார்”

”இல்லை சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

“உங்க பட்ஜெட் என்ன சொல்லுங்க சார்?”

”ஐநூறுலருந்து ஆயிரம்”

”பட்டு மிக்ஸ்ல இருக்கு பாருங்க, ஆயிரத்தி அறுநூறு”

“சார், பட்ஜெட்....”

”இது ஆயிரத்தி முன்னூறு”

“ஐயா பட்ஜெட்”

“நல்லா இருக்கு சார் பாருங்க. ஜம்முன்னு இருக்கும் உங்களுக்கு”

”இருக்கும்தான், இருந்தாலும் கைல பணம் இருக்கணுமே”

“கார்டு வாங்கிப்போம் சார்”

“அடுத்த மாசம் அதை நான்தான் கட்டணும் சார்”

”அதெல்லாம் பார்த்தா முடியுமா சார். வாங்கறது ஒருமுறை,  நல்லா க்ராண்டா வாங்குங்க சார்”

“ஐயா, நான் பட்டு வேட்டி வாங்கவே வரலை. ஜரிகை போட்ட நல்ல வேட்டியா நான் கேட்ட விலையில தாங்களேன்?”

”இது பாருங்க, இது பட்டு மிக்ஸ். ஒன்பதுக்கு அஞ்சு வேட்டி. எண்ணூறு ரூபா வரும். இதே மாடல் அடுத்த குவாலிடி எழுநூறு அதுக்கும் அடுத்து அறுநூறு. எண்ணூறு ரூபாய்ல வெள்ளி ஜரிகை வரும். மத்த ரெண்டும் சாதா ஜரிகை”

“சரி, அந்த எண்ணூறு பேக் பண்ணிருங்க”

இங்கே நான் குறிப்பிட விரும்புவது அந்த சிப்பந்தியின் மனதில் முன்னணியில் நிற்கும் மாதக்கடைசியில் அவர் கைக்குக் கிடைக்கப் போகும் சேல்ஸ் போனஸ். எத்தனை அதிக விலைக்கு நம் தலையில் சரக்கைக் கட்டுகிறாரோ அத்தனை அதிகம் போனஸ் அவர் வங்கியில் கிரெடிட் ஆகும். ஆக, தன் ஏடிஎம் ஒன்று எதிரில் நிற்பதாகத்தான் அந்த சிப்பந்தி எங்களைக் காண்கிறார்.

இது துணிக்கடை என்றல்ல, எல்லா வியாபார இடங்களிலும் பார்க்கும் காட்சிதான். வியாபாரம் செய்பவர்கள் மட்டும் என்றல்ல இந்தக் கலியுகத்தில் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள். நீங்கள் முதலாளி (அல்லது மேனேஜர் அல்லது டீம் லீடர்)  என்றால் உங்களிடம் இருந்து எந்தெந்த வகையில் எல்லாம் சம்பள, இதர படிகள், போனஸ், சினிமா-டிராமா பாஸ், பர்ஃபார்மன்ஸ் பாயிண்ட்டுகள்*, எக்ஸட்ரா, எக்ஸட்ரா எனக் கறந்துவிட முடியும் என்று உங்க்ள் ஊழியர் பார்க்கிறார், நீங்கள் அதே பார்வையை உங்கள் மேலதிகாரியைப் பார்க்கிறீர்கள். உலகமே இப்படித்தான் இயங்குகிறது.

ஆனால் பாருங்கள், மருத்துவர்கள் தங்கள் ஏடிஎம்’கள் என தங்கள் நோயாளிகளைப் பார்ப்பது மட்டும் உலகில் யாரும் செய்தே இராத குற்றமாகக் காணப்படுகிறது#.

காரணம் என்னவென்று என்னைக் கேட்காதீர்கள். இன்னும் அந்த ஆராய்ச்சியை நான் பண்ணவில்லை. 

-   x  -

* இவை எம்.என்.சி. நிறுவனங்களில் ஊழியர்களுக்குத் தரப்படுபவை. இவற்றை வைத்து ஆன்லைனில் பாயிண்ட்டுகளின் அடிப்படையில் பொருள்கள் வாங்கலாம். உ-ம்: நூறு பாயிண்ட்டுக்கு அயர்ன் பாக்ஸ் கிடைக்கும்,. ஆயிரம் பாயிண்ட்டுக்கு ஃபிரிட்ஜ் கிடைக்கும்.

 மூன்று வருடங்கள் முன் நானும் இதே தொனியில் ஒரு பதிவு எழுதினேன் என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் :)

2 comments:

POIYAMOZHI.V said...

சார் உங்க பாட்டு சூப்பர் இசையே இல்லாமல் அருமையாக பாடி உள்ளீர்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ? நானும் பாடுவேன் .நீங்கள் என்ன mike யூஸ் பண்றீங்க .எந்த சாஃப்ட் வேர் யூஸ் பண்ணி ரெகார்ட் பண்ணுறீங்க கொஞ்சம் சொல்லுங்க உங்க செல் no தரமுடியுமா .என் செல்+91- 9442223586 என் இமெயில் vpoiyamozhi@gmail.com

Rathnavel Natarajan said...

நல்ல கடைகளும் இருக்கின்றன.
வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...