Aug 16, 2013

என்னத்த சொல்ல!

இரண்டு தினங்களுக்கு முன்.....

ஹேய்! பதினொன்ற ஆச்சு, இன்னும் நீ வீட்டுக்கு கெளம்பலியா? என் டெஸ்குக்கு வாயேன், அந்த பெண்டிங் டாஸ்க் முடிச்சிடுவோம்.

பாஸ், பொறப்பட்டுட்டேன் பாஸ். மதியம் பன்னண்டு மணிக்கு உள்ள வந்தது. வீட்லருந்து ரெண்டு போன் கால் வந்தாச்சு. நாளைக்கு பாக்கலாமே?

எங்க வீட்லல்லாம் என்ன தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்கய்யா. நீயும் உங்க வீட்ல சொல்லிடு. இந்த மாதிரி இந்த ப்ராஜக்ட்ல சேந்துட்டேன். இனி எல்லாம் இப்டித்தான்னு சொல்லிடு.

<மனசுக்குள்: இருந்தாலும், டெய்லி பன்னண்டு அவர்’ன்னா ரொம்ப ஓவர் பாஸ்.>

இன்று காலை:

கொஞ்சம் இருங்க தம்பி. வழுக்கி விடப் போவுது. தண்ணிய வெளிய தள்ளி வுட்டுடறேன். 

சரிங்க.

மழைய வாங்கறதா, போங்கறதான்னே புரியலை. கொஞ்சம் செருப்பை வெளிய விட்டுடறீங்களா? ஒவ்வொருத்தரா கொண்டுவர்ற சேத்தைத் தொடைச்சி தொடைச்சி மாளல.

நோ ப்ராப்ளம்.

ஐநூறு நோட்டுதான் வரும் தம்பி, பாத்துக்கங்க. இன்னைக்கு பப்ளிக் ஹாலிடே வேற. எப்போ பணம் கொண்டு வந்து ஃபில் பண்ணுவாங்களோ.

ஓ! சரி சரி. என்ன, காலை நாஸ்தாவா? வீட்லருந்தே கொண்டு வந்துடுவீங்களா?

பின்ன? நாம வாங்கற நாலணா சம்பளத்துக்கு ரெண்டு வேள வெளிய சாப்பிட முடியாதுங்களே.

ஓ... எத்தன அவரு ட்யூட்டி?

காலைல ஏழு மணிக்கு வந்தா, ராத்திரி ஏழு மணி வரைக்கும்.

பன்னண்டு மணி நேரமா?

ஆமாங்க தம்பி...

அட, நம்ம சாதி நீங்க..... என்னைக்கு வீக் ஆஃப்?

அப்டின்னா?

சனி, ஞாயிறு?

சனியுமில்ல, ஞாயிறுமில்ல. பொங்கலுமில்ல, தீவாளியுமில்ல. பதினஞ்சு நாளைக்கு ஒருதடவ டொண்டி ஃபோர் அவர் ப்ரேக் கெடைக்கும். அதான் நமக்கு லீவு.

புரியலியே?

புரியவேணாம் தம்பி. நம்ம கஷ்டக் கதை உங்களுக்கு எதுக்கு. இட்லி சாப்டறீங்களா? 

இல்லை இல்லை சாப்பிடுங்க. நான் வர்றேன்.

ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே தம்பி....

ஹ்ம்ம்ம்ம்..... ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே!

Aug 12, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள எண்டர்டெயினர் பார்த்த திருப்தி.

சாதாரணக் கதைதான். வடக்கத்தி வாலிபன் + தெக்கத்திப் பெண் மும்பை டு சென்னை ரயிலில் சந்திக்கிறார்கள். தெக்கத்திப் பெண்ணின் கிராமத்திற்கு சந்தர்ப்ப வசத்தில் வந்து சேர்கிறான் வடக்கன். க்ளைமாக்ஸுக்கு ஆறு சீன்களுக்கு முன் ஹீரோயினிக்குக் காதல் வருகிறது; அதற்கு நாலு சீன்களுக்குப் பிறகு ஹீரோவுக்குக் காதல் பிறக்கிறது. 

அப்போ, அதுக்கு மின்ன என்ன நடந்துச்சு? அதுதான் சென்னை எக்ஸ்ப்ரஸ்.

படத்தின் மூன்றாவது ரீலுக்குப் பிறகு, இடையில் இரண்டு காட்சிகள் வந்துபோகும் ஒரு சர்தார் போலீஸ்வாலாவைத் தவிர்த்துப் பார்த்தால், திரையில் ஹிந்தி பேசும் ஒரே கதாபாத்திரம் ஷாரூக்கான் மட்டுமே. துணைக்கு சந்தானம் வகையரா போல யாரையும் அச்சுபிச்சுவென சேர்த்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தப் படத்தின் எண்டெர்டெயின்மெண்ட்டையும் தன் தலையிலேயே சுமக்கிறார் ஷாரூக். ஷாரூக் ரசிகர்கள் நிச்சயம் தலையில் வைத்துக் கொண்டாடத்தக்க படம்.

”உனக்குத் தமிழ் தெரியுமா?”, என சத்யராஜ் கேட்க... “ஏய் ஏய் ஏய்.... அம்மாவப் பத்தியெல்லாம் தப்பாப் பேசாத”, என்கிறார் ஷாரூக் < தமிழ் தேரி மா >.  படம் முழுவதும் கிச்சுக்கிச்சு மூட்டும் இந்தவகை நகைச்சுவைகள்.

ஹிந்தி - தமிழ் கலப்பினை ஜாக்கிரதையாகவே கையாண்டிருக்கிறார்கள் ஷாரூக்கும் ரோஹித் ஷெட்டியும். நையாண்டி நகைச்சுவை எதையும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ரெஃப்யூஜி, இந்தியன், ஸ்ரீலங்கன், டெர்ரரிஸ்ட் என்று விவரம் புரியாமல் சில அவைக்குறிப்பிலிருந்து நீக்கத்தக்க சீன்கள் தவிர்த்தால் நெருடல் இல்லாத படம் (அந்தக் காட்சிகளை தமிழ் இணைய புலாசுலுக்கிகள்* பார்க்காமல் இருக்கக் கடவது).
<*உட்கார்ந்த இடத்திலேயே குதிப்பவர்கள்>

ஏழரை அடி ரெஸ்லரை க்ளைமாக்ஸில் அடித்து வீழ்த்தும் ஐந்தரை அடி ஹீரோ, அடி வாங்கிவிட்டு, “நான் ஒடம்புல பலசாலி; நீ மனசுல பலசாலி”, என்று சொல்லும் அதே ரெஸ்லர், ’இந்தா எம்பொண்ணக் கட்டிக்கோ என்று க்ளைமாக்ஸில் மனம் மாறும் சத்யராஜ் என்ற க்ளிஷேக்களைத் தவிர்க்க வேறேதும் உத்தியைக் கையாண்டிருக்கலாம் ஷாரூக். இந்த காலத்து இளரத்தங்களைக் கதை டிஸ்கஷனில் சேர்த்திருந்தால் ஐடியா தந்திருப்பார்களே சார்?

சத்யராஜ் படத்தில் மற்றும் ஒரு கேரக்டராகவே வருகிறார். பில்டப்பிற்குத் தகுந்த கதாபாத்திரம் இல்லை அவருடையது. நம் எதிர்பார்ப்பிற்கு அவர் போர்ஷனில் தீனியில்லை எனலாம்.  

படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் ரயில் பிடிக்கும் அறிமுகக் காட்சியில் ‘தமிழ்ப்பெண்’ என்ற அறிமுகத் தேவையால் பாவாடை தாவணியில் வருகிறார் தீபிகா. அவர் ரயில் இறங்கும் வரை ஓவியர் ஜெயராஜின் ஓவியத் தனமாய் மாராக்கு  விலகியே இருக்க, என்னாடா இது வம்பாப்போச்சு டமில் பெண்களின் அறிமுகத்திற்கு என நாம் விசனப்பட, அதெல்லாம் அறிமுகத்துக்கு மட்டும்தான் என்று ஆசுவாசம் தருகிறார் இயக்குனர். படத்தின் இன்னபிற காட்சிகளில், பாடல்கள் தவிர்த்து, ரீஜண்ட்டாகவே வருகிறார் தீபிகா. 

ஆக, குடும்பத்துடன் பார்க்கத்தக்க குட்டும்ப்பச் சித்திரம்.

இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

கானாபிரபா சொன்னதைத்தான் நானும் சொல்லுவேன்:
தமிழ் உச்சரிப்பு, பல படங்களின் தழுவல் என குறைகளைப் பட்டியல் போடலாம் ஆனால் படம் முடிந்த பின் இரண்டரை மணி நேரம் கிடைத்த கலகலப்பான தருணங்களே மேலோங்கி நிற்கின்றன
பை தி வே, பதிவின் ஆரம்பத்தில் வரும்  பிரபந்தப் பாடல் இடைச்செருகல் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஹிந்திப் பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகளாக வருகின்றது.

வாழ்க தமிழ்! வளர்க திராவிட வேதம்!
Related Posts Plugin for WordPress, Blogger...