Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Jul 31, 2016

கபாலி


#மகிழ்ச்சி

நேற்று #கபாலி பார்த்தேன்.

பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி ரிலீஸ் ஆனபோது நண்பர் நாகராஜ் over a dinner table கொடுத்த விமர்சனத்தை வைத்து படம் குறித்து என் கருத்தை நிறுவிக் கொண்டேன். டிவியில் அந்தப் படத்தைப் போட்டபோதும் ரெகார்டு செய்து வைத்து ஓரிரண்டு முறைகள் பார்க்க முயற்சித்தேன். எனக்கு ரொம்பவும் போரிங் என்று தோன்றியதால் எழுந்து போய் விட்டேன்.

ரஞ்சித்தின் மெட்றாஸ் - இந்த உலகோர் கொடுத்த ஓவர் ஹைப் ஒன்றே போதுமானதாய் இருந்தது, அந்தப் படத்தை நான் பார்க்காமல் இருந்திட. (இந்த வகையான வெறுப்புகளை மனதில் விதைத்துக் கொள்வதிலிருந்து வெளிவர என்ன வழி?) மெட்றாஸும் டாடா ஸ்கை ரெகார்டில் உறங்குகிறது. அதைப் பார்க்கும் பொறுமை இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

சரி, கபாலிக்கு வருவோம்.

//ஒரு ரெண்டு வாரங்கழிச்சு, அடுத்தடுத்து மூணு காட்சி. பெரம்பூர் எஸ்2ல போயி ஒக்காந்து பாத்துத் தொலையப்போறேன். யாரேனும் கூட சாவுறதுக்கு வர்றீங்கன்னா, தெரியப்படுத்துங்க. டிக்கட் வாங்குறேன்//

என்று கோகுல் எழுதியிருந்தான். போகலாம் என்றிருக்கிறேன்.

இந்தப் படத்தைக் கடந்த பத்து நாட்களில் பார்த்தவர்கள் இருநூற்று நாற்பத்தெட்டு விதங்களில் விமர்சனம் படத்தார்கள்.

அதில் டாப் 5 வகைகள் இவை...

1) படம் அட்டர்ஃப்ளாப். கேவலாமா இருக்கு.
2) மரணமாஸ் மூவி. கபாலிடா...
3) நல்லாதான் இருக்கு.
4) இது ரஞ்சித் படம் இல்லை
5) இது ரஜினி படமும் இல்லை

என் தாழ்மையான கருத்தினில் எல்லாமுமே துரிதஸ்கலிதங்கள். In fact, நான் எழுதும் இதுவும் கூட அவற்றுள் ஒன்றாயிருக்கலாம். You need a ton times viewing to review Kabali. If you don't have patience to watch it even once, thats fine.... it is not your cup of movie.

ரஜினியையும் ரஞ்சித்தையும் விடுங்கள்....

படத்தின் பாத்திரப் படைப்புகள், ராதிகா ஆப்தே, தன்சிகா, தினேஷ், சந்தோஷ் நாராயண் + அவரின் அபரிமிதத் துணிச்சல் (ங்கொய்யால ரகம்), The making என்று ஒரு பத்து - இருபது விஷயங்களைப் பட்டியலிட்டால் குறைந்தது ஒவ்வொன்று பற்றியும் இருநூறு வார்த்தைகளாவது பேசலாம். ஆனால், அதுவெல்லாம் அவசரம் இல்லாமல் நிதானமாக இன்னும் சிலமுறைகள் படம் பார்த்துவிட்டுச் செய்ய வேண்டியவைகள்.

ஒன்றேவொன்றைச் சொல்லவேண்டுமென்றால், it is not another movie.... not just another movie of Rajini. அவ்வளவுதான். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. Go, watch.... if you haven't watched it already.

அப்படியும் மேலும் என் கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் தோன்றியதைச் சொல்லுவேன். நான் பார்த்த ரஜினி படங்களில், “எங்கேயோ கேட்ட குரல்” படத்திற்குப் பிறகு நான் ரொம்பவும் ரசித்த ரஜினி படம் இது. (இடையில் வந்த பல நல்ல படங்களை நான் பாராது இருந்திருக்கலாம்).

ரைட்....

இப்போது துரிதஸ்கலிதர்கள் பற்றி....

நீங்கள் so called ரஜினி ரசிகர் என்றால் ரஜினியை ஒரு புட்டியில் அடக்கினீர்கள். அல்லது, ரஜினி நின்னா ஸ்டைல், நடந்தா ஸ்டைல் என்ற நூற்றாண்டு டயலாகை மறவாது பேசி, thats ok man, its a good movie.... after all our thalaivar comes in to the screen, what else you need என்று என்ன பார்க்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதறியாது உளறினீர்கள். ரஞ்சித்துக்கு என்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு அதைத் தாண்டி அவர் வந்துவிடக்கூடாது என்று ஏங்கினீர்கள். அந்த ஏக்கம் ஏமாற்றத்தில் முடிந்தபோது பக்கத்து சீட்காரனைக் குத்த ஓங்கிய கையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாது என்னத்தையோ ட்வீட்டினீர்கள், ஃபேஸ்புக்கினீர்கள். ரஜினியை sofa’வில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து கொண்டு பஞ்ச் எல்லாம் இல்லாத டயலாகுகள்அடிக்க வேண்டாம் என்கிறீர்கள். ரஞ்சித்தை வேகமாகப் படம் எடுக்கச் சொல்கிறீர்கள். எஸ்பிபி ஓபெனிங் ஸாங் கொடுக்காத ரஜினி படமா என்கிறீர்கள். ரஞ்சித்துக்கு க்ளைமாக்ஸ் எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் அறிவு உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்.

தயவு செய்து நீங்கள் படம் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

நிற்க....

...படம் பிடிக்கவில்லை, நன்றாக இல்லை என்று சொன்னவர்களை விட..... படம் நல்லா”தான்” இருக்கு என்று சொன்னவர்கள் இந்த உலகுக்கு எதையோ சொல்ல விழைகிறார்கள் என்று எனக்குப்படுகிறது. In fact, நம்மை ஆகப்பெரும் டரியல் டெலிகேட் பொஸிஷனில் தள்ள வல்லவர்கள் இவர்கள்தான்.

படம் பிடிக்கவில்லை என்றால் - thats fine. உங்க டேஸ்ட்டுக்குப் படம் ஒத்து வரவில்லை.

படம் நல்லாயில்லை என்றாலும் ஓகே. உங்களுக்குத் தெரிந்தது, புரிந்து கொள்ளும் சக்தி அவ்வளவுதான்.... அல்லது உங்களுக்குக் கமல், மணிரத்னம் என்று ப்ரிஃபரன்ஸஸ் இருக்கலாம். அல்லது ரஜினி படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டத்தைவிட்டு நீங்கள் வெளிவர விரும்பாத ஆளாக இருக்கலாம் - thats also fine.

நல்லா”தான்” இருக்கு என்பது என்ன வகையான விமர்சனம் என்று புரியவில்லை. அப்படி என்னத்துக்கு காம்ப்ரமைஸ் செய்து கொண்டு படம் பார்க்கணும்?

இன்னொரு வகையினர் உண்டு. இப்படிப்பட்ட படம் எடிசன் காலத்திலிருந்தே வந்ததில்லை என்பவர்கள். அது இன்னும் டேஞ்சர். அப்படிப்பட்ட விமர்சனங்கள் தான் மெட்றாஸை விட்டு என்னை விலக்கி வைத்தவை.

எனிவேஸ்ஸ்ஸ்.... கபாலி படத்தின் flaws, லாஜிக் ஓட்டைகள் பற்றி நிறைய பேர் நிறைய கேட்டு விட்டார்கள். என் கண்ணுக்கு அப்படி ஒன்றும் நெருடவில்லை.

அப்படியே கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு என் பங்கிற்கு நானும் கேட்க வேண்டுமென்றால்....

1991’ல் ஜெயிலிக்கு உள்ளே சென்ற கபாலி எப்படித் தன் பேச்சினூடே வடிவேலு டயலாக் ஒன்றை quote செய்கிறார் என்ற ஒன்றே ஒன்றுதான்.

#நெகிழ்ச்சி

Nov 1, 2013

ஆரம்பம்

”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” வகையறா குடும்பம், உயிர்த்தோழன், நட்புஅதிகாரம், வில்லனான ஊழல் அரசியல்வாதி, ஆருயிர் நண்பனின் மரணம், அவன் குடும்பத்தை அதே அரசியல்வாதி & கோ கூண்டோடு கொடூரமாக அழிப்பது, சொல்லத் தேவையின்றி அந்த நண்பனின் மனைவி நிறைகர்ப்பிணி, ஹீரோவும் ஹீரோயினும் (மட்டும்) விஷத்தைத் தின்று, துப்பாக்கிக் குண்டடி பட்டும் வில்லனை க்ளைமாக்ஸில் பழிவாங்குவதற்காகவே உயிர் பிழைப்பது......

வெய்ட் வெய்ட் வெய்ட்...! என்னய்யா.... இதைத்தானே காலாகாலமா தமிழ் சினிமாவுல பாக்கறோம் என்கிறீர்களா? படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்’தான் நாம் மேலே குறிப்பிட்ட உபகதையின் சுருக்கம். இதற்கு முன்னும் பின்னும் வெகு சுவாரசியமான படையலாக “ஆரம்பம்”.


’மாஸ்’ சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல எண்டர்டெயினர் “ஆரம்பம்”. தல ரசிகர்களுக்கு கொண்டாடத்தக்க தல-தீபாவளி ரிலீஸ் “ஆரம்பம்”. சராசரி சினிமா ரசிகனுக்கு ஒரு நல்ல எண்டர்டெய்னர்.

மங்காத்தாத்தனமான நாற்பதுகள் கெட்டப்பில் மீண்டும் அஜித். ஸ்டைலில் மனிதர் பின்னியெடுக்கிறார். குறிப்பாக கூலர்ஸை அவர் ஒவ்வொரு காட்சியில் அணியும் அழகும், டுக்காட்டியை துபையில் ஓட்டும் ஸ்டைலும்.... ஓஹ்ஹோ போங்கள். பை திவே, அயாம் நாட் அஜித் ஃபேன்; கேட்ச் மை பாய்ண்ட்?

முதல் பாதியின் ஒன்றேகால் மணிநேரம் ‘ஜிவ்’வென்று பறக்கின்றது. டிபிக்கல் விஷ்ணுவர்த்தன் ஹைஃபைத்தனம். சுபா’வின் திரைக்கதை ஜாலம் முதல்பாதியில் மிளிர்கிறது. அயன் அசத்தலுக்குப் பிறகு மாற்றானில் சறுக்கிய சுபா, ஆரம்பத்தில் மீண்டும் ‘திரைக்கதை” ராஜாக்கள் என நிரூபிக்கிறார்கள்.

ஆர்யா - தாப்ஸி ஜோடி படம் மொத்தமும் அடிக்கும் அலம்பல்... ஓஹோ! அந்த ஆர்யா ஃப்ளாஷ்பேக்கில் அவருக்கு மேக்கப் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

அப்புறம் அப்புறம்.... நயன் படம் முழுவதும் இருக்கிறார். அவர் அஜீத்துக்கு ஜோடியா இல்லையா என்ற பேச்சே படத்தில் இல்லை. ஒரு வில்லனை ஏமாற்ற அவனிடம் ஆடும் ரொமான்ஸ் நாடகத்தைக் கூட தல’விடம் நயன் ஆடுவதில்லை என்பதை நினைக்கையில் நமக்கு விம்மிப் புடைத்துக் கொண்டு கண்ணீர்க் கொட்டுகிறது. அய்யகோ!

அஜித், நயன், ஆர்யா, தாப்ஸியைத் தாண்டி... கிஷோர், அதுல் குல்கர்னி, தெலுகு “ராணா”, மஹேஷ் மஞ்ச்ரேக்கர் , ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா, முரளி ஷர்மா என்று ஒரு டஜன் பாத்திரங்கள் படத்தில். எல்லோருக்குமான ரோலை குழப்பம் ஏதுமின்றி சரியாக இணைத்த இண்ட்டாக்டான திரைக்கதையை மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தொண்ணூறுகளில் தமிழில், தெலுகுவில், கன்னடத்தில் சக்கைப் போடு போடாத ‘சுமா ரங்கநாத்’ ஒரு சின்ன வில்லி வேஷம் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில்.

அப்புறம்....அப்புறம்.... நல்ல படம்! தீபாவளி பட்சணம் தின்றுவிட்டு, பட்டாசு வெடிக்கும் கேப்பில் ”ஆரம்பம்” ஒரு நல்ல தியேட்டரில் பார்த்துவிடுங்கள்!

வொர்த் வாட்சிங்குங்கோ!

Aug 12, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுநீள எண்டர்டெயினர் பார்த்த திருப்தி.

சாதாரணக் கதைதான். வடக்கத்தி வாலிபன் + தெக்கத்திப் பெண் மும்பை டு சென்னை ரயிலில் சந்திக்கிறார்கள். தெக்கத்திப் பெண்ணின் கிராமத்திற்கு சந்தர்ப்ப வசத்தில் வந்து சேர்கிறான் வடக்கன். க்ளைமாக்ஸுக்கு ஆறு சீன்களுக்கு முன் ஹீரோயினிக்குக் காதல் வருகிறது; அதற்கு நாலு சீன்களுக்குப் பிறகு ஹீரோவுக்குக் காதல் பிறக்கிறது. 

அப்போ, அதுக்கு மின்ன என்ன நடந்துச்சு? அதுதான் சென்னை எக்ஸ்ப்ரஸ்.

படத்தின் மூன்றாவது ரீலுக்குப் பிறகு, இடையில் இரண்டு காட்சிகள் வந்துபோகும் ஒரு சர்தார் போலீஸ்வாலாவைத் தவிர்த்துப் பார்த்தால், திரையில் ஹிந்தி பேசும் ஒரே கதாபாத்திரம் ஷாரூக்கான் மட்டுமே. துணைக்கு சந்தானம் வகையரா போல யாரையும் அச்சுபிச்சுவென சேர்த்துக் கொள்ளாமல் ஒட்டுமொத்தப் படத்தின் எண்டெர்டெயின்மெண்ட்டையும் தன் தலையிலேயே சுமக்கிறார் ஷாரூக். ஷாரூக் ரசிகர்கள் நிச்சயம் தலையில் வைத்துக் கொண்டாடத்தக்க படம்.

”உனக்குத் தமிழ் தெரியுமா?”, என சத்யராஜ் கேட்க... “ஏய் ஏய் ஏய்.... அம்மாவப் பத்தியெல்லாம் தப்பாப் பேசாத”, என்கிறார் ஷாரூக் < தமிழ் தேரி மா >.  படம் முழுவதும் கிச்சுக்கிச்சு மூட்டும் இந்தவகை நகைச்சுவைகள்.

ஹிந்தி - தமிழ் கலப்பினை ஜாக்கிரதையாகவே கையாண்டிருக்கிறார்கள் ஷாரூக்கும் ரோஹித் ஷெட்டியும். நையாண்டி நகைச்சுவை எதையும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ரெஃப்யூஜி, இந்தியன், ஸ்ரீலங்கன், டெர்ரரிஸ்ட் என்று விவரம் புரியாமல் சில அவைக்குறிப்பிலிருந்து நீக்கத்தக்க சீன்கள் தவிர்த்தால் நெருடல் இல்லாத படம் (அந்தக் காட்சிகளை தமிழ் இணைய புலாசுலுக்கிகள்* பார்க்காமல் இருக்கக் கடவது).
<*உட்கார்ந்த இடத்திலேயே குதிப்பவர்கள்>

ஏழரை அடி ரெஸ்லரை க்ளைமாக்ஸில் அடித்து வீழ்த்தும் ஐந்தரை அடி ஹீரோ, அடி வாங்கிவிட்டு, “நான் ஒடம்புல பலசாலி; நீ மனசுல பலசாலி”, என்று சொல்லும் அதே ரெஸ்லர், ’இந்தா எம்பொண்ணக் கட்டிக்கோ என்று க்ளைமாக்ஸில் மனம் மாறும் சத்யராஜ் என்ற க்ளிஷேக்களைத் தவிர்க்க வேறேதும் உத்தியைக் கையாண்டிருக்கலாம் ஷாரூக். இந்த காலத்து இளரத்தங்களைக் கதை டிஸ்கஷனில் சேர்த்திருந்தால் ஐடியா தந்திருப்பார்களே சார்?

சத்யராஜ் படத்தில் மற்றும் ஒரு கேரக்டராகவே வருகிறார். பில்டப்பிற்குத் தகுந்த கதாபாத்திரம் இல்லை அவருடையது. நம் எதிர்பார்ப்பிற்கு அவர் போர்ஷனில் தீனியில்லை எனலாம்.  

படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் ரயில் பிடிக்கும் அறிமுகக் காட்சியில் ‘தமிழ்ப்பெண்’ என்ற அறிமுகத் தேவையால் பாவாடை தாவணியில் வருகிறார் தீபிகா. அவர் ரயில் இறங்கும் வரை ஓவியர் ஜெயராஜின் ஓவியத் தனமாய் மாராக்கு  விலகியே இருக்க, என்னாடா இது வம்பாப்போச்சு டமில் பெண்களின் அறிமுகத்திற்கு என நாம் விசனப்பட, அதெல்லாம் அறிமுகத்துக்கு மட்டும்தான் என்று ஆசுவாசம் தருகிறார் இயக்குனர். படத்தின் இன்னபிற காட்சிகளில், பாடல்கள் தவிர்த்து, ரீஜண்ட்டாகவே வருகிறார் தீபிகா. 

ஆக, குடும்பத்துடன் பார்க்கத்தக்க குட்டும்ப்பச் சித்திரம்.

இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

கானாபிரபா சொன்னதைத்தான் நானும் சொல்லுவேன்:
தமிழ் உச்சரிப்பு, பல படங்களின் தழுவல் என குறைகளைப் பட்டியல் போடலாம் ஆனால் படம் முடிந்த பின் இரண்டரை மணி நேரம் கிடைத்த கலகலப்பான தருணங்களே மேலோங்கி நிற்கின்றன
பை தி வே, பதிவின் ஆரம்பத்தில் வரும்  பிரபந்தப் பாடல் இடைச்செருகல் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஹிந்திப் பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகளாக வருகின்றது.

வாழ்க தமிழ்! வளர்க திராவிட வேதம்!

Apr 9, 2011

மாப்பிள்ளை - திரை விமர்சனம்



கல்லூரியில் படிப்பதற்காக தன் அழகான சிறுநகர வாழ்க்கையைத் துறந்து கதாநாயகி பட்டினத்தில் தஞ்சம் புகுகிறாள். அந்த மாநகரிலும் மற்றும் தன் ஹாஸ்டலிலும் அவள் சந்திக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடுகள் , நிகழ்வுகள் அவளுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சிகள் அவளை மீண்டும் தன் சிறுநகருக்கே திரும்பும் முடிவை எடுக்க வைக்கிறது. அந்த வேளையில் அவள் கதாநாயகனைச் சந்திக்க, ஊர் திரும்பும் தன் முடிவை மாற்றிக் கொள்கிறாள்.

நகரத்து நாகரீகங்களை கதாநாயகன் கதாநாயகிக்கு அறிமுகம் செய்கிறான். நடை, உடை, பாவனை என எல்லாமும் மாறிப்போக தான் ஒரு முழு பட்டினத்துப் பைங்கிளி ஆகிப் போகிறாள் நாயகி. அவ்வாறு வாழ்வதை அனுபவித்து ரசிக்கவும் அவள் துவங்கும் வேளையில் பண்டிகை விடுமுறைகள் வந்து சேர, ஊரில் இருக்கும் தன் நீண்ட நாள் தோழனின் நினைவுகள் கதாநாயகனின் நினைவுகளுடன் சேர்ந்து நாயகியைக் குழப்பி அலைக் கழிக்க ஆரம்பிக்கின்றன.

நாயகனுக்கு பண்டிகைக் காலத்தைச் செலவிட நண்பர் உறவினர் என்று வேறு யாரும் இல்லாத நிலையில், நாயகி அவனைத் தன் ஊருக்கு அழைத்துப் போகிறாள். அங்கே அவள் பெற்றோரும் பெரியோரும் அவளது நவநாகரீக மாற்றத்தைக் கண்டு வியக்க, நாயகனின் வருகையும் ஊரில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு சுபயோகசுபதினத்தில் தான் நாயகியை மணக்க இருப்பதாக நாயகன் அவளது நீண்டநாள் தோழனிடம் சொல்ல, நாயகனின் மூக்கு உடைபடுகிறது. நாயகியின் தந்தையும் அவர்களிடையேயான உறவு திருமணத்தில் முடிவதை விரும்பவில்லை. இது இப்படிச் செல்ல, நாயகன் அந்த சிறு நகரத்து நிலங்கள், விவசாயம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு காட்டத் துவங்குகிறான்.

"நூ வொஸ்தாவன்ட்டே நேனொத்தன்டானா" கதையாக பட்டினத்து நாயகன், கிராமத்துத் தந்தை, விவசாயம், அது இது என கதை நீள்கிறது. கிராமத்தில் நாயக - நாயகியிடையே வருவதற்கு என்றே ஒரு இளம்பெண் அறிமுகம் ஆகிறாள். நாயகன் மற்றும் அந்தப் பெண்ணிடையே ஏதோ உறவு மலர்வதாக  ஒரு நாடகம் உருவாக... நாயகன்-நாயகயிடையே லடாய், கலாட்டாக்கள் என கதை நகர்ந்து, நாயகியின் தந்தை மனதை எப்படி நாயகன் மாற்றுகிறான், நாயகி நாயகனைப் புரிந்து கொண்டாளா என்பவைகளுடன் கதை நிறைகிறது.

1993'ல் வெளிவந்த "சன் இன் லா" படத்தை ஸ்டீவ் ராஷ் இயக்கினார். பாவ்லி ஷோர் மற்றும் கார்லா குகினோ இருவரின் அற்புத நடிப்பில் ஒரு சுமாரான பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக இந்த Son-In-Law படம் அமைந்தது.


மேலதிகத் தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Son_in_Law

Jan 29, 2011

காவலன் - என்னவோ போங்க!

சில்லி சிக்கன், கொத்து பரோட்டா, கோழிக் கொழம்பு என சரமாரியாக மசாலாப் படங்களில் கொத்திக் கொண்டிருந்த விஜய் அடுத்தடுத்த படங்களின் தொடர் தோல்வியில் "எத்தைத் தின்றால் பித்தம் தீரும்" என இப்படி பம்மியிருக்க வேண்டாம். குறைந்தபட்சம் சூடாக ஒரு ரசம் சாதம் தந்திருக்கலாம் விஜய். ஆனால் இப்படி உப்பு சப்பு இல்லாமல் ரொம்ப பழைய சோறை அதுவும் நசநசவென்று தந்திருக்க வேண்டாம்.



"கெட்டது செய்யற எதிரிய கூட மன்னிப்பேன், ஆனா துரோகம் செய்யற நண்பனை குத்துவேன்" என ஒரு கத்திக் குத்துக் கொலையில் அறிமுகமாகும் ஊர்ப்பெரிய தாதா ராஜ்கிரண். 

அவர் வாயால் பூமிநாதன் எனப் பெயர் சூட்டப்படும் குழந்தையாக முதலிலும் பின்னர் வழக்கமான ஆர்ப்பாட்டம் இல்லாமலும் ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்டு வழக்கமான ஒரு குத்து + தத்து(வ)ப் பாடலுடன் அறிமுகம் ஆகும் விஜய்.

பழக்கமான தமிழ் க.நாயகியாக "ரோலிங்....ஸ்டார்ட்" எனும் வரை முதுகு காட்டி நின்றுவிட்டு "ஆக்சன்" என டைரக்டர் குரல் தந்ததும் ஆறடி ஒட்டுக் கூந்தலை விசிறியடித்தபடி முப்பத்தி சொச்ச பற்களையும் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அசின்.

தாதாவைக் காக்க தாதா வீடு வந்து பின் தாதா இட்ட கட்டளையின் பேரில் தாதாவின் மகளாம் அசினைக் காக்க "காவலன்" வேடமேற்கும் விஜய். தன் காட்பாதர் மற்றும் கடவுளான ராஜ்கிரண் மகள் என்பதால் படத்தின் கடைசி ஃபிரேமுக்கு முந்தின ஃபிரேம் வரை அசின் பேரில் விஜய்க்குக் காதல் இல்லை. 

ஆனால் பார்த்த முதல் பிரேமிலேயே அசினுக்கு விஜய் மேல் காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். தனக்கு வேறொரு பட்டர் கட்டருடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது எனத் தெரிந்தும் வழக்கமாக நம் தமிழ்க் கதாநாயகிகளுக்கு கதாநாயகர்களின் பேரில் வருமே அப்படிப் பட்ட ஒரு உன்னதக் காதல். (அது யாருங்க சாமி குஷ்பூ பேசினதைத் தப்புன்னும் தமிழ்க் கலாச்சாரம் இல்லைன்னு சொன்னவங்க?)



பின்னர் அலைபேசி வாயிலாக விஜய் - அசின் காதல் வளர்கிறது வளர்கிறது அப்படி ஒரு நிதானத்தில் வளர்கிறது. அசினுக்கு விஜய் விஜய்தான் எனத் தெரியும். ஆனால் விஜய்க்கு அசின் அசின்தான் எனத் தெரியாது தெரிஞ்சா காதலிக்க மாட்டாரில்ல. தமிழ்க் கதாநாயகனுக்கு குரு மரியாதை தெரியுமில்ல.

காவலன் பணியைத் துறந்துவிட்டு முன்பின் தெரியாத யாரோவென நினைத்துக் கொண்டிருக்கும் அந்தத் அலைபேசிக் காதலி அசினுடன் சென்றுவிட கிளைமாக்சில் முடிவெடுக்கிறார் விஜய். அதன் பின் ட்விஸ்ட் என்னும் பேரில் நடக்கும் அச்சுப்பிச்சுத்தன பதினைந்து நிமிட சீரியஸ்  காமெடிக்குப் பின் படம் சுபமோ சுபம் என்று முடிகிறது. ஸ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹப்பா....முடியல என்று எழுந்து வருகிறோம்.

அசின் முன்னைக்கு இப்போது கொஞ்சம் முதிர்ந்த முகம் என்றாலும் இன்னமும் அழகாகத்தான் இருக்கிறார். வடிவேலு காமெடி அப்படி ஒன்றும் எடுபட்டதாய்த் தெரியவில்லை.

மீண்டும் வித்யாசாகர் ஏமாற்றியிருக்கிறார்.  "நச் நச்" என மெலடிகளாகட்டும் குத்துகளாகட்டும், விதவிதமாய் இசைக்கோலங்கள் அமைத்த அந்த வித்யாசாகரை யாரேனும் கண்டுபிடியுங்களேன். பாடல் காட்சிப் படமாக்கல்களில் ஒளிப்பதிவு மற்றும் லொகேஷன் தேர்வு தொடர்பான பிரயத்தனங்கள் நன்றாகவே தெரிகிறது. 

விஜய் காதல் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் என சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும் நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆன ஒரு சீனியர் நடிகருக்கு இப்படியா ஒரு அடிப்படைப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் நாம்?

விஜய் படம் மாதிரியே இல்லை சார் என்னும் மக்களின் விமர்சனம் ஒன்றுதான் படத்தை வித்யாசப்படுத்தியிருக்கிறது. மற்றபடி நான் தலைப்பில் சொன்னது போல "என்னவோ போங்க".

பி.கு: இந்தப் படத்திற்கு பட்ஜெட் முப்பத்து ஐந்து கோடி என்கிறது விக்கி.
.
.
image courtesy : 88db.com

Related Posts Plugin for WordPress, Blogger...