சில்லி சிக்கன், கொத்து பரோட்டா, கோழிக் கொழம்பு என சரமாரியாக மசாலாப் படங்களில் கொத்திக் கொண்டிருந்த விஜய் அடுத்தடுத்த படங்களின் தொடர் தோல்வியில் "எத்தைத் தின்றால் பித்தம் தீரும்" என இப்படி பம்மியிருக்க வேண்டாம். குறைந்தபட்சம் சூடாக ஒரு ரசம் சாதம் தந்திருக்கலாம் விஜய். ஆனால் இப்படி உப்பு சப்பு இல்லாமல் ரொம்ப பழைய சோறை அதுவும் நசநசவென்று தந்திருக்க வேண்டாம்.
"கெட்டது செய்யற எதிரிய கூட மன்னிப்பேன், ஆனா துரோகம் செய்யற நண்பனை குத்துவேன்" என ஒரு கத்திக் குத்துக் கொலையில் அறிமுகமாகும் ஊர்ப்பெரிய தாதா ராஜ்கிரண்.
அவர் வாயால் பூமிநாதன் எனப் பெயர் சூட்டப்படும் குழந்தையாக முதலிலும் பின்னர் வழக்கமான ஆர்ப்பாட்டம் இல்லாமலும் ஆனால் கொஞ்சம் இடைவெளி விட்டு வழக்கமான ஒரு குத்து + தத்து(வ)ப் பாடலுடன் அறிமுகம் ஆகும் விஜய்.
பழக்கமான தமிழ் க.நாயகியாக "ரோலிங்....ஸ்டார்ட்" எனும் வரை முதுகு காட்டி நின்றுவிட்டு "ஆக்சன்" என டைரக்டர் குரல் தந்ததும் ஆறடி ஒட்டுக் கூந்தலை விசிறியடித்தபடி முப்பத்தி சொச்ச பற்களையும் காட்டிக் கொண்டு அறிமுகமாகும் அசின்.
தாதாவைக் காக்க தாதா வீடு வந்து பின் தாதா இட்ட கட்டளையின் பேரில் தாதாவின் மகளாம் அசினைக் காக்க "காவலன்" வேடமேற்கும் விஜய். தன் காட்பாதர் மற்றும் கடவுளான ராஜ்கிரண் மகள் என்பதால் படத்தின் கடைசி ஃபிரேமுக்கு முந்தின ஃபிரேம் வரை அசின் பேரில் விஜய்க்குக் காதல் இல்லை.
ஆனால் பார்த்த முதல் பிரேமிலேயே அசினுக்கு விஜய் மேல் காதல் என்றால் காதல் அப்படியொரு காதல். தனக்கு வேறொரு பட்டர் கட்டருடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது எனத் தெரிந்தும் வழக்கமாக நம் தமிழ்க் கதாநாயகிகளுக்கு கதாநாயகர்களின் பேரில் வருமே அப்படிப் பட்ட ஒரு உன்னதக் காதல். (அது யாருங்க சாமி குஷ்பூ பேசினதைத் தப்புன்னும் தமிழ்க் கலாச்சாரம் இல்லைன்னு சொன்னவங்க?)
பின்னர் அலைபேசி வாயிலாக விஜய் - அசின் காதல் வளர்கிறது வளர்கிறது அப்படி ஒரு நிதானத்தில் வளர்கிறது. அசினுக்கு விஜய் விஜய்தான் எனத் தெரியும். ஆனால் விஜய்க்கு அசின் அசின்தான் எனத் தெரியாது தெரிஞ்சா காதலிக்க மாட்டாரில்ல. தமிழ்க் கதாநாயகனுக்கு குரு மரியாதை தெரியுமில்ல.
காவலன் பணியைத் துறந்துவிட்டு முன்பின் தெரியாத யாரோவென நினைத்துக் கொண்டிருக்கும் அந்தத் அலைபேசிக் காதலி அசினுடன் சென்றுவிட கிளைமாக்சில் முடிவெடுக்கிறார் விஜய். அதன் பின் ட்விஸ்ட் என்னும் பேரில் நடக்கும் அச்சுப்பிச்சுத்தன பதினைந்து நிமிட சீரியஸ் காமெடிக்குப் பின் படம் சுபமோ சுபம் என்று முடிகிறது. ஸ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹப்பா....முடியல என்று எழுந்து வருகிறோம்.
அசின் முன்னைக்கு இப்போது கொஞ்சம் முதிர்ந்த முகம் என்றாலும் இன்னமும் அழகாகத்தான் இருக்கிறார். வடிவேலு காமெடி அப்படி ஒன்றும் எடுபட்டதாய்த் தெரியவில்லை.
மீண்டும் வித்யாசாகர் ஏமாற்றியிருக்கிறார். "நச் நச்" என மெலடிகளாகட்டும் குத்துகளாகட்டும், விதவிதமாய் இசைக்கோலங்கள் அமைத்த அந்த வித்யாசாகரை யாரேனும் கண்டுபிடியுங்களேன். பாடல் காட்சிப் படமாக்கல்களில் ஒளிப்பதிவு மற்றும் லொகேஷன் தேர்வு தொடர்பான பிரயத்தனங்கள் நன்றாகவே தெரிகிறது.
விஜய் காதல் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார் என சொல்ல வேண்டும் போலத்தான் இருக்கிறது. இருந்தாலும் நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆன ஒரு சீனியர் நடிகருக்கு இப்படியா ஒரு அடிப்படைப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும் நாம்?
விஜய் படம் மாதிரியே இல்லை சார் என்னும் மக்களின் விமர்சனம் ஒன்றுதான் படத்தை வித்யாசப்படுத்தியிருக்கிறது. மற்றபடி நான் தலைப்பில் சொன்னது போல "என்னவோ போங்க".
பி.கு: இந்தப் படத்திற்கு பட்ஜெட் முப்பத்து ஐந்து கோடி என்கிறது விக்கி.
.
.
image courtesy : 88db.com