Nov 3, 2013

என்னத்த சொல்ல...

சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் உணவு இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தேன். நெருங்கிப் பழகியவரல்ல. அதுவரை சந்திக்கும் தருணங்களில் ஒரு ஹலோ சொல்லிக் கொண்டதோடு சரி. அன்றுதான் நான்கு வார்த்தைகள் பேசத் தோதாக மேஜை நாற்காலி கிடைத்தது இருவருக்கும்.

குசல விசாரிப்புகளுக்குப் பின்...

“கல்யாணம் ஆகிடுச்சா சார் உங்களுக்கு?”, கேட்டேன்.

“நல்லா ஆகிடுச்சி சார். ஹேப்பிலி மேரீட்”

“ஹேப்பிலி மேரீட்? அப்போ நீங்க ரொம்ப சமீபத்துல கல்யாணம் ஆனவரு, கரெக்ட்தானே?”

”ஆறு வருஷம் ஆச்சு சார்”

“அது சரி. ரெண்டு தகவலும் காண்ட்ரடிக்ட் ஆவுதே”

“அதெல்லாம் இல்லை சார். நீங்க? கல்யாணம் ஆனவரா?”

“அதே ஆறுவருஷம்தான் சார் நமக்கும்”

“அப்போ அங்கயும் ஹேப்பிலி மேரீட்’னு சொல்லுங்க”

“ஆங்! சொல்லிக்கலாம்”, சிரித்தேன்.

“பசங்க?”, கேட்டார்.

“மூணரை வயசு. பையன் இருக்கான்”

ஸ்கூல் போறானா, எந்த ஸ்கூல், இங்க்லீஷ் பேசறானா என்று ஒரு டஜன் கேள்விகள் தொடர்ந்தன. 

“உங்களுக்கு சார்?” என்று வினவினேன். 

”குழந்தையா?”,

”ஆ... ஆமா சார்”,  இந்த சென்சிடிவான கேள்வியை நான் பொதுவாக யாரிடமும் ரொம்ப யோசித்தே கேட்பது. இருந்தாலும் அன்று அவரது ஒரு டஜன் கேள்விகள் ஒண்ணரை டஜனாக நீட்டித்திடும் முன் அவரை நிறுத்திவிடவே அப்படிக் கேட்டே விட்டேன்.

“ஆங் ஆங்... இருக்காங்க சார். மூணு குழந்தைங்க”

“மூணு பேரா”, மில்லேனியத்தின் ஆச்சர்யம் இது என்பதால் கொஞ்சம் வாய் பிளந்தேன்.

“ஆமா சார். ரெண்டு பொண்ணு, ஒரு பையன்”

“ஹ்ம்ம்ம்.... பையன் கண்டிப்பா பொறந்திடணும்னு தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்ய முயற்சியா?”

“அதெல்லாம் இல்லை சார். முதல்ல பொண்ணு, ரெண்டாவது பையன், மூணாவது மறுபடி பொண்ணு”

இது அடுத்த விநோதம்.

“ஆபரேஷன் பண்ண மறந்துட்டு பெறகு அவசரப் பட்டுட்டீங்களோ?, கேட்டுவிட்டு நாவைக் கடித்துக் கொண்டேன்.

”ஹிஹ்ஹிஹ்ஹீ! அதெல்லாம் இல்லை சார்”, சாப்பிடுவதைத் தொடர்ந்தார்.

கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு...

“சொந்தத்துலதான் சொன்னாங்க, ஒரு பையன்’தானே இருக்கான். எதுக்கும் ரெண்டு பையனுங்களா இருந்துட்டா எல்லாத்துக்கும் சரியா இருக்கும்ன்னு. அதான் மூணாவது குழந்தையும் பையனாப் பொறக்குமுன்னு ரெண்டு பொறந்த அப்புறம் ஆபரேஷனுக்கெல்லாம் போகாம முயற்சி பண்ணினோம். விதி வலியது; விளையாடிடுச்சி”, என்றார்.

என்னத்தச் சொல்வேன் நான்.....

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

என்னத்த சொல்ல...

அதே தான்!

Related Posts Plugin for WordPress, Blogger...