Showing posts with label சவால் சிறுகதை. Show all posts
Showing posts with label சவால் சிறுகதை. Show all posts

Sep 19, 2011

400 நாட் அவுட்

இது நம் நானூறாவது பதிவு!

ப்ளாக் ஆரம்பிச்சு மூணு வருஷமாச்சு! இதுவொண்ணும் பெரிய சாதனை இல்லை. இருந்தாலும் சொல்லிக்கறாப்ல இருக்கே நம்பர்! அதனால இதைக் கொண்டாடும் விதமா போன வருஷம் இதே நேரம் நான் எழுதின சிறுகதை மீள் பதிவிடப்படுகிறது.

இனி நீங்களாச்சு நம்ம கதையாச்சு!



உன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)




"அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகறது இப்போ ரொம்ப கஷ்டம். அதுக்குன்னு வடபழனி, திருவல்லிக்கேணியில நாலு லட்சம் பேரு மேன்சன் எடுத்து தங்கி தவம் செஞ்சிட்டு இருக்காங்க. நீ மொதல்ல பாட்டு எழுதற வழி பாரு. இந்த டைரக்டர் ரொம்ப இல்லன்னாலும் கொஞ்சம் பிரபலம். நமக்கு ஒருவகைல வேண்டப்பட்டவரு. நான் சொன்னா ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு. கதவை தட்டிப் பாப்போம்" என என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறான் மணி.

மணி எங்கள் ஊர்க்காரன். என்னைவிட இரண்டு பள்ளி வருடங்கள் பெரியவன். பள்ளி காலத்திலேயே நான் கவிதைகளில் புகுந்து விளையாடுவேன். பின்னர் கல்லூரியில் அது கொஞ்சம் மெருகேறி இன்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்ட அளவிற்கு இன்று எங்கள் ஊரில் நான் பிரபலம்.

சினிமாவில் என் எழுத்து, பாடல் ஒலிக்கவேண்டும் என்று என் சுற்றமும் நட்பும் வேண்டி விரும்பி சென்னையில் சினிமாவில் ஏதோவாக இருக்கும் மணி வசம் என்னை ஒப்படைத்து, கடந்த இரண்டு மாத காலமாக அங்கு இங்கென்று திரிந்து இப்போது இந்த டைரக்டர் வாசற்படியில் காத்திருக்கிறோம்.

"வணக்கம் சார்!"

என்னுடன் அமர்ந்திருந்த எல்லோரும் எழுந்து அவருக்கு மரியாதை சொன்னார்கள். நானும் சம்பிரதாயம் மாற்றும் எண்ணமில்லாது எழுந்து நின்று அவரை வணங்கினேன். எல்லோரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கள் வணக்கங்களை அறை மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு விடுவிடுவென படியேறிச் சென்றார்.  

இங்கு அமர்ந்திருந்த இந்த அரை மணிநேரத்தில் ஐம்பது முறை என்னை மேலும் கீழும் நோட்டமிட்ட அந்த குறுந்தாடிக்காரன், அவர் பின்னே சென்றவனைத் தட்டி அழைத்து, "டைரக்டர் மூடு இன்னைக்கி எப்படி?", எனக் கேட்க உதடு பிதுக்கி, தோள்களைக் குலுக்கி "ஒன்றும் சரியில்லை", என சைகையில் பதில் வந்தது.

என்னை அழைத்து வந்திருந்த மணி, "நீ ஒண்ணும் கவலைப்படாதே", என அவன் பங்கிற்கு தலையசைத்து சைகை செய்தான். இங்கே எல்லாம் சைகை மொழிதான் எனப் புரிந்தது.

மணியிடம் பேசியதில் அவன் இங்கு இருக்கும் பல சினிமா பிரபலங்களுக்கு "பணிவிடைகள்" பல செய்பவன் எனத் தெரிந்தது. யாரிடமும் அவனுக்கு பெரிய மரியாதை இல்லை, இருந்தாலும் எல்லோருக்கும் அவன் தேவை இருந்தது.

மாடியில் இருந்து டைரக்டரின் ஓங்கிய குரலில் ஏதேதோ கெட்ட வார்த்தை வசவுகள் கேட்ட வண்ணம் இருந்தன. எனக்கு சங்கடமாய் இருக்க, குறுந்தாடி அவ்வப்போது நமட்டுச் சிரிப்பு சிரித்தவண்ணம் இருந்தான். "இவங்க எல்லாம் இப்படித்தான்", மீண்டும் சைகை மொழியில் சொல்லிக் கண்ணடித்தான்.

சில மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் டைரக்டரை சந்திக்க மேலே சென்றோம். சுற்றி மூன்று துணைகள் அமர்ந்திருக்க. தரையோடிருந்த அந்த சின்ன ஸ்டூலில் ரொம்பவும் சாவகாசமாக அமர்ந்திருந்தார் டைரக்டர். 

"மணி உங்களைப் பத்தி போன்ல சொன்னாப்போல. சொல்லுங்க, உங்க லட்சியம் என்ன?"

திடீரென இன்டர்வியு போல என்னை நோக்கி வீசப்பட்ட எதிர்பார்த்திராத கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறினேன்.

"சரி ஒண்ணும் பிரச்னை இல்லை, உங்களுக்கு என்ன ஊரு?", என மணியைப் பார்த்தார்.

"ராஜபாளையம் பக்கம் வாசுதேவநல்லூர் சார்", என்றேன் நான்.

"அட, நம்ம சூர்யா ஊரு. அவரு பழக்கமா உங்களுக்கு?", மீண்டும் மணியைப் பார்த்த கேள்வி. 

"இல்லை சார், பார்த்ததுண்டு பழக்கமில்லை", இது நான்.

"நமக்கு இங்க பழக்கமுண்டு சார்", நமட்டுச் சிரிப்பு சிரித்தான் மணி. மூன்று துணைகளும் ஏதோ புரிந்து விழுந்து விழுந்து சிரித்தன. 

"சரி, நீங்க எழுதின எதாவது கொண்டு வந்திருக்கீங்களா?" எனக் கை நீட்டினார். 

நான் கொடுத்ததைப் பார்த்தவிட்டு அதை பக்கத்திலிருந்த ஒரு துணையிடம் கொடுத்தவாறே, "நல்லா இருக்கு, இருந்தாலும் எனக்கு இது போல தளை தட்டாத கவிதை அவ்வளவு பரிச்சயம் இல்லை. அது இங்க நம்ம சினிமாவுக்குத் தேவையும் இல்லை. அது ஒண்ணும் பிரச்னை இல்லை, நீங்க வர்ற சனிக்கிழமை வடபழனி ராதா ரெகார்டிங்குக்கு வாங்க. யோவ் மணி, அழைச்சிட்டு வந்துடுய்யா", என்றுவிட்டு என்னைப் பார்த்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை பார்த்துக்கலாம்", உதடு விரித்து நீண்ட புன்னகை செய்து ஒரு வணக்கம் சொல்லி நீங்க இப்போ போகலாம் என்று சைகையால் சொன்னார்.

புறப்படுமுன், "சார், என்னோட லட்சியம் தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும் சார், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும்", என்றேன். சொன்னது தவறோ என எனக்குத் தோன்றி மறையுமுன்....

"அப்போ நாங்க எல்லாம் தமிழ் சினிமாவை சீரழிக்கறோம், நீங்க வந்து எல்லாத்தையும் மாத்தப் போறீங்களா", ஒரு துணையிடமிருந்து எகத்தாளக் கேள்வி வந்தது.

"டேய்", என்று அந்தத் துணையை முறைத்து, "ஒண்ணும் பிரச்னை இல்லை, இருக்க வேண்டியதுதான். எல்லாரும் அப்படித்தான் வர்றாங்க. உங்களையும் உபயோகிச்சிக்க என்னோட இந்த ஸ்கிரிப்டுல இடம் இருக்கு. சனிக்கிழமை பாக்கலாம்", மீண்டும் உதடு விரித்த புன்னகை வணக்கம்.

பெர்முடாஸ் பனியனில் வந்திருந்தார் டைரக்டர்.

"இங்க பாருங்க தம்பி, சிச்சுவேஷன் இதுதான் இது ஒரு முதலிரவுப் பாட்டு. கொஞ்சம் பெப்பியா ஏதாவது யோசிங்க. மியூசிக் டைரக்டர் இன்னைக்கு வரலை. அவர் அசிஸ்டன்ட் கிட்ட டியூனைக் குடுத்து விட்டிருக்காரு, அவரோட உட்காருங்க", உத்தரவு தந்துவிட்டு உள்ளே மறைந்தார்.

என்னுடன் இரண்டு துணைகள் முகாமிட்டன. அந்த டியூனை புரிந்து கொள்ள எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. கொஞ்சம் நிறையவே நேரம் பிடித்தது.


"அத்தையின் மகளே மெத்தையில் நிலவே", என ஆரம்பித்து நான்கு வரிகள் எழுதினேன். அங்கங்கே தளை தட்டுகிறதா என சரி பார்த்துக் கொண்டேன். துணைகள் இரண்டும் என்னை கொஞ்சம் விசித்திரமாகப் பார்த்தன. அந்தப் பாடலின் வேகத்திற்கு என் வரிகள் பொருந்தியதாய்த் தெரியவில்லை.

"நல்லா இருக்கு சார் நல்லா இருக்கு, ஆனா இது கொஞ்சம் பெப்பி பாட்டு பாருங்க, நாம கொஞ்சம் வரிகளை இங்க அங்க மாத்தி முயற்சி பண்ணலாமே", ஒன்றாய்ச் சொல்லின டைரக்டர் துணையும், மியூசிக் டைரக்டர் துணையும்.

அத்தைப் பொண்ணு வாடி
மச்சான் என்னை நாடி
மெத்தை அது மேல
வித்தையெல்லாம் தாடீ...

இப்படிப் பாடலின் ஆரம்ப வரிகள் மாறிப்போக, இதை எழுதினது நான்தானா என நான் யோசித்து முடிக்குமுன் மேலும் இலைமறை காய் மறையாக நான் எழுதிய அனைத்தும் உடைத்துச் சொல்லப்பட்டன.

"சார், அங்கங்கே கொஞ்சம் பச்சை பச்சையாய் வருதே..." என நான் இழுக்க...,
"அட அதெல்லாம் யாருப்பா பார்க்கறாங்க, இப்போ எல்லாம் சத்தம் போதும் சார், சந்தம் பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. மொதல் பாட்டு அமைஞ்சி இருக்கு. கொஞ்சம் வளைச்சி நெளிச்சி எழுதுங்க. கொஞ்சம் பேரு வாங்கிட்டா அப்புறம் நீங்க சொல்றதுதான்", என்றது காத்திருந்த அடுத்த துணை.  சரிதான் என நினைத்துக் கொண்டேன்.

இரண்டு நாட்களில் மொத்தப் பாடலும் முடிவானது. மகேந்திரன் என்ற என் பெயர் தமிழ்மதி ஆனது. இரண்டு மாதங்களில் பாடல் வெளிவந்து, அடுத்த இரண்டு வாரங்களில் இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எதுவும் நான் எதிர்பாராதது. படம் வெளிவரும் முன்னரே பாடல் எழுதிய என் பேட்டி இரண்டொரு பிரபல பத்திரிக்கைகளில் வந்தும் விட்டது.

ப்படி இப்படி ஒன்றரை வருடங்களை சென்னையில் ஓட்டியாயிற்று. என் பெயருக்குப் பின்னால் இப்போது ஐம்பது பாடல்கள் எழுதிய கவிஞன் என்ற தகுதி ஒட்டிக் கொண்டுள்ளது. தமிழ் சினிமா கூறும் நல்லுலகில் இன்று நானும் ஒரு பெயர் சொல்லும் பாடலாசிரியன். என்னிடமும் இப்போது இரண்டு துணைகள் ஒட்டிக் கொண்டுள்ளன.

டைரக்டர் அழைத்திருந்தார். அவர் அடுத்த படத்திற்கு எல்லாப் பாடல்களும் நானே எழுதுகிறேன்.

அன்று அமர்ந்திருந்த அதே நாற்காலியில் இன்றும் அமர்ந்திருக்கிறேன். அதே குறுந்தாடி இன்று எனக்கு வணக்கம் வைத்தது.

மேலிருந்து குரல் கேட்டது, 

"அப்புறம், சொல்லுங்க உங்க லட்சியம் என்ன?"

"சார், தரமான பாடல்களை தமிழ்ல கொடுக்கணும், ஸ்டீரியோ டைப் பாடல்கள்ல இருந்து தமிழ் சினிமாவை மீட்கணும் சார்"

சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். குறுந்தாடி இப்போது என்னைப் பார்த்து பலமாய்ச் சிரித்தது.
.

Oct 15, 2010

காடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்

"கட் கட் கட்! ம்மா காமினி, இது சினிமாம்மா! அந்த ஆக்ரோஷம் கோவம் தெரியணும். உன்னை நான் என்ன சொன்னா நீ என்ன பண்ற? கதவை ஒடச்சுக்கிட்டு குதிக்கணும் தாயீ!! நீ ஜன்னல் கதவுல போயி மோது, நான் கட் சொல்லிக்கறேன்", கூவினார் டைரக்டர்.

காலையிலிருந்து ஏதும் சரிவர நிகழவில்லை டைரக்டருக்கு.

"போற போக்குல தீபாவளிக்கு படம் ரிலீஸ் பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. தோ பாருங்க சார்....அம்மா நீதான்மா, நீயும்தான் . நான் இந்தப் படத்துக்கு டைரக்டர் மட்டும் இல்லைம்மா. ஊர்ல காடு வித்து கழனி வித்து படத்துக்கு மொதல் போட்ட புரொட்யூசரும் நான்தான்மா. கொஞ்சம் சொல்றத புரிஞ்சி நடிங்க"

"சரி சார்."

மேலும் ஒன்றரை மணிநேர  தலை முட்டல்களுக்குப் பின் அந்த ஷாட் ஓகே ஆனது.

"நரசிம்மன்! இங்க வாங்க."

"சொல்லுங்க சார்"

"அடுத்து என்ன ஷாட்? அந்த சிவா சம்பந்தப் பட்டதா? அவன் வந்துட்டானான்னு மொதல்ல பாருங்க. அவன் ஒரு டிரெடிஷனல் லேட் கம்மர். வந்தான்னா அவனை அடுத்து டயலாக் கொடுத்து ரெடி பண்ணுங்க."

"வந்துட்டாரு சார். நான் பாத்துக்கறேன்"

கீழே விழுந்தது போல் கிடந்த காமினி எழுந்து நின்று ஓட எத்தனித்தாள்.

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஏ நிறுத்துப்பா. அவ என்ன ஜன்னல் ஜாக்கெட்ட மூஞ்சிலையா கட்டியிருக்கா? துப்பாக்கிய முதுகுல வைப்பா. விறுவிறுப்புல கூட கிளுகிளுப்பு சேக்கலாம்னா விடமாட்டேன்றீங்க. சொன்னத செய்ங்கப்பா"

வேண்டா வெறுப்பாக சிவா அடுத்த டேக்கிற்குத் தயாரானான்.

"சார், இன்னைக்கு ஒரே ஜன்னல் சீக்வென்ஸா வருது சார். ஹி ஹி ஹி", என  சிரித்துக் கொண்டே ஜன்னலை சரி செய்து தளர்த்திக் கொண்டாள்  காமினி.

"ஏம்மா, உன் ஜன்னல் நம்ம தமிழ்நாட்டுப் பொதுஜனத்துக்கு, எனக்கு இல்லை. போயி அடுத்த டேக்குக்கு நில்லும்மா. வெறுப்பேத்தாத"

மீண்டும் இரண்டொரு மணி நேர இழுவைகளுக்குப் பின் அந்த ஷாட்டும் ஒகேவாக..

ப்படி மேலும் பலப்பல இடை-மேல்-கீழ்-ஊறுகளுக்குப் பின், படம் பப்படமாகி இப்போது அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்.

"நரசிம்மன் அந்த கிளைமேக்ஸ் டயலாக் நோட் பண்ணினோமே, கொஞ்சம் வாசிங்க!"

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"இதுக்கு அப்புறம் போலீஸ் உள்ளே நுழையறதா வெச்சுக்கறோம், சரியா வருதா?"

"ஆமாம் சார், அப்படித்தான் நாம டிஸைட்  பண்ணியிருக்கோம். சார் உங்க போன் அடிக்குது"

"ஹலோ, யோவ் யாரு, டைரக்டர் கோபாலா? என்னய்யா படம் எடுத்துருக்க? ஜன்னலு, ஜாக்கெட்டு, வைரம், கடத்தலு? என்னய்யா, கொஞ்சம் கூட மாடனா யோசிக்க மாட்டியா? வெண்ண மாதிரி படம் பண்ணியிருக்க."

"ஹலோ, யாரு? யாரு பேசறது? என்னோட படம் பத்தி அப்படியே பாத்தா மாதிரி சொல்ற? இன்னும் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் கூட முடியலை?"

"யோவ் நீ படத்த எடுத்துட்டே இருப்ப நாலு வருஷம். நாங்க இண்டர்நெட்டுல உன் படத்த எப்பவோ ரிலீஸ் பண்ணிட்டோம்யா"

"என்னது, படம் இன்னும் சென்சாருக்கே போகலை சார். இப்படியெல்லாம் அநியாயம் பண்ணாதீங்க. இதெல்லாம் அக்கிரமம். எங்க வயித்துல அடிக்காதீங்க. டேய்...டேய்... நான் போலீசுக்குப் போவேன். சைபர் கிரைம் போலீசுக்குப் போவேன்"

"அட போய்யா, அந்த போலீசே நான்தான். போ போ"

"சார்...சார்...! டைரக்டர் சார். என்னாச்சு உங்களுக்கு. எந்திரிங்க சார். அய்யய்யோ....!! சார்...!! இதுக்கெல்லாம் பதறாதீங்க சார். சார் எந்திரிங்க சார்...!! அய்யோ.............!!!!

ப்போது கடைசியாக "காமினி" திரைப்படம் ரிலீசாகி இரண்டு நாட்கள் ஆகின்றன.

"காடு வித்து கழனி வித்து சிலர் படம் பண்றாங்க. திருட்டு சி.டி'லயும் இண்டர்நெட்டுலயும் தயவு செஞ்சு படம் பாக்காதீங்க. பைரேட் பண்றவங்களால எங்க டைரக்டர் படம் வர்றதுக்கு முன்னாலேயே பரலோகம் போயிட்டாரு", என்று டைட்டிலுக்கு முன்னதாக நாசிம்மன் சொல்லி கனத்த சோகத்துடன் ஆரம்பமாகும் அந்தப் படத்தின் தியேட்டர் பிரிண்ட் அட்டகாசமாக இருப்பதாக வினோத் சொன்னான்.
.
.
.
<சவால் சிறுகதை>
Related Posts Plugin for WordPress, Blogger...