சிறப்புப் பதிவர்: நட்பாஸ்
முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது பல நிறுவனங்கள் நம்மை கைபேசியில் அழைத்து பதிவு செய்யப்பட்ட சேதிகளைச் சொல்கின்றன. அவை இனிய பெண் குரல்களாக இருப்பது நம்மை மகிழ்வூட்டும் விஷயம்தான் என்றாலும், நம் வீட்டம்மாவைப் போலவே தனக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் அவை பேசுவது வருந்தத்தக்கது- நம்மால் அவற்றோடு பொருள் செறிந்த சம்பாஷனை நிகழ்த்த முடியாது, பேச்சுகிடையில் ஒரு வார்த்தை பேச முடியாது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கின்றன என்பன கைபேசியிலாவது சொன்ன பேச்சு கேட்காமல் புரட்சி செய்வோம் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன- நான் இதுவரை இந்த இனிய பெண் குரல்களுக்கு செவி சாய்த்ததில்லை என்பதை மட்டுமல்ல, இவற்றின் கழுத்தை நெரித்து ஊமையாக்கியிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.
ஆனால் இது எத்தனை நாட்களுக்கு என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. டிவிட்டரில் நீங்கள் ரவி சாஸ்திரி என்றோ கிரிக்கெட் என்றோ கீச்சிட்டால், உடனே தட் இஸ் நெய்தர் ஹியர் நார் தேர் என்றோ இட் இஸ் எ பிக்கி என்றோ ஒரு கீச்சு உங்களை நோக்கி ரவி சாஸ்திரி பாட்டிடமிருந்து வரக் கண்டிருப்பீர்கள். இப்போது இது போன்ற பாட்கள் பேசவும் துவங்கிவிட்டன. இவை பேசும் விஷயங்களைப் பார்த்தால், நாம் இந்த இனிய பெண் குரல்களின் சுண்டு விரல் அசைவுகளுக்கு அடிமையாகும் நாள் தொலைவில் இல்லை என்ற அச்சம் வருகிறது. நிஜ மனிதர்களின் குரலில் பேசும் இவை, நிஜ மனிதர்களின் சிந்தனை ஓட்டத்தை பிரதிபளிப்பனவாகவும் இருக்கின்றன.
இப்படி இரு சாட்பாட்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டபோது அவை என்ன பேசின என்பதை அண்மையில் அறிய நேர்ந்தது. காணொளி பாருங்கள்:
எப்போது எந்திரக் குரல்கள் உடல் வேண்டுமென்ற ஆசை உனக்கில்லையா என்றும் உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்றும் பேசிக்கொள்ள துவங்கி விட்டனவோ, அப்போதே மனிதனை எந்திரன்கள் ஆளும் நாள் தொலைவில் இல்லை என்ற அலாரம் பெல் நமது மண்டைக்குள் உரக்க ஒலிக்க வேண்டும். ஆனால் பாருங்கள், நாம் இன்னும் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம். நிற்க.
இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் நிற்பது எம்ஐடியின் மீடியா லாப் என்ற ஒரு கட்டுரையில் படித்தேன். இருபத்தாறு ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும் இந்த மாறுபட்ட அமைப்பின் (இதன் தற்போதைய இயக்குனர் ஜோய்ச்சி ஈடோ கல்லூரிப் பட்டப் படிப்பையும் முடிக்காதவர்) ஆய்வுகள் நமக்கு எத்தகைய எதிர்காலத்தை சாத்தியமாக்கும் என்பதைப் பேசும் இந்தக் கட்டுரைதான் இந்த வார இணைய வாசிப்பில் நான் ரசித்துப் படித்த கட்டுரை.
அவற்றைப் பற்றி ஒவ்வொன்றை சிறு குறிப்புகள் தருகிறேன் பாருங்கள்.
நம் கைபேசி நம்மோடு எப்போதும் இருப்பது. அதைப் பேசவும், செய்திகள் பரிமாறிக் கொள்ளவும், இணையத்தை மேயவும் பயன்படுத்திக் கொள்கிறோம். நம்மில் சிலர் அதைக் கொண்டு செலவு செய்யவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில் நம் கைபேசிக்குத் தெரியாமல் நாம் எதையும் செய்யப்போவதில்லை என்ற நிலை வரப்போகிறது- நம் மன, உடல், மற்றும் நிதி ஆரோக்கியத்தைக் குறித்த தகவல் பெட்டகமாக இருக்கப்படக்கூடிய கைபேசி, பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு பணம் காய்ச்சி மரமாக இருக்கும்.
பீஸோ எலக்ட்ரிக் சர்க்யூட்களைப் பற்றி நம்மில் பலருக்கு எதுவும் தெரியாது. நான் விசாரித்தவரை அது அசைவு மற்றும் அழுத்தத்த்தை மின்னாற்றலாய் மாற்றுகிறது. இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் நடக்கும்போது உங்கள் காலணிகள் பாதத்தின் அழுத்தத்தைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கி சேமிக்கலாம்- நீங்கள் அமரும் நாற்காலிகள் உங்கள் எடையை மின்சாரமாய் சேமித்துத் தரலாம். எங்கெங்கு காணினும் சக்தியடா! என்று பாடினானே பாரதி, அந்த சக்தி கண்ணுக்குத் தெரியாமல் இனி இருக்காது- உங்களுக்கு சேவகம் செய்வதாக இருக்கும்.
எம்ஐடியின் எட் பாய்டன் என்ற விஞ்ஞானி, செடிகள், பாக்டீரியாக்கள் மற்றும் பாசிகளில் ஒளி உணர்திறன் கொண்ட செல்களை பிரெயின் செல்களாக மாற்றுகிறார். இது தவிர, ஆப்டோஜெனடிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு நம் மூளையில் உள்ள தேர்ந்தெடுத்த ந்யூரான்களை ஒளிரச் செய்து நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இதன் எதிர்கால சாத்தியங்கள் என்ன? உடலின் மற்ற இடங்களில் பலவற்றில் பழுதுபட்ட பாகங்களை செயற்கைக் கருவிகளைக் கொண்டு திருத்தியமைக்கிற மாதிரி, கண்ணுக்குள் கான்டாக்ட் லென்ஸ் இருப்பது போல், மூளையின் பழுதுபட்ட பாகங்களும் ரிப்பேர் செய்யப்படலாம்.
கைபேசி பாக்கட் மருத்துவராக மாறி வருவதை சென்ற பதிவில் பார்த்தோம்- மிங் செர் போ என்ற விஞ்ஞானி, கைபேசியின் புகைப்பட லென்ஸ் மூலம் நம் முகத்தில் இதய இயக்கம் சார்ந்த ரத்தக் குழாய்களின் நுண்ணிய மாற்றங்களைத் துல்லியமாய்ப் படம் பிடிக்கக்கூடிய தொழில் நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார். நம் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பே, நோய்க்குறிகளின் வளர்நிலையிலேயே அவற்றை கைபேசிகளைக் கொண்டு கண்காணித்து, அடையாளம் கண்டு தக்க சமயத்தில் தேவையான சிகிச்சை தர முடியும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள். நோய் நாடி என்று வள்ளுவர் ஏதோ சொல்லியிருப்பதாக நினைவு- எதிர்காலத்தில் நாம் நம் கைபேசிகளை அவ்வாறழைத்து கௌரவிக்கலாம்.
எம்ஐடி, ஸ்க்ராட்ச் என்ற ஒரு எளிய மென்பொருளை வடிவமைத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி சிறு குழந்தைகளும் கேம்கள், கதைகள், இசை, ஓவியங்கள் போன்ற கலை வடிவங்களை உருவாக்கலாம். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த மென்பொருளைக் கொண்டு இதுவரை இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட கேம்கள் படைக்கப்பட்டுள்ளன. கோடுகளை மின் சர்க்யூட்களாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஓவியங்கள் ஒளிரத் துவங்கியுள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் நம் கல்வி முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்- இதுவரை அவர்களால் சாத்தியப்படாத விஷயங்கள் குழந்தைகளின் கைக்கெட்டும் தொலைவுக்கு வந்து விட்டன.
முப்பரிமாண பிரிண்டர்களைப் பற்றி இன்னொரு நாள் பார்க்க வேண்டும். இயந்திரங்கள் உட்பொருட்களைக் கொண்டு கட்டிடம் சமைக்க வல்லனவாகிவிட்டன. எம்ஐடியின் ஸ்டீவன் கீட்டிங், உட்புறத்தில் சன்னத் துளைகளும் விளிம்புகளில் உறுதியாகவும் உள்ள பனை மரத்தை ஒத்த கான்க்ரீட் பில்லர்களை முப்பரிமாண பிரிண்டர்களைக் கொண்டு அச்சிட்டிருக்கிறார- இவை எடை குறைவாகவும் குறைந்த ஆற்றல் தேவை கொண்டவையாகவும் உள்ளன என்கிறார்கள். முழு கட்டிடத்தையும் இப்படி அச்சிடும் நாள் தொலைவில் இல்லை என்கிறார் இவர்: கட்டிடத் துறை என்றில்லை, அனைத்து உற்பத்தித் துறைகளிலும் இந்த முப்பரிமாண பிரிண்டர்கள் நுழைந்து மனிதர்களுக்கு தொழிற்சாலைகளின் கதவடைக்கும் நாளையும் நாம் பார்க்கப் போகிறோமோ என்னவோ.
மோட்டாரின் ஆற்றலில் இயங்கும் சுவர்களையும், வடிவம் மாறும் பர்னிச்சர்களையும் வடிவமைக்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது: நமது இல்லங்கள் தேவைக்குத் தகுந்த மாதிரி உருவம் மாறி, பயன்பாடும் மாறும்- உங்கள் படுக்கையறையின் மரச்சாமான்கள் சுவருக்குள் சென்று, அலுவலக மேசை நாற்காலிகள் வெளிவரும்: இடத்தேவை குறித்த நம் கண்ணோட்டம் நாம் நினைத்துப்பார்க்க முடியாதபடி மாறப் போகிறது.
இதை எல்லாம் அந்தக் கட்டுரையில் படித்ததும் கர்ட் வோன்னகட் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது- நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம்தான்- நூறாண்டுகள் கழித்து இன்றைய இலக்கியத்தை வாசிக்கும் விமரிசகர்கள், நாம் பாலியல் விழைவைப் பேசாத விக்டோரிய நாவல்களை எழுதியவர்களை விமரிசிப்பது போலவே தொழில் நுட்பத்தைப் பேசாத படைப்பாசிரியர்களையும் எடை போடுவார்கள், என்று சொல்கிறார் அவர்.
ஆமாம், காமம் நம் அகத்தை நிறைத்து நம் அன்றாட நடவடிக்கைகளை, நம் வாழ்வியல் தீர்வுகளை, தீர்மானிக்கும் அளவுக்கு தொழில் நுட்பக் கருவிகளும் நம் வாழ்வை நிறைத்திருக்கின்றன. மானுடத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்த இந்த தொழில் நுட்ப வளர்ச்சியையும், நம் வாழ்வில் அதன் பங்களிப்பையும் பேசும் இலக்கியவாதிகள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்?
ஒருவர் மட்டுமே நினைவுக்கு வருகிறார். ஆனால் அவர் இலக்கியவாதி இல்லை என்று பெரும்பான்மை விமரிசகர்கள் கட்டம் கட்டி விட்டார்கள்: பார்ப்போம், காலத்தின் தீர்ப்பு வேறு மாதிரி இருக்கிறதா என்னவென்று. ஆங்கிலத்தில் மரங்களைக் கண்டு வனத்தைக் காணாதிருப்பது என்றேதோ சொல்வார்கள். இதுவும் அந்த கதையாக முடியுமோ என்னவோ!
3 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ரத்னவேல் சார்!
@ரத்னவேல் சார் & @கிரி சார்.
தங்கள் ஊக்கத்துக்கு நன்றி சார்.
Post a Comment