Apr 1, 2012

ஒரு அடேங்கப்பா ரக ”ஏப்ரல்.1 கதை”

”ஹலோ! நலம்தானா? நான் “எக்ஸ்.வொய்.இசட்”. ட்விட்டரில் நாம் நண்பர்கள். உங்கள் ஏரியாவில்தான் இப்போது இருக்கிறேன். சந்திக்கலாமா?”

ஒரு வெளியூர் ட்வீட்டரிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. மிகவும் சுவாரசியமான, புரட்சி சிந்தனை கொண்ட ட்வீட்டர்.

”சரி, எங்கே?”, என கேட்டு அனுப்பிய என் எஸ்.எம்.எஸ்.’க்கு, “என் உறவினர் வீட்டிற்கு சனிக்கிழமை மாலை வரவும்”, என முகவரியும் பதிலாய் வந்திருந்தது. அடடே! இது எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது தெரு. 

ஒரு உதாரணத்திற்கு அந்த முகவரியை ”16, பிள்ளையார் கோயில் தெரு, தென்றல் நகர், பம்மல்” எனக் கொள்வோமே.

“வெகேஷனுக்கு வந்திருக்கிறீர்களா?”, கேள்வி எஸ்.எம்.எஸ்.

“ஆமாம்”, பதில் எஸ்.எம்.எஸ்.

அத்துடன் மறந்துவிட்டேன். இன்று மாலை (சனிக்கிழமை), ‘மறந்தாச்சா?” என்ற நினைவூட்டலில் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டிக் கொண்டு புறப்பட்டேன். இந்த அமெரிக்க நேரத்தில் வேலை செய்யத் தொடங்கிய பின் இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் கேஸாகிப் போய் அன்றாட நிகழ்வுகள் எல்லாமும் தலைகீழாய்ப் போகிறது.

16, பிள்ளையார் கோயில் தெருவைக் கண்டறிய பெரிய கஷ்டம் ஏதும் இல்லை. வாசலில் போய் நின்றேன். வெளியே அவ்விட தேசத்து ஜாடையில் ஒரு பெண்மணி, “யெஸ்?”, என்ற கேள்விக்கு நம்ம ட்வீட்டரின் பெயர் சொன்னேன்.

“யெஸ், அது நான்தான். சொல்லுங்க என்ன வேணும்?”

இங்கே நான் முன்னமே உங்களுக்குக் குறிப்பிடத் தவறிய ஒரு தகவல், நம்மை சந்திக்க அழைத்த ட்வீட்டர் நண்பர், ஒரு பெண்மணி. தன் புரட்சி ட்வீட்டுகளால் தமிழ் ட்விட்டர் உலகையே கதி கலங்கச் செய்து கொண்டிருக்கும் ஒருவர்.

“ஹாய்! நான் கிரி”

“கிரி? சரி என்ன வேணும்?”

”ஆர்.எஸ்.கிரி... ட்விட்டர் காண்டாக்ட்”

“யார் வேணும் உங்களுக்கு?”

“எக்ஸ்.வொய்.இசட்”, பெயர் சொன்னேன். “ட்விட்டர் ஃப்ரெண்ட். போன வாரம் மெசேஜ் அனுப்பியிருந்தீங்களே. _____ ஊருதானே நீங்க”

“ரைட். பேரு கரெக்ட் ஊரும் கரெக்ட். ஆனா நான் ட்விட்டர்ல இல்லையே”

”இது நம்பர் பதினாறுதானங்க?”

‘ஆமாம்”

“பிள்ளையார் கோயில் தெரு’தானே?”

“கரெக்ட்”

“பம்மல் ஏரியாதானே”

”ஆமாங்க”

“தென்றல் நகர் தானுங்களே”

தர்மத்தின் தலைவன் படத்தில் ஞாபகமறதி ரஜினிக்குக் கிடைக்கும் பல்ப் போல, “இல்லை, இது பொதிகை நகர்”, என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன்.

“ஆமாங்க, நீங்க சொல்ற அட்ரஸேதான். ஆனா நீங்க தேடி வந்தது என்னையில்லை. கொஞ்சம் இருங்க”, என உள்ளே போய் விட்டார்.

இப்போது ஒரு பெரிய மனிதரின் முறை போல. அறுபதைக் கடந்த ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் ஒரு ஒளிவீசும் பிரகாச முகத்துடன் வெளியே வந்தார். நெடுநெடு உயரம், பழுத்த பழம், நெற்றியில் மூன்று பட்டைத் திருநீர், மூன்றுக்கும் இடையில் ஒரு விரற்கடையளவிற்கு சந்தன மெழுகல், அதன் மத்தியில் புதிய ஐம்பது பைசா அளவிற்கு அடிக்கும் ரத்தச் சிவப்பில் குங்குமம். கழுத்தில் ருத்ராட்சம், காவி வேட்டி, வெள்ளை சட்டையில் தோற்றம்.

“அடடே! கிரி சார், வாங்க வாங்க!”

எனக்கு விலுக் என்றது. ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல்,

“நீங்க.....”

“நான்தான்.... நீங்க தேடிவந்த அந்த எக்ஸ்வொய்இசட் நான்தான்”

“ஹல்லோ சார், நான் தேடி வந்தது ஒரு கேர்ள், rather ஒரு லேடியை”

"எல்லாம் நான்தான், மொதல்ல உள்ள வாங்க. இது நம்ம வீடுதான்”

அடப்பாவிகளா என்றாகிப் போனது எனக்கு. இத்தனை நாள் கிண்டலாக பெண் பெயரில் உலாவரும் ஆண்கள் என்றெல்லாம் ட்விட்டர் டைம்லைனில் கிண்டல் கேலிகள் ஓடும். இப்போது என்னெதிரில் ஒரு நிதர்சன நிஜத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறேன். ச்சே! இந்த நேரம் பார்த்து இந்தப் பாழாய்ப் போன ட்விட்டரை விட்டு வேறு விலகியிருக்கிறேனே!

உள்ளே போய் அமர்ந்தேன். இது போன்ற விஷயங்கள் எல்லாம் ட்விட்டர் உலகில் சாதாரணம்தான் என்றாலும், அதை நேரில் தரிசித்த வேளையில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு எனக்கு பேச்சே வரவில்லை. அந்த மனிதரோ நான் வாயடைத்துப் போனதை ரசித்துக் கொண்டிருந்தார்.

“சார், நீங்கதான் அந்த எக்ஸ் வொய் இசட் அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்?”

“அது நான் இல்லைன்னு சொல்றதுக்கு உங்க கிட்ட ஏதும் ஆதாரம் இருக்கா?”

வாய்ப்பே இல்லை. இது அதே ராங்கு பார்ட்டிதான். ஒரே எதிர் கேள்வியிலேயே புரிந்துவிட்டது.

”இப்போ எதுக்கு அடையாளத்தைக் கலைச்சிட்டு என்கிட்ட உண்மை ஸ்வரூபத்தைக் காட்டினீங்க?”

“ஜஸ்ட் லைக் தட். உங்க ட்விட், பாடல்களின் ரெகுலர் ஃபாலோவர் நான். (மறந்தும் ரசிகன் /ரசிகை என்ற வார்த்தை வரவில்லை பாருங்கள்). உங்க ஏரியாவுக்கே வந்தேன். சரி சந்திக்கலாமேன்னுதான்”

எனக்குக் கொஞ்சமாய்த் தெளிந்த வேளையில் காபி, பிஸ்கட், ஆரஞ்சுப்பழம், அன்னாசி ஜூஸ் என்று பத்து நிமிடத்தில் அரை டஜன் தின்னும் விஷயங்கள் மேஜைக்கு வந்து குதித்தன. நான் தின்கிறேனா என்பதையெல்லாம் எதிர்பாராமல் நம்ம ட்வீட்டரரரரரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவற்றை அதகளம் பண்ணிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.

”ஒருவேளை நாளை ஏப்ரல் ஒண்ணுன்னு எல்லாம் கூடி நின்னு என்னை ஃபூல் பண்ணப் பாக்கறீங்களோ?”

என்னை உள் அறைக்கு அழைத்துச் சென்றவர், தன் மடிக்கணினி திறந்து அந்த ஐடியையும் ட்விட்டரில் திறந்து ஏதோ யாருடைய ட்விட்டுக்கோ விதண்டாவாதமான ஒரு ரிப்ளை தந்தார்.

“நம்பிட்டேன். போகலாம் வாங்க”, வெளியறைக்கு வந்தோம்.

”இப்போ நான் ட்விட்டர்ல இல்லைன்ஙற தைரியத்துல என்னை சந்திச்சீங்களா?”

”அதெல்லாம் இல்லை. நானே இன்னும் நாலஞ்சு நாள்’ல ட்விட்டருக்கு முழுக்கு போட இருக்கேன். அப்போ சொல்லிட்டுதான் போவேன்”

“இது பத்தி நான் பதிவு எழுதலாமா?”

“எழுதுங்க. பேரை மட்டும் குறிப்பிடாதீங்க. நான் உங்களை நம்பறேன்”

“ஓகே”

“நீங்க கண்டிப்பா ஒரு பாட்டு பாடணும் எங்களுக்காக. அதோ அந்த பறவை போல பாடுங்களேன்”

எனக்கு அந்த பாட்டு தெரிந்த வரையில் பாடினேன்.

மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வழக்கமான ட்விட்டர் நண்பர்கள் சந்திப்பு போலல்லாமல் இத்தனை வித்தியாச சந்திப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், நான் ரொம்பவே கொஞ்சமாகத்தான் பேசினேன். அவர்தான் விடாமல் வளவள’வென லட்சுமி மோட்டார் கம்பெனியில் தான் பார்த்த வேலை பற்றியும், போளுவாம்பட்டியில் தன் தந்தை பார்த்த நீர் மணியம் வேலை பற்றியும், வெள்ளியங்கிரியில் விற்ற நிலம் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தார்.

”அது சரி! ஏன் இந்தப் பெண் வேடத்துல, பெண் ஐடியில, பெண் போர்வையில ”

“வெயிட் வெயிட் வெயிட்! நான் பெண் ஐடி’ல இருக்கேன், பெண் டிபி (புகைப்படம்) வெச்சிருக்கேன், இது ரெண்டும் சரி. ஆனா, நான் என்னைக்காவது நான் பெண் அப்படின்னு சொல்லியிருக்கேனா?”.

நெற்றி சுருக்கி யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒன்றும் நினைவில்லை.

சரிதான்! இது நாலு வருஷ ஏப்ரல் ஒண்ணு சமாச்சாரம் டோய் என்று நினைத்து விடை பெற்றுக் கொண்டு வந்தேன்.

ஏப்ரல் ஒண்ணு ஒரே ஒரு நாள் வர்ற சமாச்சாரம் இல்லை கண்ணுங்களா. இந்த விஷயம் எனக்கு மார்ச் முப்பத்தி ஒண்ணு தெரிஞ்சிருக்கு பாருங்க! அதான் விஷயம்!



3 comments:

சு. திருநாவுக்கரசு said...

சரியான பார்ட்டிதான் போங்க! ..ம்! இன்னும் நாலு நாள்லே, அவரே சொல்லாட்டி நீங்களாவது சொல்லிடுங்கோ! கொஞ்சம் ஜொள்ளாவது மிச்சமாகும்!

maithriim said...

என்னல்லாம் நடக்குது ட்விட்டர்ல? ஆனா நல்லாத்தான் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்திருக்காரு மனுஷன்!:)I hope he reveals his indentity soon. Missing you on twitter :(
amas32

chinnapiyan said...

சின்னபையன்னு பேரவச்சுக்கிட்டு நான் படர அவஸ்த இருக்கே. அய்யோ. ஆனா உங்க பிரண்டு பெண் ஐடி வச்சுக்கிட்டு அதுவும் நாலு வருசமா.. எனக்கு மட்டும் அது யாருன்னு சொல்லுங்க நைனா. மற்றபடி சொன்னவிதம் அழகு. சரி இப்ப ஏன் டி எல்லுக்கு வருவதில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...