Apr 10, 2012

உங்களுக்கு பாப்பா இருக்குதா ?




எங்கள் வீட்டில் அன்று கூட்டு சமையல். கத்தரி கூட்டு, பீன்ஸ் கூட்டு இல்லை. எங்கள் காம்பவுண்ட் பெண்மணிகள் மூவரும் சேர்ந்து எங்கள் வீட்டில் கூட்டாக சமையல் செய்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். "Too many cooks spoil the dish" என்பதன் அர்த்தத்தை அன்றைய வெஜிடபிள் பிரியாணியின் சுவை சொல்லியது. எனினும் மிகவும் இனிமையாக, கலாட்டாக்களுக்குக் குறைவில்லாமல் போய்க் கொண்டிருந்தது அந்த மாலைப் பொழுது.

அப்போது பக்கத்து இல்லத்து நண்பரின் மனைவிக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அந்த இடத்தில் குடிகொண்டிருந்த ஆரவார மனநிலையை அப்படியே மாற்றிப் போட்டது. இத்தனைக்கும் அந்த அழைப்பை அந்தப் பெண்மணி எடுக்கவும் கூட இல்லை. தொலைபேசித் திரையில் அழைத்தவரின் பெயரைப் பார்த்ததுமே இந்தப் பெண்மணி கிட்டத்தட்ட ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டார்.
 
கதை இதுதான்.  அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள், அவர்களுக்குத் திருமணமாகி மூன்று / நான்கு வருடங்கள் கழித்தே அந்தக் குழந்தை பிறந்திருக்கிறாள். தொலைபேசியில் அழைத்த பெண்மணி நண்பரின் அலுவலகத் தோழரின் மனைவி. அவர்களுக்குத் திருமணமான ஒரு வருட காலம் நிறைந்த நேரத்தில் (மகள் பிறக்கும் முன்) ஏதோ ஒரு அலுவலக நண்பரின் திருமணத்தில் இரண்டு பெண்மணிகளும் சந்தித்திருக்கிறார்கள்.
 
no im not pregnant tshirt உங்களுக்கு பாப்பா இருக்குதா ?
அங்கே, "உங்களுக்கு பாப்பா இருக்குதா?" என்ற ஒற்றைக் கேள்வியை அந்தப் பெண்மணி கேட்டு, "இல்லை இனிமேதான்" என்று பதிலாய்ச் சொன்ன நேரத்தில் நண்பரின் மனைவி நினைத்தும் இருக்கவில்லை எதிரில் நிற்பது உலகின் மிகப்பெரிய "இங்கிதம் தெரியா இம்சை அரசி" என்று.
 
அதற்கு அடுத்த நாளிலேயே தொடங்கியிருக்கிறது கதை. அந்தப் பெண்மணி நண்பரின் மனைவியை தொலைபேசியில் அழைத்து,
 
"ஆமா, உங்களுக்கு ஏன் குழந்தை இல்லை? நீங்க ஏதாவது பிளான்'ல இருக்கீங்களா? அப்போ என்ன பிரச்னை? டாக்டரைப் பார்த்தீங்களா? அந்த கோயிலுக்குப் போங்க, இந்த டாக்டரைப் பாருங்க. அப்படியே விட்டுடாதீங்க. ஜாலியா இருக்கணும்னு அப்படியே இருப்பீங்க போல? அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. அவருக்கு ஏதாவது பிரச்சனையான்னு கேட்டீங்களா" என்பது போன்ற ஒரு இரண்டு டஜன் வகையறாவில் கேள்விகளை வைத்துக் கொண்டு தவறாமல் வாரம் நான்கு முறை இதே சிலபஸ்'சை பின்பற்றி கேள்வி கேட்டுக் கொன்றிருக்கிறார்.
 
கொஞ்சம் பொறுமையாக இருந்த நண்பரின் மனைவி ஒரு கட்டத்தில் விதம் விதமாக அந்தப் பெண்மணியிடம் அவர் கேட்கும் கேள்விகளைத் தான் விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். எனினும் அந்தப் பெண்மணியோ உலகின் அக்கறையுள்ள ஒரே ஜீவன் தான் மட்டுமே என்ற எண்ணத்தோடு தன் கேள்விகளைத் தொடர்ந்திருக்கிறார்.
 
அதன் பிறகே அந்தப் பெண்மணியின் டார்ச்சர் அழைப்புகளை தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார். இவர் பலமுறை அந்தப் பெண்மணியின் அழைப்பைத் தவிர்க்க தன் மொபைல் எண்ணை மாற்றியதும் உண்டாம். இப்போது அவர்களுக்குக் குழந்தை பிறந்து அந்தக் குழந்தைக்கும் இரண்டு வயதாகிவிட்ட பிறகும் கூட அந்தப் பெண்மணி மீதான கோபம் நண்பரின் மனைவிக்கு இன்னமும் குறைந்தபாடில்லை. இப்போதும் கூட அந்தப் பெண்மணியின் அழைப்பை இவர் எடுப்பதில்லை. தன்னை இவர் தவிர்க்கிறார் என்பதை அறிந்தும் கூட இப்போதும் தொடர்ந்து அழைப்பு விடுக்கும் அந்த இம்சை அரசியை என்னவென்று சொல்ல?
 
எங்கள் கதையிலும் இப்படிப்பட்ட நிறைய கதாபாத்திரங்களை நாங்கள் இருவருமே பார்த்திருக்கிறோம். எங்கள் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைந்த பிறகே எங்கள் மகன் பிறந்தான். அந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட மனிதர்களிடம் பட்ட அவஸ்தையை சொல்லி மாளாது. குழந்தை உருவாகாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப்போடுவதிலும் "ஜாலியாக" இருப்பது தவிர்த்த ஆயிரத்தி எட்டு காரணங்கள் இருக்கின்றன. எல்லாக் பர்சனல் காரணங்களையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.
 
சிலர் நம்மைக் கேட்பார்கள், சிலர் நேரிடையாக நம்மைக் கேட்காமல் நம்மைப் பெற்றவர்களிடம் வந்து, "பையனுக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷம் இருக்குமில்ல? இன்னும் என்ன யோசிச்சிட்டு இருக்காங்க ரெண்டு பேரும் சட்டு புட்டுன்னு பெத்துக்க சொல்லுங்க", என்பார்கள். சில நேரங்களில் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு. "செருப்பால அடிப்பேன்!  எப்போ பெத்துக்கணும்னு எங்களுக்குத்  தெரியும். வாயை மூடிட்டு போய்ட்டே இரு!", என்று சொல்ல வேண்டும் போல ஆத்திரம் வரும். பழகிவிட்ட தோஷத்திற்கு அதைச் செய்ய முடியாமற்போகும்.
 
இது போன்ற டார்ச்சர்களில் ஈடுபடுபவர்கள் பெண்மணிகள் மட்டுமே என்று நினைத்து விடாதீர்கள். ஆண்களுக்கும் இந்த விஷயத்தில் சம உரிமை உண்டு. ஆம்பளை கோஷ்டிக் கூட்டம்  எதிலும் இந்த சப்ஜக்ட் விவாதம் வந்துவிட்டது என்றால் அது கொடுமையிலும் கொடுமை. ஒரு ஆண்மகன் தான் ஆண்மை நிறைந்தவன் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க கல்யாணமான ஒரு வருடத்திற்குள் பிள்ளை பெற்றுவிட வேண்டும் என்று நம் "ஆம்பளைகள்" தெள்ளத் தெளிவாகக் கூறுவார்கள். இதுபோன்ற அசட்டு நிரூபணங்களை யார் இவர்களை செய்யச் சொல்கிறார்கள் எனப் புரிவதில்லை. இது போன்ற கிறுக்குத்தன விவாதங்கள் நிகழும் இடங்களில் தனக்குக் கல்யாணமான ஒரு வருடத்திற்குள் பிள்ளையைப் பெற்ற ஏதேனும் ஒரு லூசுப்பயலும் இருப்பான். "ஆமாம் மச்சி!", என்று அங்கே மீசையை முறுக்கிக் கொள்வதில் அவனுக்கு என்னவோ அப்படியொரு குரூர சந்தோஷம். 
 
நண்பர்களே / நண்பிகளே! இதுபோன்ற அசட்டுத்தன நம்பிக்கைகளையும் உங்கள் சங்கி-மங்கி'த்தனமான இங்கிதம் இல்லாத கேள்விகளையும் தயவுசெய்து தவிருங்கள். குழந்தை பெற்றுக் கொள்வதில் தங்களால் தீர்த்துக் கொள்ளவியலாத பிரச்னை ஏதேனும் இருந்தால் அதற்கு எங்கே உதவி தேடிச் செல்ல வேண்டுமோ அங்கே தம்பதிகளே செல்வார்கள்.
 
அவர்களாக உங்களிடம் வந்து நின்றால் உதவிக்குச் செல்லுங்கள். இல்லாவிடில் உங்கள் நவத்துவாரங்களையும் சாத்திக் கொண்டு இருத்தலும், பொதுவில் உங்கள் "ஆம்பளை" விவாதங்களைத் தவிர்த்தலுமே அவர்களுக்கு நீங்கள் ஆற்றும் அரும்பெரும் உதவி என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு முடித்துக் கொள்கிறேன்.

6 comments:

Hariraman said...

Hahaha, Mr Giri.... so you also did have some exp with these annoying characters... (sorry dont have a tamil font)

வெங்கட் நாகராஜ் said...

எங்களுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு. கொஞ்சம் கொடூரமான அனுபவங்களும் உண்டு!

Giri Ramasubramanian said...

@ஹரி
@வெங்கட்

வருகைக்கும் தங்கள் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!

VELAN said...

எனக்கும் திருமணமாகி இரண்டரை வருடங்கள் இந்த அவஸ்தையான கேள்விகளை கேட்க வேண்டியிருந்தது.

ஆனால் ஒன்றுக்கு இரண்டாக பிறந்தது. :-)

maithriim said...

I think I read it earlier in your blog. Very well expressed! MYOB should be the reply to shut the mouth of these people.
amas32

Unknown said...

இங்கிதமில்லாதவர்கள் நெருடலான விஷயத்தை ஏடாகூடமாகப்பேசி மனதைக் காயப்படுத்துவது எப்போதும் தொடர்கதைதான்--இப்போது நீங்கள் சாட்டையை தூக்கியிருக்கிறீர்கள் . .'மலடல்ல' என்ற என் கவிதையின் சிலவரிகளை இங்கே குறிப்பிடுகின்றேன்.
சிரிப்பு பூக்காத வாய் மலடு
உழைப்பு பூக்காத கை மலடு
உயர்வு பூக்காத கால் மலடு
கருணை பூக்காத மனம் மலடு
காதல் பூக்காத மனைவி மலடு
மகிழ்ச்சி பூக்காத வாழ்க்கை மலடு
மனிதநேயம் பூக்காத மனிதன் மலடு--
மழலை பூக்காத வயிறு மலடல்ல !

Related Posts Plugin for WordPress, Blogger...