Jun 18, 2012

திருநீர்’மலையில் சிவபெருமான்?

அன்றாயர்    குலக்கொடி  யோடு
அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
மாமலையாவது நீர்மலையே.  
- திருமங்கை ஆழ்வார்.

-----------

நன்றி: என் தமிழ்

கல்யாணமான ஐந்து வருடங்களில் என் மாமனார் முதன்முறையாக சேர்ந்தாற்போல் ஐந்து நாள்கள் எங்களுடன் வந்து தங்கியிருந்தார். அவரை வெளியில் அழைத்துப் போக உகந்த, இந்தக் கொடும் வெயில் நாளில் நேரம் ரொம்பத் தின்னாத இடம் என்றால் நம்ம திருநீர்மலைதான். நம் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறைச்சலான தூரம். வண்டி எடுத்தால் மூன்று நிமிடத்தில் போய்விடலாம். நேற்று காலையில் போய் வந்தோம்.

புறப்பட அப்படி இப்படி மதியம் பதினோரு மணி ஆகியதில் முடிந்தால் நால்வரும், இல்லையேல் நீர்வண்ணர் மாத்திரம் என்று முடிவானது.

நால்வரும்? யெஸ்! பெருமாள் நின்ற, அமர்ந்த, நடந்த, படுத்த என நான்கு கோலத்திலும் காட்சி தரும் கோயில் திருநீர்மலை.

போகும் வழியில், ”கோயில்’ல சிவன்தானே இருக்காரு?”, மாமனார் கேட்டார்.

”என்னது? சிவன் கோயிலா? தெய்வமே! இவர் 108 பெருமாள்’ல ஒருத்தர் மாமா”, என்றேன். 

“திருநீர்’ன்னு ஊர் பேர் இருக்கே?”

”நீர்’ன்னா தண்ணி மாமா. வைணவர்கள் எல்லாத்துக்கும் முன்னால ஒரு திரு சேர்ப்பாங்க தெரியாதா உங்களுக்கு?”

”ஓ”

“இந்த ஊரை ஒரு காலத்துல தண்ணி சூழ்ந்து அதன் பின்னாடி ஏதோ வரலாறு இருக்கு. சரியா நினைவில்லை”

“சரி சரி, ரோடு பாத்து வண்டி ஓட்டுங்க”

பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்றாலும் வெயிலின் மகிமையில் கோயிலில் அத்தனை ஆரவாரம் இன்றியே இருந்தது. மதிய அன்னதானத்திற்குக் காத்திருந்த கூட்டம் தவிர்த்து கோயிலில் ஒரு டஜன் தலைகள் இருந்திருந்தால் அதிகம்.

அணிமாமலர்த் தாயார் சன்னதி பட்டரிடம், ”திருநீர்மலை’ன்னு எதுக்கு பேர் வந்தது?”

ஆரத்தி காட்டியவாறே, ”ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இந்த ஊரை வெள்ளம் சூழ்ந்து நின்னப்போ வால்மீகி ’அந்த’ மலை மேல உட்கார்ந்து பெருமாளோட தரிசனம் வேண்டி தவமிருந்தாரு. வெள்ளம் வடிஞ்சு முடிய ஆறு மாசமாகி பெருமாளும் தரிசனம் தந்தாரு. பெருமாளை வால்மீகி இங்கயே நிரந்தரமாத் தங்கிடச் சொல்ல அப்போ இங்க எழுந்ததுதான் ’நீர்வண்ணப் பெருமாள்’ கோயில்”

“ரொம்ப தேங்க்ஸ்”

குங்குமம் தந்தவாறே, ”ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இந்த ஊரை வெள்ளம் சூழ்ந்து நின்னப்போ வால்மீகி ’அந்த’ மலை மேல உட்கார்ந்து பெருமாளோட தரிசனம் வேண்டி தவமிருந்தாரு..........”

“ரொம்போ நன்றி”

மஞ்சள் தந்தவாறே, “”ரெண்டாயிரம் வருஷம் முன்னாடி இந்த ஊரை வெள்ளம் சூழ்ந்து நின்னப்போ.....”

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” 

“இவர்தான், நீர்வண்ணர்தான் மொதல்ல வந்தது. அதன் பிறகுதான் ரங்கநாதர் எல்லாம் மலை மேல எழுந்தருளினது”

“ஓ... சந்தோஷம் மாமா”

”பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ரெண்டு பேரும் இந்த பெருமாள் மேலே பாடியிருக்காங்க. மேலேயும் போயிட்டுப் போங்கோ”

”ஷ்யூர்”

நன்றி: என் தமிழ்

நீர்வண்ணர் சன்னதியிலும் கூட்டம் ஏதுமில்லை. நிதானமாக நின்ற கோலத்தில் பெருமாளின் அழகை ரசித்துத் தரிசனம் செய்ய முடிந்தது. சாளக்கிராம மாலையை லென்த்தியாக அழகாக அணிந்திருக்கிறான் நீர்வண்ணன். திருமலையப்பன் நம் ஏடுகொண்டலவாடு ”பாலாஜி பக்வான்” கொண்ட ஸேம் போஸ்ச்சர்.

இதற்கு முன் இரண்டு மூன்று முறைகள் ஷைலஜாவுடன் வந்தபோதும் மாலை நேரமான காரணத்தால் மேலே படியேறி மற்ற மூவரையும் தரிசனம் செய்யக் கொடுத்து வைக்கவில்லை. இந்தமுறை வெய்யில் மனத்தடை வைக்க, “நெக்ஸ்ட் டைம் மேல போலாம் மாப்ளே”, என்றார் மாமனார். 

கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டாக படிகளில் அமர்ந்திருந்தோம். தீவிர கருணாநிதி ஆதரவாளரான மாமனார் எதிரில் அமர்ந்திருந்த ‘அன்னதானக் காத்திருப்புக்’ கூட்டத்தைப் பார்த்து, ஜெயலலிதா கோயில்களை ஹோட்டல் கதையாக மாற்றிவிட்டார் என வைதுதீர்த்தார். 

”இது 108 தலத்துல ஒண்ணுங்க”, பக்கத்தில் குரல்.

“ஆமாம் சார்”, இது நான்.

“அதுல 106தான் நாம பார்க்க முடியும். மத்த ரெண்டுல ஒண்ணு சொர்க்க லோகத்துலயும், இன்னொண்ணு வேற எங்கயோவும் இருக்கு”

“பாற்கடல்’ல இருக்குங்க”

”ஆமா ஆமா, கரெக்டு கரெக்டு. வந்து.... சாப்பாடு எங்க போடுவாங்க?”

”எந்த சாப்பாடு”

“அன்னதானம்?”

“தெரியலைங்க”

“உங்களுக்குத் தெரியுமா?”, இம்முறை மாமனாரைப் பார்த்து கேள்வி.

“தோ எதிர்ல இருக்காங்களே அவங்க கிட்ட கேளுங்க சொல்லுவாங்க”

“நான் மதுரைல இருந்து வந்திருக்கேன் சார். இந்தக் கோயில்ல அன்னதானம் நல்லா இருக்குமா?”

“தெரியலைங்க”

“சில கோயில்கள்ல நல்லா இருக்கு. பல இடங்கள்ல சரியில்லைங்க.”

“ஓ”

“இங்க எப்படி இருக்கும்”

“தெரியலை சாமி”

“யாரைக் கேட்டா தெரியும்”

“அவங்க கிட்டயே கேளுங்க”

”கொஞ்சம் எங்க கிடைக்கும், எப்படி இருக்கும்னு நீங்க கேட்டு சொல்ல முடியுமா?”

ஒருமுறை அந்த மனிதரை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டேன்.

”கண்டிப்பா செய்யறேன். ஆனா நான் கேக்கற கேள்விக்கு நீங்க பதில் சொல்லணும்”

“கேளுங்க”

”இங்க பெருமாள் பேர் என்ன?”

“நீர்வண்ணப் பெருமாள்”

“நீருக்கு நிறம் இருக்கோ?”

“இல்லையே?”

“பெறகு எதுக்கு நீர்-வண்ண பெருமாள்?”

“ம்ம்ம்ம்....”

“சொல்லுங்க....”

“இல்லை, பரவாயில்லை. நானே அன்னதானம் பத்தி கேட்டுக்கறேன்”

நாங்கள் எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தோம்.

4 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

Giri Ramasubramanian said...

நன்றி ரத்னவேலு சார்
நன்றி தனபாலன் சார் (ஈமெயில் விட்ஜெட் சேர்த்திருக்கிறேன், நன்றி)

திண்டுக்கல் தனபாலன் said...

Email Subscribe செய்து விட்டேன்... எனது வேண்டுகோளை ஏற்றதற்கு மிக்க நன்றி சார் !

Related Posts Plugin for WordPress, Blogger...