புற்றீசல் பொறியியல் கல்லூரிகளின் கல்லா களை கட்டும் நேரம் இது. இந்த பொறியியல் கல்லூரி சார்ந்த அக்கிரமங்களைப் பட்டியலிட்டுப் புலம்ப / அழ / வேதனைப்பட / கோபப்பட இந்தக் காலகட்டத்தில் காரணங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் அவையனைத்தும் ஜஸ்ட் காற்றோடு கரைந்து செல்பவை, தீர்வாக நாம் முன்னெடுத்து வைப்பது என்ன என்று நண்பர் செந்தில் கொண்ட சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியே இந்தப் பதிவு. நண்பர் வேதாளம் அர்ஜூன் எழுதிய இந்தப் பதிவைப் படித்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
___________________________________________________
தேர்வு முடிந்திருந்த நேரம், கல்லூரிகளின் விளம்பரங்களைக் கண்டு கொதித்து மாணவர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப் படுகிறார்கள், தமிழக பொறியியல் கல்லூரிகளின் அவலங்கள் என்ன என்பதையெல்லாம் ஒரு பதிவிட்டிருந்தேன்.
தற்போது என் அனுபவத்தையும் இங்கே (சுருங்க) சொல்ல விழைகிறேன். என் பள்ளிப் பருவம் முழுவதும் தமிழ் வழிக் கல்வியில். கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்குமென சொன்னோர் சொல் கேட்டு பயத்துடன்தான் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். ராகிங் போன்ற கொடுமைகளை எல்லாம் நல்லவேளையாக சந்தித்திருக்கவில்லை. கல்லூரி சூழல் என்பது தாழ்வு மனப்பான்மையை மனதில் ஆழ விதைக்கும் ஒரு காரணியாக இருந்தது. ஆசிரியர்கள் முதல் நாள் முதலே பாடங்களை ஆரம்பிக்க, மனதில் படபடப்பு மிக அதிகமாகி அதுவே தொடர்ந்து நிலைத்தும் விட்டது. என் நண்பர்கள் சிலருக்கு இவ்வாறு இருக்கவில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் எப்படியாவது வேலை கிடைத்து விடும், கல்லூரி வாழ்வை “என்ஜாய்” செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. பொறியியல் படிப்பென்றால் இன்னதென்ற ஒரு வழிகாட்டுதல் கிடைத்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மதிப்பெண்கள் தான் மிக முக்கியமாகப் பட்டது. முதலாம் வருடம், இரண்டாம் வருடமென வருடங்கள் உருண்டோட பயம் இன்னபிற எல்லாம் நீங்கி தினமும் கல்லூரி போக வேண்டும், வீட்டுக்கு வர வேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு என ஒரு ஜென் நிலையை அடைந்து விட்டேன். மீண்டும் விழித்தது மூன்றாம் வருடக் கடைசியில் தான்.
அதுவும் எதற்காக, இன்னும் ஒரு வருடத்தில் படிப்பு முடிந்து விடும் என்பதற்காக இல்லை, கேம்பசில் செலக்ட் ஆக வேண்டும் என்ற ஒரு உயரிய லட்சியத்தில். கல்லூரியில் பொம்மலாட்டம் போல சில பல “மாக்” டெஸ்டுகளை வைத்து ஒப்பேற்றியது. கல்லூரியளவில் இதயெல்லாம் ஓடிக் கடக்கும் முதலாமவனாக இருந்து விட ஒரு செருக்கு உள்ளிட்டது, எப்படியும் வேலை கிடைத்து விடுமென. இப்பேராசை, நப்பாசை எல்லாம் தவிடு பொடியாகும்படி, நான்காம் வருடம் முழுவதும் போய் வந்த தேர்வுகள் எல்லாவற்றிலும் அடி! கிராமப்புற/தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கே உரித்தான “டெக்னிக்கல்” விஷயங்களில் பலமாக இருந்தும் ஆங்கிலமின்மை காரணமாக “முன்னணி நிறுவனங்களின் தேர்வுகள் அனைத்திலும் வெளியேற்றப் பட்டேன். அவர்கள் சொன்ன காரணம் “இம்ப்ரூவ் யுவர் கம்யூனிகேஷன். அடி மேல் அடி விழ, கல்லூரியும் ஊக்கமோ, அதனை எதிர்க்க வல்ல பயிற்சியோ குறைந்தபட்சம் கவுன்சிலிங் கூட கொடுக்கவில்லை. நம் வாழ்க்கை அவ்வளவுதான் கடைசியில் நானும் லெக்சரராகத் தான் போக வேண்டும் என்றெல்லாம் எண்ணி, கடைசி வரை போராடி எந்த ஒரு கம்பெனியிலும் வேலை கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினேன்.
வெளியே வந்து வேலை தேடியதில் கன்சல்டன்சி போன்ற ஒரு கம்பெனி ஐம்பதனாயிரம் பணம் கட்டச் சொல்லி, ட்ரெய்னிங் தருவதாகவும் அதில் வைக்கப்படும் தேர்வுகளில் வெல்லும் பட்சத்தில் கம்பெனிகளுக்கு அனுப்பி வேலை வாங்கித் தருவதாகவும் சொல்ல பத்தாயிரத்தை மட்டும் கட்டி அங்கு சேர்ந்தேன். உண்மையில் கல்லூரிகள் செய்ய வேண்டியதை பத்தாயிரம் வாங்கிக் கொண்டு அவர்கள் செய்தார்கள். IT நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன, அவர்களோடு எப்படி உரையாட வேண்டும் என்பதையெல்லாம் ஆறேழு மாதங்கள் சொல்லிக் கொடுத்தார்கள். உண்மையில் பயிற்றுவித்தார்கள். மேலும் அவர்கள் செய்த முக்கிய பணி, என்னுள் இருந்த பயம் என்னும் ஃபேக்டரை நீக்கியது தான். அந்த கம்பெனியின் தேர்வுகள் அனைத்திலும் வென்று விட, எங்களை இன்டர்வியூவிற்கு அனுப்பினர். அதிகபட்சம் பத்தாயிரம் மட்டுமே வழங்கும் கம்பெனிகளுக்கு எங்களை விற்றனர் என்று தான் சொல்ல வேண்டும். வீட்டு சூழ்நிலை, வங்கிக கடன் போன்ற பல இன்னல்களினால் நண்பர்கள் பலரும் அதை ஏற்றுக்கொள்ள நான் கொஞ்சம் பொறுத்திருப்பது என முடிவு செய்து வெளியிலும் வேலை தேட ஆரம்பித்தேன். அப்போது நண்பர் ஒருவர் மூலம் வந்த வாய்ப்பில் தற்போதுள்ள வேலை கிடைத்தது.
வேலை கிடைத்த பின்னர் தான் அதை விட நெருக்கடியே. இந்தச் சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது. அதிலும் நானறிந்த “சுமார்” ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு சமாளிப்பதென்பது பேரும் விஷயமாகி விட்டது. பார்ப்பவர்கள் அனைவரும் அறிவுரைக்கத் தொடங்கினர். இந்த வேலையை விட்டு ஓடி விடலாமா என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு. நண்பர்கள் பலரின் அறிவுரை, வேண்டுகோள் காரணம் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற ஒரு நிலையை மனதிற்குள் பிரகடனப் படுத்திக் கொண்டு புரோக்ராம் எழுதத் தொடங்கி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்து விட்டன.
வேலைக்கு சேர்ந்தது முதல் என்னை நன்கு அறிந்த நண்பர்கள் ஊக்கமளித்தும், சூழ்நிலைகளை விளக்கியும் என் நிலையை உணரச் செய்தனர். என் நிலை என் போன்றோருக்கு வரக்கூடாது என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நன்னாளில் தான் நண்பர் செந்தில் ஒரு சிந்தனையை முன்வைத்தார். என் போன்று, பொறியியல் முடித்து வேலையில்லாமல், IT கம்பெனிகளின் எதிர்பார்ப்புகள் என்னவென்று தெரியாமல் தேமே வென சும்மாதிருந்து சென்னை வந்து வேலை தேடி ஒரு கட்டத்தில் அலுத்துப் போய் ஐயாயிரத்தில் ஒரு டேட்டா என்ட்ரி வேலையைத் தேடி வீட்டை சார்ந்திருக்காதிருக்க முடிவு செய்யும் சிலருக்கு உதவலாம் என்ற சிந்தனையே அது. இந்த சிந்தனை வளர்ந்து நண்பர் @senthilchn ம் அதில் சேர்ந்து இவற்றைசெய்யலாம் என ஒரு பட்டியலிட்டோம்
- பொறியியல் முடித்தவர்களுக்கு IT கம்பெனிகளின் எதிர்பார்ப்புகளை விளக்கும் வகுப்புகளை எடுக்கலாம் என முடிவு செய்தோம்.
- முதலில் நண்பர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என 30 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உத்தேசித்துள்ளோம்
- வேலை வாங்கித் தருவோம் என்ற உத்தரவாதத்தில் செய்வதல்ல எனினும் அதற்குத் தேவையான உதவிகளை செய்யலாம்
- எங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளப் போகிறோம்
- உதா. கம்யூனிகேஷன், ஆப்டிட்யூட் போன்றவற்றில் கம்பெனிகள் எதிர்பார்ப்பது என்ன என்பதை விளக்குவோம்.
- இதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப் போவதில்லை
- ஆர்வமுள்ளவர்கள் பயிற்றுவிப்பாளர்களாகவும் எங்களோடு கைகோர்க்கலாம். ஒவ்வொரு ஐந்து Tutor களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
சிறுதுளி நிச்சயம் பெருவெள்ளம் ஆகுமென முயற்சியில் கை கோர்க்கிறோம்!
9 comments:
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மூலம் நல்லதொரு முடிவை எடுத்துள்ளீர்கள்... தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி !
நன்றி தனபாலன் சார்
அருமையான முயற்சி. மனதார வாழ்த்துகிறேன். இந்தியாவில் இருந்தால் நிச்சயம் இணைந்திருப்பேன்.
Hey buddy...
Fantastic idea... let me know you need me anything from my side.
anbudan
perumal
@சுரேஷ் அண்ணன்,
ரொம்ப நன்றி. நீங்க இந்த சைட் விசிட் அடிக்கும்போது நிச்சயம் உங்ககிட்ட உதவி வாங்கிக்கறோம்
@பெருமாள்
நன்றி, நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.
உங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.
அற்புதமான முயற்சி. இதை பணம் வாங்கிக்கொண்டு செய்யலாம் என்று ஒரு தொழிலாக மாற்றிவிடாமல், ஒரு தன்னார்வ தொண்டாக செய்கிறீர்களே ! தலைவணங்குகிறேன். என்னையும் தொடர்புகொள்ளுங்க. உதவ வராவிட்டாலும் எனக்கு தெரிந்து ரெண்டு மூணு பசங்களை கற்க அனுப்புகிறேன்..
@ரத்னவேலு சார்
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி
@செந்தழல் சார்
மிக்க நன்றி. நிச்சயம் சொல்றோம்.
தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
Post a Comment