தியானவெளியில் மதயானை
யாருமற்ற தனிமையோடு
பேசிக் கொண்டிருந்தேன்.
கூட்டுத் தியானம்
பழக வா
என்றது தனிமை.
நிலவொளியும்
புகாததோர்
புலிக்குகை தேடித்
தஞ்சம் புகுந்தோம்.
எங்களிருவரிடையே
நான்கடி இடைவெளி
இருந்தது.
என் தியானத்தில்
மதம் பிடித்த யானை
தியான மேனியாய்
வந்தது.
தனிமையின்
தியானத்திற்குள்
என் கால்கள்
பரவினதைப்
பிடித்து வலித்த
என் கைகள் பறைந்தன.
மதம் பிடித்த
யானையின் தியானத்தில்
தனிமையின்
கால்கள் ஊடாடினவாவென
வினவினேன்.
துதிக்கையால்
என் கழுத்தைப்
பற்றி சடாரெனத்
தரையில்
வீசியது யானை.
இருள் ஒளிர்ந்து
தனிமை நீங்கியது.
தொலைத்தல் பழகுதல்
வானூர்தி அலையும்
வானின்மீது
படபடத்து அலையும்
பேருந்துகள் இரண்டை
கடல்தேவதை ஒருத்தி
தோளுக்கு ஒன்றாய்
சுமந்து நடந்தாள்.
களைப்பில் கொஞ்சம்
இளைப்பாற
பக்கம் பறந்த
ஊர்தியொன்றின் மேல்
பேருந்து ஒன்றை நிறுவச்
செய்கிறாள்.
பேருந்தைத் தொலைத்த
ஓட்டுனன் ஒருவன்
இந்நேரம்
அழுது அரற்றிக்
கொண்டிருக்கலாம்.
மற்றொருவன்
இன்னும்
பேருந்தினுள்தான்
இருக்கிறான்.
மிச்சமுள்ள மலர்கள்
மிச்சமுள்ள மலர்கள்
உண்ணப்படாமல்
உதிர்ந்து போன
பருக்கைகள் போன்றன
அவற்றை பூக்காரம்மா
தொகுப்பதில்லை
விற்பதுமில்லை.
வீசிவிடவும் மனமில்லை
அவளுக்கு
ஆனால்
வேறு வழிகள் உள
எங்காவது அவற்றைப்
பயனுறச் செய்ய
உறுதி சொல்கிறாள்
மிச்சமானவைகளைக் கொண்டு
பெண்ணவள் தலையில்
அவை ஒற்றைப் பூவாகலாம்
அரசமரத்தடியாரின்
துதிக்கையில் அமரலாம்.
மல்லிகைச் சரத்தினிடை
ஒற்றைப் பூவாய்
ஓர் அழகு சேர்க்கலாம்
எனினும்
தனித்தனியே
பிரிந்து போனவைகள்
முக்கூடலாய் அரசமரத்தடியில்
சந்திக்கும் நேரம்
வாய்த்திடல் கொடிது
அதனினும் அவை
அழிந்தே ஒழியலாம்
1 comment:
சிந்திக்க வைக்கும் அருமை வரிகள்...
நன்றி.
Post a Comment